கர்நாடக இசையைத் தொடர்ந்து மோகினி ஆட்டத்திலும் சாதி சர்ச்சை - என்ன நடந்தது? முழு பின்னணி

மோகினி ஆட்டத்தில் சாதிய சர்ச்சை
படக்குறிப்பு, ஆர்.எல்.வி ராமகிருஷ்ணன்(இடது), சத்யபாமா (வலது)
    • எழுதியவர், சு.மகேஷ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

தமிழ்நாட்டில் கர்நாடக இசையுலகில் சர்ச்சை என்றால் கேரளாவில் மோகினி ஆட்டக் கலையுலகில் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.

தமிழ்நாட்டில் டி.எம்.கிருஷ்ணா என்றால், கேரளாவில் மறைந்த நடிகர் கலாபவன் மணியின் சகோதரர் ஆர்.எல்.வி.ராமகிரஷ்ணன் தான் இதன் மையப்புள்ளி.

மோகினியாட்டக் கலைஞரான ராமகிருஷ்ணன் குறித்து மூத்த மோகினியாட்டக் கலைஞரும் நடன ஆசிரியருமான சத்யபாமா என்ன சொன்னார்?

அதனால் சாதி மற்றும் நிறவெறி சர்ச்சை எழுந்தது ஏன்? அதற்கு கேரள கலைஞர்கள், திரையுலகினர், அரசியல் தலைவர்கள் மற்றும் சாமானிய மக்கள் எவ்வாறு எதிர்வினையாற்றினர்? சட்டம் என்ன செய்கிறது?

சர்ச்சைக்கு உள்ளான நேர்காணல்

கேரளாவை சேர்ந்த ஆர்.எல்.வி ராமகிருஷ்ணன், பிரபல மோகினியாட்டக் கலைஞர். இவர் மறைந்த திரைப்பட நடிகர் கலாபவன் மணியின் சகோதரர். இந்தக் கலைஞரின் அடையாளங்கள் குறித்து பிரபல மோகினியாட்ட கலைஞர் கூறிய கருத்துகள்தான் கேரளாவில் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.

திருவனந்தபுரத்தில் நாட்டியப் பள்ளி நடத்தி வரும் மூத்த மோகினியாட்டக் கலைஞரான சத்யபாமா சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு நேர்காணல் அளித்தார். அப்போது, கலாமண்டலம் அமைப்பில் இருந்து சத்யபாமா வெளியேற என்ன காரணம் என்று நெறியாளர் ஒரு கேள்வியை முன்வைத்தார்.

அதற்குப் பதிலளித்த சத்யபாமா, "கேரள மாநிலம் சாலக்குடி பகுதியைச் சேர்ந்த ஒரு நடன ஆசிரியர் உள்ளார். அவர் யார் என்பதையும், அவரின் பெயரையும் நான் கூறமாட்டேன். இருந்தாலும் இந்நிகழ்ச்சியைக் காணும் நேயர்களுக்கு அவர் யார் என்பது புரியும்," என்று சக மோகினியாட்டக் கலைஞர் குறித்து அவர் பேசத் தொடங்கினார்.

"அவரிடம் நடனம் பயிலும் மாணவர்களை நடனப் போட்டிகளுக்கு அழைத்து வருவதுண்டு. அப்படி ஒரு முறை நான் நடுவராக இருந்த ஒரு போட்டியில் அவரது மாணவர்களும் பங்கெடுத்தனர். அதில் நன்றாக நடனமாடி பரிசும் பெற்றனர்."

அந்த நிகழ்வுக்குப் பிறகு, அந்தக் கலைஞர் தன்னை அழைத்து நன்றி தெரிவித்தார் என்று சத்யபாமா அந்த நேர்காணலில் கூறினார். அதன் பிறகு, அபுதாபியில் தான் நடுவராகக் கலந்து கொண்ட மற்றொரு நிகழ்வில் அதே நடன ஆசிரியரின் மாணவர்கள் கலந்து கொண்டு நடனமாடினர். ஆனால் அம்முறை அவர்களுக்குப் பரிசு கிடைக்கவில்லை. அதற்காகத் தன்னைத் தொடர்புகொண்ட அவர், 'நடுவர் பணியை நான் முறையாகச் செய்யவில்லை" என்று விமர்சித்தார்.

நிறவெறி கருத்தைத் தெரிவித்த சத்யபாமா

கேரளா, மோகினியாட்டம்

பட மூலாதாரம், Facebook/RLV Ramakrishna

படக்குறிப்பு, மோகினியாட்ட கலைஞரான ஆர்.எல்.வி ராமகிருஷ்ணன் மோகினியாட்டம் தொடர்பாக முனைவர் பட்டம் பெற்றுள்ளார்

"மோகினியாட்டம் ஆடும் நடனக் கலைஞர் முதலில் மோகினியாக இருக்க வேண்டும்," எனக் கூறியவர் நிறம் சார்ந்த சர்ச்சைக்குரிய கருத்துகளையும் குறிப்பிட்டார்.

மேலும், "மோகினியாட்டம் ஆடும் கலைஞர்கள் தங்களின் கால்களைச் சற்று அகலமாக விரித்து வைத்து ஆட வேண்டியதிருக்கும். ஒரு ஆண் இவ்வாறு கால்களை விரித்து வைத்துக் கொண்டு மோகினியாட்டம் ஆடினால் அது பார்ப்பதற்கே அருவருப்பாக இருக்கும்," என்றும் அந்த நேர்காணலில் சத்யபாமா கூறியிருந்தார்.

"ஆண்கள் மோகினியாட்டம் ஆட வேண்டும் என்றால் அதற்கு அவர்களுக்கு அழகு இருக்க வேண்டும் என்பது எனது கருத்து. அவர் அருவருப்பான மோகினியாட்டத்தைத்தான் ஆடி வருகிறார். மேலும் அவரிடம் பயிலும் மாணவர்களுக்கும் இதைத்தான் கற்றுத் தருகிறார்", என்று சத்யபாமா அந்த நேர்காணலில் கடுமையான கருத்துகளைத் தெரிவித்திருந்தார்.

சத்யபாமாவின் இந்தக் கருத்துகளுக்கு கேரளாவைச் சேர்ந்த அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தங்களது எதிர்ப்புகளைப் பதிவு செய்ததோடு அவர் தனது கருத்துகளைத் திரும்பப் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

குறிப்பாக கேரளா உயர்கல்வித்துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்கள் இந்த நேர்காணலில் கூறியிருந்த கருத்துகள், "இன்றைய முற்போக்கு உலகில் பழைமைவாத சாதிய வழக்கங்களைக் கொண்டு வரும் முயற்சி," என்று விமர்சித்திருந்தனர்.

'கருத்துகளில் இருந்து பின்வாங்க மாட்டேன்'

கேரளா, மோகினியாட்டம்

பட மூலாதாரம், Facebook/RLV Ramakrishna

சத்யபாமாவின் நேர்காணல் சர்ச்சைக்கு உள்ளானதையடுத்து, அவரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்துக் கேள்வி எழுப்பினர்.

ஆனால் சத்யபாமா தனது கருத்துகளைப் பின்வாங்க மாட்டேன் என்றும், அது தனது தனிப்பட்ட கருத்து என்றும் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

"மோகினியாட்டம் என்றால் அதை மோகினி (பெண்கள்) தான் ஆட வேண்டும். மோகனன் (ஆண்கள்) ஆடக்கூடாது. நான் பல்வேறு நடனப் போட்டிகளுக்கு நடுவராகச் சென்று வருகிறேன். அவ்வாறு செல்லும்போது கலைஞர்களின் நடனத்தை மதிப்பீடு செய்து மதிப்பெண் வழங்குவதற்காக அவர்கள் வைத்துள்ள பல்வேறு அளவுகோல்களில் நடனம் ஆடுபவரின் அழகுக்கு என்றும் ஒரு தனி வரிசை வைத்துள்ளனர்.

கலைஞர்களின் அழகு முக்கியமில்லை என்றால், அந்த அளவுகோலை ஏன் வைத்துள்ளனர்? அதை அகற்றிவிட வேண்டியது தானே," என்று செய்தியாளர்களிடம் சத்யபாமா தெரிவித்தார்.

மேலும் அந்த யூடியூப் சேனல் நேர்காணலில், தான் எந்தக் கலைஞரின் பெயரையும் குறிப்பிட்டுப் பேசவில்லை என்றும், சாலக்குடி பகுதியில் அவர் (ராமகிருஷ்ணணின் பெயரை குறிப்பிடாமல்) ஒருவர்தான் மோகினியாட்டம் ஆடி வருகிறாரா என்றும் வினவினார்.

கருப்பாக உள்ள பெண்களுக்கு மோகினியாட்டம் நடனம் கற்றுத் தருவீர்களா என செய்தியாளர்கள் சத்தியபாமாவிடம் கேட்டபோது, "கற்றுக் கொடுப்பேன், ஆனால் கருப்பாக உள்ள அந்த மாணவிகளிடம் போட்டிகளுக்குச் செல்ல வேண்டாம் என்றும் கோவில் மற்றும் பிற விழாக்களில் மட்டும் நடனம் ஆடுங்கள் எனச் சொல்வேன்," என்று தெரிவித்தார்.

'பட்டியல் பிரிவைச் சேர்ந்த என்னைப் போன்ற கலைஞர்களுக்கு கஷ்டம் தருகிறது'

கேரளா, மோகினியாட்டம்

பட மூலாதாரம், Facebook/RLV Ramakrishna

படக்குறிப்பு, சகோதரர் கலாபவன் மணியுடன் ஆர்.எல்.வி ராமகிருஷ்ணன்

மோகினியாட்டக் கலைஞரான சத்யபாமா தனது நேர்காணலில் குறிப்பிட்ட அடையாளங்கள், ஆர்.எல்.வி ராமகிருஷ்ணனை தான் என கேரளாவைச் சேர்ந்த பலரும் தெரிவித்துள்ளனர்.

கேரளா கலாமண்டலம் பல்கலைக்கழகத்தில் மோகினியாட்டம் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டு முனைவர் பட்டமும் பெற்றுள்ள ஆர்.எல்.வி ராமகிருஷ்ணன் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக மோகினியாட்டம் கலையை மேடைகளில் நிகழ்த்தி வருகிறார். இவர் மறைந்த திரைப்பட நடிகர் கலாபவன் மணியின் சகோதரர்.

இந்நிலையில், சத்யபாமாவின் பேச்சு குறித்து கேரளாவைச் சேர்ந்த ஆண் மோகினி ஆட்டக் கலைஞரான ஆர்.எல்.வி ராமகிருஷ்ணன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.

"சத்யபாமா போன்ற சிலரின் இந்த கருத்துகள், பட்டியல் சமூகத்தில் இருந்து வரும் தன்னைப் போன்ற கலைஞர்களுக்கு கஷ்டத்தை அளிக்கிறது. கேரளா கலாமண்டலம் நடனப் பள்ளியில் தான் முனைவர் ஆய்வை மேற்கொள்ளும்போது அவரிடம் இருந்து இதேபோன்ற வசைகளுக்கு ஆளாகியுள்ளதாகவும்", ஆர்.எல்.வி ராமகிருஷ்ணன் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

சத்யபாமாவின் கருத்துகள் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய ராமகிருஷ்ணன், "விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலான ஒரு சில வயதான மோகினியாட்டம் ஆசிரியைகளுக்கு ஆண்கள் மோகினியாட்டம் ஆடுவதில் விருப்பமில்லை. அதனால் சில இடங்களில் இதுபோன்ற விமர்சனங்களை அவர்கள் முன்வைக்கின்றனர். ஆனால் ஆண்களின் மோகினியாட்டத்தைப் பொது மக்கள் ரசிக்கின்றனர். அதனால்தான் எனக்கு நடனமாடப் பல இடங்களில் இருந்தும் பல்வேறு வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன", என்று தெரிவித்தார்.

"சத்யபாமா முன்வைத்த விமர்சனங்களால், இந்தச் சமூகத்தில் உருவ கேலிக்கு நான் உள்ளாகியுள்ளேன். இதனால் எனது தொழிலுக்கும் பாதிப்பு ஏற்படும். அவர் கூறிய விமர்சனங்கள் என்னை மட்டும் பாதிக்கவில்லை, எதிர்காலத்தில் மோகினியாட்டம் கற்க வரும் கருப்பாக உள்ள ஆண் மற்றும் பெண் நடன கலைஞர்களையும் இது பாதிக்கும். இதுபோன்ற உருவகேலி கருத்துகளை இனியும் அவர் கூறாமல் இருக்கவேண்டும். இதை வலியுறுத்தி, சத்யபாமா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல்துறையிலும் புகார் அளித்துள்ளேன்," என்றார் ராமகிருஷ்ணன்.

கலாமண்டலத்தில் மோகினியாட்டம் படிக்க இனி ஆண்களும் சேரலாம்

கேரளா, மோகினியாட்டம்
படக்குறிப்பு, முனைவர் நீனா பிரசாத்

இவ்விவகாரம் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய புகழ்பெற்ற மோகினியாட்டக் கலைஞரும், கேரள கலாமண்டலம் பல்கலைக் கழகத்தின் நிர்வாகக்குழு உறுப்பினருமான முனைவர் நீனா பிரசாத், "கேரள கலா மண்டலத்தில் மோகினியாட்டம் பாடப்பிரிவில் இனி ஆண்களும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்று இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவொரு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு" என்றார்.

இதுநாள் வரை கேரளா கலாமண்டலம் பல்கலைக்கழகத்தில் மோகினியாட்டம் பயில ஆண்களுக்கு அனுமதி கிடையாது. மேலும் பெண்கள் மட்டும்தான் மோகினியாட்டம் ஆட வேண்டும் என சத்தியபாமா தெரிவித்த கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இவ்விவகாரம் குறித்து முனைவர் நீனா பிரசாத் மேலும் கூறுகையில், "ராமகிருஷ்ணன் குறித்து சத்யபாமா தெரிவித்த கருத்துகள் தவறுதான். அது நியாயமானதல்ல. கலை இதற்கெல்லாம் அப்பாற்பட்டுத்தான் நிற்கிறது" என்றார்.

போட்டிகளில் நடனக் கலைஞர்களின் அழகைத் தனியாக மதிப்பிடும் நடைமுறை இருப்பதாக சத்யபாமா தெரிவித்தது குறித்துக் கேட்டதற்கு, "அந்த மதிப்பீட்டில் அவர் கூறியது போல நடனக் கலைஞரின் புறத் தோற்றத்தை மட்டும் வைத்து அளவீடு செய்யப்படாது," என்று நீனா பிரசாத் விளக்கினார்.

கேரள மனித உரிமை ஆணையம் வழக்கு

இவ்விவகாரம் தொடர்பாக மூத்த நடன ஆசிரியரான சத்யபாமாவின் கருத்துகளை அறிய பிபிசி தமிழ் அவரது தொலைபேசி எண்ணுக்கு அழைத்தபோது, அவர் தரப்பில் பேசிய அவரது மகன், இவ்விவகாரம் குறித்து இனிமேல் எந்தப் பேட்டியும் கொடுக்கக்கூடாது என்று காவல்துறை தங்களிடம் தெரிவித்துள்ளதாகக் கூறினார்.

இந்த விவகாரம் குறித்து கேரள மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து சத்யபாமா மீது வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.

ஆர்.எல்.வி ராமகிருஷ்ணன் தரப்பில் சாலக்குடி துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அளித்துள்ள புகார் தொடர்பாகவும் கேரள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)