ஓலா, ஃபாஸ்டேக், பி.எஃப், ஓய்வூதியம்: இன்று முதல் நடைமுறைக்கு வந்திருக்கும் மாற்றங்கள் என்னென்ன?

ஏப்ரல் 1

பட மூலாதாரம், Getty Images

அடுத்த நிதியாண்டுக்கான மாற்றங்கள், புதிய விதிகள் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்திருக்கின்றன. 2024-25 புதிய நிதியாண்டில் என்னென்ன விதிகள் பொருந்தும் என்பதைப் பார்ப்போம்.

வருமான வரி

ஏப்ரல் 1, 2024 முதல் வருமான வரி - புதிய வரி முறை முந்தைய நிலையிலேயே தொடரும். எனவே நீங்கள் அதே வழியில் வரி செலுத்துவீர்கள் எனக் கருதலாம்.

பழைய வரி முறையின் கீழ் நீங்கள் வரியைக் கணக்கிட விரும்பினால், அதை உங்கள் நிறுவனத்திற்குச் சொல்ல வேண்டும்.

புதிய வரி முறையின் வரி அடுக்குகள்

  • 3 லட்சம் வரை - 0%
  • 3-6 லட்சம் - 5%
  • 6-9 லட்சம் - 10%
  • 9-12 லட்சம் - 15%
  • 12 முதல் 15 லட்சம் - 20%
  • 15 லட்சத்திற்கு மேல் வருமானம் - 30%

காப்பீட்டுத் திட்டத்தை ஒப்படைத்தல்

ஒரு வாடிக்கையாளர் தனது காப்பீட்டை ஒப்படைத்தால், அதன் மதிப்பை நிர்ணயம் செய்வதற்கான விதிகளை இந்திய காப்பீடு ஒழுங்காற்று மற்றும் வளர்ச்சி முகமை (IRDAI) மாற்றியுள்ளது.

புதிய நிதியாண்டில் ஏப்ரல் 1 முதல் அவை அமலுக்கு வரும்.

ஒரு காப்பீட்டை நீங்கள் வாங்கியுள்ளீர்கள். சில வருடங்கள் அதன் தவணையும் செலுத்தப்பட்டது. ஆனால் சில காரணங்களால் இப்போது இந்தக் காப்பீட்டை நீங்கள் தொடர விரும்பவில்லை. எனவே, முதிர்ச்சிக்கு முன் அதை மூட வேண்டுமா அல்லது நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டுமா?

காப்பீட்டின் ஒப்படைப்பு மதிப்பு என்பது அதற்கு நீங்கள் எவ்வளவு பணம் செலுத்தினீர்கள், எவ்வளவு பணம் திரும்பப் பெறுகிறீர்கள் என்பதுதான். இதைச் செலுத்தும்போது, ​​நிறுவனம் ஒப்படைப்பு கட்டணத்தைக் கழிக்கிறது.

நீங்கள் எவ்வளவு பணம் திரும்பப் பெறுவீர்கள் என்பது ஆயுள் காப்பீட்டை வாங்கிய பிறகு எத்தனை ஆண்டுகள் திருப்பிச் செலுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்தது.

வருமான வரி முதல் ஓய்வூதியம் வரை - ஏப்ரல் 1 முதல் என்னென்ன விதிகள் மாறுகின்றன?

பட மூலாதாரம், Getty Images

பல தவணைகளைச் செலுத்தும் காப்பீடு

  • இரண்டாவது வருடத்தில் காப்பீட்டை முடித்துவிட்டால், செலுத்தப்பட்ட பிரீமியத்தில் 30% திரும்பப் பெறுவீர்கள்.
  • காப்பீட்டை மூன்றாம் ஆண்டில் ஒப்படைத்தால், நீங்கள் செலுத்திய பிரீமியத்தில் 35% திரும்பப் பெறுவீர்கள்.
  • காப்பீடு எடுத்த 4 முதல் 7வது ஆண்டுக்குள் ஒப்படைத்தால், நீங்கள் செலுத்திய பிரீமியத்தில் 50% திரும்பப் பெறுவீர்கள்.
  • கடந்த இரண்டு ஆண்டுகளில் காப்பீட்டை ஒப்படைத்தால், செலுத்தப்பட்ட பிரீமியத்தில் 90% திரும்பப் பெறுவீர்கள்.

ஒற்றை பிரீமியம் - அதாவது ஒரு முறை மட்டுமே பிரீமியம் செலுத்தப்படும் காப்பீட்டுத் திட்டங்களுக்கு

  • காப்பீட்டை மூன்றாம் ஆண்டில் ஒப்படைத்தால், செலுத்தப்பட்ட பிரீமியத்தில் 75% செலுத்தப்படும்.
  • கடந்த இரண்டு ஆண்டுகளுக்குள் காப்பீட்டை ஒப்படைத்தால், செலுத்தப்பட்ட பிரீமியத்தில் 90% திரும்பப் பெறுவீர்கள்.

இந்த விதிகள் முதல் மூன்று ஆண்டுகளில் காப்பீட்டை ஒப்படைத்தால் குறைந்த பணமே கிடைக்கும். ஆனால் நான்காவது ஆண்டுக்குப் பிறகு காப்பீட்டை முடிக்க முடிவு செய்யும் வாடிக்கையாளர்கள் புதிய விதிகளின் காரணமாக முன்பைவிட அதிகமான பணத்தைத் திரும்பப் பெற முடியும்.

தேசிய ஓய்வூதியத் திட்டம்

தேசிய ஓய்வூதியத் திட்டத்திற்கான பாதுகாப்பு விதிகள் மாற்றப்பட்டுள்ளன. இதில், நாம் இரண்டு அடுக்கு பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். அதாவது, முன்பு போல் கடவுச் சொல்லை மட்டும் நிரப்பி உள்நுழைய முடியாது. எனவே, உங்களது கணக்கிற்கான அணுகல் வேறு ஒருவரின் கைகளுக்கு எளிதில் சென்றுவிடாது.

நீங்கள் ஆதார் எண்ணைச் சரிபார்க்க வேண்டும். உங்கள் மொபைலுக்கு அனுப்பப்பட்ட ஓடிபி-ஐ பயன்படுத்த வேண்டும். பின்னர்தான் உங்கள் கணக்கு விவரங்களைப் பார்க்க முடியும்.

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO)

நீங்கள் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் உறுப்பினராக இருந்து, வேலை மாறினால், உங்கள் வருங்கால வைப்பு நிதி இருப்பு இப்போது தானாகவே புதிய நிறுவனத்தில் உள்ள கணக்குக்கு மாற்றப்படும். அதாவது, புதிய வேலையில் சேர்ந்த பிறகு வைப்பு நிதி பரிமாற்றத்தைச் செயல்படுத்த வேண்டியதில்லை.

வருமான வரி முதல் ஓய்வூதியம் வரை - ஏப்ரல் 1 முதல் என்னென்ன விதிகள் மாறுகின்றன?

பட மூலாதாரம், Getty Images

ஃபாஸ்டாக்

ஃபாஸ்டாக்கிற்கான புதிய விதிகளும் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகின்றன. உங்கள் ஃபாஸ்டாக்-இன் கே.ஒய்.சி செயல்முறையை நீங்கள் வங்கியுடன் முடிக்கவில்லை என்றால், நீங்கள் சிக்கல்களைச் சந்திக்க நேரிடும்.

உங்களிடம் கே.ஒய்.சி இல்லையென்றால், உங்கள் ஃபாஸ்டாக் செயலிழந்துவிடும். உங்கள் ஃபாஸ்டாக்-இல் இருப்பு இருந்தாலும், அது செயலில் இருக்காது.

இதனால் உங்களால் பணம் செலுத்த முடியாது. இதன் விளைவாக நீங்கள் இரு மடங்கு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

ஓலா செயலி

ஓலா செயலியில் இருக்கும் பணம் (Ola Money Wallet) சிறிய ப்ரீபெய்ட் கட்டணக் கருவியாக, அதாவது PPI ஆக மாற்றுவதாக அறிவித்துள்ளது. எனவே, வாடிக்கையாளர்கள் இனி அதிகபட்சமாக மாதம் ரூ.10,000 வரை அதில் பணத்தை வைத்துக்கொள்ளலாம்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)