முதியோர்களை குறிவைக்கும் ஆன்லைன் மோசடி கும்பல்: தற்காத்து கொள்வது எப்படி?

ஆன்லைன் மோசடி

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

கன்னியாகுமரி மாவட்டம் மார்தாண்டம் அருகே ஓய்வு பெற்ற விஞ்ஞானியிடம் அவரின் ஏடிஎம் அட்டை காலாவதியாகி விட்டதாக செல்போனில் அழைத்து வங்கி கணக்கில் இருந்த 12 லட்சம் ரூபாய் நூதனமாக திருடப்பட்டுள்ளது. இந்நிலையில் அம்மாதிரியான ஆன்லைன் மோசடியிலிருந்து தற்காத்து கொள்வது எப்படி?

12 லட்ச ரூபாய் நூதன திருட்டு

தமிழகத்தில் தற்போது பல்வேறு மாவட்டங்களில் ஆன்லைன் மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. மோசடியில் ஈடுபடுவோர்களை பிடிக்க காவல்துறையினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் மார்தாண்டத்தை அடுத்த பாகோடு அருகே கொழவிளை பகுதியை சேர்ந்தவர் பாலாசிங். இவர் தேசிய வானூர்தி ஆய்வகத்தில் விஞ்ஞானியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி லலிதா. இவர்கள் இருவரும் வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், வியாழக்கிழமை காலை இவர்களது வீட்டு தொலைபேசிக்கு வந்த அழைப்பில் பேசிய மர்ம நபர் 'வங்கியிலிருந்து பேசுகிறோம், உங்களின் ஏடிஎம் காலாவதியாகிவிட்டது புதிய ஏடிஎம் அட்டை வழங்குவதற்கு உங்கள் கையில் உள்ள பழைய ஏடிஎம் அட்டையின் 16 இலக்க எண்ணை தொடர்ந்து ஏடிஎம் அட்டையின் ரகசிய குறியீட்டு எண்ணையும் சொல்லுங்கள், செல்போன் எண்ணுக்கு ஒடிபி வந்திருக்கும் அதனை பிழையில்லாமல் கூறுங்கள்' என கூறியுள்ளார்.

பாலாசிங் தன்னை வங்கியில் இருந்துதான் அழைத்துள்ளார்கள் என நம்பி அவர்கள் கேட்ட அனைத்து தகவல்களையும் பிழை இல்லாமல் கூறியுள்ளார். சிறிது நேரத்தில் பாலாசிங் செல்போன் எண்ணிற்கு வங்கி கணக்கில் இருந்து 12 லட்சம் ரூபாய் பணம் எடுத்ததாக குறுஞ்செய்தி வந்துள்ளது.

வயதானவர்

பட மூலாதாரம், Getty Images

சந்தேகமடைந்த பாலாசிங் மார்த்தாண்டம் அருகே உள்ள பாரத் ஸ்டேட் வங்கிக்கு சென்று தங்களது வங்கி கணக்கை சரிபார்த்தார். அப்போது அவர் வங்கி கணக்கிலிருந்து 12 லட்சம் ரூபாய் எடுத்தது உறுதி செய்யப்பட்டது.

இது குறித்து மார்த்தாண்டம் காவல்நிலையத்தில் பாலாசிங் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த மார்த்தாண்டம் காவல்துறையினர் சைபர் குற்றப்பிரிவு காவல்துறையின் உதவியுடன் ஆன்லைன் மூலம் மோசடி செய்த நபரை தேடி வருகின்றனர்.

இதேபோல் மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியரின் வங்கி கணக்கிலிருந்து 3.5 லட்சம் ரூபாயும், குழித்துறை பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவரது வங்கி கணக்கிலிருந்து 19 ஆயிரம் ரூபாயும் மோசடி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பாலாசிங்கின் புகார் மனு குறித்து பிபிசி தமிழிடம் பேசிய மார்த்தாண்டம் காவல் நிலைய காவலர் ஒருவர், "குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக முதியவர்களை குறிவைத்து ஆன்லைன் மோசடி செய்யப்பட்டு வருகிறது. இந்த குற்றத்தில் ஒரே கும்பலை சேர்ந்த நபர்கள் ஈடுபடுகிறார்களா அல்லது பல குழுக்கள் செயல்பட்டு வருகிறதா என தீவிரமாக விசாரணை செய்து வருகிறோம், விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள்.

கொரோனா ஊரடங்கால் முதியவர்கள், ஓய்வூதியம் பெறுவோர் வங்கிகளுக்கு நேரில் சென்று பணப் பரிவர்த்தனை செய்ய முடியாமல் உள்ளதால் குற்றவாளிகள் முதியோர்களை குறிவைத்து மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்." என்று தெரிவித்தார்.

இவர்களின் தொலைபேசி எண்கள் மற்றும் வங்கி கணக்கு விபரங்கள் குற்றவாளிகளுக்கு எப்படி கிடைக்கிறது, வங்கி சார்ந்த நபர்கள் யாரேனும் உதவி செய்கிறார்களா என்ற கோணத்தில் சைபர் குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரனை நடத்தி வருவதாக தெரிவித்தார் மார்தாண்டம் காவல் நிலைய காவலர்.

மூத்த குடிமக்கள் அதிகமாக பாதிக்கப்படுவது ஏன்?

ஆன்லைன் மோசடியில் இருந்து மூத்த குடிமக்களை பாதுகாக்க காவல்துறையினரால் எடுக்கப்பட்டு வரும் விழப்புணர்வுகள் குறித்து குற்ற நுண்ணியல் கண்காணிப்பு பிரிவு எஸ்.பி அர்ஜுன் சரவணன் பிபிசி தமிழிடம் பேசுகையில், "ஆன்லைன் கொள்ளையர்கள் மூத்த குடிமக்களின் அறியாமையை பயன்படுத்தி அவர்களிடமிருந்து பண திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்றைய இளம் தலைமுறையினரால் வங்கியில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை வெகு எளிதில் செய்து கொள்ள முடியும். ஆனால் 50 வயதுக்கு மேல் உள்ள மூத்த குடிமக்கள் இந்த டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு பழக்கம் இல்லாதவர்கள் அவர்களால் முழுமையாக டிஜிட்டல் பண பரிவர்த்தனை செய்ய முடியாமல் பாதியில் தடுமாறி போய் விடுகின்றனர்.

அலைப்பேசி அழைப்பு

பட மூலாதாரம், Getty Images

வங்கியிலிருந்து மேலாளர்கள் தொலைபேசியில் தொடர்பு கொள்வதாக யாரேனும் பேசினால் தங்களுடைய நலனுக்காக வங்கி மேலாளரே நம்மை தொடர்பு கொள்கிறார்கள் என்று நம்பி அறியாமையில் அவர்கள் கேட்கும் தகவல்களை உடனடியாக கொடுத்து விடுகின்றனர்.

அதுமட்டுமில்லாமல் ஆன்லைனில் முதியவர்களை குறிவைக்கும் கொள்ளையர்கள் உங்களுடைய வங்கி கணக்கு இன்னும் சில நாட்களில் காலாவதியாகிவிடும், உங்களுடைய வங்கி கணக்கில் எந்த விதமான பண பரிவர்த்தனையும் செய்ய முடியாது என பயமுறுத்தி அவர்களிடம் இருந்து முழு தகவல்களையும் பெற்று விடுகின்றனர்.

இவ்வாறான ஆன்லைன் குற்றச் சம்பவங்களை தடுப்பதற்காக காவல்துறையினர் பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களின் வழியாக பல விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வந்தாலும் மூத்த குடிமக்கள் சமூக வலைதளங்களை அதிகம் பயன்படுத்தாததால் அவர்களுக்கு விழிப்புணர்வு சென்று சேர்வது இல்லை. அதிலும் பெண்களுக்கு முற்றிலுமாக சென்று சேர்வதில்லை," என்கிறார் அர்ஜுன் சரவணன்.

இளைய தலைமுறையினரின் கடமை

தொடர்ந்து பேசிய அர்ஜுன் சரவணன், "இளைய தலைமுறைகள் தங்கள் வீட்டில் உள்ள முதியவர்களுக்கு ஆன்லைன் குற்ற சம்பவங்கள் மற்றும் ஆன்லைன் மோசடியாளர்கள் குறித்து அவ்வப்போது விழிப்புணர்வு கொடுக்க வேண்டும் அது அவர்களது முக்கிய கடமை.

மேலும் நடுத்தர குடும்பத்தினரை குறிவைக்கும் இந்த ஆன்லைன் மோசடி கும்பல்கள் உங்களுக்கு பரிசு பொருட்கள் விழுந்துள்ளது, ஆடம்பர கார் பரிசாக கிடைத்துள்ளது, உங்களை வெளிநாடுகளுக்கு சுற்றுலா அழைத்துச் செல்கிறோம் என்பது போன்ற ஆசை வார்த்தைகளை காட்டியும் ஏமாற்றி வருகின்றனர்.

புதிய எண்களில் இருந்து இவ்வாறான அழைப்புகள் வந்தாலோ, அல்லது யாரேனும் பயமுறுத்துவது போல் பேசினாலோ உடனடியாக காவல்துறையின் 100 என்ற எண்ணில் அழைத்து அந்த எண் குறித்த தகவல்களை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

இவ்வாறான குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் காவல்துறையினரால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்." என்று தெரிவித்தார் குற்ற நுண்ணியல் கண்காணிப்பு பிரிவு எஸ்.பி அர்ஜுன் சரவணன்.

எப்படி மோசடி நடக்கிறது?

எப்படி ஆன்லைன் திருடர்கள் முதியவர்களை குறி வைக்கிறார்கள் என்பது குறித்து நெல்லையை சேர்ந்த இணைய பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் பாலா பிபிசி தமிழிடம் பேசுகையில், "கொரோனா பெருந்தொற்றை பயன்படுத்தி ஆன்லைன் திருடர்கள் மூத்த குடிமக்களை குறிவைத்து உங்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக உங்களுடைய கைபேசி எண்ணிற்கு ஓடிபி வந்துள்ளது.

அதனை நீங்கள் எங்களிடம் தெரிவித்தால் உங்களுக்கு எப்போது எங்கு தடுப்பூசி போடப்படும் என அறிந்து கொள்ளலாம் என கூறி ஓடிபி எண்ணை பெற்று அவர்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டு வருகிறது.

அதேபோல் மத்திய அரசால் மூத்த குடிமக்களுக்கு கொரோனா கால நிதி உதவியாக 2000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. அதற்கான ஒடிபி எண் உங்கள் கைபேசிக்கு குறுஞ் செய்தியாக வந்திருக்கும் அதனை எங்களிடம் தெரிவித்தால் மட்டும்மே உங்களுக்கு அந்த பணம் கிடைக்கும் என கூறி அவர்களின் வங்கி கணக்கிலிருந்து பணம் திருடப்பட்டு வருகிறது.

எந்த வங்கியிலும், அரசு நிறுவனத்திலும் கைபேசிக்கு வரும் ஓடிபி எண்களை கேட்பதில்லை, அந்த எண்ணை வங்கி ஊழியர்கள் தெரிந்து கொள்வதற்கான அவசியம் இல்லை. எனவே அவ்வாறு யாரும் தொடர்பு கொண்டு எண்களை கேட்டால் நிச்சயம் அதனை தவிர்க்க வேண்டும்.

பொதுவாக செல்போன் எண்ணிற்கு ஒரு குறுஞ்செய்தி வரும் அந்த குறுஞ்செய்தியில் ஒரு லிங்க் இருக்கும் அதனை நீங்கள் க்ளிக் செய்தால் அதன் மூலம் உங்கள் வங்கி கணக்கில் இருந்து பணத்தை திருடி விடலாம்.

அதற்கு PHISHING TECHNIQUE என்று பெயர். இந்த டெக்னிக்கை பயன்படுத்தி தற்போது அதிகமான ஆன்லைன் குற்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் திருநெல்வேலியில் உள்ள மருத்துவ பரிசோதனை மைய உரிமையாளரை தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர். நான் உங்கள் பரிசோதனை மையத்தில் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் அதற்கான பணத்தை ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் வழங்கலாமா என கேட்டுள்ளார்.

முதலில் உங்களுக்கு 2 ரூபாய் அனுப்பி வைக்கிறேன். அந்த ரூபாய் உங்கள் வங்கி கணக்கில் வரவு வைக்க நான் அனுப்பிய லிங்கை க்ளிக் செய்யவும் என கூறியுள்ளார்

பரிசோதனை மைய உரிமையாளர் அந்த லிங்கை க்ளிக் செய்தவுடன் அந்த மர்ம நபர் அனுப்பிய 2 ரூபாய் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. சற்று நேரத்தில் அந்த பரிசோதனை மைய உரிமையாளர் வங்கி கணக்கில் இருந்த பணம் 12 ஆயிரம் திருட்டப்பட்டது," என்கிறார் இணைய பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் பாலா.

சட்டரீதியாக பணத்தை திரும்ப பெறலாம்

தொடர்ந்து பேசிய பாலா, "ஒரு வங்கி கணக்கில் இருந்து ஆன்லைன் திருடர்கள் பணத்தை திருடி மற்றொரு வங்கி கணக்கில் மாற்றினால் அந்த பணத்தை சட்ட ரீதியாக நிச்சயம் திரும்ப பெற முடியும் ஆனால் அவர்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை பயன்படுத்தி ஆன்லைனில் பொருட்கள் வாங்கினால் அதனை திரும்பி பெற முடியாது.

பண பரிவர்த்தனை செய்ய விரும்பினால் நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் வசதிகளை பயன்படுத்தி பண பரிவர்த்தனை செய்து கொள்ளுங்கள்.

மேலும் ஆன்லைன் பண பரிவர்த்தனை செய்ய வேண்டும் என்றால் நீங்கள் உங்களுடைய ப்ரவுசரில் வங்கியின் முழு இணையதள பக்கத்தை டைப் செய்து அதன் வழியாக சென்று பண பரிவர்த்தனை செய்யுங்கள் லிங்க் மூலமாக கிளிக் செய்து அதன் மூலம் பண பரிவர்த்தனை செய்தால் நிச்சயம் ஆன்லைன் மோசடி கும்பலால் அதன் மூலம் பணம் திருட முடியும்.

தற்போது உள்ள சூழ்நிலையில் மொபைல் போனுக்கு வரக்கூடிய குறுஞ் செய்திகளில் லிங்க் கிளிக் செய்வது போல் இருந்தால் அதனை முற்றிலும் தவிர்த்து அந்த குறுஞ்செய்தியை நீக்கி விடுவது நல்லது.

நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் பயன்படுத்துவோர் நிச்சயம் ப்ரவுசர், OS, ஆன்டி வைரஸ் உள்ளிட்டவைகளை அப்டேட் செய்து வைத்து கொள்வதுடன். மொபைல் போன்களில் தேவையற்ற அப்ளிக்கேசன்களை பதிவிறக்கம் செய்யாமல் தவிர்த்து கொண்டால் நிச்சயம் ஆன்லைன் மோசடி கும்பலிடம் இருந்து பணத்தை பாதுகாத்து கொள்ளலாம், " என்கிறார் இணைய பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் பாலா.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :