தோனி அந்தரத்தில் பறந்து 'சூப்பர்' கேட்ச், இளம் வீரர்களின் அர்ப்பணிப்பு - சி.எஸ்.கே. 2.0 இதுதானா?

CSK vs GT

பட மூலாதாரம், X/IndianPremierLeague

    • எழுதியவர், க.போத்திராஜ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

42 வயதிலும் கிரிக்கெட் ஆடுவதற்கான முழுத் தகுதியுடன் இருப்பதை நிரூபிக்கும் வகையில் பாய்ந்து சென்று தோனி கேட்ச் பிடிக்கும் காட்சியைப் பார்த்து அவரது ரசிகர்கள் பார்த்துப் பூரித்துப் போயிருக்கின்றனர். அதே நேரத்தில் புதிய அணித்தலைவரின் கீழ் அடுத்தடுத்து இரண்டு போட்டிகளை சிஎஸ்கே அணி வென்றிருப்பதன் மூலம் தலைமுறை மாற்றத்துக்கு தயாராக இருக்கிறது என்பதையும் நிரூபித்திருக்கிறது.

சென்னை சேப்பாக்கத்தில் நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 7-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 63 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது சிஎஸ்கே அணி.

முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 20 ஓவர்களில்6 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் சேர்த்தது. 207 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் மட்டுமே சேர்த்து தோல்வி அடைந்தது.

இதன் மூலம் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு சிஎஸ்கே அணி முன்னேறியது. நிகர ரன்ரேட்டும் 1.97 புள்ளிகளுடன் வலுவாக சிஎஸ்கே வைத்துள்ளது.

சிஎஸ்கே 2.0 வென்றது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

இளம் சிஎஸ்கே படை

இளம் பேட்டர்கள் ஷிவம் துபே(23பந்துகளில் 51 ரன்கள்), ரச்சின் ரவீந்திரா(20பந்துகளில்46), கெய்க்வாட்(36பந்துகளில் 46), ரிஸ்வி(6 பந்துகளில் 14) ஆகிய 4 பேரும் சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணி இமாலய ஸ்கோரை எட்டுவதற்கு முக்கியக் காரணமாக அமைந்தனர்.

அதிலும் நடுப்பகுதி ஓவர்களில் குஜராத் டைட்டன்ஸ் சுழற்பந்துவீச்சாளர்களை ஓடவைத்த துபேவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. கடந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் பேட்டர்களைக் கட்டிப்போட்ட ரஷித் கான், சாய் கிஷோர் இருவராலும் துபே பேட்டிங்கை கட்டிப்படுத்த முடியவில்லை.

இது சேப்பாக்கம் மைதானம்தானா?

சேப்பாக்கம் மைதானம் என்றாலே சுழற்பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம்தான் கடந்த காலங்களில் இருந்துள்ளது. ஆனால் இந்த ஆட்டத்தில் சிஎஸ்கே அணியில் ரவீந்திர ஜடேஜா தவிர வேறு எந்த சுழற்பந்துவீச்சாளர்களும் பந்துவீசவில்லை, சுழற்பந்துவீச்சாளர் ஜடேஜாகூட விக்கெட் வீழ்த்தவில்லை. மாறாக, 8 விக்கெட்டுகளையும் வேகப்பந்துவீச்சாளர்களான தேஷ்பாண்டே(2), முஸ்தபிசுர் ரஹ்மான்(2), தீபக் சஹர்(2), டேரல் மிட்ஷெல்(1), பதிரண(1) ஆகியோர் வீழ்த்தினர். சேப்பாக்கம் மைதானத்தில் சுழற்பந்துவீச்சு எடுக்கவில்லை என்பதே வியப்புக்குரிய செய்தாக இருக்கிறது.

சிஎஸ்கே 2.0 வென்றது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

மும்பை வீரர்கள் vs தமிழக வீரர்கள்

சென்னையைச் சேர்ந்த சிஎஸ்கே அணி என்று பெயரளவுக்கு இருந்தாலும், அந்த அணியில் பெரும்பாலும் மும்பை, மகாராஷ்டிரா வீரர்கள் ஆதிக்கம் அதிகம் இருக்கிறது. குஜராத் டைட்டன்ஸ் அணியில் 3 தமிழக வீரர்கள் விளையாடினார்கள். இருவருக்கும் இடையிலான ஆட்டத்தில் மும்பை, மகாராஷ்டிரா வீரர்கள் வென்றனர்.

ரச்சின் ரவீந்திரா அமைத்துக் கொடுத்த அடித்தளத்தை, கெய்க்வாட், ரஹானே எடுத்துச்சென்றனர். அதன்பின் ஸ்கோரை உயர்த்தும் பணியை துபே கையில் எடுத்து பெரிய உயரத்துக்கு கொண்டு சென்றார். தனது முதல் ஐபிஎல் போட்டியில் களமிறங்கிய சமீர் ரிஸ்வி தனக்குரிய பங்களிப்பாக 2 சிக்ஸர்களை விளாசி ஸ்கோர் உயர்வுக்கு பங்காற்றினார். பீல்டிங்கில் தோனிஎடுத்த அற்புதமான கேட்ச, ரஹானேவின் மிரட்டலான டைவ் கேட்ச், ரவீந்திராவின் 3 கேட்சுகள் என சிறப்பாகச் செயல்பட்டனர்.

பாய்ந்து, பறந்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய தோனி

இந்த ஆட்டத்தில் டேரல் மிட்ஷெல் வீசிய ஓவரை விஜய் சங்கர் அடிக்க முற்பட்டபோது, பந்து அவுச் ஸ்விங் ஆகி, பேட்டில் பட்டு முதல் ஸ்லிப்புக்கு சென்றது. விக்கெட் கீப்பரான 42 வயது தோனி, ஏறக்குறைய 4 அடிவரை பாய்ந்து சென்று பந்தை லாவகமாகப் பிடித்தார்.

தோனியின் விக்கெட் கீப்பிங்கைப் பார்த்தபோது, தோனிக்கு உண்மையில் 42 வயதாகி விட்டதா என்று ரசிகர்கள் நினைத்தனர். தோனி தற்போது இருக்கும் உடற்தகுதியைப் பார்த்தால் இன்னும் பல ஐபிஎல் சீசன்களுக்கு விளையாடுவார் போலத் தெரிகிறது என்று ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் புகைப்படத்தை பகிரந்து கருத்துத் தெரிவித்தனர்.

சிஎஸ்கே 2.0 வென்றது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

ரச்சின் ஆட்டம் பிரமாதம்

ரச்சின் ரவீந்திரா ஃபேக்புட் பிளேயர். அவரின் டிரைவ்கள் அனைத்தும் ஆட்டத்தின் பகுதியாகவே இருக்குமே தவிர பிராதனமாக இருக்காது. ஆனால்,உலகக் கோப்பையில் பேட் செய்ததைவிட, டி20 ஃபார்மெட்டுக்கு விரைவாக தனது மனதையும், பேட்டிங் ஸ்டைலையும் ரவீந்திரா மாற்றிக்கொண்டுள்ளார்.

இந்த ஆட்டத்தில் அவர் பேட் செய்த ஸ்ட்ரைட் ட்ரைவ், பிரண்ட்ஃபுட் பவுண்டரிகள், ஷார்ட் பந்தை பஞ்ச் செய்தது, விரைவாக பந்தை பிக் செய்து ஷாட்களை அடித்தது ஆகியவை டி20 ஃபார்மெட்டுக்கு விரைவாக மாற்றிக்கொண்டதை காண முடிகிறது.

இளம் வீரர்கள் பலம்

சிஎஸ்கே கேப்டன் கெய்க்வாட் பேசுகையில் “ இன்றைய ஆட்டம் ஆகச்சிறந்த ஆட்டத்துக்கு உதாரணம். பந்துவீச்சு, பேட்டிங், பீல்டிங்கில் சிறப்பாகச்செயல்பட்டோம். குஜராத் போன்ற வலிமையான அணிக்கு இதுபோன்ற செயல்பாடு அவசியம். சேப்பாக்கம் விக்கெட் பற்றி முழுமையாகத் தெரியாத நிலையில் 10ஓவர்களி்ல் 100 ரன்களைக் கடந்தோம். “

“கடைசி 10 ஓவர்களுக்கு பேட்டர்களுக்கு விக்கெட் நன்றாக உதவியது. ரச்சின், துபே, ரிஸ்வி சிறப்பாக பேட் செய்தனர். துபே என்ன செய்ய வேண்டும்என்று நிர்வாகமும் தனிப்பட்ட முறையில் செயல்ப்பட்டது,தோனியும் அறிவுரைகளை வழங்கினார். எப்படி பேட் செய்ய வேண்டும், எந்த பந்துவீச்சாளரை குறிவைக்க வேண்டும்என்று துபேவுக்கு தெளிவாகத் தெரியும். பீல்டிங் சிறப்பாக அமைந்தது. அணியில் 3 இளம் வீரர்கள் வந்துள்ளது கூடுதல் பலம்” எனத் தெரிவித்தார்.

ரச்சின் ரவீந்திரா அதிரடி ஆட்டம்

டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் சுப்மான் கில் பீல்டிங்கைத் தேர்வு செய்தார். சிஎஸ்கே கேப்டன் கெய்க்வாட், ரச்சின் ரவீந்திரா ஆட்டத்தைத் தொடங்கினர். முதல் ஓவரில் மட்டும்தான் சிஎஸ்கே ரன்கள் சேர்க்கவில்லை. அதன்பின், ஓமர்சாய், உமேஷ் குமார் யாதவ் ஓவர்களை ரச்சின் ரவீந்திரா துவம்சம் செய்துவிட்டார். சிக்ஸர், பவுண்டரிகள் என ரவீந்திரா வெளுக்கவே, சிஎஸ்கே ரன்ரேட் எகிறியது.

வேறுவழியின்றி 6-வது ஓவரிலேயே ரஷித்கான் பந்துவீச அழைக்கப்பட்டார். அவரின் வருகைக்கும் நல்ல பலன் கிடைத்தது. ரவீந்திரா 20 பந்துகளில் 46 ரன்கள் சேர்த்தநிலையில் சஹாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இவரின் கணக்கில் 3 சிக்ஸர்கள், 6பவுண்டரிகள் அடங்கும். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி, ஒரு விக்கெட் இழப்புக்கு 69 ரன்கள் சேர்த்தது.

சிஎஸ்கே 2.0 வென்றது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

ரஹானே-கெய்க்வாட் நிதானம்

2வது விக்கெட்டுக்கு வந்த ரஹானே, கெய்க்வாட்டுடன் சேர்ந்தார். தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை ஆடாமல் நிதானமாக ரஹானே பேட் செய்தார். கெய்க்வாட்டும், ரஹானேவும் நிதானமாக ஸ்கோரை உயர்த்தினர். 9.5 ஓவர்களில் சிஎஸ்கே அணி 100 ரன்களை எட்டியது. அதிரடியாக ஆடக்காடிய ரஹானே ஒரு பவுண்டரிகூட அடிக்காமல் 12 ரன்கள் சேர்த்தநிலையில் சாய் கிஷோர் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். 2வது விக்கெட்டுக்கு ரஹானே, கெய்க்வாட் ஜோடி 42 ரன்கள் சேர்த்தனர்.

அடுத்து ஷிவம் துபே களமிறங்கி, கெய்க்வாட்டுடன் சேர்ந்தார். ஷிவம் துபே களமிறங்கி சாய்கிஷோர் ஓவரில் சந்தித்த முதல் பந்திலும், 2வது பந்திலும் அடுத்தடுத்து சிக்ஸரை பறக்கவிட்டார்.

ஒருபுறம் அரைசதத்தை நோக்கி நகர்ந்த கெய்க்வாட் ஏமாற்றம் அளித்தார். ஸ்பென்சர் ஜான்சன் வீசிய 13-வது ஓவரில் விக்கெட் கீப்பர் சாஹாவிடம் கேட்ச் கொடுத்து கெய்க்வாட் 46ரன்னில் விக்கெட்டை இழந்தார். அடுத்துவந்த டேரல் மிட்ஷெல் துபேயுடன் சேர்ந்தார்.

துபே விளாசல்

துபே களமிறங்கியதால், ரன்ரேட்டை கட்டுப்படுத்த ரஷித்கான் 14-வது ஓவரை வீச அழைக்கப்பட்டார். ரஷித்கான் ஓவரையும் விட்டு வைக்காத துபே ஒருபவுண்டரி, சிக்ஸர் 13 ரன்கள் சேர்த்தார். ஜான்சன் வீசிய 15வது ஓவரிலும் துபே சிக்ஸர், பவுண்டரி என சேர்த்து சிஎஸ்கே ரன்ரேட்டை எகிறவைத்தார்.

ஒருபுறம் துபே குஜராத் பந்துவீச்சை வெளுத்துவாங்க, மறுபுறம் மிட்ஷெல் பெரிய ஷாட்டுக்கு முயன்றும் பேட்டில் பந்து சிக்கவில்லை. மோகித் சர்மா வீசிய 18-வது ஓவரில் சிக்ஸர் அடித்து 22 பந்துகளில் துபே அரைசதத்தை நிறைவு செய்தார். ஐபிஎல் தொடரில் துபயின் 7-வது அரைசதம் இதுவாகும்.

19-வது ஓவரை வீச ரஷித்கான் அழைக்கப்பட்டார். 2வது பந்தில் துபே தூக்கி அடிக்க எக்ஸ்ட்ரா கவரில் சங்கரிடம் கேட்சானது. துபே 5சிக்ஸர், 2பவுண்டரி) 23 பந்துகளில்(51 ரன்னில் ஆட்டமிழந்தார். 4வது விக்கெட்டுக்கு மிட்ஷெல்-துபே கூட்டணி 57 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துப்பிரிந்தனர்.

சிஎஸ்கே 2.0 வென்றது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

அதிரடி அறிமுகம்

அடுத்து ரிஸ்வி களமிறங்கினார். ஐபிஎல் தொடரில் முதல் ஆட்டத்தில் களமிறங்கிய ரிஸ்வி, தான் ஐபிஎல்தொடரில் சந்தித்த முதல்பந்தில், அதிலும் ரஷித்கான் பந்தில் சிக்ஸருக்கு பறக்கவிட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார், அதே ஓவரின் கடைசிப்பந்தில் மீண்டும் ரிஸ்வி ஒரு சிக்ஸர் விளாசினார். ஐபிஎல் ஏலத்தில் ரிஸ்வியை ரூ.8 கோடிக்கு சிஎஸ்கே வாங்கியது குறிப்பிடத்தக்கது.

கடைசி ஓவரை மோகித் சர்மா வீசினார். 2வது பந்தில் ரிஸ்வி தூக்கி அடிக்க முயன்று, லாங்ஆன் திசையில் மில்லரிடம் கேட்ச் கொடுத்து 14 ரன்னில் விக்கெட்டை இழந்தார். அடுத்துவந்த ஜடேஜா பவுண்டரி மட்டும்அடிக்க கடைசிப்பந்தில் ரன்அவுட் ஆகினார்.

தோனி கடைசி வரை வரவில்லை

சேப்பாக்கில் அமர்ந்திருந்த அனைத்து ரசிகர்களும் ஜடேஜாவுக்குப் பதிலாக தோனி களமிறங்குவார் என எதிர்பார்த்திருந்தனர். ஆனால், ஜடேஜா களமிறங்கியவுடன் அனைத்து ரசிகர்களும் ஏமாற்றம் அடைந்தனர்.

சிஎஸ்கே அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் சேர்த்தது.

அடுத்தடுத்து விக்கெட் இழப்பு

207 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் கடின இலக்கோடு குஜராத் அணி களமிறங்கியது. சுப்மான்கில், சாஹா அதிரடியான தொடக்கத்தை அளி்த்தனர். சஹர் வீசய முதல் ஓவரில் கில் சிக்ஸரும், முஸ்தபிசுர் வீசிய 2வது ஓவரில் சஹா 2பவுண்டரிகளையும் விளாசினார். சஹர் வீசிய 3வது ஓவரில் சஹா 2 பவுண்டரிகள் வீசிய நிலையில் அதே ஓவரில் கில் ஸ்லோபாலில் கால்காப்பில் வாங்கி 8 ரன்னில் ஆட்டமிழந்தார்.

2வது விக்கெட்டு சாய்சுதர்சன் களமிறங்கி சஹாவுடன் சேர்ந்தார். சஹர் வீசிய 5வது ஓவரின் 4வது பந்து பவுன்ஸராக வீசவே, அது சஹாவின் ஹெல்மெட்டில்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், அடுத்தபந்தை சஹா தூக்கி அடிக்கவே ஸ்குயர் லெக் திசையில் தேஷ்பாண்டேவிடம் கேட்ச் கொடுத்து 21 ரன்னில் ஆட்டமிழந்தார்.

சிஎஸ்கே 2.0 வென்றது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

சென்னைக்கு எதிராக களமிறங்கிய தமிழ்நாட்டு ஜோடி

அடுத்து விஜய் சங்கர் களமிறங்கி, சுதர்சனுடன் சேர்ந்தார். இரு தமிழக வீரர்கள் அதிலும் சேப்பாக்கம் மைதானத்தில் இருந்தது சிறிது மெய்சிலிர்ப்பாக இருந்தது. அணியை வெற்றி நோக்கி இருவரும் எடுத்துச் செல்ல முயன்றனர். தேஷ்பாண்டே ஓவரில் சங்கர் அற்புதமான சிக்ஸர் விளாசினார். பவர்ப்ளே ஓவரில் குஜராத் அணி 2 விக்கெட் இழப்புக்கு 43 ரன்கள் சேர்த்தது.

மித வேகப்பந்துவீச்சுக்காக டேரல் மிட்ஷெல் அழைக்கப்பட்டார். மிட்ஷெல் வீசிய 3வது பந்தை அவுட் ஸ்விங்காக மாற, சங்கர் பேட்டில் பட்டு முதல் ஸ்லிப்பில் சென்றது. விக்கெட் கீப்பிங் பணியில் இருந்த தோனி, பறந்து சென்று அந்தக் கேட்ச்சைப் பிடித்து எந்தவிதமான அலட்டலும் இல்லாமல் மிகவும் இயல்பாக பந்தைதூக்கி எறிந்து நடந்து சென்றார்.

ரஹானேவின் அருமையான கேட்ச்

அதன்பின் மில்லர் களமிறங்கி, சுதர்சனுடன் சேர்ந்தார். மில்லர், சுதர்சன் இருவரும் ஓவருக்கு ஒருபவுண்டரி அடித்து ஸ்கோரை மெல்ல உயர்த்தினர். 10ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 3 விக்கெட் இழப்புக்கு 80 ரன்கள் சேர்த்தது.

பதிரனா பந்துவீச வந்தபின் குஜராத் ரன்ரேட் வேகம் சற்று குறைந்தது. தேஷ்பாண்டே வீசிய 12-வது ஓவரை மில்லர் எதிர்கொண்டார். யார்கராக வீசப்பட்ட 5வது பந்தை ப்ளிக் செய்து மில்லர் தட்டிவிட,பவுண்டரி லைனில் இருந்த ரஹானே பறந்து சென்று அருமையான கேட்ச் பிடித்தார். இந்த கேட்சை எதிர்பாராத மில்லர் 21 ரன்னில் ஏமாற்றத்துடன் வெளியேறினார். அதன்பின் ஓமர்சாய் களமிறங்கி, சுதர்சனிடம் சேர்ந்தார்.

சிஎஸ்கே 2.0 வென்றது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

ரன் ரேட் நெருக்கடி

அதன்பின் குஜராத் அணிக்கு ஸ்கோர் உயரவில்லை என்பதால் களத்தில் இருந்த சுதர்சன், ஓமர்சாய் மீது ரன்ரேட் அழுத்தம் அதிகரித்தது. இதனால் இருவரும் பெரிய ஷாட்களுக்கு முயன்றனர். பதிரணா வீசிய 15-வது ஓவரின் 2வது பந்தை சுதர்சன் எக்ஸ்ட்ரா கவரில் தூக்கி அடிக்க அந்தப் பந்தை ரச்சின் ரவீந்தரா பிடிக்காமல் கோட்டைவிட்டார். ஆனால், அதே ஓவரி்ன் 5வது பந்தில் ரிஸ்வியிடம் கேட்ச் கொடுத்து சுதர்சன் 37 ரன்னில் ஆட்டமிழந்தார்.

15 ஓவர்களுக்குப்பின் குஜராத் அணி பேட்டர்கள் பெவிலியனிலிருந்து களத்துக்கு வருவதும், மீண்டும் பெவிலியன் செல்வதுமாக இருந்தனர். ஓமர்சாய் 11 ரன்னில் தேஷ்பாண்டே பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். ரஷித் கான் ஒரு ரன்னில் முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திவேட்டியா 6 ரன்னில் முஸ்தபிசுர் பந்துவீச்சில் ரவீந்திராவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஜான்ஸன் 5, உமேஷ் 10 ரன்களுடன் களத்தில் இருந்தனர். 20 ஓவர்கள் முடிவில்குஜராத் அணி 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் சேர்த்து 63 ரன்களில் தோல்விஅடைந்தது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)