தமிழ்நாட்டில் பல முனைப் போட்டியால் யாருக்கு லாபம்? கடும் போட்டி நிலவும் 11 தொகுதிகள் எவை?

தமிழ்நாட்டில் பல முனைப் போட்டி

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் உச்சகட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், மாநிலத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., நா.த.க. என பல முனைப் போட்டி ஏற்பட்டிருக்கிறது.

தி.மு.க. கூட்டணியில், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், ம.தி.மு.க., மக்கள் நீதி மய்யம், கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி ஆகியவை இடம்பெற்றுள்ளன. அ.தி.மு.க. கூட்டணியில், அ.தி.மு.க., தே.மு.தி.க, புதிய தமிழகம், எஸ்.டி.பி.ஐ. ஆகிய கட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன.

பா.ஜ.க. கூட்டணியைப் பொறுத்தவரை, பா.ஜ.க., பா.ம.க., டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய ஜனநாயகக் கட்சி, புதிய நீதிக் கட்சி, தேவநாதனின் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், ஓ. பன்னீர்செல்வத்தின் அணி ஆகியவை இடம்பெற்றுள்ளன. ஓ. பன்னீர்செல்வத்தின் நிலைப்பாடு தெரியாததால், பா.ஜ.க. கூட்டணியை முடிவுசெய்வது இழுத்துக்கொண்டே போனது.

நாம் தமிழர் கட்சி 40 இடங்களிலும் தனித்துப் போட்டியிடுகிறது.

எல்லா கட்சிகளுமே தங்கள் வேட்பாளர்களை அறிவித்து, பரப்புரையில் இறங்கிவிட்டன. இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சி மட்டும் மயிலாடுதுறை தொகுதிக்கு வேட்பாளரை இன்னும் அறிவிக்கவில்லை.

உதயநிதி ஸ்டாலின்

பட மூலாதாரம், Udhayanidhi Stalin Facebook

இந்தியத் தேர்தல் வரலாற்றில் பலமுனைப் போட்டிகள்

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு தமிழ்நாட்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தல்களில் இதுபோல பலமுனைப் போட்டி நிலவுவது ஒன்றும் புதிதல்ல. 1951ல் நடந்த பொதுத் தேர்தலில் துவங்கி, 1991 வரையிலான தேர்தல்களில் 1962, 1967ஆம் ஆண்டு தேர்தல் தவிர்த்த அனைத்து நாடாளுமன்றத் தேர்தல்களிலுமே இரு முனைப் போட்டிதான் நிலவியது. 1962, 1967 ஆகிய தேர்தல்களில் மட்டும் காங்கிரஸ் - தி.மு.க. - இடதுசாரிகள் என மும்முனைப் போட்டி நிலவியது.

ஆனால், 1991க்குப் பிறகு தமிழ்நாட்டில் கட்சிகள் உடைந்ததால், புதிய கட்சிகள் துவங்கப்படுவதால் காட்சிகள் மாறின. ஆகவே, 1996ஆம் ஆண்டிலிருந்து தமிழ்நாட்டில் பலமுனைப் போட்டிதான் நடைபெற்று வருகிறது.

1996ல் நடந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி, தி.மு.க. கூட்டணி, ம.தி.மு.க. - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி, பா.ம.க. - திவாரி காங்கிரஸ் கூட்டணி என நான்கு முனைப் போட்டி நிலவியது. 1998, 1999, 2004, 2009 நாடாளுமன்றத் தேர்தல்களில் மும்முனைப் போட்டி நிலவியது.

ஆனால், 2014ல் தேசிய கட்சிகளுக்கும் மாநிலக் கட்சிகளுக்கும் இடையில் கூட்டணி ஏற்படாமல் போன நிலையில், அந்தத் தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க. - தே.மு.திக. கூட்டணி, காங்கிரஸ், இடதுசாரிக் கூட்டணி என ஐந்து முனைப் போட்டி ஏற்பட்டது.

அதேபோல, 2019ஆம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க. உடைந்ததோடு, நாம் தமிழர், மக்கள் நீதிமய்யம் என புதிய கட்சிகளும் களத்தில் இறங்கியதால், அ.தி.மு.க., தி.மு.க., அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் என ஐந்து முனை போட்டி நிலவியது.

இப்போது, கடந்த தேர்தலில் தனியாக நின்ற கட்சிகள் கூட்டணியில் ஐக்கியமாகியிருப்பதால், மீண்டும் பல முனைப் போட்டிக்கு திரும்பியிருக்கிறது தேர்தல்களம்.

ஆனால், தேர்தல் ஆய்வாளர்களைப் பொறுத்தவரை ஒரு கட்சியையோ, அணியையோ ஒரு முனையாக எடுத்துக்கொள்ள வேண்டுமென்றால் ஒரு குறிப்பிட்ட அளவு வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும் என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம்.

"அந்த மூன்றாவது கட்சியோ அல்லது அணியோ கடந்த தேர்தலில் ஆறில் ஒரு சதவீத வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும். அதாவது, ஒரு வேட்பாளர் தனது டெபாசிட்டைத் திரும்பப் பெற, பெற்றிருக்க வேண்டிய வாக்கு சதவீதமான சுமார் 16.6 சதவீத வாக்குகளைப் பெறும் கட்சியோ, அணியோதான் ஒரு முனையாக இருக்க முடியும். அப்படிப் பார்த்தால், பெரும்பாலான தேர்தல்களில் தமிழ்நாட்டில் இரு முனைப் போட்டியே நிலவியிருக்கிறது" என்கிறார் ஷ்யாம்.

பல முனைப் போட்டியில் தமிழக தேர்தல் களம்
படக்குறிப்பு, மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம்.

கடும் போட்டி நிலவும் 11 தொகுதிகள் எவை?

கடந்த தேர்தல் முடிவுகளை வைத்துப் பார்தால், இந்தத் தேர்தலிலும் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. அணிகள் மட்டுமே அந்த அளவுக்கு வாக்கு சதவீதத்தைப் பெற்றிருந்தன.

ஆகவே, இந்த முறையும் இருமுனைப் போட்டி என்றுதான் சொல்ல வேண்டும் என்றாலும், சில தொகுதிகளில் பா.ஜ.க. கூட்டணியின் முக்கியமான வேட்பாளர்கள் களத்தில் இறங்கியிருப்பதால், அந்தத் தொகுதிகள் மட்டும் மூன்று முனைப் போட்டியைச் சந்திப்பதாகச் சொல்லலாம்.

மிகச் சில இடங்களில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள், கட்சியின் பொதுவான வாக்கு சதவீதத்தைவிட கூடுதல் வாக்கு சதவீதத்தைப் பெறக்கூடும்.

ஒரு இடத்தில் மூன்று முனைப் போட்டி நிலவும்போது, அந்தத் தொகுதியில் போட்டியிடும் மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் வாக்குகள் பிரிந்து, அந்தத் தொகுதியில் வெற்றிபெறும் வேட்பாளரின் வாக்கு வித்தியாசம் மிகக் குறைவானதாகவே இருக்கும்.

கடந்த ஆண்டு தேர்தலில் தேனி தொகுதிதான் மிகக் கடுமையான மும்முனைப் போட்டியை சந்தித்தது. தி.மு.க. கூட்டணியின் சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும் அ.தி.மு.க. கூட்டணியில் ஓ.பி.எஸ். ரவீந்திரநாத்தும் அ.ம.மு.கவின் சார்பில் தங்க தமிழ்ச்செல்வனும் போட்டியிட்டனர்.

இதில் ரவீந்திரநாத் 5,04,813 வாக்குகளைப் பெற்றார். ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 4,28,120 வாக்குகளையும் தங்க தமிழ்ச்செல்வன் 1,44,050 வாக்குகளையும் பெற்றனர். ரவீந்திரநாத் 76,693 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே வெற்றிபெற்றார்.

(வேறு சில தொகுதிகளில் வாக்கு வித்தியாசம் மிகக் குறைவாக இருந்தாலும், அவை தி.மு.க. - அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு இடையிலான போட்டி கடுமையாக இருந்ததால் அம்மாதிரி நிலை ஏற்பட்டது. உதாரணமாக சிதம்பரம், வேலூர் தொகுதிகளில் அதுபோன்ற நிலை ஏற்பட்டது)

இந்த முறை பின்வரும் 11 தொகுதிகள் மூன்று முனை போட்டியை எதிர்கொள்வதாகச் சொல்லலாம்:

1. தென் சென்னைத் தொகுதி (தி.மு.க. சார்பில் தமிழச்சி தங்கபாண்டியன், அ.தி.மு.க. சார்பில் ஜெ.ஜெயவர்தன், பா.ஜ.க. சார்பில் தமிழிசை சௌந்தர்ராஜன்),

2. வேலூர் தொகுதி (தி.மு.க. சார்பில் கதிர் ஆனந்த், அ.தி.மு.க. சார்பில் எஸ். பசுபதி, பா.ஜ.க.கூட்டணி சார்பில் ஏ.சி. சண்முகம்),

3. தர்மபுரி தொகுதி (அ.தி.மு.க., தி.மு.க., வேட்பாளர்கள் தவிர, பா.ஜ.க. கூட்டணி சார்பில் சௌமியா அன்புமணி),

4. நீலகிரி தொகுதி (தி.மு.க. சார்பில் ஆ. ராசா, அ.தி.மு.க. சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வன், பா.ஜ.க. சார்பில் மத்திய இணையமைச்சர் எல். முருகன்),

5. கோயம்புத்தூர் தொகுதி (தி.மு.க. சார்பில் கணபதி ராஜ்குமார், அ.தி.மு.க. சார்பில் சிங்கை ராமச்சந்திரன், பா.ஜ.க. சார்பில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை),

6. பெரம்பலூர் தொகுதி (தி.மு.க. சார்பில் அருண் நேரு, அ.தி.மு.க. சார்பில் என்.டி. சந்திரமோகன், பா.ஜ.க. கூட்டணி சார்பில் பாரி வேந்தர்),

7. தேனி தொகுதி (தி.மு.க. சார்பில் தங்க தமிழ்ச்செல்வன், அ.தி.மு.க. சார்பில் வி.டி. நாராயணசாமி, பா.ஜ.க. கூட்டணி சார்பில் டிடிவி தினகரன்),

8. விருதுநகர் (தி.மு.க. கூட்டணியில் சார்பில் காங்கிரசின் மாணிக்கம் தாகூர், அ.தி.மு.க. கூட்டணியின் சார்பில் தே.மு.தி.கவின் விஜய பிரபாகரன், பா.ஜ.க. கூட்டணி சார்பில் ராதிகா சரத்குமார்),

9. ராமநாதபுரம் (தி.மு.க. கூட்டணி சார்பில் முஸ்லீம் லீகின் நவாஸ் கனி, அ.தி.மு.க. சார்பில் ஜெயபெருமாள், பா.ஜ.க. கூட்டணி சார்பில் ஓ. பன்னீர்செல்வம்),

10. திருநெல்வேலி (காங்கிரசின் சார்பில் சி. ராபர்ட் ப்ரூஸ், அ.தி.மு.க. சார்பில் எம். ஜான்சிராணி, பா.ஜ.க. கூட்டணி சார்பில் நயினார் நாகேந்திரன்),

11. கன்னியாகுமாரி (காங்கிரஸ் சார்பில் விஜய் வசந்த், அ.தி.மு.க. சார்பில் நாசரேத் பசிலியான், பா.ஜ.க. கூட்டணி சார்பில் பொன். ராதாகிருஷ்ணன்).

பல முனைப் போட்டியில் தமிழக தேர்தல் களம்
படக்குறிப்பு, தென் சென்னை, வேலூர், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திருநெல்வேலி, பெரம்பலூர் ஆகிய தொகுதிகளில் கடுமையான போட்டி நிலவுவதாகச் சொல்லலாம்.

இந்த 11 தொகுதிகளிலும் தென் சென்னை, வேலூர், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திருநெல்வேலி, பெரம்பலூர் ஆகிய தொகுதிகளில் கடுமையான போட்டி நிலவுவதாகச் சொல்லலாம்.

பா.ஜ.கவின் முக்கியத் தலைவர்கள் போட்டியிடுவது, பா.ஜ.கவுக்கு அடிப்படையிலேயே செல்வாக்குமிக்க தொகுதியாக இருப்பது போன்ற காரணங்களால் இந்தத் தொகுதிகள் மும்முனைப் போட்டியை எதிர்கொள்கின்றன.

மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம் பேசுகையில், "அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுக்கும் எல்லாத் தொகுதிகளிலும் குறிப்பிடத்தக்க வாக்கு சதவீதம் உண்டு. இதைத் தாண்டி மற்றொரு கட்சியின் வேட்பாளர் வெற்றிபெற வேண்டுமென்றால் நன்கு அறியப்பட்டவர்களாக, தொகுதிக்குள் தொடர்ந்து பணியாற்றியவர்களாக இருக்கவேண்டும்.

அவர்களுக்கு எதிரான அம்சங்கள் ஏதும் அந்தத் தொகுதியில் இருக்கக்கூடாது. அப்படிப் பார்க்கும்போது நயினார் நாகேந்திரன், டி.டி.வி. தினகரன், ஏ.சி. சண்முகம், பாரிவேந்தர், பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் மூன்றாவது முனையில் கடுமையான போட்டியைக் கொடுப்பார்கள். இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் அவரவர் தொகுதியில் செல்வாக்கைப் பெற்றவர்கள்.

நீலகிரியில் நிற்கும் எல். முருகனும் கோயம்புத்தூரில் நிற்கும் கே. அண்ணாமலையும் நட்சத்திர வேட்பாளர்களாக இருக்கலாம். ஆனால், அவர்களுக்கு சாதகமல்லாத அம்சங்கள் அந்தத் தொகுதிகளில் உண்டு. நீலகிரி தொகுதியில் உள்ள மலையக மக்களின் வாக்குகளை எல். முருகனால் பெற முடியுமா என்பது சந்தேகம்தான்.

அதேபோல, கோயம்புத்தூரில் அ.தி.மு.கவுக்கும் தி.மு.வுக்கும் உள்ள கட்சிக் கட்டமைப்பைத் தாண்டி அடிமட்டத்தில் பா.ஜ.கவால் பணியாற்ற முடியுமா என்பதையும் பார்க்க வேண்டும்.

தவிர, இந்தத் தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி தவிர, நாம் தமிழரும் களத்தில் நிற்கிறது. இரு திராவிடக் கட்சிகளையும் பிடிக்காதவர்கள் நாம் தமிழருக்குப் வாக்களிப்பார்களா, பா.ஜ.கவுக்கு வாக்களிப்பார்களா என்பது முக்கியமான கேள்வியாக இருக்கும்" என்றார்.

இம்மாதிரியான மும்முனைப் போட்டிகளில் வெற்றிவாய்ப்பு யாருக்கு?

"பொதுவாகத் தேர்தல் முடிவுகளை யாரும் கணிக்க முடியாது. இருந்தபோதும், பல முனைப் போட்டி இருக்கும்போது, அ.தி.மு.க., தி.மு.கவின் அடிப்படையான வாக்கு வங்கி அவர்களுக்குச் சென்றுவிடும். மீதமுள்ள வாக்குகளை மற்ற கட்சிகள் எல்லாம் பிரித்துக்கொள்ள வேண்டியிருக்கும். ஆனால், இதையெல்லாம் தாண்டி கட்சிகளின் பிரச்சாரம், மக்களிடையே உள்ள அதிருப்தி ஆகியவையும் முடிவுகளை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக இருக்கும்" என்கிறார் ஷ்யாம்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)