கேலி செய்தவர்களுக்கு பேட்டால் பதிலளித்த கோலி - தனது புகழ், குடும்பம், சாதனைகள் பற்றி கூறியது என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், க.போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
கிரிக்கெட்டில் நடக்கமுடியாதது, சாத்தியமில்லாதது நடப்பது டி20 போட்டியில்தான். எந்த நேரத்தில் எந்தப் பந்துவீச்சாளர், பேட்டர் ஆட்டத்தை திருப்புவார் என ஊகிக்க முடியாது. பெங்களூருவில் நேற்று நடந்த ஆட்டமும் யாரும் நினைத்துப் பார்க்க முடியாத அளவில் பெரிய ட்விஸ்ட்களுடன் முடிந்தது.
விராட் கோலியின் பொறுப்பான பேட்டிங், தினேஷ் கார்த்திக்கின் கடைசி நேர ஃபினிஷர் ரோல் ஆகியவைதான் ஆர்சிபி அணி சொந்த மைதானத்தில் வெற்றி பெற முக்கியக் காரணமாக அமைந்து.
பெங்களூருவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 6-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது ஆர்சிபி அணி.
முதலில் பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணி 4 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

பட மூலாதாரம், Getty Images
மைனஸ் ரன்ரேட்டில் ஆர்சிபி
இந்த வெற்றி மூலம் ஆர்சிபி அணி புள்ளிக் கணக்கைத் தொடங்கினாலும், நிகர ரன்ரேட் இன்னும் மைனஸில்தான் இருக்கிறது. அதனால், 2 புள்ளிகள் பெற்றாலும் 6-ஆவது இடத்துக்கு ஆர்சிபி தள்ளப்பட்டுள்ளது. அடுத்துவரும் போட்டிகளில் ஆர்சிபி அணிக்கு பெரிய வெற்றி கிடைத்தால் புள்ளிப்பட்டியலில் முன்னேறும்.
ஆர்சிபி அணியின் வெற்றிக்கு ஆங்கர் ரோல் எடுத்து வெற்றிக்கு அருகே வரை கொண்டு சென்ற விராட் கோலி(77) ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கோலிக்கு டிராவிட் கூறிய அறிவுரை
ஆட்டநாயகன் விருது வென்ற கோலி கூறுகையில் “ ரசிகர்களே ரொம்பவும் உற்சாகமடையாதீர்கள். 2 போட்டிகள்தான் முடிந்துள்ளது, ஆரஞ்சு தொப்பி யாருக்கு வேண்டுமானாலும் செல்லலாம். விளையாட்டைப் பற்றி அதிகமாகப் பேசுகிறார்கள், கடைசியில், சாதனைகள், புள்ளிவிவரங்கள், எண்ணிக்கைகள், நினைவுகளைப் பற்றி பேசுவதில்லை. நீ இழந்ததை ஒருபோதும் மறக்காதே என்று டிராவிட் என்னிடம் சொல்வார். நான் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி, என்னால்முடிந்த பங்களிப்பைத் தருகிறேன். விக்கெட்டுகள் சரிந்தவுடன் சூழலைப் புரிந்து கொண்டு பேட் செய்தேன். இதுபோன்ற நேரத்தில் இதுபோன்று விளையாடுவது தவறு இல்லை.சரியான ஷாட்களை அடிக்க வேண்டும், தவறான ஷாட்களைஅடிக்க கூடாது என்று நினைத்தேன். என்னால் பினிஷர் ரோல் செய்ய முடியாதது வருத்தமாக இருக்கிறது. 2 மாதங்களுக்குபின் நான் விளையாடினாலும் மோசமாக பேட் செய்யவில்லையே” எனத் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
கலக்கும் தமிழ்நாட்டு வீரர்கள்
ஐபிஎல் தொடர் தொடங்கியதிலிருந்தே தமிழக வீரர்கள் கலக்கி வருகிறார்கள். சன்ரைசர்ஸ் அணியில் நடராஜன், குஜராத் அணியில் சாய் கிஷோர், சுதர்சன் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினா். இந்த ஆட்டத்தில் டிகே உண்மையில் ஹூரோவாக ஒளிர்ந்தார்.
இந்த ஆட்டத்தில் கோலிக்கு இணையாக ஆட்டநாயகன் விருது அளிக்கப்பட வேண்டியவர் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக். கடைசி இரு ஓவர்களில் டிகேவின் ஆட்டம் ஒட்டுமொத்த பஞ்சாப் கிங்ஸ் ரசிகர்களின் நம்பிக்கையைத் தகர்த்துவிட்டது. 10 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரி உள்பட 28 ரன்கள் சேர்த்து டிகே தனித்துவமாகத் தெரிந்தார்.
விராட் கோலி களத்தில் இருந்தவரை ஆர்சிபி எளிதாக வெற்றி பெற்றுவிடும் என்று ரசிகர்கள் நினைத்திருந்தனர். ஆனால், ஹர்சல் படேல் ஓவரில் 2 பவுண்டரி அடித்தநிலையில் கடைசிப்பந்தில் டீப் பேக்வார்டில் பிராரிடம் கேட்ச் கொடுத்து கோலி 77 ரன்னில் வெளியேறியது நம்பிக்கை தகர்ந்தது.

பட மூலாதாரம், Getty Images
திக்திக் கடைசி 4 ஓவர்கள்
அப்போது கடைசி 4 ஓவர்களில் ஆர்சிபி அணி வெற்றிக்கு 47 ரன்கள் தேவைப்பட்டது. சான்கரன் வீசிய 17-வது ஓவரின் முதல் பந்தில் ராவத் கால்காப்பில் வாங்கி 11 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து விக்கெட்டுகள் சென்றதும் ஆர்சிபி கதை முடிந்துவிட்டதா என்ற ரசிகர்கள் கவலை கொண்டனர்.
மகிபால் லாம்ரோர், டிகே கூட்டணி ஆட்டத்தை வெற்றி நோக்கி நகர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சாம்கரனின் 17வது ஓவரில் லாம்ரோர், டிகே இருவரும் தலா ஒரு பவுண்டரியுடன் 11 ரன்கள் சேர்த்தனர்.

பட மூலாதாரம், Getty Images
லாம்ரோர் அதிரடி
அர்ஷ்தீப் வீசிய 18-ஆவது ஓவரில் ஸ்லாட்டில் வீசப்பட்ட பந்தில் லாம்ரோர் சிக்ஸர்,பவுண்டரியாக பறக்கவிட ரசிகர்கள் உற்சாகத்தில் முழங்கினர். அந்த ஓவரில் ஆர்சிபி 13 ரன்கள் சேர்த்தது. கடைசி 2 ஓவர்களில் ஆர்சிபி வெற்றிக்கு 23 ரன்கள் தேவைப்பட்டது. இருவரில் ஒருவர் ஆட்டமிழந்தாலும் ஆட்டம் பஞ்சாப் கைகளுக்கு சென்றுவிடும் நிலை இருந்தது.
19-வது ஓவரை ஹர்சல் படேல் வீசினார். இந்த ஓவரில் டிகே ஒரு பவுண்டரியும், ஃபைன்லெக்கில் ஒரு சிக்ஸரும் விளாசி 13 ரன்கள் சேர்த்தார். கடைசி ஓவரில் ஆர்சிபி வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்டது, ரசிகர்களின் இதயத்துடிப்பு எகிறியது.
அர்ஷ்தீப் கடைசி ஓவரை வீசினார். முதல் பந்தில் டிகே ஸ்கூப் ஷாட்டில் சிக்ஸர் அடிக்க ரசிகர்களின் சத்தம் காற்றைக் கிழித்தது. அடுத்த பந்தை அர்ஷ்தீப் வைடாக வீசினார். அடுத்த பந்தில் டிகே பவுண்டரி விளாச ஆர்சிபி அணி அபாரமாக வெற்றி பெற்றது.
விராட் கோலி, அனுஜ் ராவத் அடுத்தடுத்து ஆட்டமிழந்து சென்றபின் ஆட்டம் பஞ்சாப் கிங்ஸ் கரங்களுக்கு மாறிவிட்டது என்று ரசிகர்கள் நினைத்த நேரத்தில் ஆட்டத்தை ஆர்சிபி கரங்களுக்கு மாற்றியது லாம்ரோர், டிகே ஆட்டம்தான்.
நீண்ட காலத்துக்குப் பிறகு ஜொலித்த தினேஷ் கார்த்திக்
வங்கதேசத்துக்கு எதிரான ஆசியக் கோப்பையில் ஃபினிஷர் ரோல் எடுத்து ஹீரோவான டிகே, நீண்டகாலத்துக்குப்பின் ஜொலித்துள்ளார். அணையும் விளக்கு பிரகாசமாக ஒளிரும் என்பார்கள். இந்த சீசனோடு டிகே ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ள நிலையில் அவரின் பேட்டிங் ஃபார்ம் இரு போட்டிகளாக தனித்துவமாக இருந்து வருகிறது.

பட மூலாதாரம், Getty Images
கேட்சை கோட்டை விட்டதற்கான விலை
சாம்கரன் வீசிய ஓவரில் விராட் கோலி அடித்த ஷாட்டை ஸ்லிப்பில் நின்றிருந்த பேர்ஸ்டோ பிடிக்காமல் கோட்டைவிட்டார். இந்த கேட்சை நழுவவிட்டதற்கான விலையை பஞ்சாப் கிங்ஸ் அணி கடைசியில் கொடுத்தது. இதை அணியின் கேப்டன் ஷிகர் தவண் ஒப்புக் கொண்டார். கோலிக்கு அந்தக் கேட்சை மட்டும் பிடித்திருந்தால், ஆட்டம் வேறுமாதிரியாகத் திரும்பியிருக்கும்.
ஹர்பிரித் பிரார், ரபாடா அற்புதமான பந்துவீச்சு
ஆர்சிபி அணி நடுப்பகுதி ஓவர்களில் ரன் சேர்க்க முடியாமல் திணறியது. விராட் கோலி, ரஜத் பட்டிதார் களத்தில் இருந்தபோதிலும் கூட பவுண்டரி அடிக்கவும், ஸ்ட்ரைக்கை மாற்றி ஓடவும் கடும் சிரமப்பட்டனர். இதற்கு காரணம் இடதுகை சுழற்ப்பந்துவீச்சாளர் ஹர்பிரித் பிரார்தான்.
பெங்களூரு சின்னசாமி மைதானம் போன்ற சிறிய மைதானத்தில் பவுண்டரி, சிக்ஸர் அடிக்கவிடாமல் பேட்டர்களை கட்டிப்போடுவது எளிதானது அல்ல. அதிலும் டி20 ஆட்டத்தில் நினைத்துப் பார்க்க முடியாத செயல். அதை பிரார் எளிதாகச் செய்தார். 4 ஓவர்கள் வீசிய பிரார் 13 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் சாய்த்தார்.
அடுத்ததாக ரபாடாவின் பந்துவீச்சும் குறிப்பிடத்தகுந்தது. 4 ஓவர்கள் வீசிய ரபாடா 23 ரன்கள் கொடுத்து 2விக்கெட்டுகளையும் சாய்த்தார். பஞ்சாப் கிங்ஸ் அணியில் இருவர் மட்டுமே நடுப்பகுதி ஓவர்களில் வெற்றியை தங்கள் அணிக்கு இழுத்துவந்தனர். ஆனால் மற்ற பந்துவீச்சாளர்களான சாம்கரன், அர்ஷ்தீப் சிங், ஹர்சல் படேல் ஆகியோர் சொதப்பிவிட்டனர். ராகுல் சஹர் ஒரு ஓவரில் 16 ரன்கள் வழங்கியதால் அதன்பின் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

பட மூலாதாரம், Getty Images
டி20-யில் கோலியின் சாதனை
விராட் கோலி நேற்றைய ஆட்டத்தில் 77 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் அனைத்து டி20 போட்டிகளிலும் 50 ரன்களுக்குமேல் 100-வதுமுறைாக சேர்த்த 3வது வீரர் என்ற பெருமையைப் பெற்றார். முதலிடத்தில் கெயில், 2வது இடத்தில் வார்னர் உள்ளனர்.
அது மட்டுமல்லாமல் டி20 போட்டிகளில் அதிக கேட்சுகளைப் பிடித்த வீரர் என்ற சாதனையை நீண்டகாலமாக சுரேஷ் ரெய்னா(172கேட்ச்) வைத்திருந்தார். ஆனால் நேற்றைய ஆட்டத்தில் பேர்ஸ்டோ, தவண் இருவருக்கும் கோலி பிடித்த கேட்ச் மூலம் ரெய்னா சாதனையை தகர்த்தார். 173 கேட்சுகளுடன் கோலி முதலிடத்தைப் பிடித்தார். ரோஹித் சர்மா 167 கேட்சுகளுடன் 3வது இடத்தில் உள்ளார்.
கோலியின் ஆங்கர் ரோல் சரியா?
இந்திய அணியோ அல்லது ஆர்சிபி அணியோ இக்கட்டானநிலையில் சிக்கும்போது, ஆங்கர் ரோல் எடுத்து கோலி விளையாடுவது பல நேரங்களில் விமர்சிக்கப்படுகிறது. ஏனென்றால், ஆங்கர் ரோல் எடுத்து கோலி பேட் செய்யும்போது, மோசமான பந்துகளில் கூட பெரிய ஷாட்கள் அடிக்க தவறவிடுகிறார், வரவேண்டிய ஸ்கோர் அளவுகூட வருவதில்லை. டி20ஃபார்மெட்டுக்கு உகந்தவகையில் கோலி பேட் செய்வதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. டி20 உலகக் கோப்பைத் தொடருக்கு கோலி இந்திய அணியில் கைவிடப்பட்டாலும் அதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
ஆனால், தன்னுடைய ஆங்கர் ரோல் கடைசிவரை வெற்றிக்காகவே இருக்கும் என்பதை கோலி பலமுறை நிரூபித்துள்ளார். ஆங்கர் ரோல் எடுத்தாலும், ஃபினிஷராக இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றுள்ளார், அவரின் வேகம் குறைவாக இருக்கலாமேத் தவிர அவரின் பங்களிப்பு தவறாக இருந்தது இல்லை. இந்த ஆட்டத்தில்கூட கோலி 77 ரன்கள் குவித்தார்.
தொடக்க ஆட்டக்காரர களமிறங்கி 15 ஓவர்கள்வரை நிலைத்திருந்து ஆட்டமிழந்தார். கோலி நேற்றை ஆட்டத்தில்ல 11பவுண்டர்கள் அடித்தார். இ்ந்த 11 பவுண்டரிகளில் 8பவுண்டரிகள் அவரின் 30 ரன்களுக்கு அடித்து நான் மந்தமானபேட்டர் இல்லை என்பதை நிரூபித்தார். அது மட்டுமல்லாமல் 2சிக்ஸர்களையும் கோலி விளாசினார். இதுபோன்ற சிறிய மைதானத்தில் கோலி சிக்ஸர், பவுண்டரி அடிக்கலாம் பெரிய மைதானங்களில் கோலியால் இவை சாத்தியமா என்பது அடுத்துவரும் போட்டிகளில் தனது ஆங்கர் ரோல் சரியா என்பதை நிருபிப்பார் என எதிர்பார்க்கலாம்.

பட மூலாதாரம், Getty Images
‘பேஸ்-பால்’ ஸ்டைல் எங்கே?
பஞ்சாப் கிங்ஸ் அணியில் வெளிநாட்டு வீரர்கள் பேர்ஸ்டோ, லிவிங்ஸ்டோன், சாம்கரன் இருந்தும், பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. அந்த அணியில் ஒருவர்கூட அரைசதமும் அடிக்கவில்லை. தவண் சேர்த்த 45 ரன்கள்தான் அதிகபட்சம். சாம் கரன்(23), ஜிதேஷ் சர்மா(27) பிரப்சிம்ரன் சிங்(25) ஆகியோர் ஓரளவுக்கு பராவாயில்லை. மற்றவகையில் பெரிதாக எந்த பேட்டரும் ஸ்கோர் செய்யவில்லை. பேஸ்பால் ஆட்டத்தை கையாளும் இங்கிலாந்து பேட்டர்கள் பேர்ஸ்டோ, லிவிங்ஸ்டோன், சாம் கரன் ஏன் டி20 ஆட்டங்களில் ஏன்அதே பாணியை கையாளவில்லை என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுகிறது.
ஆர்சிபியிலும் ஜோலிக்காத வெளிநாட்டு வீரர்கள்
ஆர்சிபி அணி 2வது போட்டியில் நேற்று விளையாடியது. சிஎஸ்கேவுடனான முதல் ஆட்டத்திலும் டூப்பிளசிஸ், மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன் பெரிதாக ரன்கள் ஸ்கோர் செய்யவில்லை. இந்த ஆட்டத்திலும் சொதப்பிவிட்டனர். பேட்டிங் வரிசை பலமாக இருப்பதாக வெளியே தெரிந்தாலும் இருவரும் சொதப்புவது யாரேனும் ஒரு பேட்டர் மீது சுமையை அதிகரிக்கிறது. விராட் கோலி ஆங்கர் ரோல் எடுக்காமல் இருந்திரும்தால், ஆர்சிபி தோல்வி எழுதப்பட்டிருக்கும். இந்த 3 பேட்டர்களில் ஒருவர் நிலைத்திருந்தால்கூட நேற்றைய ஆட்டம் இழுபறியாக இருந்திருக்காமல், 2 ஓவர்கள் முன்கூட்டியே ஆட்டம் முடிந்திருக்கும்.

பட மூலாதாரம், Getty Images
புகழ், குடும்பம் பற்றி விராட் கோலி கூறியது என்ன?
ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்ட கோலி, தனது குடும்பம், புகழ் ஆகியவை பற்றிப் பேசினார்.
"இந்த நாட்களில் உலகம் முழுவதும் டி20 விளையாட்டை விளம்பரப்படுத்த எனது பெயர் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது என்பதை நான் அறிவேன். "
"[கடந்த இரண்டு மாதங்கள்] நாங்கள் நாட்டில் இல்லை. மக்கள் எங்களை அடையாளம் காணாத இடத்தில் நாங்கள் இருந்தோம். இரண்டு மாதங்கள் சாதாரண மனிதர்களாக உணர்வது ஒரு அபூர்வ அனுபவமாக இருந்தது. நிச்சயமாக, குடும்பக் கண்ணோட்டத்தில் பார்த்தால் இரண்டு குழந்தைகளுடன் வாழ்க்கை முற்றிலும் மாறி வருகிறது. மூத்த குழந்தையுடனான தொடர்பும் அற்புதமானது. குடும்பத்துடன் நேரத்தை செலவிட எனக்கு கிடைத்த வாய்ப்பிற்காக நான் கடவுளுக்கு என்னால் நன்றி சொல்லிவிட இயலாது. கடந்த இரண்டு மாதங்களாக இல்லாததால் குரல்கள் மிகவும் சத்தமாகிவிட்டன என்று தோழர்களிடம் சொல்லிக்கொண்டிருந்தேன். சாலையில் ஒரு சாதாரண இருப்பது ஆச்சரியமாக இருந்தது. நான் தொப்பிகளுக்காக விளையாடவில்லை, இது மற்றொரு வாய்ப்பு. அவ்வளவுதான்!" என்றார் கோலி.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












