வாட்ஸ்-ஆப் தேர்தல் பிரசாரம்: குரூப் அட்மின்கள் செய்ய வேண்டிய, செய்யக்கூடாத விஷயங்கள்

வாட்ஸ் அப் அட்மின்கள் என்னென்ன செய்யலாம்? என்னென்ன செய்யக்கூடாது?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2024 மக்களவைத் தேர்தலிலும் சமூக ஊடகத் தேர்தல் பிரசாரம் முக்கியமானதாக இருக்கிறது.
    • எழுதியவர், பானு பிரகாஷ் கர்நாடி
    • பதவி, பிபிசி தெலுகு சேவை

''இந்தியா: வாட்ஸ்அப் தேர்தல்''

''இந்தியாவின் வாட்ஸ்அப் தேர்தல்: அரசியல் கட்சிகள் தொழில்நுட்பத்தால் ஜனநாயகத்தை குழிபறிக்கும் அபாயம்''

2019 பொதுத் தேர்தல் நேரத்தில் வெளிவந்த சில தலைப்புச் செய்திகள் இவை. இது தேர்தலில் சமூக ஊடகங்களின் தாக்கத்தை காட்டுகிறது.

கடந்த சில ஆண்டுகளாக தேர்தலில் சமூக ஊடகங்களின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தேர்தல் பிரசாரம் முதல் வாக்காளர்கள் மீது செல்வாக்கு செலுத்துவது வரை சமூக ஊடகங்களை கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்தியாவில் மக்களவை மற்றும் ஆந்திரா போன்ற மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் அட்டவணை வந்துவிட்டது. தற்போது தேர்தல் நடத்தை நெறிமுறை அமலில் உள்ளது. தேர்தல் பிரசாரங்களில் சமூக ஊடகங்கள் பயன்படுத்தப்படுவதை கருத்தில் கொண்டு தேர்தல் ஆணையம் 2013 அக்டோபரில் அரசியல் கட்சிகளுக்கு தெளிவான விதிகளை வெளியிட்டது.

இதன் ஒரு பகுதியாக, வேட்புமனு தாக்கல் செய்யும் போது தனிப்பட்ட சமூக வலைதள கணக்குகளின் விவரங்களும் படிவம் எண் 26 இல் குறிப்பிடப்பட வேண்டும்.

சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை உறுதி செய்வதற்காக, சமூக ஊடகங்களை பயன்படுத்தும் போது கவனமாக இருக்குமாறு இந்திய தேர்தல் ஆணையம் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது. நாட்டின் அரசியல் கட்சிகள் வாட்ஸ்அப் போன்ற மக்கள் தொடர்பு சேனல்களை பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கின்றன. இந்தியாவில் 40 கோடிக்கும் அதிகமான மாதாந்திர பயனர்களைக் கொண்ட வாட்ஸ்அப், ஏற்கனவே வாக்காளர்களுக்கு தவறான தகவலைப் பரப்பவும், ''போலி செய்திகளை'' பரப்பவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் அரசியல் கட்சிகள் தங்களுக்கு சாதகமாக மக்களின் கருத்தை மாற்றியமைக்க பெருமளவில் முயற்சிக்கின்றன.

அவ்வப்போது தனது வரம்பை விரிவுபடுத்தி, புதிய தொழில்நுட்பத்தை சேர்த்துக் கொண்டு வரும் வாட்ஸ்அப், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வாட்ஸ்அப் சேனல்களை அறிமுகப்படுத்தியது. பயனர்கள் தாங்கள் விரும்பும் நபர் அல்லது நிறுவனத்தைப் பற்றிய அறிவிப்புகளைப் பெற தனிப்பட்ட WhatsApp சேனல்களை நிர்வகிக்கலாம். இதன்மூலம் பயனர்களை அணுகலாம். இந்த சோதனையும் வெற்றியடைந்தது.

இப்போது இந்த அம்சம் தேர்தல் பிரசாரத்திலும் ஒரு கருவியாக மாறியுள்ளது. நாட்டின் முக்கிய தேசிய கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸும் ஒரே நேரத்தில் வாட்ஸ்அப் சேனல்களை தொடங்கின. தற்போது பாஜகவின் அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் சேனலை 7.11 லட்சம் பேரும், காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் சேனலை 5.02 லட்சம் பேரும் பின்தொடர்கின்றனர்.

வாட்ஸ் அப் அட்மின்கள் என்னென்ன செய்யலாம்? என்னென்ன செய்யக்கூடாது?

பட மூலாதாரம், ANI

தேர்தல் ஆணையம் என்ன சொல்கிறது?

பிரசாரத்தில் சமூக ஊடகங்களின் பங்கு குறித்து தேர்தல் ஆணையம் தெளிவான அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. நாளேடுகள், மின்னணு, வானொலி மற்றும் கேபிள் டிவி போன்ற ஊடக பிரசாரங்களைப் போலவே சமூக ஊடகங்களுக்கும் விதிகளை ஆணையம் வெளியிட்டுள்ளது.

மாநில மற்றும் மாவட்ட அளவிலான மீடியா சான்றிதழ் மற்றும் கண்காணிப்புக் குழு (MCMC) அந்தந்த மாநிலங்களுக்குப் பொறுப்பாக இருக்கும். அனைத்து வகையான அரசியல் விளம்பரங்களையும் சமூக ஊடகங்களில் ஒளிபரப்புவதற்கு முன் MCMC இன் அனுமதியைப் பெற வேண்டும்.

அனுமதி பெற்று, மாதிரி நடத்தை நெறிகளை பின்பற்றிய பின்னரே அவற்றை பிரசாரத்தில் பயன்படுத்த வேண்டும். விதிகளை மீறுபவர்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும்.

சமீப காலமாக வாட்ஸ்அப் பயனர்கள், 'விகசித் பாரத்' என்ற பெயரில் அரசு திட்டங்கள் மற்றும் செயல்திறன் குறித்து கருத்துத் தெரிவிக்கும் பிடிஎஃப்களுடன் செய்திகளைப் பெறுகின்றனர். ஆனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டபோதிலும் அந்த செய்திகள் தொடர்வதாக தேர்தல் ஆணையத்திற்கு புகார்கள் வந்துள்ளன. இது தொடர்பாக மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பிரசாரத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட துறையிடமிருந்து இதற்கான பதில் வந்தது. "இந்தச் செய்திகள் தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அமலுக்கு வருவதற்கு முன்பே அனுப்பப்பட்டவை. மேலும் இது அமலுக்கு வந்தவுடன் பிரசாரம் நிறுத்தப்பட்டது. சில செய்திகள் தொழில்நுட்பம் மற்றும் நெட்வொர்க் தடங்கல்கள் காரணமாக மொபைல்களை தாமதமாக சென்றடைகின்றன," என்று அது கூறியது.

வாட்ஸ் அப் அட்மின்கள் என்னென்ன செய்யலாம்? என்னென்ன செய்யக்கூடாது?

பட மூலாதாரம், Getty Images

வாட்ஸ்அப்பில் தேர்தல் பிரசாரம்

போலி செய்திகள் பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.

பயனர்கள் தவறான தகவல்கள் பற்றிப் புகார் அளிக்க சர்வதேச உண்மை சரிபார்ப்பு அமைப்புடன் கூட்டு சேர்ந்துள்ளதாக அது கூறியது.

இந்தியாவில் தேர்தல் தொடர்பான ஆட்சேபத்திற்குரிய உள்ளடக்கம், தவறான தகவல்கள், தவறான செய்திகள் அல்லது வேறு ஏதேனும் தகவல்கள் இருந்தால் AFF-க்கு புகாரளிக்கலாம்.

"வாட்ஸ்அப்பில் அனுப்பப்படும் செய்திகள் ’அனுப்புவதில் இருந்து பெறப்படும்’ வரை என்க்ரிப்ட் செய்யப்பட்டவை. அதாவது அந்த செய்திகளை யாரும் தெரிந்துகொள்ள முடியாது. அரசியல் பேச்சுகள், வேட்பாளர்களின் தேர்தல் பிரசாரங்கள் மற்றும் வேட்பாளர்கள் அனுப்பும் செய்திகளைக் கூட கண்டறிய முடியாது. இந்த விஷயம் தொடர்பாக தேர்தல் நிபுணர்களுடன் விவாதங்களும் நடந்துள்ளன,” என்று அது கூறியது.

நிறுவனத்தின் இணையதளத்தில் இதற்கென எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் கொள்கைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஃபார்வேர்ட் வரம்பு

ஒரே நேரத்தில் ஐந்து தொடர்புகளுக்கு மேல் செய்திகளையும் சேனல் அப்டேட்டுகளையும் அனுப்ப முடியாது. இந்த கட்டுப்பாடு அமலுக்கு வந்ததில் இருந்து ஃபார்வேர்டு செய்யப்பட்ட செய்திகளின் எண்ணிக்கை 25 சதவிகிதத்திற்கும் அதிகமாக குறைந்துள்ளதாக வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.

கூடுதல் வரம்பு - லேபிளிங்

மிகவும் அடிக்கடி ஃபார்வேர்ட் செய்யப்படும் செய்தி என்பதைக் காண்பிக்கும் குறியை செய்தியில் காண்பித்தல். அதாவது இது வெளியில் இருந்து வரும் தகவல் மற்றும் அவர்களின் சொந்த செய்தி அல்ல என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

அரசியல் கட்சிகள் அல்லது அரசியல் வேட்பாளர்கள் ஆட்டோமேஷன் அமைப்புடன் செய்திகளை அனுப்பினால் அல்லது வாட்ஸ்அப் பயனர்களுக்கு அனுமதியின்றி செய்திகளை அனுப்பினால் அவர்களின் கணக்குகள் தடை செய்யப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. வாட்ஸ்அப் வணிக அம்சத்தை அரசியல் பிரசாரங்களுக்கு பயன்படுத்த அனுமதி இல்லை.

"பல நாடுகளில் குறிப்பாக முக்கிய தேர்தல்களின் போது அரசியல் அமைப்புகளுடன் பாதுகாப்பு தொடர்பான எங்கள் கொள்கையில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்," என்று அது கூறியது.

வாட்ஸ் அப் அட்மின்கள் என்னென்ன செய்யலாம்? என்னென்ன செய்யக்கூடாது?

பட மூலாதாரம், GETTY IMAGES

வாட்ஸ்அப் பிரசாரங்களை கண்காணிப்பது சாத்தியமில்லையா?

"ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்றவற்றுடன் ஒப்பிடும்போது வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போன்றவற்றைக் கண்காணிப்பது எளிதானது அல்ல. இதில் பல சவால்கள் உள்ளன. அந்த வாட்ஸ்அப் குழுவின் உறுப்பினர்களில் ஒருவர் தகவலைப் பகிராவிட்டால், அந்தக் குழுவில் என்ன நடக்கிறது என்பது எங்களுக்குத் தெரியாது. எனவே கண்காணிப்பு எப்படி சாத்தியம்?" என்கிறார் ஜனநாயக சீர்திருத்த சங்கத்தின் ராகேஷ் துப்புடு.

"இந்தியா போன்ற ஒரு பெரிய ஜனநாயக நாட்டில் தேர்தல்களின் போது சமூக ஊடக கண்காணிப்புக்கு தனி அமைப்பு இருக்க வேண்டும்."

குறிப்பாக சமூக ஊடக அமைப்புகளுடன் தேர்தலுக்கு ஆறு மாதங்களுக்கு முன்னதாக ஒரு கூட்டம் நடத்த வேண்டும். மேலும் சமூக ஊடகங்களில் போலி செய்திகளை பரப்புதல், ஒரு பிரிவினரை வேண்டுமென்றே அல்லது மோசமாக பாதிக்கும் வீடியோக்கள் அனுப்பலை ஒழுங்குபடுத்துதல் மற்றும் உள்ளடக்க கண்காணிப்புக்கு தேவையான தொழில்நுட்ப தயார்நிலை ஆகியவற்றுக்கான திட்டங்களை வகுக்கவேண்டும்."

"தேர்தல் செயல்முறை, தவறான தகவல்கள் மற்றும் வாக்காளர்களை நேரடியாகப் பாதிக்கும் பிரச்சனைகள் ஆகியவற்றில் தேர்தல் ஆணையம் அதிக கவனம் செலுத்தியுள்ளது. சமூக ஊடகங்களை முழுமையாகக் கண்காணிக்கும் தனி அமைப்பு தற்போது இல்லை." என்று அவர் கூறியுள்ளார்.

2019 பொதுத் தேர்தலின் போது, பல சமூக ஊடக நிறுவனங்கள், இந்திய இணையம் மற்றும் மொபைல் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் தேர்தல் ஆணையம் ஒரு கூட்டத்தை நடத்தியது. தேர்தலை சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடத்துவதை உறுதிசெய்ய எல்லா அமைப்புகளுடனும் ஒத்துழைக்குமாறு நிறுவனங்களின் பிரதிநிதிகளைக் கேட்டுக் கொண்டது.

தேர்தல் விதிகளின்படி 'தன்னார்வ நெறிமுறைகள்' ஒன்றை உருவாக்கி, அந்த விதிகள் செயல்படுத்தப்படுவதை உறுதிசெய்வதாக IAMAI மற்றும் சமூக ஊடக அமைப்புகளின் பிரதிநிதிகள், ஆணையத்திடம் கூறினர்.

வாட்ஸ் அப் அட்மின்கள் என்னென்ன செய்யலாம்? என்னென்ன செய்யக்கூடாது?

பட மூலாதாரம், EPA

வாட்ஸ்அப் குரூப் அட்மின்கள் செய்ய வேண்டியதும் செய்ய கூடாததும்

• வாட்ஸ்அப் குழுக்களை நிர்வகிக்கும் நிர்வாகிகளும் தேர்தல் விதிகளைப் பின்பற்றி, குழுக்களில் பகிரப்படும் தகவல்கள் குறிப்பாக தேர்தல் பிரசாரம் தொடர்பான விளம்பரங்கள் மற்றும் தகவல்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும்.

• இது தொடர்பாக வாட்ஸ்அப் தெளிவான வழிகாட்டுதல்களையும் வெளியிட்டுள்ளது.

• தேர்தலின் போது உண்மையான தகவல்களை மட்டுமே பகிர வேண்டும் என்றும் போலியான செய்திகள் பற்றி புகாரளிக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்தது.

• வாட்ஸ்அப் குழுவின் அட்மின் இந்த விஷயங்களைப் பற்றி விழிப்புடன் இருக்க வேண்டும். இல்லையெனில் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பது சாத்தியமாகும்.

• தேச விரோத, மத மற்றும் சாதிக்கு எதிரான உள்ளடக்கம் பகிரப்படக்கூடாது.

• தவறான பிரசாரம் மற்றும் சரிபார்க்கப்படாத செய்திகள் பகிரப்படக்கூடாது.

• ஒருவரின் தனியுரிமையை மீறும் வகையில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுமதியின்றி பகிரக்கூடாது.

• வன்முறையைத் தூண்டும் உள்ளடக்கம் மற்றும் ஆபாச உள்ளடக்கம் பகிரப்படக்கூடாது.

• தேர்தல்கள் தொடர்பாக வாட்ஸ்அப் குழுக்களின் நிர்வாகிகள் மற்றும் பயனர்களுக்கு குறிப்பாக வழிகாட்டுதல்கள் எதுவும் இல்லை என்றாலும் மற்றவற்றில் இதே வழிகாட்டுதல்கள் பொருந்தும்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)