பும்ரா, ரோஹித்தை புறக்கணிப்பதாக விமர்சிக்கப்படும் ஹர்திக், மீண்டும் செய்த தவறுகள் என்னென்ன?

மும்பை vs ஹைதராபாத்

பட மூலாதாரம், Getty Images

வீடியோ கேம் பார்க்கிறோமா அல்லது ஐபிஎல் பார்க்கிறோமோ என ரசிகர்களுக்கு சந்தேகம் வந்துவிட்டது. ஏனென்றால் ஒரே போட்டியில் 38 சிக்ஸர்கள், 31 பவுண்டரிகள், 523 ரன்கள், 4 பந்துவீச்சாளர்கள் அரைசதம், 10 பந்துவீச்சாளர்கள் இரு இலக்க சராசரி என வாயை பிளக்க வைக்கும் சாதனைகளுடன் நேற்றைய ஐபிஎல் லீக் ஆட்டம் ஹைதராபாத்தில் நடந்து முடிந்தது.

ஹைதராபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 8-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 31 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது சன்ரைசர்ஸ் ஹைதபாபாத் அணி.

முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் குவித்தது. 278 ரன்களை சேஸிங் செய்யும் முயற்சியில் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில்5 விக்கெட் இழப்புக்கு 245 ரன்கள் சேர்த்து 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

ஐபிஎல் வரலாற்றில் சாதனை

ஐபிஎல் டி20 தொடரில் கடந்த 11 ஆண்டுகளாக இருந்த சாதனையை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நேற்று முறியடித்தது. கடந்த 2013ம் ஆண்டு புனே அணிக்கு எதிராக ஆர்சிபி அணி சேர்த்த 263 ரன்கள்தான் அதிகபட்ச ஸ்கோராக இருந்து வந்தது. அந்த ஸ்கோரை நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி முறியடித்து 277 ரன்கள் சேர்த்து வரலாறு படைத்தது.

சன்ரைசர்ஸ் அணி மிகப்பெரிய ஸ்கோரை எடுத்து வரலாற்று வெற்றி பெற்றும் நிகர ரன்ரேட்டில் பெரிதாக உயர்வு ஏதும் பெறவில்லை. 2 புள்ளிகள் பெற்று கணக்கை சன்ரைசர்ஸ் தொடங்கினாலும், நிகர ரன்ரேட் 0.675 என்ற அளவில்தான் இருக்கிறது. மும்பை அணியை குறைந்த ஸ்கோரில் சுருட்டி இருந்தால் அபாரமான நிகரரன்ரேட்டை சன்ரைசர்ஸ் பெற்றிருக்கும், ஆனால், 31 ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றி என்பதால்தான் நிகரரன்ரேட் குறைந்துவிட்டது.

மும்பை அணி ஹர்திக் பாண்டியா தலைமையில் தொடர்ச்சியாக சந்திக்கும் 2வது தோல்வியாகும். அதிலும் வரலாற்று ரீதியான தோல்வியை மும்பை அணி சந்தித்துள்ளது. மோசமான பந்துவீச்சு, பீல்டிங், கேப்டன்ஷி என பல விமர்சனங்களோடு மும்பை அணி தோல்வியைத் தாங்கியுள்ளது.

மும்பை vs ஹைதராபாத்

பட மூலாதாரம், Getty Images

யாருக்கு ஆட்டநாயகன் விருது?

சன்ரைசர்ஸ் அணியில் யாருக்கு ஆட்டநாயகன் விருது வழங்குவது என தேர்வாளர்களுக்கு சற்று குழப்பம் வந்திருக்கலாம். ஏனென்றால் டிராவிஸ் ஹெட்(24 பந்துகளில் 62), அபிஷேக் சர்மா(23 பந்துகளில் 63), கிளாசன் (34பந்துகளில் 80) என ரன் மழை பொழிந்தனர். இதில் 273 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடி, ஒரு கேட்சைப் பிடித்த இளம் வீரர் அபிஷேக் சர்மாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

சன்ரைசர்ஸ் அணி மிகப்பெரிய ஸ்கோரை எட்டுவதற்கு கிளாசன்(80), ஹெட்(63), அபிஷேக் சர்மா(63) மார்க்ரம்(42) ஆகியோர்தான் முக்கியக் காரணம். பேட்டர்களுக்கு சொர்க்கபுரியாகத் திகழ்ந்த இந்த ஆடுகளத்தில் மயங்க் அகர்வால் மட்டும் 13 ரன்னில் ஆட்டமிழந்தது வியப்பாக இருக்கிறது.

பறந்த சிக்சர்கள், அடுக்கடுக்கான சாதனைகள்

சன்ரைசர்ஸ் அணி ஐபிஎல் வரலாற்றில் இதற்கு முன் 20 பந்துகளுக்கு குறைவாக பந்துகளில் எந்த பேட்டரும் அரைசதத்தை எட்டியதே இல்லை. ஆனால், நேற்று களமிறங்கிய டிராவிஸ் ஹெட் 18 பந்துகளிலும், அபிஷேக் சர்மா 16 பந்துகளில் அரைசதத்தையும் எட்டி முத்திரை பதித்தனர்.

சன்ரைசர்ஸ் அணி முதல் 10 ஓவர்களில் நேற்று 148 ரன்கள் சேர்த்தது. இது ஐபிஎல் வரலாற்றில் எந்த அணியும் இதுவரை இவ்வளவு பெரிய ஸ்கோரை எட்டியதில்லை. 2014ம் ஆண்டில் கிங்ஸ் பஞ்சாப், மும்பை அணி 131 ரன்களும் சேர்த்தே அதிகபட்சமாகும். அது மட்டுமல்ல 14.4 ஓவர்களில் சன்ரைசர்ஸ் அணி 200 ரன்களை எட்டியது. இதற்கு முன் கடந்த 2016ல் பஞ்சாப் அணி்க்கு எதிராக 14.1 ஓவர்களில் ஆர்சிபி 200 ரன்களை எட்டியிருந்தது.

மும்பை அணியில் அறிமுகமாகிய 19 வயது இளம் பந்துவீச்சாளர் வீனா மபாகா 66 ரன்களை வாரி வழங்கினார். ஐபிஎல் வரலாற்றில் எந்த பந்துவீச்சாளரும் இந்த அளவு ரன்களை வழங்கியதில்லை. இதற்கு 2013ல் ஆர்சிபிக்கு எதிராக மைக்கேல் நீசர் 62 ரன்களை வழங்கியிருந்தார்.

அது மட்டுமல்லாமல் பவர்ப்ளே ஓவரில் சன்ரைசர்ஸ் அணி 89 ரன்கள் குவித்தது. இது ஐபிஎல் வரலாற்றில் இதுவரை எந்த அணியும் குவிக்காத ஸ்கோராகும். இதற்கு முன், 2017ல் கொல்கத்தா அணி பவர்ப்ளேயில் 79 ரன்கள் சேர்த்ததே அதிகபட்சமாகும். சன்ரைசர்ஸ் அணி பேட்டர்கள் நேற்றைய ஆட்டத்தில் 18 சிக்ஸர்களை விளாசினர். இதற்கு முன் கொல்கத்தாவுக்கு எதிராக 15 சிக்ஸர்கள் விளாசியதே அந்த அணியின் அதிகபட்சமாக இருந்தது. அதை அந்த அணியே முறியடித்தது.

மார்கோ யான்செனுக்கு பதிலாக டிராவிஸ் ஹெட் சேர்க்கப்பட்டிருந்தார். ஹர்திக் பாண்டியா வீசிய 2வது ஓவரில் டிராவிஸ் ஹெட் அடித்த ஷாட்டை டிம் டேவிட் கேட்ச் பிடிக்க தவறினார். “கேட்ச் மிஸ், கேம் மிஸ்” என்பதைப் போல் அந்த கேட்சை கோட்டைவிட்டதற்கு மும்பை அணி பெரிய விலை கொடுக்க நேர்ந்தது. டிராவிஸ் ஹெட் கேட்சைப் பிடித்திருந்தால் ஆட்டம் மும்பை அணி பக்கம் திரும்பியிருக்கும்.

மும்பை - ஹைதராபாத்

பட மூலாதாரம், Getty Images

அதன்பின் ஹெட், மும்பை பந்துவீச்சை நொறுக்கி அள்ளினார். மபாகா ஓவரில் 2 பவுண்டரி, ஒருசிக்ஸர் உள்பட 22 ரன்கள், கோட்ஸி ஓவரில் 23 ரன்கள் என ஹெட் வெளுத்து வாங்கினார். பவர்ப்ளேயில் சன்ரைசர்ஸ் அணி 81 ரன்கள் சேர்த்தபோது, ஹெட் 59 ரன்கள் சேர்த்திருந்தார். அகர்வால் 13 ரன்களில் ஆட்டமிழந்தபின் அபிஷேக் சர்மா களமிறங்கினார்.

ஹெட்டுக்கு போட்டியாக அபிஷேக் சர்மாவும் மும்பை பந்துவீச்சை துவம்சம் செய்தார். கோட்ஸி, பியூஷ் சாவ்லா பந்துவீச்சை அபிஷேக் சர்மா சிக்ஸர்களாக விளாசினார். இதனால் சன்ரைசர்ஸ் அணி 7 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது. மபாகா வீசிய அவரின் 3வது ஓவரில் அபிஷேக் மட்டும்2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளை வெளுத்து 16 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். அபிஷேக் சர்மாவுக்கு சுழற்பந்துவீசப் பயந்து பியூஷ் சாவல் 112 கி.மீ வேகத்தில் மிதவேகப்பந்துவீச்சாளராக மாறி பந்துவீசி இறுதியில் அவரின் விக்கெட்டையும் வீழ்த்தினார்.

கிளாசன் பேட்டிங் குறித்து சொல்லத் தேவையில்லை. 2022ம் ஆண்டிலிருந்து சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 174 ஸ்ட்ரேக் ரேட் வைத்திருப்பவர் சர்வதேச அளவில் கிளாசன் மட்டும்தான். சுழற்பந்துவீச்சாளர்கள் என்றாலே கிளாசனுக்கு அல்வா சாப்பிடுவதைப் போலத்தான்.

கிளாசன் களமிறங்கியபின் அரங்கில் வானவேடிக்கை நிகழ்ந்தது. மும்பை பந்துவீச்சாளர்கள் யார் வீசினாலும் பந்துகள் சி்க்ஸர், பவுண்டரி என பறந்தன. 15 ஓவர்களில் சன்ரைசர்ஸ் அணி 200 ரன்களை எட்டியது. கிளாசனுக்கு ஒத்துழைத்து மார்க்ரம் பேட் செய்தார். 22 பந்துகளில் கிளாசன் அரைசதம் எட்டினார்.

கடந்த ஆட்டத்தில் குஜராத் அணிக்கு எதிராக கிளாசன் அடித்த அடி இன்னும் மறக்காத போது, நேற்றைய ஆட்டம் அவரின் கிளாசிக்கான பேட்டிங்கிற்கு சான்று. முலானி பந்துவீச்சில் அடுத்தடுத்து கிளாசன் இரு சிக்ஸர்களை துவம்சம் செய்தபோது, ஐபிஎல் வரலாற்றில் ஆர்சிபியின் ஸ்கோரை சன்ரைசர்ஸ் முறியடித்தது. அனைத்து ஆடவர் டி20 போட்டிகளிலும் 4வது பெரிய ஸ்கோரை சன்ரைசர்ஸ் அடைந்தது.

மும்பை vs ஹைதராபாத்

பட மூலாதாரம், Getty Images

நொந்துபோன பந்துவீச்சாளர்கள்

இந்த ஆட்டத்தில் மும்பை அணியில் பந்துவீசிய பந்துவீ்ச்சாளர்களில் பும்ரா(36ரன்கள்) மட்டுமே ஒற்றை இலக்க சராசரியில் ரன்கள் கொடுத்தார். மற்ற அனைத்து பந்துவீச்சாளர்களும் இரட்டை இலக்க சராசரியில்தான் ரன்களை வாரி வழங்கினர். மபாகா(66), ஹர்திக் பாண்டியா(46), கோட்ஸி(57), பியூஷ் சாவ்லா(34-2ஓவர்களில்), முலானி(2ஓவர்களில் 33 ரன்கள்) என வெறுத்து பந்துவீசினர்.

அதிலும் கிளாசன் களத்தில் இருந்தபோது, அவருக்கு பந்துவீச எந்த பந்துவீச்சாளரும் துணிச்சல் இல்லாமல் இருந்தனர். கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு யாரைப் பந்துவீசச் செய்வது, யார் பந்துவீசினாலும் பந்து சிக்ஸர், பவுண்டரி பறக்கிறதே என்று குழப்பத்தில் இருந்தார். பந்துவீச்சாளர்கள் மீது இரக்கமற்றவர்களாக சன்ரைசர்ஸ் பேட்டர்கள் நடந்து கொண்டனர்.

மும்பை vs ஹைதராபாத்

பட மூலாதாரம், Getty Images

மும்பை அணியும் பதிலடிக்கு முயற்சி

மும்பை அணியும் சன்ரைசர்ஸ் அணியின் ஸ்கோருக்கு பதிலடி கொடுக்க முயன்றது. ரோஹித் சர்மா,இஷான் கிஷன் அதிரடியான தொடக்கத்தை அளித்து, சன்ரைசர்ஸ் பந்துவீச்சை பவுண்டரி, சிக்ஸர்களாக மாற்றினர். ஹைதராபாத் விக்கெட்டில் எப்படி பந்துவீசினாலும் விக்கெட்டில் பந்து பேட்டரை நோக்கியே வந்ததால், பேட் செய்வது எளிதாக இருந்தது. அடித்து ஆட வேண்டும் என்றவேட்கையில் ரோஹித் சர்மா(26), இஷான் கிஷன்(34) ரன்களில் பவர்ப்ளேவுக்குள் விக்கெட்டுகளை இழந்தனர். இருவரின் விக்கெட் வீழ்ந்ததுமே மும்பை அணியின் பேட்டிங் சற்று ஆட்டம் கண்டது. பவர்ப்ளே ஓவர்களில் மும்பை அணி 2 விக்கெட்டுகளை இழந்து 72 ரன்கள் சேர்த்தது.

3-வது விக்கெட்டுக்கு நமன் திர், திலக் வர்மா ஜோடி ரன்களை வேகமாகச் சேர்த்தனர். ரன்ரேட்டை மனதில் வைத்து இருவரும் பவுண்டரி, சிக்ஸர்களாக விளாசினர். ஆனாலும், 37 பந்துகளில் 84 ரன்கள் சேர்த்தநிலையில் இந்த ஜோடி பிரி்ந்தது. நமன் திர் 30 ரன்களில் உனட்கட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். திலக் வர்மா 24 பந்துகளில் அரைசதம் அடித்து 64 ரன்களில் கம்மின்ஸ் பந்துவீச்சில் வெளியேறினார். திலக் வர்மா, நமன் திர் ஜோடி 21 பந்துகளுக்குள் ஆட்டமிழந்தபின் மும்பை அணி வெற்றிக்கான தருணத்தை இழந்தது. கேப்டன் ஹர்திக் பாண்டியா 24 ரன்களில் ஏமாற்றினார். டிம் டேவிட் 42, ஷெப்பர்ட் 15ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் போராடினர்.

மும்பை vs ஹைதராபாத்

பட மூலாதாரம், Getty Images

மீன்டும் எல்லைக் கோட்டில் ‘பார்வையாளராக’ நின்ற ரோஹித் சர்மா

ஹர்திக் பாண்டியாவைவிட ரோஹித் சர்மா கேப்டன்ஷியில் அனுபவமானவர், முதிர்ச்சியானவர். கிரிக்கெட் உலகில் வெற்றிகரமான கேப்டனாக வலம் வந்து கொண்டிருக்கிறார், அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.

ஆனால், சன்ரைசர்ஸ் அணி பேட்டர்கள் மும்பை பந்துவீச்சை வெளுத்து துவம்சம் செய்தபோது, கேப்டன் ஹர்திக் பாண்டியா தன்னிட்சையாகவே பந்துவீச்சாளர்களை மாற்றி, பீல்டிங்கை மாற்றி கட்டளையிட்டுக்கொண்டார். மாறாக, அனுபவம் மிகுந்த, முன்னாள் வெற்றிக் கேப்டன் ரோஹித் சர்மாவிடம் கலந்து பேசவில்லை, எந்த ஆலோசனையும் பெறவில்லை என்பதைக் காண முடிந்தது. ஹர்திக் பாண்டியா செய்யும் அனைத்து கேப்டன்சி பணிகளையும் ரோஹித் சர்மா பவுண்டரி எல்லையில் நின்று மவுனப் பார்வையாளராகப் பார்த்துக் கொண்டிருந்தார்.

ஹர்திக் பாண்டியா விமர்சிக்கப்பட்டது ஏன்?

ஹர்திக் தலைமையில் மும்பை அணி சந்திக்கும் 2ஆவது மற்றும் மோசமான தோல்வியாகும். ஹர்திக் பாண்டியா ப்ளேயிங் லெவனுக்கு எடுத்த வீரர்களும் சரியில்லை, பந்துவீச்சாளர்களைக் கையாண்ட முறையும் சரியில்லை என்று தொலைக்காட்சி வர்ணணனையில் வர்ணனையாளர்கள் ஆதங்கம் அடைந்தனர்.

குறிப்பாக உலகத்தரம் வாய்ந்த வேகப்பந்துவீச்சாளர் பும்ராவை கையில் வைத்திருக்கும்போது அவரை எப்போது பயன்படுத்த வேண்டும் என்ற புரிதல் கூட பாண்டியாவுக்கு இல்லை என்று விமர்சிக்கப்பட்டது. தொடக்கத்தில் ஒரு ஓவரை பும்ராவுக்கு அளித்துவிட்டு கடைசி நேரத்தில் வாய்ப்பு வழங்கினார் ஹர்திக் பாண்டியா. பெரிய ஸ்கோரை சன்ரைசர்ஸ் அடைந்தநிலையில், பும்ரா ஓவரை ரிஸ்க் எடுத்து அடிக்க வேண்டிய தேவை கிளாசனுக்கும், மார்க்ரமுக்கும் தேவைப்படவில்லை.

பவர்ப்ளே ஓவரில் ஹெட், அபிஷேக் இருவரும் மும்பை பந்துவீச்சை வெளுக்கும் போது அவர்களை அடிக்கவிடாமல் நிறுத்த பந்துவீச்சை மாற்றவோ, பீல்டிங்கை மாற்றிவைத்து அதற்கு ஏற்றாற்போல் பந்துவீசச் செய்யவோ ஹர்திக் பாண்டியா எடுத்த முயற்சிகளும் பலன் அளிக்கவில்லை.

சன்ரைசர்ஸ் அணி பவர்ப்ளே ஓவரில் பெரிய ஸ்கோரை அடையும்போதும் சரி, 10 ஓவர்களில் 2விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் சேர்த்தபோதும், 12 ஓவர்களில் 177 ரன்கள் சேர்க்கும் வரை பும்ராவுக்கு பந்துவீச பாண்டியா வாய்ப்பு வழங்கவில்லை. கிளாசன் களமிறங்கியபின்புதான் பும்ராவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. 13 ஓவர்களுக்குப்பின்புதான் பும்ராவுக்கு கடைசி 3 ஓவர்கள் தரப்பட்டது.

மும்பை vs ஹைதராபாத்

பட மூலாதாரம், Getty Images

பவர்ப்ளேயில் பும்ராவுக்கு வாய்ப்பு வழங்கியிருந்தால், சன்ரைசர்ஸ் ஸ்கோர் உயர்வு குறைக்கப்பட்டிருக்கும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டாம் மூடி தெரிவித்துள்ளார்.

அவர் அளித்தபேட்டியில் “ உலகத் தரம்வாய்ந்த பந்துவீச்சாளர் உங்கள் கையில் இருக்கும்போது, முதல் 10 ஓவர்களில் அவரின் ஸ்பெல்லை வீசச் செய்து முடிக்க வேண்டும். பும்ரா சிறந்த விக்கெட் டேக்கர். பவர்ப்ளேயில் பும்ரா பந்துவீசியிருந்தால் நிச்சயமாக விக்கெட் எடுத்துக் கொடுத்திருப்பார். பும்ரா தனது 2-ஆவது ஸ்பெல்லை வீச வந்தபோது, சன்ரைசர்ஸ் அணி பெரிய ஸ்கோரை அடைந்துவிட்டது, ரன்நெருக்கடி ஏதும் இல்லாமல் இருந்தது. ஒட்டுமொத்தத்தில் பும்ராவை சரியாக மும்பை அணி பயன்படுத்தவில்லை” எனத் தெரிவித்தார்.

அது மட்டுமல்ல கடந்த ஐபிஎல் சீசனில் மும்பை அணிக்காக சிறப்பாகச் செயல்பட்ட, அனைவரின் கவனத்தையும் ஈர்த்த சுழற்பந்துவீச்சாளர் நேகல் வதேரா, வேகப்பந்துவீச்சாளர் ஆகாஷ் மத்வால் ஆகியோர் இருக்கும்போது அவர்களை ஹர்திக் பாண்டியா அணிக்குள் சேர்க்கவில்லை. ஆப்கானிஸ்தான் ஆல்ரவுண்டர் முகமது நபி அணியில் இருந்தபோது அனுபவமற்ற மபாகாவை சேர்த்தார் ஹர்திக் பாண்டியா.

ஐபிஎல் தொடரில் தொடக்கத்திலேயே புள்ளிகளைப் பெற்று நிகர ரன்ரேட்டை உயர்த்தினால்தான் குறைந்பட்சம் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்ல முடியும். நிகரரன்ரேட்டில் சிக்கல் ஏற்பட்டால் ஹர்திக் கேப்டன்ஷியில் லீக் சுற்றோடு மும்பை நடையைக் கட்ட வேண்டியதிருக்கும்.

தனிப்பட்ட ரீதியில் ஹர்திக் பாண்டியா இரு போட்டிகளில் பேட் செய்தும் பெரிதாக ஸ்கோர் செய்தாதும் அவரின் பேட்டிங் மீதுபல்வேறு கேள்விகளை முன் வைக்கிறது. அவரின் கேப்டன்ஷியில் எடுக்கும் இதுபோன்ற தவறான முடிவுகள், பந்துவீச்சாளர்களை சரியாகப் பயன்படுத்தாதது கேப்டன்ஷி மீதும் விமர்சனங்களை வைக்கிறது.

மும்பை vs ஹைதராபாத்

பட மூலாதாரம், Getty Images

பந்துவீச்சு பற்றி ஹர்திக் பாண்டியா கூறியது என்ன?

தோல்வி அடைந்த மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறுகையில் “விக்கெட் (ஆடுகளம்) சிறப்பாக இருந்தது. 277 ரன்கள் குவிப்பு என்பது நாங்கள் மோசமாக அல்லது நல்லவிதமாக நாங்கள் பந்துவீசினோமா என்பதெல்லாம் பிரச்னை அல்ல, எதிரணி நன்றாக பேட் செய்துள்ளார்கள். எங்கள் பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டனர். 500 ரன்கள் அடிக்க இந்த விக்கெட் உதவியது. சில புதிய விஷயங்களை முயற்சித்தோம், ஆனால், இளம் பந்துவீச்சாளர்களால் இன்றைய ஆட்டத்தை சமாளிக்க முடியவில்லை.”

“ஒவ்வொருவரும் சிறப்பாக பேட் செய்தனர். திலக் வர்மா, ரோஹித், இஷான் சிறப்பு. சில விஷயங்களை மட்டும் சரியாகச் செய்ய வேண்டியது அவசியம். மபாகா முதல் போட்டியிலேயே ரசிகர்களைப் பார்த்து பரவசம் அடைந்தார். திறமையான பந்துவீச்சாளர் மபாகா, அவருக்கு இன்னும் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)