கோலி ரன் குவித்தாலும் விடாமல் தொடரும் நெருக்கடி என்ன? ஆர்.சி.பி. சறுக்கியது எங்கே?

விராட் கோலி சிறப்பாக பேட் செய்தும் ஆர்சிபி தோற்றது ஏன்? கொல்கத்தாவுக்கு எளிய வெற்றியை தந்த வெங்கடேஷ், நரைன்

பட மூலாதாரம், Royal Challengers Bengaluru/X

படக்குறிப்பு, விராட் கோலி
    • எழுதியவர், போத்திராஜ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

ஐபிஎல் டி20 தொடரில் இதுவரை 11 போட்டிகள் நடந்துவிட்டாலும், ஆர்சிபி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் முதல் போட்டி என்றாலே அது ஐபிஎல் தொடரின் “ எல் ப்ரைமிரோ”( El Primero) என்றுதான் அழைக்கப்படுகிறது.

2008ம் ஆண்டு ஐபிஎல் டி20 தொடர் தொடங்கும்போது, முதல் ஆட்டத்தில் ஆர்சிபி - கேகேஆர் அணிகள்தான் மோதின. அந்த ஆட்டத்தில் மெக்கலம் 73 பந்துகளில் 158 ரன்கள் சேர்க்கவே கேகேஆர் அணி 140 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

அந்தத் தொடரிலிருந்து இந்த 2024 சீசன் வரை ஆர்சிபி-கேகேஆர் போட்டிகள் என்றாலே இரு அணிகளும் வரிந்து கட்டிக்கொண்டுதான் களத்தில் மோதியிருந்தன. பரபரப்புக்கு பஞ்சம் இருந்ததே இல்லை. விராட் கோலி, கவுதம் கம்பீர், கிறிஸ் கெயில் என பல வீரர்கள் களத்தில் உரசி இருக்கிறார்கள். நீயா, நானா என்ற ரீதியில்தான் பந்துவீச்சும், பேட்டிங்கும் இரு அணிகளிடமும் கடந்த காலத்தில் இருந்துள்ளது.

அதிலும் பெங்களூரு சின்னசாமி அரங்கில் இரு அணிகளும் மோதிக்கொண்டால் ரசிகர்களின் உற்சாகத்துக்கும், ஆதரவுக்கும் குறைவிருக்காது. இந்த ஆட்டத்திலும் ரசிகர்கள் ஏராளமாக வந்திருந்தாலும் அனைவரையும் வாயடைக்க வைத்தது கொல்கத்தா அணி.

‘லாஜிக்கை’ உடைத்த கேகேஆர்

விராட் கோலி சிறப்பாக பேட் செய்தும் ஆர்சிபி தோற்றது ஏன்? கொல்கத்தாவுக்கு எளிய வெற்றியை தந்த வெங்கடேஷ், நரைன்

பட மூலாதாரம், Royal Challengers Bengaluru/X

இந்த வெற்றியின் மூலம் கடந்த 10 ஆட்டங்களாக தொடர்ந்து வந்த சென்டிமென்டான, சொந்த மைதானத்தில் சொந்த அணிகள்தான் வென்று வந்தன என்ற லாஜிக்கை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உடைத்துள்ளது. இந்த சீசனில் முதல்முறையாக எதிரணியின் சொந்த மைதானத்தில் வென்ற முதல் அணி என்ற பெருமையை கேகேஆர் பெற்றுள்ளது.

இந்த வெற்றியால் புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகளுடன் 2வது இடத்துக்கு கேகேஆர் அணி முன்னேறியுள்ளது. சிஎஸ்கே அணியைவிட நிகர ரன்ரேட்டில் 0.900 புள்ளிகள் குறைவாக கேகேஆர் அணி இருக்கிறது.

இந்த சீசனில் 2வது தோல்வியைச் சந்தித்த ஆர்சிபி அணி 3 போட்டிகளில் 2 தோல்விகள், ஒரு வெற்றி என 2 புள்ளிகளுடன் 6-வது இடத்துக்கு சரிந்தது. நிகர ரன்ரேட்டும் மைனஸுக்கு சரிந்துள்ளது.

500-வது டி20 ஆட்டம்

தனது 500-வது டி20 போட்டியில் களமிறங்கிய கேகேஆர் ஆல்ரவுண்டர் சுனில் நரைன், அருமையான கேமியோ ஆடிக் கொடுத்து, வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார். 22 பந்துகளில் 47 ரன்கள்(5சிக்ஸர்கள், 2பவுண்டரிகள்) என்று ஏறக்குறைய அரைசதத்தை தனது 500வது ஆட்டத்தில் நரைன் எட்டினார். கேகேஆர் வெற்றிக்கு வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்து, பந்துவீச்சிலும் ஒரு விக்கெட் வீழ்த்திய நரைனுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

பவர்-ப்ளேயில் ஆட்டத்தை முடித்த கேகேஆர்

கேகேஆர் அணி கடந்த சில ஆண்டுகளாகவே தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பாக அமையாமல் திணறி, தடுமாறி வந்தது. அதிலும் நரைனை களமிறக்கினாலே கேமியோ ஆடுகிறேன், பிஞ்ச் ஹிட்டராக மாறுகிறேன் எனக் கூறி சில பந்துகளில் ஆட்டமிழந்துவிடுவார். அனைத்தும் இந்த சீசனில் கேகேஆர் அணியில் மாறியுள்ளது. பில்சால்ட்-நரைன் கூட்டணி கேகேஆர் அணிக்கு பெரியபலமாக மாறியுள்ளது. கடந்த போட்டியில் பில் சால்ட் வெளுத்து வாங்கிய நிலையில், இந்த ஆட்டத்தில் நரைன் துவம்சம் செய்துவிட்டார்.

பவர்ப்ளே ஓவர்களில் இருக்கும் பீல்டிங் கட்டுப்பாடுகளை நன்கு பயன்படுத்திய நரைன் - சால்ட் இணை வெற்றி இலக்கின் சரிபாதியை பவர்ப்ளே ஓவரில் கொண்டு வந்தனர். புதிய பந்தில் பந்துவீசும்போது பேட்டரை நோக்கி வேகமாக வரும், அதைப் பயன்படுத்தி நரைன் ஆர்சிபி பந்துவீச்சை துவம்சம் செய்தார்.

பவர் ப்ளே முடிவில் விக்கெட் இழப்பின்றி கேகேஆர் அணி 85 ரன்கள் சேர்த்தது. அதாவது வெற்றி இலக்கில் 50 சதவீதத்தை, 30 சதவீத ஓவர்களில் அடைந்து, 100 சதவீதம் விக்கெட்டுகளை கேகேஆர் அணி கைவசம் வைத்திருந்தது.

பவர்ப்ளே முடிந்தபோதே ஆட்டம் கேகேஆர் பக்கம் சென்றுவிட்டது என்பதை ரசிகர்கள் புரிந்து கொண்டனர். முதல் விக்கெட்டுக்கு சால்ட்-நரைன் கூட்டணி அமைத்துக் கொடுத்த 86 ரன்கள் அடித்தளத்தை அடுத்து வந்த வெங்கடேஷ், ஸ்ரேயாஸ் இருவரும் பயன்படுத்தி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். 8.4 ஓவர்களில் கேகேஆர்அணி 100 ரன்களையும், 15 ஓவர்களில் 167 ரன்களையும் கேகேஆர் அணி எட்டியது.

விராட் கோலி சிறப்பாக பேட் செய்தும் ஆர்சிபி தோற்றது ஏன்? கொல்கத்தாவுக்கு எளிய வெற்றியை தந்த வெங்கடேஷ், நரைன்

பட மூலாதாரம், Royal Challengers Bengaluru/X

ஸ்ரேயாஸ்-வெங்கடேஷ் கூட்டணி

3வது விக்கெட்டுக்கு ஸ்ரேயாஸ், வெங்கடேஷ் கூட்டணி கேகேஆர் வெற்றியை உறுதி செய்தது. கடந்த சீசனில் எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக பேட் செய்யாத வெங்கடேஷ் இந்த ஆட்டத்தில் வெளுத்து வாங்கினார்.

ஆர்சிபி பந்துவீச்சாளர்கள் பந்தவீச்சை சிக்ஸர், பவுண்டரி என பறக்கவிட்ட வெங்கடேஷ் 29 பந்துகளில் அரைசதம் அடித்தார். அல்சாரி ஜோஸப் வீசிய 10-வது ஓவரில் 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் என 20 ரன்களை வெங்கடேஷ் சேர்த்தது பெரிய திருப்புமுனையாக அமைந்தது. வெங்கடேஷ் 30 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். 3வது விக்கெட்டுக்கு இருவரும் 74 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

ஸ்ரேயாஸ் தனது பங்கிற்கு 2 சிக்ஸர்களுடன் 24 பந்துகளில் 39 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஆர்சிபி சறுக்கியது எங்கே?

ஆர்சிபி அணியில் வலுவான வெளிநாட்டு பேட்டர்களும், பந்துவீச்சாளர்கள் இருந்தும் தோல்வி என்ற நிலை அந்த அணியை விட்டு நகர மறுக்கிறது. எந்த நாட்டின் திறமையான வீரர்களைப் பயன்படுத்தினாலும் ஆர்சிபி அணியால் கோப்பையையும் வெல்ல முடியவில்லை என்பது பெரிய சோதனையாக அமைந்துள்ளது.

இந்த ஆட்டத்தில்கூட ஆர்சிபி அணி பந்துவீச்சில் சறுக்கியதா அல்லது பேட்டிங்கில் சறுக்கியதா என்ற சுயபரிசோதனை செய்ய வேண்டியுள்ளது.

ஏமாற்றும் வெளிநாட்டு பேட்டர்கள்

ஏனென்றால் பேட்டிங்கைப் பொருத்தவரை சின்னசாமி அரங்கு போன்ற சிறிய மைதானத்தில் 182 ரன்கள் என்பது வெற்றிக்கான ஸ்கோர் அல்ல. ஆடுகளமும் சேஸிங்கிர்கு சொர்க்கபுரியாக இருக்கும் என்பதால் இன்னும் கூடுதலாக 50 ரன்களையாவது ஆர்சிபி அணி எடுத்திருக்க வேண்டும். இதுவரை 3 போட்டிகளில் விளையாடிவிட்ட ஆர்சிபி அணியில் நட்சத்திர பேட்டர்களான கேப்டன் டூபிளெசிஸ், கேமரூன் கிரீன், மேக்ஸ்வெல் எந்த பெரிய ரன்குவிப்பும் செய்யவில்லை.

வெளிநாட்டு பேட்டர்கள்தான் ஆர்சிபி பலம் என்று பேசப்பட்ட நிலையில் இதுவரை வெளிநாட்டு பேட்டர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாதது தோல்விக்கு பெரிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. கடந்த 3 போட்டிகளிலுமே விராட் கோலி, தினேஷ் கார்த்திக், அனுஜ் ராவத் ஆகிய வீரர்கள்தான் சிறப்பாக பேட் செய்துள்ளனர்.

பந்துவீச்சில் அனுபவமின்மை

விராட் கோலி சிறப்பாக பேட் செய்தும் ஆர்சிபி தோற்றது ஏன்? கொல்கத்தாவுக்கு எளிய வெற்றியை தந்த வெங்கடேஷ், நரைன்

பட மூலாதாரம், Royal Challengers Bengaluru/X

படக்குறிப்பு, வைஷாக் விஜயகுமார்

வேகப்பந்துவீச்சிலும், சுழற்பந்துவீச்சிலும் அனுபவமற்ற வீரர்கள் வைத்திருப்பது எதிரணியை குறிப்பிட்ட ஸ்கோரில் சுருட்ட முடியாமல் போய்விடும். இந்த ‘அனுபவமற்றவர்கள்’ என்ற சொற்பதம் என்பது, டி20 அனுபவம் இல்லாத வீரர்கள், சர்வதேச அனுபவம் இல்லாத பந்துவீச்சாளர்கள் என எடுக்கலாம்.

ஏனென்றால், அல்சாரி ஜோஸப் சர்வதேச அளவில் அதிவேகமாக துல்லியமாக பந்துவீசக்கூடிய கரீபியன் பந்துவீச்சாளர் என்பதில் துளியும் மாற்றமில்லை. ஆனால், சின்னசாமி அரங்கு போன்ற சிறிய மைதானத்தில் மணிக்கு 150கி.மீ வேகத்தில் பந்துவீசினால், பேட்டர்களின் பணி எளிதாகிவிடும். பந்து வரும் திசையில் லேசாக பேட்டை வைத்து பேட்டர் திருப்பிவிட்டாலே சிக்ஸர், பவுண்டரி கிடைத்துவிடும்.

எந்த ஆடுகளத்துக்கு எப்படி பந்துவீச வேண்டும், எங்கு வேகத்தைக் குறைக்க வேண்டும் என்ற அனுபவம் இல்லாதவர்களாக சிராஜும், அல்சாரி ஜோஸப், தயால் இருக்கிறார்கள். இந்த 3 பந்துவீச்சாளர்களுமே நேற்று ரன்களை வாரி வழங்கினார்கள். இதில் அல்சாரி(17), சிராஜ்(15) என்று ஓவருக்கு ரன்களை வழங்கிய நிலையில் தயால் 11 ரன்கள் சராசரி வைத்திருந்தார். 3 பந்துவீச்சாளர்களும் சேர்ந்து 126 ரன்களை விட்டுக்கொடுத்த கேகேஆர் வெற்றியை 70 சதவீதம் உறுதி செய்துவிட்டனர்.

ஆர்சிபி வேகப்பந்துவீச்சாளர்கள் தங்கள் பந்துவீச்சில் அதிகமாக “ஸ்லோ-பால்” வீசவில்லை. சின்னசாமி மைதானத்தில் இரவுநேரத்தி்ல் பனிப்பொழிவு இருக்கும்போது, அதிகமான ஸ்லோபால் பேட்டர்களுக்கு பெரிய தொந்தரவாக அமையும்.

ஆனால், இதைஆர்சிபி முறையாகச் செய்யவில்லை. இரு அணிகளின் பந்துவீச்சாளர்களும் சராசரியாக 21 பந்துகள்வரை ஸ்லோவர் பந்துகளை நேற்று வீசினர். இதில் கேகேஆர் அணியின் ரன் சராசரி 5.45 ஆகக் குறைவாக இருந்தபோது, ஆர்சிபி அணியின் ரன் சராசரி 13.42 ஆக இருந்தது. குறிப்பாக ஆன்ட்ரே ரெஸ்செல் ஸ்லோபால் எனும் வித்தையை சிறப்பாகச் செய்தார், 150 கி.மீ வேகத்தில் வீசிய ரஸல், திடீரென 110 கி.மீ வேகமாக் குறைத்தும் பேட்டர்களைத் திணறவைத்தார்.

சுழற்பந்துவீச்சிலும் அனுபவம் மிக்க முழுநேர பந்துவீச்சாளர்கள் யாரும் இல்லை. மேக்ஸ்வெல் பகுதிநேரப் பந்துவீச்சாளர்தானே தவிர முழுநேர வீரர் அல்ல, விஜயகுமார் சிறப்பாகப் பந்துவீசினாலும் நெருக்கடியான நேரத்தில், டெத் ஓவர்கள், பவர்ப்ளேயில் பயன்படுத்த முடியாத வீரராகவே இருக்கிறார்.

கோலியை தொடரும் நெருக்கடி என்ன?

விராட் கோலி சிறப்பாக பேட் செய்தும் ஆர்சிபி தோற்றது ஏன்? கொல்கத்தாவுக்கு எளிய வெற்றியை தந்த வெங்கடேஷ், நரைன்

பட மூலாதாரம், Royal Challengers Bengaluru/X

விராட் கோலி கேப்டன் பொறுப்பு துறப்புக்குப்பின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். சீசன் முடிவில் கோலியின் ரன் குவிப்பு மிரட்சியாகத் தெரிந்தாலும், ஒவ்வொரு போட்டியாகப் பார்த்து ஆய்வு செய்தால், அவரின் ஆங்கர் ரோல் அணியின் ஸ்கோர் குறைவுக்கு காரணமாக இருந்திருக்கலாம் என்ற விமர்சனம் எழுந்தது.

விராட் கோலி அடிக்கடி “ நான் எதையும் நிரூபிக்கத் தேவையில்லை” என்று கூறுவார். ஆனால், ஆர்சிபி அணி ஒவ்வொரு போட்டியைச் சந்தித்து முடிக்கும்போது, டி20 கிரிக்கெட்டில் கோலி பேட்டிங் செய்த விதம் குறித்து பெரிய விவாதமே நடந்துள்ளது.

அடுத்துவரும் டி20 உலகக் கோப்பைக்கு இந்த ஐபிஎல் சீசனில் விராட் கோலியின் பேட்டிங் திறமை உறைகல்லாக பார்க்கப்படும் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதன் காரணமாக வேறுவழியின்றி தனது பேட்டிங் ஸ்டைலை ‘மாற்ற வேண்டிய கட்டாயத்துக்கும்’ தன்னை ‘நிரூபிக்க’ வேண்டிய கட்டாயத்துக்கும், ‘நெருக்கடிக்கும்’ தள்ளப்பட்டுள்ளார்.

புள்ளிவிவரங்கள்படி, விராட் கோலி கடந்த 2014ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஐபிஎல் சீசனிலும், ஒவ்வொரு இன்னிங்ஸிலும் அடிக்கும் பெரிய ஷாட்கள் குறித்துப் பார்க்கலாம். அதாவது, ரன்மெஷின் என வர்ணிக்கப்படும் விராட் கோலி, களத்தில் ஆங்கர் ரோல் செய்து முழு ஆட்டத்தையும் ஆக்கிரமித்து விளையாடவே விரும்புவாரேத் தவிர “பிஞ்ச் ஹிட்டராகவோ”, “பவர்ஹிட்டராகவோ”, “சிறிய கேமியோ” என்று விளையாடியது குறைவுதான்.

ஆங்கர் ரோல் எடுத்து கோலி விளையாடியதால் என்னவோ கடந்த காலங்களில் ஒவ்வொரு இன்னிங்ஸிலும் கோலி பெரிய ஷாட்களை அடிப்பது குறைவாகவே இருக்கும். 2014ம் ஆண்டிலிருந்து 2022 வரை பார்த்தால் ஒவ்வொரு இன்னிங்ஸிலும் கோலி 3.9 ஷாட்களுக்கு மேல் அடித்தது இல்லை. அதாவது வானவேடிக்கை காட்சி ஷாட்கள் பெரிதாக அடித்தது இல்லை.

ஆனால் கோலியின் ஆங்கர் ரோல் மீது கடும் விமர்சனங்கள் கடந்த காலங்களில் வைக்கப்பட்டதால் வேறுவழியின்றி தனது பேட்டிங் ஸ்டைலை மாற்றி வருகிறார். கடந்த சீசனில் ஒரு இன்னிங்ஸிற்கு 7 பெரிய ஷாட்களை தேர்வு செய்து அடித்த கோலி, இந்த சீசனில் 10 பெரிய ஷாட்களை அடித்து வருகிறார். உதாரணமாக நேற்றைய ஆட்டத்தில் ஸ்டார்க் ஓவரில் 2 பெரிய சிக்ஸர்களை கோலி விளாசினார். மேலும் ஆர்சிபி அணிக்காக இதுவரை அதிக சிக்ஸர்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் கெயிலின் 239 சிக்ஸர்களை கோலி (241)முறியடித்தார்.

உலகக் கோப்பைக்கு இந்திய அணிக்குள் செல்ல வேண்டும் என்ற தீவிர வேட்கை, நெருக்கடி தற்போது கோலிக்கு ஏற்பட்டுள்ளது. அதனால்தான் ஆங்கர் ரோல் எடுத்த போதிலும், பெரிய ஷாட்களுக்கும் கோலி செல்ல வேண்டிய கட்டாயத்துக்கும், நெருக்கடிக்கும் தள்ளப்பட்டுள்ளார்.

"ஆடுகளம் ஒத்துழைக்கவில்லை"

ஆர்சிபி கேப்டன் டூபிளெசிஸ் கூறுகையில் “ இரு இன்னிங்ஸ்களிலும் ஆடுகளம் வெவ்வேறு விதமாக செயல்பட்டது. ஆனால், சேஸிங்கிறக்கு ஆடுகளம் எளிதாக அமைந்தது. முதல் இன்னிங்ஸில் பேட்டர்கள் பெரிய ஷாட்களை அடிப்பது கடினமாக இருந்தது, விராட் கோலி கூட பேட் செய்ய சிறிது சிரமப்பட்டார். நாங்கள் பந்துவீச்சிலும் மாற்றம் செய்ய முயன்றும் நரைன்-சால்ட் கூட்டணி ஆட்டத்தை கையில் எடுத்துக்கொண்டது. பவர்ப்ளே ஓவர்களில் இருவரும் சேர்ந்து ஆட்டத்தின் முடிவை திருப்பிவிட்டனர்.

எங்களிடம் சுழற்பந்துவீச்சு இருந்தும் பெரிதாக ஆடுகளத்தில் எடுபடவில்லை. அது மட்டுமல்லாமல் கேகேஆர் அணியில், பேட்டர்கள் இடது, வலது கூட்டணியோடு இருந்ததால் சுழற்பந்துவீச்சாளர்கள் பந்துவீச சிரமப்பட்டனர். சினாமேன் சுழற்பந்துவீச்சாளர்கள் தேவைப்படுகிறார்கள், விஜயகுமார் சிறப்பாகப் பந்துவீசினாலும், அவருக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. இம்பாக்ட் வீரராக கரன் ஷர்மாவை களமிறக்கி இருக்கலாம்” எனத் தெரிவித்தார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)