மஞ்சும்மல் பாய்ஸ்: ஜெயமோகன் கருத்துக்கு மலையாள, தமிழ்த் திரையுலகினர் சீறுவது ஏன்?

மஞ்சும்மல் பாய்ஸ்

பட மூலாதாரம், INSTA/CHIDAMBARAM

    • எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
    • பதவி, பிபிசி தமிழ்

கேரளா மட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படம் குறித்தும் கேரள மக்கள் குறித்தும் பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியுள்ள வலைப்பதிவுக்கு சமூக வலைதளங்களில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

சிதம்பரம் எஸ். பொடுவால் இயக்கிய மலையாள திரைப்படம் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’. இதில், சௌபின் ஷாஹிர் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். கமல் நடித்த ‘குணா’ திரைப்படத்தில் காட்டப்படும் குகையை மையமாக வைத்து இக்கதை நகர்கிறது.

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் மஞ்சும்மல் எனும் ஊரை சேர்ந்த நண்பர்கள் குழு தமிழ்நாட்டின் கொடைக்கானலுக்கு சுற்றுலா வருகின்றனர். அப்போது, நண்பர்களுள் ஒருவர் அந்த குகையில் இருந்த பள்ளத்தாக்கில் விழுந்துவிட, அவர் எப்படி காப்பாற்றப்பட்டார் என்பதே அத்திரைப்படத்தின் கதை. 2006-ல் குணா குகையில் இதேபோன்று நடந்த உண்மை சம்பவத்தைத் தழுவி இத்திரைப்படம் எடுக்கப்பட்டது.

தமிழ் சினிமாவுடனும் தமிழ் ரசிகர்களுடனும் மிகவும் பொருந்திப் போகும் அம்சங்கள் இத்திரைப்படத்தில் நிறைய உள்ளன. கொடைக்கானல், ‘குணா’ குகை, ‘குணா’ திரைப்படத்தில் வரும் ‘கண்மணி அன்போடு’ பாடல் பயன்படுத்தப்பட்ட இடம் என, தங்களுக்கு பரிச்சயமான விஷயங்கள் படத்தில் இருப்பதால் இத்திரைப்படத்தை தமிழ் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இன்று வரை தமிழ் ரசிகர்கள் அத்திரைப்படத்தை திரையரங்குகளுக்கு சென்று பார்த்து வருகின்றனர்.

திரைப்படங்களின் ‘பாக்ஸ் ஆபீஸ்’ வசூல் குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வரும் பிரபல டிராக்கர் ஏ.பி. ஜார்ஜ் மார்ச் 10 அன்று சமூக வலைதளமான ‘எக்ஸ்’ தளத்தில், “உலகம் முழுவதிலும் இத்திரைப்படம் 150 கோடியை வசூல் செய்துள்ளது” என தெரிவித்தார். மேலும், 200 கோடியை வசூல் செய்யும் முதல் மலையாளத் திரைப்படம் என்ற நிலையை நோக்கி செல்வதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இத்திரைப்படம் குறித்து, ’வெண்முரசு’, ‘கொற்றவை’, ‘விஷ்ணுபுரம்’, ‘யானை டாக்டர்’ உள்ளிட்ட புத்தகங்களை எழுதிய எழுத்தாளர் ஜெயமோகன் தன்னுடைய வலைப்பதிவில் விமர்சித்துள்ளார்.

ஜெயமோகன்

பட மூலாதாரம், Jeyamohan /Facebook

ஜெயமோகன் கூறியது என்ன?

’எந்திரன் - 2’, ‘பொன்னியின் செல்வன்’, ‘வெந்து தணிந்தது காடு’ உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ள ஜெயமோகன், மலையாளத்திலும் வெகுசில திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார்.

’மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படத்தில் நண்பர்கள் மது அருந்துவதை விமர்சித்துள்ள அவர், ”சமகால சினிமாவை நான் விமர்சனம் செய்வதில்லை, கருத்தே சொல்வதில்லை. ஏனென்றால் நானும் இதில் இருக்கிறேன். இது கலை ஒன்றும் அல்ல, பிரச்சாரம்கூட அல்ல. வெறும் வணிகம். நூறு விழுக்காடு வணிகம். ஆகவே ஒரு வணிகர் இன்னொருவரின் வணிகத்தை அழிக்கலாகாது. அது ஒரு உள்நெறி” என்று முன்விளக்கத்துடனேயே தன் பதிவை ஆரம்பிக்கிறார்.

அத்திரைப்படத்திற்கு வரும் “புகழ்மொழிகள்” காரணமாக அத்திரைப்படத்தைப் பார்க்க நேர்ந்ததாக தெரிவித்துள்ள ஜெயமோகன், தனக்கு அப்படம் “எரிச்சலூட்டுவதாகவே இருந்ததாக” கூறியுள்ளார்.

தமிழக சுற்றுலா தலங்களுக்கு வரும் கேரளாவை சேர்ந்த பலர் மது அருந்திவிட்டு வாந்தி எடுப்பது, அத்துமீறலில் ஈடுபடுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

“ஐயமிருந்தால் செங்கோட்டை – குற்றாலம் சாலையிலோ, கூடலூர்- ஊட்டி சாலையிலோ சென்று பாருங்கள் வழிநெடுக உடைந்த, உடையாத புட்டிகளாகவே கிடக்கும். அதையும் இப்படத்தில் பெருமையாகக் காட்டுகிறார்கள்.” என அப்பதிவில் தெரிவித்துள்ளார் ஜெயமோகன். ”பீடி சிகரெட்டை காய்ந்த தமிழகக் காடுகளுக்குள் வீசிவிட்டுச் செல்வார்கள்.”, “யானைகளை நோக்கி புட்டிகளை வீசுகிறார்கள்” என மலையாளிகள் சுற்றுச்சூழலுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவதாக அப்பதிவில் தெரிவித்துள்ளார்.

இவற்றையே அத்திரைப்படம் “எளியவர்களின் கொண்டாட்டம்” என்று காட்டி நியாயப்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தன்னுடைய நீண்ட பதிவில், மலையாளம் சினிமா குறித்து பல பொதுவான கருத்துக்களையும் தெரிவித்துள்ளார்.

”பத்தாண்டுகளுக்கு முன்பு ‘கிளி போயி’ ‘ஒழிவுநேரத்தே களி’ ‘வெடிவழிபாடு’ ’ஜல்லிக்கட்டு’ போன்று போதையையும் பாலியல் தொழிலையும் சாதாரணமானதாக செய்யும் சிறிய படங்கள் கேரளத்தில் வெளிவந்தன” என தெரிவித்திருக்கிறார்.

மேலும், ” உள்ளீடற்ற அசட்டுப் போலிப்படங்கள் அவை. அவை அறிவுஜீவிகளால் ’இயல்பான கலைப்படைப்புகள்’ என கொண்டாடப்பட்டன. இங்கும் முதிரா அறிவுஜீவிகள் அவற்றைக் கொண்டாடினார்கள். இன்று அந்தப்போக்கு மையச் சினிமாவாக ஆகியிருக்கிறது. கேரளத்தின் நலம்நாடும் ஓர் அரசு இருந்தால் இந்த சினிமாக்காரர்கள்மேல் நேரடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.” என தெரிவித்துள்ளார்.

லெனின் பாரதி

பட மூலாதாரம், Lenin Bharathi/Facebook

படக்குறிப்பு, லெனின் பாரதி

தமிழ் இயக்குநர்கள் எதிர்ப்பு

இதற்கு பல்வேறு தரப்பினரும் சமூக வலைதளங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மலையாள இயக்குநர் பி. உன்னிகிருஷ்ணன், மக்கள் மீது வெறுப்பு காட்டுவது சரியல்ல என தெரிவித்துள்ளார். அடிப்படை மனித விழுமியங்களைக் கருத்தில் கொள்ளாமல் வெறுப்பது தவறு என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “மஞ்சும்மல் பாய்ஸ் பற்றிய உங்கள் எண்ணங்களைப் பற்றி இப்போதுதான் தெரிந்துகொண்டேன். எனக்கு தமிழ் படிக்கத் தெரியாததால், செய்திகள் வாயிலாக அறிந்துகொண்டேன். நான் சரியாகப் புரிந்துகொண்டேன் என்று நம்புகிறேன். உங்கள் பணியை போற்றும் ஒரு மலையாளி என்ற முறையில், எந்த அறிவியல் அல்லது அரசியல் சம்பந்தப்பட்டிருந்தாலும் உங்கள் எழுத்தைப் பாராட்டுகிறோம் என்று சொல்ல விரும்புகிறேன். அதன் அடிப்படையில் நாங்கள் உங்களை விமர்சிக்கவில்லை” என தெரிவித்துள்ளார்.

மலையாளிகள் மட்டுமல்லாமல், தமிழ் திரைத்துறையை சேர்ந்தவர்களும் ஜெயமோகன் கருத்தை விமர்சித்துள்ளனர்.

‘மேற்குத் தொடர்ச்சி மலை’ திரைப்படத்தின் இயக்குநர் லெனின் பாரதி, ஜெயமோகனின் வார்த்தைகள் “இனவெறுப்பு மற்றும் வன்மத்தின்” வார்த்தைகள் என விமர்சித்துள்ளார். ‘மூடர் கூடம்’ திரைப்பட இயக்குநர் நவீனும் ஜெயமோகனின் பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

கலை மீதான அதிகாரத்தை அரசிடம் கொடுக்கலாமா?

தமிழ் சினிமா குறித்து எழுதிவரும் எழுத்தாளர் சுகுணா திவாகர், "ஜெயமோகனின் கருத்து மலையாளிகளையும் மலையாள திரைப்படங்களையும் பொதுவான கண்ணோட்டத்தில் இன ரீதியாக இழிவுபடுத்துவதாக உள்ளது" என தெரிவித்தார்.

அதேசமயம், மலையாள திரைப்படங்களில் தமிழர்களை தவறாக சித்தரிப்பதும் கடந்த காலங்களில் நிகந்திருப்பதாக குறிப்பிடும் அவர், எனினும் தற்போது பல மலையாள படங்களில் தமிழ் வசனங்கள் வைப்பது, தமிழ் நடிகர்கள் நடிப்பதும் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டுகிறார்.

மம்முட்டியின் 'நண்பகல் நேரத்து மயக்கம்' திரைப்படம் பாதி தமிழ் வசனங்களிலேயே வருவதை அவர் எடுத்துக்காட்டுகிறார்.

"மலையாளிகள் சூழலியல் சீர்கேடுகளில் ஈடுபடுவதாக குறிப்பிடும் ஜெயமோகன் ஏன், மத விழாக்களில் நடக்கும் சுற்றுச்சூழல் சீர்கேடுகள் குறித்து பேசுவதில்லை?" என அவர் கேள்வி எழுப்புகிறார்.

மேலும், கலை மீதான அதிகாரத்தை அரசிடம் கொடுப்பது இன்றைய சூழலில் மிகவும் அபாயகரமானது என அவர் தெரிவித்தார்.

மஞ்சும்மல் பாய்ஸ்

பட மூலாதாரம், soubinshahir/Instagram

"மது அருந்தும் காட்சிகள் வைப்பது தவறா?"

மற்றொரு சினிமா எழுத்தாளர் தீபா ஜானகிராமன் கூறுகையில், "ஜெயமோகன் 'ஒழிவுதிவசத்தே களி போன்ற திரைப்படங்களில் மது அருந்துவது குறித்தெல்லாம் விமர்சித்துள்ளார். அந்த திரைப்படத்தில் நான்கு நண்பர்கள் மது அருந்துவதற்கு முன்பு எப்படி இருந்தனர், போதை ஏறியவுடன் அவர்களுக்குள் இருக்கும் வன்மமும் வன்முறையும் எப்படி வெளியே வருகிறது என்பதுதான் அந்த திரைப்படம். இதுவொரு சிறிய உதாரணம்தான். மது அருந்துவதை காட்சிப்படுத்துவதாலேயே அது 'கெட்ட' சினிமாவாகிவிடாது. எங்கு, எதற்காக அந்த காட்சியை வைக்கிறோம் என்பது முக்கியம்.

அதேபோன்றுதான் 'மஞ்சும்மல் பாய்ஸ்' திரைப்படத்தில் மது அருந்துவது அந்த படத்தின் ஒருபகுதி தான்" என்றார்.

மலையாள சினிமா ஏன் தமிழர்களுக்குப் பிடிக்கிறது என்பது குறித்து பேசிய அவர், "திரைக்கதை எழுத்தாளர்கள் கைகளில் மலையாள சினிமா துறை இருக்கிறது. அதனால் வெவ்வேறு கதைகள் வரும். இன்னும் கதைகளுக்கு பெரும் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அதில்தான் பல பரிசோதனைகளை நிகழ்த்துகின்றனர். அதனால்தான் நமக்கு மலையாள சினிமா நமக்கு பிடிக்கிறது. கதையை உணர்வுப்பூர்வமாக சொல்லிவிட்டால் நமக்குப் பிடித்துவிடுகிறது" என்றார்.

அப்படியானால், தமிழ் திரைப்படங்களில் போதை கலாசாரம் தொடர்பான திரைப்படங்கள் வருவது குறித்து கேள்வியெழுப்பினார் அவர். அத்திரைப்படங்கள் போதை கலாசாரத்திற்கு எதிரானவை என சொல்லப்பட்டாலும், அவற்றில் போதைக்கு எதிரான ஒரு வசனம் கூட இருப்பதில்லை என்றார் தீபா.

மஞ்சும்மல் பாய்ஸ்

பட மூலாதாரம், soubinshahir/Instagram

"நமக்கு என்ன அதிகாரம் இருக்கிறது?"

'ஒழிவுதிவசத்தே களி' திரைப்பட இயக்குநர் சணல்குமார் சசிதரணின் வெளிவராத 'வழக்கு' எனும் திரைப்படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய முகில் தங்கம் இந்த சர்ச்சை குறித்து பிபிசி தமிழிடம் பேசினார்.

"எல்லா துறைகளிலும் பிரச்னைகள் இருக்கின்றன. மலையாள சினிமாவில் சில நல்ல விஷயங்கள் இருக்கின்றன. திரைக்கதை எழுத்தாளர்களுடன் அவர்கள் பணிபுரிவது நல்ல விஷயம். பெரிய நடிகர்களை வைத்து அறிமுக இயக்குநர் எடுத்த படம் தான் ‘கும்பலங்கி நைட்ஸ்’. ஷ்யாம் புஷ்கரன் என்பவர்தான் அதற்கு திரைக்கதை எழுதினார். மிகப்பெரும் வரவேற்பு அத்திரப்படத்திற்கு கிடைத்தது. எழுத்தாளரை நம்பி அங்கு படம் எடுக்கப்படுகிறது" என்றார்.

ஆனால், மலையாள சினிமாவிலும் பிரச்னைகள் இருப்பதாக கூறும் முகில், "இங்கும் பெண்களுக்கு எதிரான பிரச்னைகள் நடக்கின்றன. நடிகை பாவனா பாலியல் வழக்கில் நடிகர் திலீப் மலையாள திரைப்பட நடிகர்கள் சங்கத்திலிருந்து வெளியேற்றியும் பின் மீண்டும் உள்ளே வந்துவிட்டார்" என்றார்.

மேலும், 'மஞ்சும்மல் பாய்ஸ்' அனைவரும் கொண்டாடும் அளவுக்கான படம் அல்ல எனக்கூறும் அவர், இதுவொரு 'பாப்புலர் கல்ச்சர்' காரணமாக கொண்டாடப்படுவதாக கூறினார்.

அதேசமயம், "மலையாளிகளின் மதுப்பழக்கம் குறித்து பேசுவதற்கு நமக்கு அதிகாரம் இல்லை. தமிழ்நாட்டிலும் மதுப்பழக்கம் அதிகம் இருக்கிறது. அது அவர்களின் கலாசாரமாக இருக்கலாம். அதற்கு இனவரைவியலுடன் தொடர்பு இருக்கலாம்" என தெரிவித்தார் முகில்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)