ஆடு ஜீவிதம்: படத்திற்கு வித்திட்ட நாவலில் நஜீப்பின் இன்னல்கள் எப்படி விவரிக்கப்பட்டன?

பட மூலாதாரம், PRITHVIRAJ SUKUMARAN/X
“இயக்குநர் பிளஸ்ஸி அப்போது அதிகம் சம்பளம் வாங்கும் இயக்குநராக இருந்தார். மம்முட்டி, மோகன்லால் போன்ற பெரிய நடிகர்களை இயக்கியிருந்தார். அப்படிப்பட்டவர் அடுத்த 16 ஆண்டுகளில் ஒரேயொரு படம்தான் இயக்கப் போகிறேன் என்று முடிவெடுத்தது எண்ணிப் பார்க்க இயலாது ஒன்று,” என்று நடிகர் பிரித்விராஜ் சுகுமாறன் ஆடுஜீவிதம் படத்தின் அறிமுக விழாவில் பேசினார்.
படித்தால் பல நாள்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய கதைகளுள் ஒன்று இது என்று இலக்கிய வாசகர்கள் பலரும் கூறுவதை உறுதி செய்யக்கூடிய பேச்சாக இதைக் கொள்ளலாம்.
ஆடு ஜீவிதம் திரைப்படம், அதே பெயரைக் கொண்ட பென்யமின் என்ற எழுத்தாளரின் மலையாள மொழி நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம்.
கேரளாவில் வெளியான சமகால இலக்கியங்களில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கும் இந்த நாவல், அதிகம் விற்பனையான புத்தகங்களின் வரிசையிலும் முன்னணி இடத்தில் இருக்கிறது. மலையாளத்தில் 255 பக்கங்களுடன் வெளியான இந்த நூலை தமிழில் ஆரம்பத்தில் உயிர்மை பதிப்பகம் வெளியிட்ட நிலையில், தற்போது அதை எதிர் பதிப்பகம் விலாசினியின் மொழிபெயர்ப்பில் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், இந்தத் திரைப்படம் வெளியாவதற்கு ஒரு மாதம் முன்பிருந்து இந்நூலின் விற்பனை மூன்று மடங்கு அதிகமாகியிருப்பதாக எதிர் வெளியீடு பதிப்பகத்தின் பதிப்பாளர் ச.அனுஷ் பிபிசி தமிழிடம் கூறினார்.

பட மூலாதாரம், PRITHVIRAJ SUKUMARAN/X
“அது லட்சக்கணக்கான குடும்பங்களின் கொடுங்கனவைச் சித்தரித்திருக்கிறது,” என்று ஆடு ஜீவிதம் நாவல் குறித்துக் கூறுகிறார் உயிர்மை பதிப்பகத்தின் வெளியீட்டாளரும் கவிஞருமான மனுஷ்ய புத்திரன்.
கேரளத்தின் ஒவ்வொரு வீட்டிலும் இருப்பதைப் போன்ற வளைகுடாக் கனவு கொண்ட நஜீப் முகமது என்ற சாதாரண இளைஞன், சௌதி அரேபியாவுக்கு சென்று எத்தகைய கொடூரமான அனுபவங்களைப் பெறுகிறான் என்பதுதான் நாவலின் கரு.
“துபாய்க்கு சென்றால் ஒட்டகம் மேய்க்க விட்டுவிடுவார்கள்” என்ற பரவலான எச்சரிக்கையையும் மீறி “நமக்கு அப்படி ஏதும் நேராது” என்ற நம்பிக்கையுடன் வளைகுடா நாடுகளுக்குப் படையெடுக்கும் லட்சக்கணக்கான கேரள, தமிழ்நாட்டு மக்களின் வாழ்வுடன் பொருத்திப் பார்க்கத் தக்கது இந்தக் கதை.
ஆதரவு ஏதும் கிடைக்காத, தனது கதையைக் கேட்பதற்குக்கூட ஆளில்லாத இடத்தில் ஒரு மனிதன் எத்தகைய மனநிலையில் இருப்பான் என்பதை நாவலுக்கே உரிய அம்சங்களுடன் கூறுவதாக பென்யமின் இந்த நூல் வெளியான காலத்தில் இருந்து பாராட்டு பெற்று வந்திருக்கிறார்.
“சிறைச்சாலைக்கு வந்த பிறகுதான் விடுதலையும் மகிழ்ச்சியும் கிடைத்தது” என்று நஜீப் கூறும் ஒரேயொரு முரண் வாக்கியமே, அதற்கு முன் அவர் அனுபவித்த துயரங்களின் பரிமாணத்தையும் நாவல் ஆசிரியரின் கதை சொல்லும் திறனையும் புரிந்து கொள்ளப் போதுமானது.

பட மூலாதாரம், PRITHVIRAJ SUKUMARAN/X
நிஜமான நஜீப்பை சந்தித்து அவரது கதையைக் கேட்டபோது, “நான் உலகுக்குச் சொல்வதற்குக் காத்திருக்கும் கதை இதுதான். இதைத்தான் சொல்ல வேண்டும்” என்று தாம் முடிவெடுத்து விட்டதாகக் கூறுகிறார் பென்யமின்.
ஒருமுறை துபாய்க்கு சென்று வந்துவிட்டால் வீடு கட்டி, நகைகள் வாங்கிச் செழிப்பாக வாழ முடியும் என்ற பொதுவான நம்பிக்கை எவ்வளவு மூடத்தனமானது என்பதை உணர்வுக் குவியலாகப் படைத்து, 2008ஆம் ஆண்டில் வெளியிட்டார்.
நாவல் வெளிவந்த காலத்தில் இருந்து இன்று வரைக்கும் அதிர்வலைகளை உண்டாக்கியபடியே, வாசகர்களால் கொண்டாடப்படுவதற்கான காரணங்களில் முக்கியமானது, மக்கள் தங்களது உணர்வுகளின் அடையாளமாகக் காண்பதுதான் என்கிறார் உயிர்மை பதிப்பக வெளியீட்டாளரும் கவிஞருமான மனுஷ்ய புத்திரன்.
ஆடு ஜீவிதம் நாவலை தொடர்கதை போல் உயிர்மை இதழ் வெளியிட்ட காலத்திலேயே தமிழ் இலக்கிய வாசகர்கள் இடையே இது அறியப்பட்ட படைப்பாகிவிட்டது என்று கூறுகிறார் மனுஷ்ய புத்திரன்.
சிறை, பாலைவனம், தப்பித்தல், அடைக்கலம் என நான்கு பகுதிகளாக விரியும் இந்தக் கதை பல பதிப்புகளாக மலையாளம் பேசும் பெரும்பகுதி மக்களால் படிக்கப்பட்ட நாவல்களுள் ஒன்று. பாலைவனக் கொடுமை, விதிகள் அற்ற அல்லது விதிகளை மதிக்காத சிறைச்சாலை நடைமுறைகள், நிலத்தின் பண்பு, ஆங்காங்கே பூக்கும் அன்பு, உணவுப் பண்பாடு என அனைத்தையும் தனது கதைக்குள் கொண்டு வந்திருக்கிறார்.

பட மூலாதாரம், PRITHVIRAJ SUKUMARAN/X
வளைகுடா நாடுகளில் உள்ள துயரங்களை வலுவாகச் சித்தரித்த நாவல் இதுதான் என்கிறார் மனுஷ்ய புத்திரன். அவரது கருத்தைப் போலவே பல்வேறு படைப்பாளிகளும் பென்யமின் எடுத்துக்கொண்ட கதைக் களத்தையும், கதை சொன்ன விதத்தையும் இப்போதும் பாராட்டுகிறார்கள்.
நாவலின் முக்கிய கதாபாத்திரமான நஜீப், சௌதி அரேபியாவின் பாலைவனப் பகுதியில் ஆடுகள், ஒட்டகங்கள், இன்ன பிற அடையாளம் கூற இயலாத உயிரினங்களுடன் கழித்த காலத்தைப் போல தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் பலருக்கும் நேர்ந்திருக்கிறது.
இன்றும் இந்தியாவில் இருந்து செல்லும் பலர் கொடூரச் சூழல்களில் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று அவர்களை மீட்டு தாய்நாட்டுக்கு அனுப்பும் பணிகளில் ஈடுபடுவோர் கூறுகிறார்கள்.
“ஆனால் இத்தகைய கதையை எழுவதற்குப் பதிலாக, வரலாற்றுப் புதினங்களை எழுதியே எழுத்தாளர்கள் திருப்தியடைந்து கொண்டிருக்கிறார்கள். அவற்றை மட்டுமே வாசகர்களும் படித்து மகிழ்ந்து கொண்டிருக்கிறார்கள்,” என்று கூறும் மனுஷ்ய புத்திரன், “சமகால சிக்கல்களை எழுதியதால்தான் பென்யமின் நாவலை உளப்பூர்வமாக மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்” என்கிறார்.
உயர்ந்த ஆடு ஜீவிதம் நூலின் விற்பனை

பட மூலாதாரம், Ethir Publications
‘ஆடு ஜீவிதம்’ நாவல் விற்பனை தொடர்பாக ‘எதிர்’ வெளியீடு பதிப்பகத்தின் பதிப்பாளர் ச. அனுஷ் பிபிசி தமிழிடம் பேசுகையில், “2020ஆம் ஆண்டில் இந்நாவலை நாங்கள் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டோம். அப்போதிருந்து இன்று வரை சிறப்பாக விற்பனையாகக்கூடிய புத்தகங்களில் ‘ஆடுஜீவிதம்’ நாவலும் இருக்கிறது. இந்தத் திரைப்படம் வெளியாவதற்கு ஒருமாதம் முன்பிருந்து அதன் விற்பனை மூன்று மடங்கு அதிகமாகியிருக்கிறது,” எனக் கூறினார்.
கடந்த இரண்டு மாதங்களில் சுமார் 3,000 புத்தகங்கள் விற்பனையாகியுள்ளது என அனுஷ் தெரிவித்தார். கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற சென்னை புத்தகக் கண்காட்சியிலேயே, படம் வருவதையொட்டி பலரும் புத்தகத்தை வாங்கிச் சென்றதாகக் கூறினார். இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்தப் புத்தகத்தை வாங்கிச் செல்வதாக அவர் கூறுகிறார். இதுவரை இந்த புத்தகம் 6-7 முறை மறுபதிப்பு கண்டுள்ளதாக அனுஷ் தெரிவித்தார்.
”பொதுவாகவே இலக்கியப் பிரதிகள் படமாக மாறும்போது அந்தத் திரைப்படம் பெரிதாகப் பேசப்பட்டு, புத்தகங்களின் விற்பனை குறையும். ஆனால், ஆடுஜீவிதத்தைப் பொறுத்தவரை இரண்டும் சமமாகப் பேசப்பட்டு வருகிறது. எப்போதுமே ஒருவர் ‘உயிர்பிழைத்தல்’ தொடர்பான கதைகளுக்கு உலகளவிலேயே பெரிய வாசகர் வட்டம் உள்ளது.
ஆடுஜீவிதத்தில் வரும் நஜீப்பின் வாழ்க்கையுடன் வாசகர்கள் தங்கள் வாழ்க்கையை இணைத்துக்கொள்கின்றனர். இவ்வளவு துன்பங்களை ஒருவர் அனுபவிக்கும்போது நாம் எவ்வித கஷ்டங்களையும் கடக்கலாம் என அவர்கள் கருதுகின்றனர். வாசகர்களின் மனதில் 10 சிறந்த புத்தகங்கள் என்று பட்டியலிட்டால், நிச்சயம் இந்தப் புத்தகம் இருக்கும்,” என்றார்.

பட மூலாதாரம், PRITHVIRAJ SUKUMARAN/X
இன்னும் பேசப்படாத விஷயம் என்ன?
ஆடுஜீவிதம் நாவலின் விற்பனையைப் பிரபலப்படுத்துவதற்காக மலையாளத்திலும், தமிழிலும் அதன் வெளியீட்டாளர்கள் எந்தப் பெரிய முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை. சமூக ஊடகங்கள் வாயிலாகவும் வாய்மொழியாகவுமே அது இன்று வரைக்கும் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது என்கிறார் மனுஷ்ய புத்திரன்.
இப்போது ஆடுஜீவிதம் என்ற பெயரிலேயே திரைப்படமும் வெளியாகி இருப்பதால், புத்தகத்தின் விற்பனை அதிகரிப்பதாகவும் அவர் கூறுகிறார்.
“தமிழ்நாட்டில் சுனாமி, பெருவெள்ளம், வெளிமாநிலத்தவர் இடப்பெயர்வு என ஏராளமான சமகாலச் சிக்கல்கள் இருந்தாலும் அவற்றை நாவலாகக் கொண்டுவர யாரும் தயாராக இல்லை,” என்று ஆதங்கப்படுகிறார் கவிஞர் மனுஷ்ய புத்திரன்.
வளைகுடா நாடுகளுக்குச் சென்று கொடுமையை அனுபவிப்போரின் வாழ்க்கையைக் கூறியது போல அவரின் வருகைக்காக சொந்த ஊரில் பல ஆண்டுகளாகக் காத்திருக்கும் பெண்களின் நிலையையும் இன்னும் கூற வேண்டியிருக்கிறது என்பதை மனுஷ்ய புத்திரன் குறிப்பிடுகிறார். ஆடுஜீவிதம் திரைப்பட அறிமுக விழாவில் இயக்குநர் பிளெஸ்சி அதை வலியுறுத்தியிருந்தார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












