சேலத்தில் அதிகரிக்கும் ஆன்லைன் பண மோசடி - எப்படி தடுப்பது?

ஆன்லைன் குற்றங்கள்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ஏ.எம்.சுதாகர்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

பிரபலங்கள் பெயரில் மோசடி ஃபேஸ்புக் பக்கத்தை தொடங்கி பயனர்களை இலக்கு வைக்கும் கும்பல்களின் செயலால் சேலத்தைச் சேர்ந்த பலர் ஏமாந்துள்ளனர்.

சமூக வலைதளங்கள் நவீன உலகின் ஆதிக்க சக்தியாக மாறி வரும் வேளையில், ஃபேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடக தளங்கள் மூலம் அவற்றின் பயனர்களை இலக்கு வைத்து பணம் பறிப்பதும் அதிகரித்து வருகிறது.

அப்படி ஒரு மோசடி கும்பலிடம் சேலத்தை சேர்ந்த சில நபர்கள் ஏமாந்துள்ளனர். சேலத்தை சேர்ந்த மனநல மருத்துவர் மோகன வெங்கடாசலபதி சமீபத்தில் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவிட்டிருந்தார்.

மோகன வெங்கடசலாபதி

பட மூலாதாரம், MOHAN VENKATACHALAPATHY

"என் பெயரில் போலி கணக்கு தொடங்கி உள்ளனர். உங்களுக்கு எனது பெயரில் நட்பு கோரி வேண்டுகோள் வந்தால் ஏற்றுக்கொள்ளாதீர்கள். அப்படி செய்தால் உடனே பணம் அனுப்ப வேண்டுகோள் அனுப்புவார்கள். யாருக்கும் பணம் அனுப்பி ஏமாற வேண்டாம்" என்று கூறியிருந்தார்.

என்ன நடந்தது? என மருத்துவர் மோகன வெங்கடாசலபதியிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.

மோகன வெங்கடாசலபதி
படக்குறிப்பு, மருத்துவர் மோகன வெங்கடாசலபதி

"நான் என் ஃபேஸ்புக் பக்கத்தை லாக் செய்யாமல் வைத்திருந்தேன். அதை தெரிந்து கொண்ட மோசடி விஷமிகள், அதிலுள்ள தகவல்கள், என் புகைப்படங்களை தரவிறக்கம் செய்து, என் பெயரிலேயே போலியான பக்கம் தொடங்கினர். அதன் மூலம் என் நண்பர்களுக்கு மெசஞ்சர் வழியாக நட்பு அழைப்பு கொடுத்து அவர்களை அந்த பக்கத்தில் இணைத்துக் கொண்டுள்ளனர்.

சில நாட்களில் அந்த நபர்கள் என் நண்பர்களிடம், மெசஞ்சர் மூலமாக தொடர்பு கொண்டு, 'நான் ஆபத்தான நிலையில் உள்ளேன். எனக்கு கொஞ்சம் பணம் தேவைப்படுகிறது, உடனே கூகுள்பே ,ஃபோன்பே அல்லது வங்கி கணக்கிலோ அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளனர்.

இதை பார்த்தவுடன் சக டாக்டர் நண்பர் ஒருவர் உணர்ச்சிவசப்பட்டு நான்காயிரம் ரூபாயை அனுப்பியுள்ளார். தொடர்ந்து இதுபோன்று என் ஃபேஸ்புக் நண்பர்கள் பத்துக்கும் மேற்பட்டோரிடம் அந்த கும்பல் பணம் பறித்துள்ளது.

இந்த தகவல் எனக்கு கிடைத்தவுடன், எனது ஃபேஸ்புக் நண்பர்களுக்கு உடனடியாக தகவல் அனுப்பி பணம் கேட்கும் ஃபேஸ்புக் பக்கம் போலியானது என்று குறிப்பிட்டு, அதில் யாரும் பணம் அனுப்ப வேண்டாம் என்று தெரிவித்தேன்.

என்னை போன்றே பத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்களின் ஃபேஸ்புக் பக்கத்தில் உள்ள பதிவுகளை தரவிறக்கம் செய்து போலியான பக்கம் தொடங்கி அந்த மோசடி கும்பல் பலரிடம் பணம் பறித்துள்ளனர்..

இது போன்று பணம் கேட்பவர்களின் பக்கத்தை முழுமையாக ஆய்வு செய்து உஷாராக வேண்டும். பணம் கேட்பவர்களின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டால் அதில் அழைப்பை எடுக்க மாட்டார்கள். மேலும், பணம் கேட்பவர்களிடம் தமிழில் பதில் அளித்தாலோ சந்தேகத்தை எழுப்பினாலோ அதற்கு அவர்களிடம் இருந்து முரணாகவே பதில்கள் வரும்," என்று கூறினார்.

இணையதள நிபுணர்கள் யோசனை

அருண் குமார்

பட மூலாதாரம், ARUN KUMAR

படக்குறிப்பு, அருண் குமார்

இணையதள நிபுணர் அருண்குமாரிடம் இந்த மோசடி பற்றி மேலும் விவரம் அறிய பேசினோம்.

"பொதுவாக பிரபலமானவர்களின் பெயரில் போலியான ஃபேஸ்புக் பக்கம் தொடங்கி, அவர்களின் நண்பர்களுக்கு மெசேஜ் அனுப்பி வைப்பார்கள். பின்னர் 'ஆபத்தான நிலையில் உள்ளேன். எனக்கு பணம் தேவைப்படுகிறது. உடனடியாக எனக்கு பணம் அனுப்பி வைக்கவும்,' என கூறி வங்கி கணக்கு விவரத்தை அனுப்பி வைப்பர்.

இப்படி செய்பவர்கள் ஏதோ ஒரு மாநிலத்தில் அல்லது வெளி நாட்டில் இருந்து கொண்டு ஏதோ ஒரு வங்கி கணக்கை தொடங்கி வைத்திருப்பார்கள். அல்லது போலியான ஆவணங்கள் கொடுத்து போன் நம்பர் பெற்று அதன் மூலமாக கூகுள்பே, ஃபோன்பே மூலம் பணம் பெற்றுக்கொள்கின்றனர்.

இதுபோன்று யாரேனும் பணம் கேட்டால், சம்மந்தப்பட்ட நபரிடம் தொலைபேசியில் பேசி உறுதி செய்து கொண்டு உதவி கேட்பவர் உண்மையான நபரா? என்று அறிந்து உதவ வேண்டும்.

SALEM

பட மூலாதாரம், SALEM POLICE

இதுபோன்ற பிரச்னைகளில் நாம் சிக்காமல் இருக்க ஃபேஸ்புக் பக்கத்தை லாக் செய்து வைக்க வேண்டும். அப்போதுதான் அதில் உள்ள தகவல்களை யாராலும் திருட முடியாது. சில நபர்கள் பெண் பெயரில் பக்கம் தொடங்கி, பெண் குரலில் பேசுவர்.

ஆன்லைன் வாயிலாக நிறைய பணம் சம்பாதிக்க ஏராளமாக வாய்ப்பு உள்ளது என்று ஆசை வார்த்தை கூறுகின்றனர். பேசுவது பெண் அல்ல, மோசடி நபர்கள் என்று அறியாத சிலரும் அவர் கூறும் செயலியை பதிவிறக்கம் செய்து விடுகின்றனர். அதை செல்பேசியில் நிறுவியவுடன், அந்த நபரின் விவரம், வங்கிக்கணக்குகள், கடவுச்சொற்கள் போன்றவற்றை திருடி விடுகின்றனர். எனவே வெளியார் லிங்குகள் எதையும் கிளிக் செய்யக்கூடாது. அங்கீகாரமற்ற செயலிகளை பதிவிறக்கம் செய்யக்கூடாது," என்று கூறினார்.

பேஸ்புக்

பட மூலாதாரம், SRI ABHINAV

படக்குறிப்பு, ஸ்ரீஅபினவ், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்

சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபினவ்வை பிபிசி தமிழுக்காக சந்தித்து இந்த வகை மோசடியில் சிக்கினால் என்ன செய்ய வேண்டும் என்று விரிவாக பேசினோம்.

"இந்தியாவில் இணைய பயன்பாடு அதிகளவில் உள்ளது. பெரும்பாலான குற்றங்களில், ஒரு நபரின் தகவல்களை பதிவிறக்கம் செய்து அதனை கொண்டுதான் மோசடி செய்கின்றனர். அதனால், முதலில் ஃபேஸ்புக் கணக்கு தொடங்கும் போதே நமது தகவல்களை நண்பர்கள் தவிர்த்து வேறு யாரும் பார்க்கமுடியாத அளவுக்கு லாக் செய்ய வேண்டும். அது போல பாதுகாப்பு செய்யும் வசதி அதில் உள்ளது. மேலும் யாராவது உங்கள் பெயரில் போலியான ஃபேஸ்புக் கணக்கு தொடங்கியிருந்தால், அதில் புகார் தெரிவிக்கும் வசதியும் உள்ளது. அதில் சென்று போலி கணக்கு தொடங்கியது பற்றி புகார் பதிவு செய்யலாம். அவ்வாறு பதிவு செய்தால், அந்த போலி கணக்கு முடக்கி வைக்கப்படும். அல்லது சைபர் கிரைம் காவல் பிரிவில் ஆன்லைன் மூலமோ நேரிலோ சென்று புகார் செய்தால், போலி கணக்கு தொடங்கியவர் மீது குற்ற நடவடிக்கை எடுக்க முடியும். இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களை, அவர்களின் செல்பேசி எண்ணையோ அவர்கள் பயன்படுத்தும் இணையதள பயன்பாட்டை வைத்தோ அவர்களின் இருப்பிடத்தை அறியமுடியும். அவ்வாறு கண்டுபிடிப்பது எளிதுதான்.

இருந்தாலும், நாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நமது ஃபேஸ்புக் கணக்குகளை பாதுகாப்பு செய்து வைக்க வேண்டும். இதுபோன்ற போலி ஃபேஸ்புக் கணக்குகளை தொடங்குபவர்கள் எந்த மாநிலத்தில் இருந்துகொண்டும் போலி கணக்குகளை தொடங்குவார்கள். தமிழ் நாட்டில் இருந்து வடமாநில மக்களை ஏமாற்றுவார்கள். வடமாநிலத்தில் இருந்து இங்கிருப்பவர்களிடம் மோசடி செய்வார்கள்.

இப்படி செய்பவர்கள் பெரும்பாலும் வேறு ஒருவரின் எண்களில் இருந்தே பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள். நமது சொந்த தகவல்கள் மூன்றாம் நபர்களுக்கு தெரியக்கூடாது என்று நினைக்கும்பட்சத்தில் நம்முடைய தகவல்களையோ, படங்களையோ சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யக்கூடாது. அதுவே பாதுகாப்பு" என்றார் ஸ்ரீஅபினவ்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :