திருப்பூரில் பட்டியல் பிரிவு இளைஞர் மீது சாதிவெறி தாக்குதலா? நடந்தது என்ன?

திருப்பூரில் சாதிய தாக்குதலா?
    • எழுதியவர், கலைவாணி பன்னீர்செல்வம்.
    • பதவி, பிபிசி தமிழுக்காக

திருப்பூர் அமராவதிபாளையத்தில் பட்டியல் பிரிவைச் சேர்ந்த இளைஞன் ஒருவரை, சாதியின் பெயரைக் கூறி தகாத வார்த்தையால் திட்டி அடித்து, உதைத்து கொடுமைப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் எதிர் தரப்பினரோ, சாதி ரீதியான தாக்குதல் அல்ல என மறுக்கின்றனர். என்ன நடந்தது?

அமராவதி பாளையம் பெரியார் நகரை சேர்ந்த சண்முகம் ? மல்லிகா தம்பதியின் 19 மகன் வயது மகன் ஷியாம் குமார். இவர் படிப்பை இடை நிறுத்தி விட்டு ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். பட்டியல் பிரிவைச் சேர்ந்த அந்த இளைஞன் கடந்த 22 ஆம் தேதி அவர் பயின்ற பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவை காணச் சென்றார்.

அங்கு சில நண்பர்களுடன் நின்று பேசிக் கொண்டிருக்கும் போது, வேறு சாதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர், ஷாம் குமாரை தாக்கியதாகவும் பின் அவரது அக்கா மகன் கார்த்தியும் சேர்ந்து கொண்டு கொடூரமாக தாக்கியதாகவும் நல்லூர் காவல் நிலையத்தில் SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் புகார் அளித்துள்ளனர்.

தலை மீது கல்லைப் போட்டு கொல்ல முயற்சி?

திருப்பூர் தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் ஷாம் குமாரை பிபிசி தமிழ் அணுகிய போது,

"நான் என் நண்பர்களுடன் நின்று பேசிக் கொண்டு இருந்தேன். அப்போது வேறு சாதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் அங்கு வந்தார். 'எதுக்குடா புள்ளைங்க கிட்ட எல்லாம் கையப் பிடிச்சு இழுக்கிற? சின்ன பசங்கலல்லாம் போட்டு அடிக்கிறியாமா?' என கேட்டு தாக்க தொடங்கினார்.

சற்று நேரத்தில் அவருடைய அக்கா மகன் கார்த்திக் அங்கு வந்து இருவரும் சேர்ந்து ஆண்டு விழா நடைபெறும் போது இங்கு எதற்காக நின்று கொண்டிருக்கிறாய் எனக் கேட்டு கையால் முகத்திலும் முதுகிலும் அடித்து கீழே தள்ளி செருப்புக் காலால் போட்டு மிதித்தனர். ஒரு கட்டத்தில் நான் சுயநினைவு இழக்கும் நிலைக்கு சென்று விட்டேன். அப்போது அவர்கள் என் தலை மீது கல்லை போட்டு கொலை செய்ய முயற்சித்ததாக சம்பவத்தை நேரில் பார்த்த நண்பர்கள் கூறினர். எனது நண்பர்கள்தான் அவர்கள் என்னைக் கொல்லாமல் தடுத்ததாகவும் கேள்விப்பட்டேன்.” என்றார்.

மேலும் தொடர்ந்த அவர், "இதை அடுத்து அவர்களை அங்கிருந்து விலகி விட்டு எங்கள் பெரியார் நகர் பகுதியில் உள்ள மதுர வீரன் கோவிலில் என்னை படுக்க வைத்து விட்டனர். அடுத்த அரை மணி நேரத்தில் என்னை திருப்பூர் தலைமை அரசு மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்த்து விட்டனர்.” எனக் கூறினார்.

திருப்பூரில் சாதிய தாக்குதலா?

’தம்பி என அழைத்தாலும், எங்கள் வளர்ச்சி பொறுக்காது’

அவர் பசிக்கும் பகுதியில் உயர் சாதியினருக்கு தனி பகுதி தாழ்ந்த சாதியினருக்கு தனி பகுதிகள் வசிப்பிடமாக உள்ளன. அப்படி இருக்க அவர்கள் இதற்கு முன்னர் இதுபோன்று சாதிய பாகுபாட்டை எதிர்கொண்டனரா? என்று பிபிசி தமிழ் கேட்டபோது தனக்கு தெரிந்த வகையில் அவ்வளவாக இல்லை என்றே ஷியாம் குமார் பதிலளித்தார்.

"அவர்கள் வீட்டு வேலை, தோட்ட விவசாய வேலைகளுக்கு எங்களை கூப்பிடுவார்கள். வீட்டில் பெயிண்ட் அடிக்க வேண்டும் என்றால் அப்போதும் அழைப்பார்கள். நாங்கள் நண்பர்களுடன் சென்று வேலை செய்து கொடுத்து விட்டு கூலி வாங்கி வருவோம். அப்போது ஒரு சிலர் எங்களை ‘தம்பி’ என்று மரியாதையோடு அழைப்பார்கள். ஒரு சிலர், உரிமையோடு ‘வாடா, போடா’ என்றும் கூப்பிடுவார்களே தவிர, தீண்டாமையாக எங்களை நடத்தியதில்லை.

ஆனால் அதுவே, எங்கள் சமூகத்தில் எங்களுடைய பகுதியில் யாராவது பெரிய வீடு கட்டி விட்டாலோ, நல்ல உடை அணிந்து நல்ல பைக்கில் சென்றாலோ ‘உங்களுக்கெல்லாம் எதற்கு இப்படி ஒரு ஆடம்பர வாழ்க்கை?’ என்பார்கள். சாதியின் பெயரைக் கூறி உங்களுக்கு எதற்கு ரூ.30,000-க்கு ஃபோன்?’ என்றும் கேள்வி கேட்பார்கள்.” என தன் வேதனையை பகிர்ந்து கொண்டார்.

“தாய் மாமன் கண் கலங்கியதும் தாங்கவில்லை”

ஷாம் குமாரை தாக்கியதற்கான காரணம் குறித்து குற்றச்சாட்டப்பட்ட கார்த்தியிடம் பிபிசி தமிழ் பேசியது. "கடந்த 22 ஆம் தேதி மாலை 7.56 மணிக்கு என் மாமாவை அடித்து விட்டதாக எனக்கு அலைபேசியில் தகவல் வந்தது. அவர் எனது அம்மாவின் தம்பி. திருமணம் ஆகாதவர் என்பதால் எங்கள் மீது அதிக பாசத்தோடு இருப்பார். நான் சென்று பார்க்கும் போது அவரது சட்டை எல்லாம் கிழிந்து கிடந்தது. என்னவானது என விவரிக்க முடியாத படி தொண்டையைக் கம்மும் குரலோடு, கண் கலங்கி நின்று கொண்டிருந்தார். என் தாய் மாமாவை அப்படிப் பார்த்ததும், எனக்கு மிகவும் கவலையாக இருந்தது. ‘யார் மாமா உங்களை அடித்தார்?’ எனக் கேட்டபோது ஷியாம் குமாரை கூறினார்.

அவரிடம் போய் எதற்காக அடித்தாய்? எனக் கேட்டபோது அவர் மது அல்லது கஞ்சா போதையில் இருந்தார். ‘எவனா இருந்தாலும் அடிப்பேன்டா’ என என்னிடம் ஒருமையில் பேசி தாக்க வந்ததால் தற்காப்புக்காக நான் அவரை தாக்க நேர்ந்தது." என்றார்.

”சாதி பார்க்காத இளைஞன் நான்”

தொடர்ந்து பேசிய கார்த்தி, ”என் மீது குற்றம்சாட்டுவது போன்று நான் அவர்களுடைய ஜாதியின் பெயரைக் கூறித் திட்டவில்லை. தற்காப்புக்காக அடித்தேன் என ஒப்புக்கொள்ளும் நான், ஜாதியின் பெயரை கூறி திட்டி இருந்தால் ‘ஆமாம்’ என அதையும் ஒப்புக்கொண்டு இருப்பேன். எனக்கும் 25 வயது தான் ஆகிறது. சாதி பாகுபாடு பார்ப்பதெல்லாம் சென்ற தலைமுறையோடு முடிந்துவிட்டது.

நான் அப்படி பார்ப்பவன் இல்லை. அடி அதிகமாக படாத போதும், வேண்டுமென்றே மருத்துவமனையில் படுத்துக்கொண்டு, மருத்துவர்கள் ஏற்கெனவே டிஸ்சார்ஜ் செய்யலாம் என்று கூறியும் வீட்டுக்குச் சொல்லாது, ஜாதிப் பெயரை சொல்லித் திட்டியதாக சித்தரித்து, எனக்கும் எனது தாய் மாமாவுக்கு எதிராகவும் வழக்கு பதிந்துள்ளனர்.

அவர்கள் சாதியினர் எங்களிடம் விவசாய வேலைக்கு வந்தால் கூட தாய் பிள்ளையாகத்தான் நாங்கள் பழகி வருகிறோம். இந்த தலைமுறை இளைஞனான நான் சாதியின் பெயரை கூறி திட்டினேன், என சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதை முற்றிலும் மறுக்கிறேன்.” என்றார்.

திருப்பூரில் சாதிய தாக்குதலா?

"வாக்குமூலம் அளித்ததை வீடியோ எடுத்து மிரட்டல்"

வீடியோ எடுத்து மிரட்டுவதாகவும் கார்த்தி குற்றம்சாட்டினார். “காவல் நிலையத்தில் நான் நடந்தவற்றை கேட்டபோது, நான் நடந்த அனைத்தையும் உண்மைக்கு நிகராக விவரித்தேன். அப்போது எதிர் தரப்பு வக்கீல் ஒருவர் அதனை வீடியோவாக எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டுகின்றனர்" என்றும் கார்த்தி கூறினார்.

“தம்பிய அடிக்குறாங்க, ஓடி வாங்க!“

தனது மகனான ஷியாம் குமார் மீது நடந்த தாக்குதல் குறித்து மிகவும் வருத்தத்தோடு பேசினார் அவரது தாய் மல்லிகா. "அன்றைய தினம் என் மகன் வீட்டுக்கு வந்துவிட்டு ஆண்டு விழாவை பார்க்க செல்வதாக கூறி சென்றான். நான் வழக்கம்போல எனது பணிகளை செய்து கொண்டிருந்தேன். சாப்பிட வருமாறு மகனை போனில் அழைத்த போது அவன் ஹெல்மெட்டை கழட்டி விட்டு பேசத் தொடங்கினான். நான் அழைப்பில் இருக்கும் போதே அடிதடி சத்தம் கேட்டது. நான் யாரோ, எங்கோ சண்டை போட்டுக் கொள்கிறார்கள். என் மகன் அவர்களை தடுத்து நிறுத்திக் கொண்டிருப்பதாகத் தான் நினைத்து அழைப்பை துண்டித்து விட்டேன்.

அதன்பிறகு எனது உறவினர் பெண் ஒருவர் ஓடி வந்து ‘சித்தி தம்பியை போட்டு அடிக்கிறாங்க, சீக்கிரம் ஓடி வாங்க” எனக் கதறியபடி எனக்கு கூறினார்.

நான் சென்று பார்த்தபோது மூச்சுப் பேச்சு இல்லாத நிலையில் வாயில் ரத்தம் வழிய எனது மகன் கோவிலில் கிடந்தான். மயங்கிய அவன் முகத்தில் தண்ணீரை தெளித்து அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று விட்டேன்.” என படபடப்போடு பேசினார்.

’நானே என் மகனை போலீசில் ஒப்படைப்பேன்’

பிபிசி தமிழிடம் தொடர்ந்து பேசிய தாய் மல்லிகா ” என் மகன் யாரோ ஒரு பெண்ணின் கையைப் பிடித்து இழுத்தார் எனக் கூறுகிறார்கள், பசங்களை எல்லாம் அடித்ததாகக் கூறுகின்றனர். அப்படியிருந்தால், அவர்களையே வந்து சொல்லச் சொல்லுங்கள்.

அதுமட்டும் உண்மையாக இருந்தால், நானே என் மகனை காவல் நிலையத்தில் ஒப்படைத்துவிடுவேன் என எங்களிடம் அவர்களின் சார்பில் அடுத்தடுத்து சமாதானம் பேச வரும் நபர்களிடம் கூறினேன். ஆனால் அவர்கள் அப்படி யாரையும் சுட்டிக்காட்டவில்லை. என் மகன் அப்போது சிறிதளவு மது அருந்தியிருந்தான்தான். ஆனால், அதற்காக அவர்கள் சொல்லும் குற்றத்தை ஏற்க முடியாது” என்றார்.

திருப்பூரில் சாதிய தாக்குதலா?

"தோழி எனக் கூறி சமாதானம் பேசினார்"

இந்த தாக்குதலை நடத்திய கார்த்தியின் தாயும் சம்பவ இடத்தில் நின்று நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாகக் கூறிய மல்லிகா, தோழியாக நினைத்து வழக்கை வாபஸ் பெறுமாறு கோரினாராம். “கார்த்தியின் தாயார் என்னிடம் வந்து, நீ நாளை எங்களிடம் வேலைக்கு வர மாட்டாயா? ஊருக்குள் வர மாட்டாயா? இப்படியே இருந்து விடுவாயா? நீயும் நானும் தோழிகள் தானே? வழக்கை வாபஸ் வாங்கலாம் அல்லவா? என்று கூறி சமாதானம் செய்ய முயன்றார்.

தோழியாக இருந்தால் என் மகனை அடித்துக் கொன்றால் பரவாயில்லை, உங்கள் மகன் தானே கொன்றுவிட்டு போகட்டும் என்று வேடிக்கை பார்ப்பதா? என்று கேட்டதும் அவர் கிளம்பி விட்டார். அது மட்டும் இன்றி என் மகன் அனுமதிக்கப்பட்டிருக்கும் அரசு மருத்துவமனை வார்டுக்கு வெளியே அவர்கள் சாதியைச் சேர்ந்த 10 பேர் வந்து நின்று கொண்டு ஒருவரை அனுப்பி சமாதானமும் பேசி வழக்கை வாபஸ் வாங்குமாறு கோரினர்.

அல்லது இருவரில் ஒருவர் மீது மட்டும் வழக்கு போடுமாறும், ஒன்றை வாபஸ் பெறுமாறும் கோரினர். அப்போது என் மகன் செருப்புக் காலால் மிதிபட்ட காயங்களைக் காட்டி, நான் வழக்கை வாபஸ் பெற மாட்டேன், என திட்டவட்டமாக மறுத்து விட்டேன்" என்றார்.

“அவர்கள் வந்தாலே எழுந்து நிக்கனும்”

“ஊரில் உள்ள மாகாளியம்மன் கோவில் முகப்புத் திண்ணையில் அமர்ந்தாலே, சாதிப் பெயரைக் கூறித் திட்டி எழுந்துபோகுமாறு அவர்கள் சமூகத்தினர் கூறுவார்கள். அவர்கள் வந்தாலே நாங்கள் எழுந்து நிற்க வேண்டும். இல்லாவிட்டால் திட்டுவார்கள். எங்க அப்பன் காலத்திலிருந்து இந்த அடிமைத்தனத்தைத் தான் பார்த்து வளர்ந்தோம். தற்போது என் மகனும், ஒடுக்குறைக்கு ஆளாகிறான் என எண்ணும்போது, நாங்கள் என்ன தவறு செய்தோம்? சாதியைத் தேர்வு செய்த பின்பா நாங்கள் வந்து பிறக்கிறோம்?” என வருத்தத்தோடு கூறினார்.

இந்த தாக்குதல் குறித்து முதலில் வழக்கு பதிவு செய்யவில்லை என்றும் ஆதி தமிழர் ஜனநாயக பேரவை மாநிலத் தலைவர் கே.பௌத்தனிடம் முறையிட்ட பின்பு, போலீசார் எஃப் ஐ ஆர் பதிவு செய்ததாகவும் தாக்குதலுக்கு ஆளான ஷாம் குமாரின் தாய் மல்லிகா கூறியிருந்ததால் பௌத்தனிடமும் பேசியது பிபிசி தமிழ்.

திருப்பூரில் சாதிய தாக்குதலா?

”5 நாட்களாகியும் கைது செய்யவில்லை”

பௌத்தன் கூறியதாவது, ”கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் அதே அமராவதிபாளையத்தில் உள்ள மாகாளியம்மன் கோவில் திண்ணையில் அமர்ந்ததாகக் கூறி குமரேசன் என்பவரை அவர்கள் சமூகத்தினர் அடித்து துன்புறுத்தியபோது நான்தான் முன்நின்று அந்த வழக்கை நடத்த உதவினேன். தற்போது, படித்து சுயமரியாதையோடு இளைஞர்கள் வாழுகின்றனர். அவர்களிடம் போய், ‘நீ எதுக்குடா இங்க நிக்குற?’ எனக் கேட்டபோது, ‘ஏன்?, நான் இங்க நின்னா உங்களுக்கு என்ன? என அந்த இளைஞன் எதிர்த்துப் பேசிவிட்டார். இதனால் ஆத்திரமடைந்துதான் அவர்கள் தாக்கினர்.

நான் இந்த வழக்கில் தலையிடும் முன்பு வரை ஒரு நாளாகியும் காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை போடவில்லை. கிட்டத்தட்ட 5 நாட்களாகியும், கார்த்தி அவர் வீட்டிலேயே இருந்தபோதும்கூட அவர்களை போலீசார் கைது செய்யவில்லை. சட்டம் எங்களுக்கு ஆதரவாக இருந்தும், காவல்துறை தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக விரைந்து நடவடிக்கை எடுப்பதில்லை’ என்றும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

”நடவடிக்கை எடுக்கப்படும்- அசிஸ்டன்ட் கமிஷனர் நந்தினி”

நல்லூர் சரக உதவி கமிஷனர் நந்தினியிடம் பிபிசி தமிழ் பேசிய போது, “குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணை நடைபெற்று வருகிறது. சட்டத்திற்கு உட்பட்டு தேவையான நடவடிக்கையை எடுப்போம்” என்று கூறினார்.

திருப்பூரில் சாதிய தாக்குதலா?

சட்டம் என்ன சொல்கிறது?‘

தாழ்த்தப்பட்டவர்களோ, பழங்குடியினரோ சாதியத் தாக்குதலுக்கு ஆளானால், தாக்கியவர்கள் மீது, எஸ்சி, எஸ்டி வன்கொடுமைத் தடுப்புப் பிரிவின் கீழ் வழக்கு பாயும் என விளக்கினார் திருப்பூரைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் நாகராஜன். அதன் படி,

  • பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் 1989 ஆனது, பட்டியல் பிரிவினரை பாதுகாக்க நடைமுறைப்படுத்தப்பட்டது.
  • பல காலமாக அடிமையாக நடத்தப்பட்டவர்களின் உரிமையைப் பாதுகாக்கவும், அவர்களுக்கு அநீதி ஏற்பட்டாலும் இந்த சட்டம் அவர்களுக்கு அரணாக செயல்படும்.
  • எஃப்.ஐ.ஆர். பதிந்தால், கைதை போலீசார் தாமதப்படுத்தக் கூடாது. உடனடியாக ரிமேண்ட் செய்ய வேண்டும்.
  • இந்த வழக்கில் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள், முன்ஜாமின் பெறமுடியாது.
  • தண்டனைகளும் 10 ஆண்டுகளுக்கு மேல் என கடுமையானதாகவே வழங்கப்படும்.
  • வழக்கை வாதாட அரசே வழக்கறிஞரை நியமிக்கும்.
  • சாதியைக் கூறி திட்டுதல், அடித்தல் போன்ற தாக்குதல் பொது இடத்தில் நிகழ்ந்திருத்தல் வேண்டும்.
  • தாக்கியவர் ஆதிக்க சாதியினராக இருத்தல் வேண்டும்.
  • ஒருவேளை தன்னைத் தாக்கியவர் பட்டியல் சாதியினராக இருந்தாலும், வேறு சாதியினராக இருந்தாலும் கூட பதிலுக்குத் தாக்குவதை விட காவல்துறையில் முறையிடுவதே சிறந்தது.
  • 100 என்ற இலவச அலைபேசி எண்ணிலோ, ‘காவல் உதவி’ என்ற மொபைல் ஆப் மூலமாகவோ, அருகில் உள்ள காவல்நிலையத்திற்கு நேரடியாகச் சென்றோ புகார் தர வேண்டும்.
  • யாராக இருந்தாலும் பதில் தாக்குதல் நடத்துவதை விட சட்டப்படி புகார் தருவதே பாதுகாப்பானது.
  • ஒருவேளை இந்தச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டிருப்பது தீர்ப்பில் உறுதியானால், பாதிக்கப்பட்டவர் பொய் வழக்கு போட்டவரிடம் இழப்பீடு பெற்றுத் தருமாறு வழக்குப் பதியலாம்.
  • இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளாக சேகரித்த தரவுகளின் படி, பட்டியல் சாதியினருக்கு எதிரான தாக்குதலில் புகார் அளிக்கப்பட்டு, குற்றப்பத்திரிக்கை தாக்கலான பின்பும், குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்ட சதவீதம் குறைவாகவே இருப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் விளக்கமளித்துள்ளது. இதில் முகாந்திரமில்லாத வழக்கு என்றும் பல வழக்குகள் தீர்ப்பாகியுள்ளன.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)