கொரோனா மூன்றாம் அலையில் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுமா? நிபுணர் கூறுவது என்ன?

கொரோனா மூன்றாம் அலை

பட மூலாதாரம், NurPhoto

    • எழுதியவர், நடராஜன் சுந்தர்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

கொரோனா தொற்று இரண்டாம் அலை தாக்கம் குறைந்து வரும் சூழலில், அடுத்த சில வாரங்களில் மூன்றாம் அலை ஏற்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

குறிப்பாக, கொரோனா தொற்று மூன்றாம் அலையால் குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என்ற அச்சம் பரவலாக நிலவி வருகிறது. ஆகவே கொரோனா மூன்றாம் அலையால் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுமா? அதிலிருந்து பாதுகாப்பது எப்படி? கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்பாக இருக்க என்னென்ன வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் போன்ற பல்வேறு சந்தேகங்கள் மக்களிடையே எழுந்துள்ளது.

புதுச்சேரி ஜவாஹர்லால் மருத்துவ பட்டமேல்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் (JIPMER), பச்சிளம் குழந்தைகள் நலத்துறை பேராசிரியரும், அத்துறை தலைவருமான மருத்துவர் பெ. ஆதிசிவம், பிபிசி தமிழின் கேள்விகளுக்கு அளித்த பதில்களை இங்கே வழங்குகிறோம்.

கொரோனா தொற்றில் இருந்து குழந்தைகளை எப்படிபாதுகாப்பது?

கொரோனா தொற்றின் மூன்றாம் அலை காரணமாக குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படுவார்கள் என்ற அச்சம் மக்களிடையே இருக்கிறது. கொரோனாவின் முதல் இரண்டு அலைகளிலும் பெரியவர்களை விட குழந்தைகளுக்கு பாதிப்பு சதவீதம் குறைவாகவே இருந்தது. இருப்பினும் கொரோனா தொற்று மூன்றாம் அலை வந்தால் குழந்தைகளுக்கு அதிக பாதிப்புகளை ஏற்படுத்தாது என்று எதிர்பார்க்கிறோம். ஆனால் ஒரு குழந்தைக்கு தொற்று ஏற்படாமல் இருக்க வேண்டுமானால் அந்த வீட்டில் இருக்கும் பெரியவர்கள் நடந்து கொள்ளும் முறையை பொறுத்தே அது அமையும்.

வீட்டில் பெரியவர்கள் அனைவரும் முறையாக முக கவசம் அணிவது, கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தமாக வைப்பது, தடுப்பூசி போட்டுக்கொள்வது, சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து போன்ற பழக்க,வழக்கங்களை மேற்கொண்டால், அந்த வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு மிகக் குறைவு.

YouTube பதிவை கடந்து செல்ல, 1
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு, 1

கொரோனா மூன்றாம் அலையால் குழந்தைகள் அதிக அளவு பாதிக்கப்படுவார்களா?

மருத்துவர் பெ. ஆதிசிவம்
படக்குறிப்பு, மருத்துவர் பெ. ஆதிசிவம்

கொரோனா நோய்த்தொற்று மட்டுமின்றி எந்த ஒரு நோய்த் தொற்றும் மக்கள்தொகை அடிப்படையில் எத்தனை பேர் தடுப்பூசி போட்டுள்ளனர் என்பதைப் பொறுத்தும், மக்களுடைய நடவடிக்கைகளைப் பொறுத்துமே அமையும். முன்பு குறிப்பிட்டது போல முதல் இரண்டு அலைகளில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை, 10 சதவீதத்திற்கும் குறைவாகவே இருந்துள்ளது. அதிலும் பாதிக்கப்பட்ட குழந்தைகள் குறைந்த அளவிலேயே மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்றனர். மற்ற குழந்தைகளுக்கு சாதாரண காய்ச்சல் போல கொரோனா வந்து சென்று விட்டது. இதனால் யாரும் பீதியடைய வேண்டாம். ஆனால் மக்கள் விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம்.

கொரோனா தாக்கம் ஏற்பட்டு, ஒரு மாதம் அல்லது ஒன்றை மாதங்களுக்கு பிறகு நோய் எதிர்ப்பு சக்தி தொடர்பான பாதிப்புகள் ஒரு சில குழந்தைகளுக்கு ஏற்படலாம். ஆனால் அது அனைத்து குழந்தைகளுக்கும் ஏற்படாது. குறிப்பாக காய்ச்சல், ஒவ்வாமை ஏற்படும். அதனை மருந்து மூலமாக சரி செய்து விட முடியும். அதற்காக பயப்பட வேண்டியதில்லை. பெரியவர்கள் குழந்தைகள் நலன் கருதி கவனமாக நடந்து கொள்ள வேண்டும். தேவையின்றி குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும். கூடுமான வரை கூட்டமான இடங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்லக்கூடாது. ஏனென்றால் கூட்டமான இடங்களில் தொற்று பரவும் வாய்ப்பு அதிகம்.

குழந்தைகளுக்கு முக கவசம் அவசியமா?

5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் முக கவசம் அணிய வேண்டிய அவசியம் கிடையாது. குழந்தைகள் முக கவசம் அணிவதாலேயே அவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படலாம். அதன் காரணமாகவே 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு முக கவசம் கட்டாயம் கிடையாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா மூன்றாம் அலை

பட மூலாதாரம், NurPhoto

கொரோனா மூன்றாம் அலையால் குழந்தைகள் பாதிக்கப்படலாம் என சொல்லப்படுகிறதே?

கொரோனா முதல் இரண்டு அலைகளில் குழந்தைகளுக்கு தொற்று பாதிப்பு குறைவாக இருந்தாலும், மூன்றாம் அலையில் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுவர் என்று ஒரு சாரார் சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.ஆனால் இதற்கு பின்னால் இருக்கும் அறிவியலை பார்க்க வேண்டும். அதாவது, எந்தவொரு தொற்றாக இருந்தாலும் எங்கெல்லாம் தடுப்பூசி அதிக அளவில் எடுத்துக் கொண்டார்களோ, அந்த பகுதியில் நோய்த் தொற்று பரவல் குறைவாக இருக்கும். இதனால் தடுப்பூசி எடுத்துக் கொள்ளாத பகுதியை நோக்கி அந்த கிருமி நகரக்கூடும். அந்த வகையில் பார்த்தால், இதுவரை குழந்தைகள் தடுப்பூசி எடுத்துக்கொள்ளாத காரணத்தினால் அவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும், மேற்கொண்டு குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடும் பட்சத்தில் இது பரவாமல் இருக்கவும் வாய்ப்பிருக்கிறது என்று சொல்லியிருக்கலாம்.

குழந்தைகளும் மக்கள் தொகையில் ஒரு அங்கம். அதனால் குழந்தைகள் மட்டும் தான் பாதிக்கப்படுவார்கள் என்று அர்த்தம் கிடையாது. அடுத்தகட்டமாக நோய்த் தொற்று வந்த பிறகு காய்ச்சல் ஏற்படுவது குறிப்பிட்ட சதவீதத்தினருக்கு மட்டும் தான், பெரும்பாலானோருக்கும் குழந்தைகளுக்கு நோய்த்தொற்று வந்ததே தெரிந்திருக்காது. அதனால் முதல் இரண்டு அலைகளில் குழந்தைகள் பாதிக்கப்பட்டிருந்தாலும் அதன் பாதிப்பு வெளியே தெரியாமல் இருந்திருக்கும். அதேபோன்று தான் மூன்றாவது அலையிலும் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

கொரோனா தொற்றில் இருந்து பச்சிளம் குழந்தைகளை பாதுகாப்பது எப்படி?

பச்சிளம் குழந்தைகளுக்கு கொரோனா தொற்று கருவுற்ற தாய்மார்களிடமிருந்து ஏற்படலாம் அல்லது கருத்தரிப்புக்கு பிறகு தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் ஏற்படலாம். ஆனால் முதல் அலையின் போது ஜிப்மர் மருத்துவமனையில் கொரோனா தொற்றுடன் அனுமதிக்கப்பட்ட தாய்மார்களிடமிருந்து அந்த அளவிற்கு அவர்களுடைய குழந்தைகளுக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை.

குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், கொரோனா நோய்த் தொற்று பாதிக்கப்பட்ட தாய்மார்களிடமிருந்து பெறப்பட்ட தாய்ப்பால் மாதிரிகளில் கூட நாங்கள் பரிசோதனை செய்தபோது அதில், கொரோனா வைரஸ் இருப்பதற்கான அறிகுறிகளே காணப்படவில்லை.

YouTube பதிவை கடந்து செல்ல, 2
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு, 2

தாய்ப்பால் மூலமாக கொரோனா பரவுமா?

தாய்ப்பால் மூலமாக கண்டிப்பாக குழந்தைகளுக்கு கொரோனா நோய்த் தொற்று பரவுவது கிடையாது. மாறாக கொரோனா தொற்று ஏற்பட்ட அன்னையருக்கு இந்த கொரோனா நோய்த் தொற்றின் எதிர்ப்பு அணுக்கள் தாய்ப்பால் மூலமாக எளிதாக குழந்தைகளுக்கு கிடைக்கிறது. இது மிகவும் முக்கியமானது, கொரோனா நோய்த் தொற்று இருக்கின்ற காலத்திலும், இல்லாத காலத்திலும் முதல் 6 மாதம் குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். அப்படி அந்த குழந்தை முதல் 6 மாதத்திற்கு தாய்ப்பால் மட்டுமே குடித்து வளர்ந்திருந்தால், அந்த குழந்தைக்கு எந்தவித பிரச்னைகளும் இருக்காது. மாறாக, நல்ல நோய் எதிர்ப்பு சக்தி உடலில் உண்டாகும், ஆரோக்கியமாக இருக்கும், மூளை வளர்ச்சி நன்றாக இருக்கும், பிற்காலத்தில் அந்த குழந்தையின் செயல்பாடு மிகவும் நன்றாக இருக்கும். அதே தாய்ப்பாலை தவிர்த்து குழந்தைகளுக்கு மற்ற உணவுகளை வழங்கும்போது தேவையற்ற பிரச்னைகள் ஏற்படும்.

கொரோனா

பட மூலாதாரம், Getty Images

சில தாய்மார்களுக்கு குழந்தை பெற்றெடுப்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அப்படி ஏற்பட்டாலும் கூட கண்டிப்பாக அந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும். தாய்ப்பால் கொடுக்கும்போது, தாய்மார்கள் முக கவசம் அணிந்திருக்க வேண்டும். மேலும் குழந்தைகளுக்கு பாலூட்டும் தாய்மார்கள் அனைவரும் தங்களது கைகளை சோப்பு போட்டு அடிக்கடி கை கழுவிக் கொள்ள வேண்டும். அப்போது தான் குழந்தைக்கு கொரோனா தொற்று ஏற்படாமல் பார்த்துக்கொள்ள முடியும்.

குழந்தைகளுக்கு என்ன வகையான உணவுகளை கொடுக்க வேண்டும்?

குழந்தைகளுக்கு கொரோனா இருந்தாலும், இல்லாவிட்டாலும் வீட்டில் செய்யும் உணவு வகைகளை கொடுப்பது தான் உகந்தது. பதப்படுத்தப்பட்ட உணவுகள் அல்லது செயற்கை உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். விளம்பரங்களை கண்டு குழந்தைகளுக்கு நல்ல ஆரோக்கியமான உணவு கொடுப்பதாக நாமே நினைத்துக் கொள்கிறோம். ஆனால் பெரும்பாலான உணவுகள் குறிப்பாக டப்பாக்களில் அடைக்கப்பட்ட உணவுகள் குழந்தைகளுக்கு தீங்கு தரும்.

எனவே, இயன்றவரை, குழந்தைகளுக்கு வீட்டில் தயாரிக்கும் உணவை கொடுப்பதே சிறந்தது. உணவில், கீரை, காய்கறி, பழங்கள் உள்ளிட்ட அனைத்தும் கொடுக்கலாம். இதுபோன்ற உணவுகள் கொடுப்பதால் குழந்தைகளுக்கு நிறைய உயிர் சத்துக்கள் கிடைக்கும். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி நல்ல முறையில் இருக்கும். ஒருவேளை கொரோனா தொற்று ஏற்பட்டு குழந்தைக்கு காய்ச்சல் இருந்தால், அந்த நேரத்திலும் குழந்தைகளுக்கு இதுபோன்ற ஆரோக்கியமான உணவு கொடுப்பது மிகவும் அவசியமானது.

கொரோனா

பட மூலாதாரம், ARUN SANKAR

கொரோனா பாதிப்பு உள்ள குழந்தைகளுக்கு என்ன உணவு தரலாம்?

கொரோனா தொற்று மட்டுமின்றி எந்த நோய்த் தொற்று ஏற்பட்டாலும் குழந்தைகள் உடம்பில் இருந்து நீர் சத்து குறையாமல் பார்த்துக் கொள்வது மிக, மிக முக்கியம். அந்த நேரத்தில் குழந்தைகளுக்கு எந்த விதமான கிருமி தாக்கம் இருந்தாலும், காய்ச்சல் இருந்தாலும் நிறைய நீராகார உணவுகள் கொடுக்க வேண்டும். வீட்டிலேயே செய்யக்கூடிய அரிசி கஞ்சி, நொய் கஞ்சி, இளநீர், பழச்சாறு போன்ற நீராகார உணவுகளை அதிக அளவில் கொடுக்க வேண்டும்.

பெரும்பாலான குழந்தைகளுக்கு நாம் வழக்கமாக காய்ச்சலுக்கு கொடுக்கக் கூடிய பாராசிட்டமால் மருந்தே போதுமானது. கொரோனா மட்டுமின்றி எந்தவொரு காலத்திலும், தேவையற்ற மருந்துகளை கண்டிப்பாகக் குழந்தைகளுக்கு பெற்றோர் கொடுக்கக்கூடாது. மருத்துவ ஆலோசனையின்றி கொடுக்கக்கூடிய அனைத்து மருந்துகளும் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்.

கொரோனா தொற்றிலிருந்து மீண்ட பாலூட்டும் தாய்மார்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா?

ஒருத்தருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தால், அரசு வழிகாட்டுதலின்படி மூன்று மாதங்களுக்கு பிறகு கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். அதேபோன்று பாலூட்டும் தாய்மார்களும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். சமீபத்திய ஆய்வின்படி, தடுப்பூசி போட்டுக்கொண்ட பாலூட்டும் அன்னையர் தாய்ப்பால் கொடுக்கும்போது, அவர்களின் குழந்தைக்கும் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, பாலூட்டும் அன்னையர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வது மிகவும் நல்லது.

கொரோனா

பட மூலாதாரம், Getty Images

கர்ப்பிணிகள் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா?

தற்போதுள்ள அரசு விதிமுறைப்படி கர்ப்பிணிகள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள அனுமதி இல்லை. இது குறித்து ஆய்வு செய்து கொண்டிருக்கின்றனர், ஆய்வு முடிவுகளைப் பொறுத்தே அது அறிவிக்கப்படும்.

கொரோனா காலத்தில் குழந்தைகள் மனஉளைச்சலுக்கு ஆளாகாமல் தடுப்பது எப்படி?

கொரோனா காலத்தில் குழந்தைகள் பலருக்கு மன உளைச்சல், மன அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. ஊடகங்களில் 'பிரேக்கிங் நியூஸ்' என்று அடிக்கடி வரும் காட்சிகள், சில குழந்தைகளுக்கு பயத்தை தோற்றுவிக்கலாம். குறிப்பாக எந்தவொரு விஷயம் குழந்தைகளுக்கு பீதியை ஏற்படுத்திக்கிறதோ, அச்சத்தை ஏற்படுத்துகிறதோ அதையெல்லாம் குழந்தைகளிடம் பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது. இயன்றவரை குழந்தைகளுடன் அமர்ந்து அன்பாக பேச வேண்டும். அவர்களுடன் நேரம் செலவழிப்பது மிக மிக முக்கியமானது.

கொரோனா குறித்த அவர்களின் அச்சத்தை அவர்களுடன் அமர்ந்து பேசி போக்குவதற்கான வழிமுறைகளை பெற்றோர்கள் கையாள வேண்டும். ஒருசில குழந்தைகளுக்கு அதையும் மீறி மன உளைச்சல், அழுத்தம் அல்லது உளவியல் சம்மந்தப்பட்ட பிரச்னைகள் இருந்தால் உரிய மருத்துவ ஆலோசனையைப் பெறுவது மிகவும் சிறந்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :