ஓடிடி - டிக்கெட் கட்டணம்: திரையரங்குகள் காலியாக இருக்க உண்மையான காரணம் என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சிராஜ்
- பதவி, பிபிசி தமிழ்
சமீப காலமாக தமிழ்நாட்டில் ஆங்காங்கே திரையரங்குகள் தொடர்ந்து மூடப்படுவதும் அல்லது அவை திருமண மண்டபங்களாக மாற்றப்படுவதும் வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. ஓடிடி தளங்களின் வரவு காரணமாக திரையரங்குகளுக்கு மக்கள் அதிகமாக வருவதில்லை என்றும், இதனால் ஏற்படும் நஷ்டத்தை சமாளிக்க முடியாமல் அவை மூடப்படுவதாகவும் திரையரங்கு உரிமையாளர் சங்கம் தொடர்ந்து கூறி வருகிறது.
அதே நேரத்தில் திரையரங்கு டிக்கெட் கட்டணம், சிற்றுண்டி கட்டணம், பார்க்கிங் கட்டணம் போன்றவற்றை கணக்கில் கொள்ளும் மக்கள் ஓடிடி தளத்தில் திரைப்படங்கள் பார்ப்பதை விரும்புகிறார்கள் என்ற விமர்சகர்களின் வாதமும் ஒரு பக்கம் இருக்கிறது.
சில நாட்களுக்கு முன்பாக தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் பாரதிராஜா, சிறு பட்ஜெட் திரைப்படங்களுக்கு டிக்கெட் விலையைக் குறைக்குமாறு திரையரங்க உரிமையாளர் சங்கத்திடம் கோரிக்கை வைத்திருந்தார். இந்நிலையில், திரையரங்க மற்றும் மல்டிப்ளக்ஸ் உரிமையாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
திரையரங்குகள் மூடப்படுவதற்கு காரணம் ஓடிடி தளங்களா அல்லது அதிக டிக்கெட் கட்டணமா? திரையரங்குகளில், ரீ-ரிலீஸ் செய்யப்படும் திரைப்படங்களுக்கு வரவேற்பு இருப்பது ஏன்? திரையரங்குகளில் மக்கள் பார்க்க விரும்புவது, நல்ல கதையம்சம் கொண்ட படங்களையா அல்லது பெரிய நடிகர்களின் படங்களையா?

பட மூலாதாரம், Getty Images
திரையரங்க உரிமையாளர்களின் கோரிக்கைகள் என்ன?
"பாலிவுட் துறையில் திரையரங்குகளில் வெளியாகும் அனைத்து திரைப்படங்களையும் 8 வாரங்கள் கழித்தே ஓடிடி தளங்களில் வெளியிட வேண்டும் என்ற விதி உள்ளது. அந்த நடைமுறை இங்கேயும் கொண்டுவரப்பட வேண்டும் என பிப்ரவரி 20 நடந்த கூட்டத்தில் தீர்மானம் எடுத்துள்ளோம்," என்கிறார் திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன்.
தொடர்ந்து பேசிய அவர், "தமிழ்நாட்டில் திரையரங்குகளுக்கு உள்ளாட்சி வரி நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் 8% வரி விதிக்கப்படுகிறது. எனவே இந்தியாவில் எங்கும் இல்லாத இந்த வரியை நீக்க முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்படும். திரையரங்க பராமரிப்புச் செலவுகள் தற்போது மிகவும் அதிகரித்து விட்டதால் டிக்கெட் விலையைக் குறைக்க முடியாது, எனவே திரையரங்குகளுக்கு அரசு அளிக்கும் மானியத்தை அதிகரிக்க கோரிக்கை வைக்கவுள்ளோம்" என்றார்.
"முன்பு திரைப்படங்கள் வெளியாகும்போது, திரையரங்குகளில் வசூல் நிலவரங்களை தெரிந்துகொள்வதற்காக தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் சார்பாக ஆட்கள் நியமிக்கப்படுவார்கள். ஒரு நபர் ஐந்து அல்லது ஆறு நாட்கள் நேரில் வந்து பார்த்து, திரையரங்குகளின் வசூல் எப்படி உள்ளது, ரசிகர்களின் வருகை குறித்தெல்லாம் விசாரித்து தயாரிப்பாளருக்கு கூறுவார். அவருக்கு நாங்கள் பேட்டா தொகை அளித்து வந்தோம்." என்கிறார் திருப்பூர் சுப்பிரமணியம்.
"ஆனால் இப்போது அவ்வாறு யாரும் திரையரங்குக்கு வருவதில்லை. வீட்டிலிருந்தவாறே தொலைபேசியில் எங்களிடம் விவரம் கேட்கிறார்கள், பேட்டாவும் கேட்கிறார்கள். எனவே இதைத் தவிர்க்க நாங்களே தயாரிப்பாளருக்கு விவரங்களை மின்னஞ்சலில் அனுப்பி விடுகிறோம். ஆனாலும் பேட்டா கொடுக்கும் நடைமுறை தொடர்கிறது. இதை ரத்து செய்ய வேண்டும்" என்றும் அவர் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
'திரையரங்குகளில் கிரிக்கெட் போட்டிகள்'
"தமிழ்நாட்டில் மட்டுமே 80% வரை விநியோகஸ்தர்கள் பங்குத்தொகை கேட்கிறார்கள். கேரள மாநிலத்தில் எவ்வளவு பெரிய நடிகர் நடித்தாலும் 50% தான் விநியோகஸ்தர்கள் கேட்பார்கள். திரையரங்குகள் அதிகமாக மூடப்படும் இன்றைய நிலையில், இனிமேலும் எங்களால் 80% வரை கொடுக்க முடியாது. அதிகப்பட்சம் 60% தான் முடியும்," என்றார் திருப்பூர் சுப்பிரமணியம்.
"கிரிக்கெட், கால்பந்து போட்டிகளை திரையரங்குகளில் திரையிட அரசிடம் அனுமதி கேட்போம். ஏனெனில் கிரிக்கெட் போட்டிகளில் சென்சார் செய்வதற்கு எதுவுமில்லை. நாங்கள் கிரிக்கெட் போட்டியை மட்டும்தான் திரையிட அனுமதி கேட்போம். அதில் வருகிற விளம்பரங்களைத் திரையிட மாட்டோம். அப்படி நாங்கள் ஒளிபரப்பும் விளம்பரங்கள் சென்சார் செய்யப்பட்டு தான் ஒளிபரப்பப்படும்," என்று கூறினார் அவர்.
தொடர்ந்து பேசிய அவர், "இவை தான் எங்கள் தீர்மானங்கள். ஓடிடியில் 56 நாட்கள் கழித்தே திரைப்படத்தை வெளியிட வேண்டும் என்பதே எங்களது முக்கிய பிரச்னை. ஏனென்றால், பெரிய நடிகர்களின் படங்கள் தவிர்த்து சிறிய படங்களை ஓடிடியில் பார்த்துக்கொள்ளலாம் என மக்கள் முடிவெடுத்து விடுவதால், அவை வெற்றிபெறுவதில்லை.
முன்பெல்லாம் திரையரங்க ரிலீஸுக்கு முன்பே திரைப்படங்களை ஓடிடிக்கு வாங்கினார்கள். இப்போது திரையரங்கில் அதன் வரவேற்பை பார்த்த பிறகு படங்களை வாங்கிக் கொள்கிறோம் எனக் கூறுகிறார்கள். இப்படி இருந்தால் எப்படி சிறிய பட்ஜெட் படங்கள் வெற்றி பெறும். எனவே இது குறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களிடமும் பேசியுள்ளோம். சீக்கிரமாக இதற்கு ஒரு முடிவு கிடைக்கும் என நம்புகிறோம்," என்று நம்மிடம் கூறினார் திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன்.

பட மூலாதாரம், Getty Images
இந்திப் படங்களுக்கு 8 வார ஓடிடி இடைவெளி ஏன்?
"நான்கு வார ஓடிடி இடைவெளியில் தான் லியோ, ஜெயிலர், வாரிசு போன்ற பல வெற்றித் திரைப்படங்கள் வெளிவந்தன. அவை மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தன. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், லியோ ஓடிடியில் வந்த பிறகும் கூட திரையரங்குகளில் ஓடியதே, அது எப்படி," என்று கேள்வியெழுப்புகிறார் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர் ஜி.தனஞ்செயன்.
"திருப்பூர் சுப்ரமணியன் சில நாட்களுக்கு முன்பாக இரண்டு வாரங்களுக்கு மேல் திரைப்படங்கள் திரையரங்கில் ஓடுவதில்லை என்று கூறியிருந்தார். இப்போது நான்கு வாரங்கள் கழித்து ஓடிடியில் வெளிவருவது அவருக்கு பிரச்னையாக இருக்கிறது. சிறிய படங்களுக்கு இருப்பது ஓடிடி பிரச்னை மட்டும் அல்ல, பெரிய நட்சத்திரங்கள் இல்லாத படங்களைப் பார்க்க மக்கள் திரையரங்கம் வர வேண்டுமென்றால் முதலில் டிக்கெட் கட்டணத்தை குறைக்க வேண்டுமல்லவா? அதை ஏன் செய்ய மறுக்கிறார்கள்," என்கிறார் ஜி.தனஞ்செயன்.
தொடர்ந்து பேசிய அவர், "2020-ஆம் ஆண்டில் ஓடிடி தளங்கள் திரைப்படங்களை வாங்கத் தொடங்கியபோது, பாலிவுட் திரைப்படங்களின் சந்தை பெரிது என்பதால், அதற்கு 8 வார இடைவெளி அளிக்கப்பட்டது. இந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் ஓடிடி தளங்கள் இடையே கலந்தாலோசிக்கப்பட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது," என்றார் ஜி.தனஞ்செயன்.
"நாம் ஓடிடி தளங்களுக்கு கட்டளையிட முடியாது. ஓடிடியின் வருமானம் என்பது நிச்சயிக்கப்பட்ட ஒன்று. ஆனால் திரையரங்கு வருமானம் அப்படி இல்லையே. இவ்வளவு வருமானம் வரும், ரசிகர்கள் வருவார்கள் என நிச்சயமாக யாராலும் சொல்ல முடியாது அல்லவா," என்கிறார் மாவீரன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் அருண் விஷ்வா.
"எனவே நாம் ஓடிடி தளங்களுக்கு அதிக அழுத்தம் கொடுத்தால், அவர்கள் ஒரு திரைப்படத்தை குறைந்த விலைக்கு வாங்குவார்கள் அல்லது நிராகரித்து விடுவார்கள், பாதிக்கப்படுவது தயாரிப்பாளர்கள் தான். எனவே தயாரிப்பாளர்களின் நிலையையும் யோசிக்க வேண்டும்," என்கிறார் அவர்.

பட மூலாதாரம், Getty Images
'திரையரங்குகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை'
"ஆயிரக்கணக்கில் செலவு செய்து குடும்பத்துடன் செல்லும் போது, திரையரங்கு மோசமாக இருந்து, டிக்கெட் கட்டணமும் அதிகமாக மக்கள் மீண்டும் அங்கு செல்ல விரும்புவார்களா அல்லது வீட்டில் நல்ல ஒரு ஓடிடி தளத்தில் அதை விட குறைந்த கட்டணத்தில் அதிக படங்களை, எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம் என்பதை விரும்புவார்களா," என்கிறார் தயாரிப்பாளர் அருண் விஷ்வா.
இதை தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயனும் ஒப்புக்கொள்கிறார். "இதனால் தான் சிறிய பட்ஜெட் படங்களுக்கு டிக்கெட் கட்டணத்தைக் குறைக்க வேண்டுமென சில நாட்களுக்கு முன்பு திரையரங்க உரிமையாளர்களுக்கு கோரிக்கை வைத்தோம்," என்கிறார்.
"இது நாங்கள் மட்டும் எடுக்கக்கூடிய முடிவு அல்ல, ஓடிடி தளங்களோடு ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். கேரளா போன்ற ஒரு சிறிய மாநிலத்தில் மட்டுமே வெளியாகும் சிறிய பட்ஜெட் படங்கள் 50 கோடி ரூபாய் வரை சம்பாதிக்கின்றன. சமீபத்தில் இளம் நடிகர்கள் நடித்து அங்கு வெளியான 'பிரேமலு' திரைப்படம் நல்ல உதாரணம். அங்கு ஓடிடி சிக்கல் இல்லையா என்ன? எனவே நல்ல கதையம்சம் கொண்ட யதார்த்தமான திரைப்படங்கள் வர வேண்டும், டிக்கெட் விலையும் குறைய வேண்டும்," என்கிறார் தயாரிப்பாளர் ஜி. தனஞ்செயன்.

பட மூலாதாரம், Getty Images
அதிக டிக்கெட் கட்டணம் என்பதை தாண்டி இது மக்களின் மனநிலை சார்ந்தது என்கிறார் திரைப்பட விமர்சகர் அவினாஷ் இராமச்சந்திரன்.
"சிறிய படங்களை ஓடிடியில் பார்க்க பலரும் விரும்புகிறார்கள் என்பதும் இது 2020-க்கு பிறகு நடந்த மாற்றம் என்பதும் உண்மை தான். ஆனால் அதே நேரத்தில் திரையரங்க அனுபவம் என்ற ஒன்று உள்ளது, மக்களோடு சேர்ந்து சிரிப்பது, சேர்ந்து உணர்ச்சிவசப்படுவது. தமிழ்நாடு போன்ற ஒரு மாநிலத்தில் சினிமாவிற்கு அதிக முக்கியத்துவம் உள்ளது."
"ரீ-ரீலிஸ் செய்யப்படும் திரைப்படங்கள் ஓடிடியில் உள்ளன, தொலைக்காட்சி சேனல்களில் அடிக்கடி ஒளிப்பரப்புகிறார்கள், இருந்தும் திரையரங்கில் அதைக் காண சிலர் விரும்புகிறார்கள் அல்லவா. எனவே மக்களின் மனநிலை சார்ந்தது தான். அதை ஊக்குவிக்கும் பொறுப்பு திரையரங்க உரிமையாளர்களிடம் தான் உள்ளது. குறைந்த கட்டணத்தில் படங்களை திரையிட்டால் மக்கள் கண்டிப்பாக வருவார்கள்," என்கிறார் அவர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












