'கமலுக்கு வில்லன் இவரா எனக் கேட்டனர். ஆனால்...' - டேனியல் பாலாஜியின் முழு பின்னணி

'கமலுக்கு வில்லன் இவரா எனக் கேட்டனர். ஆனால்...' - டேனியல் பாலாஜியின் முழு பின்னணி

பட மூலாதாரம், Daniel Balaji

‘வேட்டையாடு விளையாடு’, ‘காக்க காக்க’ உள்ளிட்ட திரைப்படங்கள் மூலமாக அறியப்பட்ட பிரபல நடிகர் டேனியல் பாலாஜி வெள்ளிக்கிழமை (மார்ச் 29) இரவு மாரடைப்பு காரணமாகக் காலமானார். அவருக்கு வயது 48. அவருடைய கண்கள் தானம் செய்யப்பட்டுள்ளன.

’சித்தி’ எனும் பிரபலமான தொலைக்காட்சி தொடர் மூலம் அறிமுகமானவர் டேனியல் பாலாஜி. பாலாஜி என்பதுதான் அவருடைய இயற்பெயர். ஆனால், சித்தி தொடரில் ‘டேனியல்’ எனும் கதாபாத்திரத்தில் நடித்ததால், டேனியல் பாலாஜி எனத் தன் பெயரை மாற்றிக்கொண்டார்.

இவர், 2003இல் ‘ஏப்ரல் மாதத்தில்’ எனும் திரைப்படம் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். அதே ஆண்டில், கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘காக்க காக்க’ திரைப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து காவல்துறை அதிகாரியாக நடித்துப் பிரபலமானார் டேனியல் பாலாஜி.

'கமலுக்கு வில்லன் இவரா எனக் கேட்டனர். ஆனால்...' - டேனியல் பாலாஜியின் முழு பின்னணி

பட மூலாதாரம், Daniel Balaji

திருப்புமுனையாக அமைந்த ‘வேட்டையாடு விளையாடு’

’காக்க காக்க’ திரைப்படத்திற்குப் பின்னர் கௌதம் மேனன் இயக்கத்தில் அடுத்தடுத்த சில திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் டேனியல் பாலாஜியை நடிக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும் அவரை நடிக்க வைக்க முடியவில்லை. பல முயற்சிகளுக்குப் பின்னரே ‘வேட்டையாடு விளையாடு’ திரைப்படத்தில் வில்லனாக நடிக்க வைக்க கௌதம் மேனன் முடிவெடுத்துள்ளார்.

”கமலுக்கு வில்லனாக பாலாஜியா?” என அப்போது பலரும் பேசியதாக டேனியல் பாலாஜி நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார். எனினும், தன் மீது நம்பிக்கை வைத்து கௌதம் மேனன் அந்தக் கதாபாத்திரத்தைத் தனக்கு வழங்கியதாக அவர் கூறினார்.

'கமலுக்கு வில்லன் இவரா எனக் கேட்டனர். ஆனால்...' - டேனியல் பாலாஜியின் முழு பின்னணி

பட மூலாதாரம், Daniel Balaji

‘வேட்டையாடு விளையாடு’ திரைப்படத்தில் அமுதன் எனும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தார். இதில், தன்னுடைய தனித்துவமான நடிப்பால், பெரும் புகழை அடைந்தார். அத்திரைப்படத்தில் தன் வசன உச்சரிப்பு, உடல் மொழி ஆகியவற்றுக்காக இன்றும் அறியப்படுகிறார்.

சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு அவரும் கௌதம் மேனனும் இணைந்து வழங்கிய நேர்காணலில், வேட்டையாடு விளையாடு திரைப்படத்தின் வசனத்தை அப்படியே பேசிக் காட்டினார். அப்போது, “இப்போதும் அதேபோன்று வசனத்தை ஒத்திகை இல்லாமல் பேச முடிகிறதென்றால் இவர் ஒரு (திறமையான) நடிகர்,” என கௌதம் கூறியிருந்தார்.

தொடர்ந்து, வெற்றிமாறன் இயக்கத்தில் ’பொல்லாதவன்’ திரைப்படத்திலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தார். இதன்மூலம், தமிழ் சினிமாவில் தனித்துவமான வில்லன் நடிகராக அறியப்பட்டார் டேனியல் பாலாஜி.

பிரபலமான ‘வட சென்னை’ வசனம்

டேனியல் பாலாஜி

பட மூலாதாரம், Daniel Balaji

வில்லன் நடிகராக அறியப்பட்ட டேனியல் பாலாஜி, அதன்பின் பல படங்களில் நடித்திருந்தாலும் அந்தத் திரைப்படங்கள் பெரியளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2017இல் பைரவா, 2018இல் வட சென்னை, 2019இல் பிகில் போன்ற திரைப்படங்களின் மூலம் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்தார் டேனியல் பாலாஜி. எனினும், அதன் பின்னும் அவருக்குப் பட வாய்ப்புகள் பெரிதாக அமையவில்லை.

‘வட சென்னை’ திரைப்படத்தில் ‘லைப்-அ தொலைச்சிட்டியேடா’ என்று கூறும் வசனம் சமூக ஊடகங்களில் பிரபலமான ‘மீம்’ வசனமாக உள்ளது.

அதேபோன்று, சில தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள திரைப்படங்களிலும் டேனியல் பாலாஜி நடித்துள்ளார். படங்களில் நடிப்பதைத் தாண்டி சில திரைப்படங்களில் ஒப்பனைக் கலைஞராகவும் கலை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.

கடந்த 2023ஆம் ஆண்டில் வெளியான ’அறியவன்’ எனும் திரப்படம் அவர் நடித்த கடைசி திரைப்படம் எனத் தெரிகிறது. இவர் மறைந்த நடிகர் முரளியின் உறவினராவார்.

டேனியல் பாலாஜி

பட மூலாதாரம், Daniel Balaji

இந்நிலையில், சனிக்கிழமை இரவு அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து, சென்னை, கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார்.

அவருடைய உடல் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவருடைய கண்கள் தானம் செய்யப்பட்டுள்ளன. கொரோனா இரண்டாம் அலையின்போது கொரோனா தொற்றால் தீவிரமாகப் பாதிக்கப்பட்டிருந்தார் டேனியல் பாலாஜி.

அவருடைய மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவருடைய உடலுக்கு இயக்குனர்கள் வெற்றிமாறன், கௌதம் மேனன், அமீர், அருண் மாதேஸ்வரன், நடிகர் விஜய் சேதுபதி ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். சமூக ஊடகங்களில் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கமல்ஹாசன்

பட மூலாதாரம், Getty Images

டேனியல் பாலாஜி மரணத்திற்கு சமூக ஊடகங்களில் இரங்கல் தெரிவித்துள்ள நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், “தம்பி டேனியல் பாலாஜியின் திடீர் மரணம் அதிர்ச்சியளிக்கிறது.

இளவயது மரணங்களின் வேதனை பெரிது. பாலாஜியின் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆறுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கண் தானம் செய்ததன் மூலம் மறைந்த பின்னும் அவர் வாழ்வார். ஒளியைக் கொடையளித்துச் சென்றிருக்கும் பாலாஜிக்கு என் அஞ்சலி,” எனத் தெரிவித்துள்ளார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)