உ.பி.யின் தாதா, அரசியல்வாதி: முக்தார் அன்சாரி யார்? மதுரையுடன் இவருக்கு என்ன தொடர்பு?

பட மூலாதாரம், ANI
உத்திர பிரதேசத்தில் உள்ள பாந்தா சிறையில் தண்டனை அனுபவித்து வந்த மாஃபியா உலகின் சக்திவாய்ந்த நபரான முக்தார் அன்சாரி வியாழக்கிழமை மாலை மாரடைப்பால் காலமானார். இந்தத் தகவலை சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பாந்தா மாவட்ட சிறையில் அடைக்கப்பட்ட முக்தார் அன்சாரி, வியாழக்கிழமை மாலை ராணி துர்காவதி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
“இரவு 8.45 மணியளவில் 63 வயதான முக்தார் அன்சாரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிறை பாதுகாப்பு அதிகாரிகளால் அனுமதிக்கப்பட்டார். அவர் வாந்தியெடுத்தல் மற்றும் மயக்க நிலையில் கொண்டு வரப்பட்டார்," என்று மருத்துவமனை அறிக்கை தெரிவிக்கிறது.
ஒன்பது மருத்துவர்கள் கொண்ட குழுவால் நோயாளிக்கு உடனடி மருத்துவ உதவி வழங்கப்பட்டது. ஆனால் சிறந்த முயற்சிகள் இருந்தபோதிலும், அவர் 'மாரடைப்பு' காரணமாக உயிரிழந்தார் என்று அறிக்கை மேலும் கூறுகிறது.
இரண்டு நாட்களுக்கு முன்னர் அதாவது செவ்வாய்க்கிழமையன்று உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டிருந்தார்.
வியாழன் மாலை முக்தார் அன்சாரியின் உடல்நிலை மோசமடைந்தது என்ற செய்தி வந்தவுடன், காஃஜிபூரில் உள்ள அவரது இல்லத்தில் மக்கள் திரண்டனர். மரணம் உறுதி செய்யப்பட்டதையடுத்து, உத்தர பிரதேசம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. முக்தார் அன்சாரியின் சொந்த மாவட்டமான மெளவு உட்படப் பல பகுதிகளில் போலீஸ் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டது.
அவரது வீட்டுக்கு வெளியே ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். அலிகர், ஃபிரோஸாபாத், பிரயாக்ராஜ், கஸ்கஞ்ச் உள்ளிட்ட மாநிலத்தின் பல மாவட்டங்களில் துணை ராணுவப் படைகளுடன் காவல்துறை கொடி அணிவகுப்பு நடத்தியது என்று பிடிஐ செய்தி முகமை தெரிவித்தது.
முதல்வர் ஆதித்யநாத்தும் இரவே உயர்மட்ட கூட்டத்தைக் கூட்டினார்.
தனது உயிருக்கு ஆபத்து என்ற அச்சம்

பட மூலாதாரம், ANI
கடந்த ஆண்டு, முக்தார் அன்சாரியின் மகன் உமர் அன்சாரி தனது தந்தையின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அச்சம் தெரிவித்து உச்ச நீதிமன்றத்தை அணுகினார்.
முக்தார் அன்சாரியின் உயிருக்குப் பெரும் ஆபத்து இருப்பதாகவும், அவரை பாந்தா சிறையில் கொல்ல சதி நடப்பதாக நம்பகமான தகவல் கிடைத்துள்ளதாகவும் நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறப்பட்டிருந்தது.
பிணைய மீட்புப் பணம் கேட்ட வழக்கில் முக்தார் அன்சாரி 2019 முதல் பஞ்சாப் மாநிலத்தின் ரூப்நகர் சிறையில் அடைக்கப்பட்டார். 2021ஆம் ஆண்டில், உத்தர பிரதேச போலீசார் அவரை பந்தாவுக்கு அழைத்து வந்தனர். அதிலிருந்து அவர் இந்த சிறையில் உள்ளார். அவரது மரணம் குறித்து காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் சுரேந்திர ராஜ்புத் கூறுகையில், "சில நாட்களுக்கு முன்பு முக்தார் அன்சாரி தனக்கு ஸ்லோ பாய்சன் கொடுக்கப்படுவதாகக் குற்றம் சாட்டினார். இன்று அவர் மாரடைப்பால் இறந்ததாக நிர்வாகம் கூறுகிறது. இதுகுறித்து உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும். சிறையில் என்ன நடக்கிறது என்பதை மக்கள் தெரிந்துகொள்ள ஏதுவாக உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்பட வேண்டும்,” என்றார்.
முக்தார் அன்சாரியின் மறைவுக்கு சமாஜ்வாதி கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று எஸ்பி தலைவர் அமிக் ஜாமேயி கோரியுள்ளார்.
அவரது சகோதரர் அப்சல் அன்சாரி மற்றும் மகன் உமர் ஆகியோர் இரவில் தங்கள் உறவினர்களுடன் பாந்தாவுக்கு புறப்பட்டனர் என்று லக்னெளவில் இருந்து பிபிசி நிருபர் ஆனந்த் ஜனானே தெரிவிக்கிறார்.
நேற்று இரவு அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பாந்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. அவரது உடல் பின்னர் காஜிபூரில் உள்ள அவரது பூர்வீக இல்லத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
கொலை வழக்கில் தண்டனை

பட மூலாதாரம், ANI
மாஃபியாவாக இருந்து அரசியல்வாதியாக மாறிய இவர், உத்தர பிரதேச மாநிலம் பூர்வாஞ்சலில் உள்ள மெளவு தொகுதியில் இருந்து ஐந்து முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பாஜக எம்எல்ஏ கிருஷ்ணானந்த் ராய் கொலை வழக்கில் முக்தார் அன்சாரிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த வழக்கில் அவரது சகோதரரும் காஜிபூர் எம்பியுமான அஃப்சல் அன்சாரிக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
காஜிபூர் மாவட்டத்தின் முஹமதாபாத் காவல் நிலையத்தில் பதிவான குற்ற வரலாற்றின்படி, முக்தார் அன்சாரி மீது மொத்தம் 65 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கடந்த 1996இல் விஷ்வ ஹிந்து பரிஷத் அதிகாரியும் நிலக்கரி வியாபாரி நந்த்கிஷோர் ருங்டா கடத்தல் மற்றும் பாஜக எம்எல்ஏ கிருஷ்ணானந்த் ராய் கொலையில் தொடர்பு ஆகியவற்றுக்காக அன்சாரி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கிருஷ்ணானந்த் ராய் கடந்த 2005ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார்.
மேலும் இரண்டு வழக்குகளில் கிடைத்த தண்டனை

அன்சாரி குடும்பம் கடந்த சில ஆண்டுகளாக செய்திகளில் உள்ளது. அன்சாரியின் பல சட்டவிரோத சொத்துகள் மெளவில் இடிக்கப்பட்டன.
கடந்த 2003ஆம் ஆண்டு ஒரு ஜெயிலரை மிரட்டியதற்காக முக்தார் அன்சாரிக்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னெள பிரிவு 2022 செப்டம்பரில் தீர்ப்பளித்தது.
சில நாட்களுக்குப் பிறகு, 1999ஆம் ஆண்டின் ஒரு வழக்கில் குண்டர் சட்டத்தின்கீழ் அவருக்கு ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் 50,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. 2022 ஜூலையில், முக்தார் அன்சாரியின் மனைவி அப்சா அன்சாரி மற்றும் அவரது மகன் அப்பாஸ் அன்சாரியும் தலைமறைவானதாக அறிவிக்கப்பட்டனர்.
கடந்த 2020 ஆகஸ்டில் லக்னெள மேம்பாட்டு ஆணையம் அப்சல் அன்சாரியின் வீட்டை இடித்தது. இந்த வீடு சட்டவிரோதமாக கட்டப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
அப்சல் அன்சாரியின் மீது பல்வேறு குற்றங்களுக்காக மொத்தம் 65 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர் மீது மஹாராஷ்டிரா கன்ட்ரோல் ஆஃப் ஆர்கனைஸ்டு க்ரைம் சட்டம் மற்றும் குண்டர் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த முக்கியமான வழக்குகளில் சிலவற்றில் சாட்சியங்கள் இல்லாத காரணத்தாலும், சாட்சிகள் தங்கள் வாக்குமூலங்களை மாற்றிக் கூறியதாலும், அரசுத் தரப்பு வழக்கறிஞர்களின் பலவீனமான வாதங்கள் காரணமாகவும் நீதிமன்றம் அவரை விடுவித்தது. ஆனால் சில வழக்குகள் முடிவுக்கு வந்து அவருக்கு தண்டனையும் கிடைத்தது.
கீழே வரும் கதையின் ஒரு பகுதி முன்னாள் பிபிசி செய்தியாளர் பிரியங்கா துபே எழுதிய பழைய அறிக்கையில் இருந்து செய்தியில் இருந்து குறிப்பிடப்பட்டுள்ளது.
கிருஷ்ணானந்த் ராய் கொலை வழக்கு: 500 தோட்டாக்கள்

பட மூலாதாரம், MAIL TODAY
கடந்த 1985ஆம் ஆண்டு முதல் அன்சாரி குடும்பத்தினர் வசம் இருந்த காஜிபூரின் முஹமதாபாத் சட்டப்பேரவைத் தொகுதியை 17 ஆண்டுகளுக்குப் பிறகு 2002ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜகவின் கிருஷ்ணானந்த் ராய் அவர்களிடமிருந்து பறித்தார்.
ஆனால் தனது எம்.எல்.ஏ பதவிக் காலத்தை அவரால் முடிக்க முடியவில்லை. மூன்றாண்டுகளுக்குப் பின் அவர் படுகொலை செய்யப்பட்டார்.
“ஒரு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்துவிட்டு திரும்பி வந்துகொண்டிருந்தபோது அவரது குண்டு துளைக்காத டாடா சுமோ காரை பலர் சுற்றி வளைத்து கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். வாகனத்தை இடது பக்கம் அல்லது வலது பக்கம் திருப்ப முடியாத ஒரு சாலையில் தாக்குதலுக்கான இடம் தேர்வு செய்யப்பட்டது.
கிருஷ்ணானந்துடன் மொத்தம் 6 பேர் வாகனத்தில் இருந்தனர். ஏ.கே.47 துப்பாக்கியில் இருந்து ஏறக்குறைய 500 தோட்டாக்கள் சுடப்பட்டன. காரில் இருந்த ஏழு பேரும் கொல்லப்பட்டனர்," என்று பூர்வாஞ்சலில் காட்டுத் தீயாகப் பரவிய இந்த படுகொலைச் செய்தியை சம்பவ இடத்தில் இருந்து ரிப்போர்ட் செய்த மூத்த செய்தியாளர் பவன் சிங் தெரிவித்தார்.
முக்தார் அன்சாரி தனது பழைய குடும்ப தொகுதியான காஜிபூரை இழந்ததால் கோபமடைந்தார் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். கிருஷ்ணானந்த் கொலை செய்யப்பட்டபோது அவர் சிறையில் இருந்தபோதும்கூட இந்தக் கொலை வழக்கில் முக்தார் அன்சாரியின் பெயர் சேர்க்கப்பட்டது.
"காஜிபூர் எம்.பி.யும், தற்போதைய அரசில் அமைச்சருமான மனோஜ் சின்ஹாவின் ஒட்டுமொத்த அரசியல் வாழ்வும் இந்தக் கொலை வழக்கிற்குப் பிறகு வலுவான நிலையை எட்டியது. இந்த வழக்கில் மனோஜ், முக்தாருக்கு எதிரான ஒரு சாட்சி.
’கிருஷ்ணானந்திற்கு நீதி கிடைக்கச்செய்வதற்காக பயம் ஏதும் இல்லாமல் போராடிய ஒரே தலைவர்' எனக் கூறி வாக்கு கேட்டுப் பல தேர்தல்களில் மனோஜ் சின்ஹா வெற்றி பெற்றார்,” என்று பவன் குறிப்பிட்டார்.
தந்தைவழி தாத்தா சுதந்திரப் போராட்ட வீரர், தாய்வழி தாத்தா தியாகி

முக்தார் அன்சாரியின் தாத்தா டாக்டர் முக்தார் அகமது அன்சாரி நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் காந்திஜியை ஆதரித்த தலைவராக அறியப்படுகிறார். மேலும் 1926-27இல் அவர் காங்கிரஸ் தலைவராக இருந்துள்ளார் என்று 2019ஆம் ஆண்டு பிபிசியில் வெளியிடப்பட்ட கதை தெரிவிக்கிறது.
முக்தார் அன்சாரியின் தாய்வழி தாத்தா பிரிகேடியர் முகமது உஸ்மான் 1947 போரில் வீரமரணம் அடைந்ததற்காக மகாவீர் சக்ரா விருது பெற்றார்.
காஜிபூரில் ஒரு சுத்தமான இமேஜ் கொண்ட முக்தாரின் தந்தை சுபானுல்லா அன்சாரி, கம்யூனிஸ்ட் பின்னணியில் இருந்து வந்தவர். உள்ளூர் அரசியலில் அவர் தீவிரமாக இருந்தார். இந்தியாவின் முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி முக்தார் அன்சாரியின் சித்தப்பா.
முக்தாரின் மூத்த சகோதரர் அப்சல் அன்சாரி காஜிபூரின் முகமதாபாத் சட்டப்பேரவைத் தொகுதியில் இருந்து தொடர்ந்து ஐந்து முறை (1985 முதல் 1996 வரை) எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார். மேலும் 2004இல் காஜிபூரில் இருந்து எம்.பி.யாகவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
முக்தாரின் மற்றொரு சகோதரர் சிப்கத்துல்லா அன்சாரியும் 2007 மற்றும் 2012 தேர்தல்களில் முஹமதாபாத்தில் இருந்து எம்எல்ஏவாக இருந்துள்ளார்.
முதன்முறையாக 1996இல் பிஎஸ்பி கட்சி சார்பாகப் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டப்பேரவைக்கு வந்த முக்தார் 2002, 2007, 2012 மற்றும் 2017இல் மீண்டும் மவு தொகுதியில் வெற்றி பெற்றார். நாட்டின் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த மூன்று தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
முக்தார் அன்சாரிக்கு இரண்டு மகன்கள். அவரது மூத்த மகன் அப்பாஸ் அன்சாரி, 2017 தேர்தலில் பிஎஸ்பி சார்பில் மவு மாவட்டத்தில் உள்ள கோசி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு 7 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
முக்தார் அன்சாரியின் சகோதரர் அப்சல் அன்சாரி கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் சமாஜ்வாதி கட்சிக்குச் சென்றார். அதன் பிறகு அவர் 'குவாமி ஏக்தா தள்' என்ற பெயரில் தனது சொந்தக் கட்சியை உருவாக்கி 2017இல் பிஎஸ்பியில் சேர்ந்தார்.
முக்தார், பிஎஸ்பி கட்சியில் இருந்து தொடங்கி பின்னர் தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்டார். பின்னர் 2012இல் குடும்பக் கட்சியான குவாமி ஏக்தா தளத்தில் இருந்து போட்டியிட்டார். மேலும் 2017இல் அக்கட்சியை பிஎஸ்பியுடன் இணைத்ததன் மூலம் அவரும் பிஎஸ்பியில் சேர்ந்தார்.
முக்தார் அன்சாரியை 'ஏழைகளின் தூதுவர்' என்று ஒரு காலத்தில் வர்ணித்த பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, 'குற்றங்களில் ஈடுபட்டவர்கள்' என்று கூறி 2010 ஏப்ரலில் அன்சாரி சகோதரர்களை பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து நீக்கினார்.
மாயாவதி 2017 தேர்தலுக்கு முன், 'அவர்கள் மீது எந்த குற்றமும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை' என்று கூறி அன்சாரி சகோதரர்களின் கட்சியான 'குவாமி ஏக்தா தளம்' கட்சியை பிஎஸ்பியில் இணைத்துக்கொண்டார்.
மதுரைக்கும் முக்தார் அன்சாரியின் தாத்தாவுக்குமான தொடர்பு
முக்தார் அன்சாரியின் தாத்தா டாக்டர் முக்தார் அகமது அன்சாரி நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட மூத்த தலைவர்களில் ஒருவர். 1927-28இல் இந்திய தேசிய காங்கிரசின் இருந்திருக்கிறார். அதற்கு முன் அகில இந்திய முஸ்லீம் லீகின் தலைவராகவும் இருந்திருக்கிறார். ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் நிறுவனர்களில் ஒருவர். அதன் வேந்தராகவும் இருந்தவர். இவர் சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்தவர்.
இதன் காரணமாகவோ, என்னவோ இவர் குறித்து தமிழ்நாட்டின் இரண்டாம் நிலை நகரங்களிலும்கூட பலர் அறிந்திருந்தனர்.
டாக்டர் முக்தார் முகமது அன்சாரியின் பெயரில் மதுரை வடக்காவணி மூலவீதியில் ஒரு வாசக சாலை நடத்தப்பட்டு வந்தது. இந்த வாசக சாலை ஒரு கல் மண்டபத்தில் நடந்து வந்தது. இதை நடத்தியவர் ஆறுமுகம் என்பவர். இந்த ஆறுமுகம் ஒரு தீவிர காங்கிரஸ்காரர்.
கடந்த 1939ஆம் ஆண்டில் மதுரை கோவில் நுழைவு நிகழ்வு நடந்தபோது, கோவிலின் நிர்வாக அதிகாரியான ஆர்.எஸ். நாயுடுவுக்கு துணையாக இருந்த சாந்து பட்டருக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் இருந்து வந்தது.
அவர் கோவிலில் இருந்து வீடு திரும்பும்போது தாக்குவது, சாணியைக் கரைத்து ஊற்றுவது போன்றவை நடந்துகொண்டே இருந்தன. அந்தத் தருணத்தில் மதுரை சென்ட்ரல் திரையரங்கின் உரிமையாளரான சுந்தரமும் இந்த அன்சாரி வாசக சாலையை நடத்தி வந்த ஆறுமுகமும்தான் சாந்து பட்டருக்குப் பாதுகாப்பாக இருந்ததாக அவருடைய மகன் சுப்பிரமணியன் தெரிவித்தார்.

காஜிபூரில் முக்தாரின் எழுச்சி
முக்தார் அன்சாரியின் அரசியல் மற்றும் குற்றப் பின்னணியில் காஜிபூரின் முக்கியத்துவத்தை விவரித்த மூத்த செய்தியாளர் உத்பல் பதக், "80கள் மற்றும் 90களில் உச்சத்தில் இருந்த பிரிஜேஷ் சிங், முக்தார் ஆகியோரின் வரலாற்று ’கேங் வார்’ இங்கு காஜிபூரில் இருந்து தொடங்கியது," என்று பிபிசியிடம் கூறினார்.
தோவாப் என்ற வளமான நிலத்தில் அமைந்துள்ள காஜிபூர், ஒரு சிறப்பு நகரம். அரசியல் ரீதியாக ஒரு லட்சத்திற்கும் அதிகமான பூமிஹார் இனத்தவரின் மக்கள்தொகை கொண்ட காஜிபூர், உத்தர பிரதேசத்தில் பூமிஹார்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கும் பகுதிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. சில பழைய உள்ளூர் பத்திரிகையாளர்கள் காஜிபூரை 'பூமிஹார்களின் வேட்டிக்கன்' என்று அழைக்கிறார்கள்.
நாட்டின் மிகவும் பின்தங்கிய பகுதிகளில் ஒன்றான காஜிபூரில், தொழில் என்று எதுவும் இல்லை. ஓபியம் வர்த்தகம் நடக்கிறது. ஹாக்கி அதிகம் விளையாடப்படுகிறது.
காஜிபூரின் ஒரு முக்கியமான முரண்பாடு என்னவென்றால் இது பூர்வாஞ்சலின் குற்றவாளிகள் மற்றும் கேங் வாரின் மையமாக இருக்கும் அதேநேரம் இந்த மாவட்டத்தைச் சேர்ந்த பலர் ஒவ்வோர் ஆண்டும் ஐஏஎஸ்-ஐபிஎஸ் ஆகிறார்கள்.
"முக்தார் அன்சாரி மற்றும் அவரது குடும்பத்தினரின் அரசியல் செல்வாக்கு காஜிபூர் முதல் மெளவு, ஜோன்பூர், பலியா மற்றும் பனாரஸ் வரை பரவியுள்ளது. வெறும் 8-10 சதவீத முஸ்லிம் மக்கள்தொகை கொண்ட காஜிபூரில், அன்சாரி குடும்பம் எப்போதும் இந்து வாக்கு வங்கியின் அடிப்படையில் தேர்தலில் வெற்றி பெற்று வருகிறது,” என்று பதக் குறிப்பிட்டார்.
காஜிபூரின் யூசுப்பூர் பகுதியில் அமைந்துள்ள முக்தார் அன்சாரியின் மூதாதையர் குடியிருப்பு 'பட்கா ஃபாடக்' அல்லது 'படே தர்வாஃஜே' என்று அழைக்கப்படுகிறது. இந்தச் சிறிய நகரத்தில், 'பட்கா ஃபாடக் முகவரி அனைவருக்கும் தெரியும். எனவே வழி கேட்டு அவரது வீட்டிற்கு செல்வதில் எந்த பிரச்னையும் இருக்கவில்லை.
டிசம்பர் மாதத்தில் நான் காஜிபூரை அடைந்தபோது, முக்தாரின் வயதான தாய் மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்தார். அவரை கடைசியாகப் பார்க்க அவரது முழு குடும்பமும் உள்நாடு மற்றும் உலகின் பல்வேறு மூலைகளில் இருந்தும் திரண்டு வந்திருந்தது.
முக்தார் பாந்தா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். ஆனால் அவரது மூத்த சகோதரர் அப்சல் அன்சாரி, மகன் அப்பாஸ் அன்சாரி ஆகியோர் பிபிசியிடம் பேசினர். இது நடந்த சில மணிநேரத்தில் முக்தாரின் தாயார் காலமானார்.
முக்தார் அன்சாரியின் வீட்டிற்கு வெளியே கட்டப்பட்டுள்ள 'படா தர்வாசா' நாள் முழுவதும் பார்வையாளர்களுக்காகத் திறந்திருக்கும். வராண்டாவில் நிறுத்தப்பட்டிருந்த பெரிய வாகன அணிக்கு முன் உள்ள பெரிய சந்திப்பு அறையில் உள்ளூர் மக்கள் அன்சாரி சகோதரர்களைச் சந்திப்பதற்காகக் காத்திருந்தனர்.
அந்த அறையில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் டாக்டர் முக்தார் அகமது அன்சாரி முதல் முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி வரை எல்லா அரசியல் முகங்கள் மற்றும் குடும்பத்தின் இறந்த மூதாதையர்களின் புகைப்படங்கள் மாட்டப்பட்டுள்ளன.

இளைய சகோதரர் முக்தாரை பற்றிப் பேசிய அப்சல் அன்சாரி, "முக்தார் என்னைவிட பத்து வயது இளையவர். பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, காஜிபூரில் உள்ள கல்லூரியில் படித்தார். அந்தக் கல்லூரியில் ராஜ்புத்-பூமிஹார்களின் ஆதிக்கம் இருந்தது. அவர் சாது சிங் என்ற ஒருவருடன் நட்பு கொண்டார். அவருடனான நட்பை தக்கவைத்துக் கொள்ளும் பொருட்டு பல தனிப்பட்ட விரோதங்களையும் சில அவதூறுகளையும் முக்தார் எதிர்கொண்டார்," என்று தெரிவித்தார்.
"அவர் (முக்தார்) தனது முழு குடும்பத்துடன் அவமானத்தைச் சந்திக்க வேண்டியிருந்தது. ஆனால் முக்தார் மீது சுமத்தப்பட்ட இந்த வழக்குகள் அனைத்தும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை. அவர் 15 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் இருக்கிறார். அவர் உண்மையிலேயே ஏதாவது தவறு செய்திருந்தால், காவல்துறை உங்களுடையது, அரசு உங்களுடையது, சிபிஐ உங்களுடையது, ஏன் இதுவரை எந்தக் குற்றமும் நிரூபிக்கப்படவில்லை?" என்று எம்பி அப்சல் அன்சாரி வினவினார்.
முக்தாரின் அரசியல் செல்வாக்கு பற்றிப் பேசிய அவர், "முக்தார் மௌவில் இருந்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று வருகிறார். அரசியல் ரீதியாக முக்தாருக்கு எங்களைவிடப் பெரிய அந்தஸ்து உள்ளது. அவரது ஆளுமை பெரியது. இன்று காஜிபூருக்கு வெளியே எங்கு சென்றாலும் மக்கள் எங்களை அடையாளம் கண்டு கொள்கிறார்கள்,” என்றார்.
”காஜிபூரில் உள்ள 8 சதவீத முஸ்லிம்களால் மட்டுமே எங்களை வெற்றி பெறச் செய்ய முடியாது. இங்குள்ள இந்துக்கள் எங்களை வெற்றி பெறச் செய்கிறார்கள். எல்லா சுக துக்கங்களிலும் அவர்களுடன் நாங்கள் நின்றோம். இவர்கள் அனைவரும் எங்கள் சொந்த மக்கள். அதனால்தான் அவர்களின் வாக்குகள் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது," என்று அவர் குறிப்பிட்டார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












