மஞ்சும்மல் பாய்ஸ்: கொடைக்கானல் 'குணா குகை' நிகழ்வை தழுவிய இந்த மலையாளப் படம் எப்படி இருக்கிறது?
மலையாள சினிமாவில் சமீபத்தில் வெளியான திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. பிரமயுகம், பிரேமலு வரிசையில் பிப்ரவரி 22ம் தேதி வெளியான திரைப்படம் மஞ்சும்மல் பாய்ஸ். விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்ற இந்த திரைப்படம் குறித்து ஊடகங்கள் என்ன சொல்கின்றன?
கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த மஞ்சும்மல் எனும் சிறிய ஊரில் இருந்து 11 நண்பர்கள் தமிழ்நாட்டிலுள்ள கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்கின்றனர்.
குணா படத்தின் மூலம் பிரபலமான குணா குகையை சுற்றிப்பார்க்க சென்றபோது 11 பேரில் ஒருவர் அந்தக்குகையில் இருந்த பள்ளத்தாக்கு ஒன்றில் விழுந்துவிட அவருக்கு என்ன ஆனது? நண்பர்களால் காப்பாற்றப்பட்டாரா? என்பதுதான் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தின் கதை.
2006-ம் ஆண்டு கொடைக்கானலில் நடந்த உண்மை சம்பவத்தை தழுவி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது

பட மூலாதாரம், INSTA/CHIDAMBARAM
இந்தியா டுடே விமர்சனம்
மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் நட்பு, உயிர் வாழ்வதற்கான வேட்கை, வாழ்க்கையின் மீதான நம்பிக்கை போன்ற பல்வேறு விஷயங்களை குறித்து பேசுவதாக இந்தியா டுடே தனது திரை விமர்சனத்தில் தெரிவித்துள்ளது.
மலையாள இயக்குனர் சிதம்பரம் இயக்கத்தில் சௌபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாஸி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் கமல்ஹாசனின் குணா படத்தில் இளையராஜா இசையில் வரும் 'கண்மணி அன்போடு காதலன்' பாடலில் 'மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக்காதல் அல்ல அதையும் தாண்டி புனிதமானது' எனும் வரியோடு தொடங்குகிறது.
க்ளைமேக்சில் மீண்டும் ஒருமுறை வரும் இந்த பாடல் வரி இது வரை காதல் குறித்து பாடுவதாகவே பார்க்கப்பட்டது. ஆனால், மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தில் இந்த வரி பயன்படுத்தப்பட்ட விதம் படத்தில் வரும் 11 நண்பர்களுக்கு இடையேயுள்ள நட்பை கூறும் விதமாக இருப்பதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் தனது விமர்சனத்தில் தெரிவித்துள்ளது.
இந்த ஒட்டுமொத்த கதையும் மனித உணர்வுகளை பற்றி ஆழமாக பேசுவதாக இந்தியா டுடே கூறுகிறது.

பட மூலாதாரம், INSTA/CHIDAMBARAM
படத்தின் ஆரம்பத்திலேய ஸ்ரீநாத் பாஸி பள்ளத்தில் விழும் காட்சி காட்டப்பட்டு அதற்கு அவரது நண்பர்கள் கொடுக்கும் ரியாக்ஷனோடு படத்தின் தலைப்பு போடப்படுவதில் இருந்தே, பார்வையாளர்களை படத்திற்குள் இயக்குநர் இழுத்து வந்துவிடுவதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.
மஞ்சும்மல் பாய்ஸ் திரைபடத்தின் கதை 2006ல் நடப்பதாக இருப்பதால், அந்த காலகட்டத்தை இயக்குனர் உறுத்தல் இல்லாமல் இயல்பாகவும் சிறப்பாகவும் காட்சிப்படுத்தி இருப்பதாக கூறும் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகம், படம் வேகம் எடுக்கும் இடமே 11 நண்பர்களும் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்ல்லும்போதுதான். அப்போது கலகலப்பாக இருக்கும் திரைப்படம், நண்பர்கள் குணா குகைக்கு சென்றவுடன் த்ரில்லிங்காக மாறுவதாக குறிப்பிட்டுள்ளது
நண்பர்களுக்குள் நடக்கும் சின்ன சின்ன சண்டைகள் முதல் ஒரு உயிரை காப்பாற்ற போராடுவது வரை படம் முழுவதும் மனித உணர்வுகளின் இரண்டு எல்லைகளையும் இயக்குனர் சிதம்பரம் சிறப்பாக காட்சிப்படுத்தியிருப்பதாக இந்தியா டுடே புகழாரம் சூட்டியுள்ளது.
மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் அனைவராலும் பொதுவாக பாராட்டப்படும் ஒரு அம்சம் நடிகர்கள் வெளிப்படுத்தியிருக்கும் நடிப்பு. தனது நண்பர் ஒருவர் பெரும் பள்ளத்தாக்கில் விழுந்துவிட்டதும் அவரை உயிருடன் மீட்க வேண்டும் எனும் சூழலில் அனைத்து நடிகர்களிடமும் வெளிப்படும் நடிப்பு அபாரமாக இருப்பதாக டைம்ஸ் ஆப் இந்தியா தனது விமர்சனத்தில் தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், INSTA/CHIDAMBARAM
'கூஸ்பம்ப்ஸ்' தரும் இளையராஜா
நடிப்பை தாண்டி படத்திற்கு பெரிய பலமாக அமைந்தது படத்தின் இயக்குனர் சிதம்பரத்தின் திரைக்கதை, சுஷின் ஷ்யாமின் இசை மற்றும் ஷைஜு காலித்தின் ஒளிப்பதிவு என இந்தியன் எக்ஸ்பிரஸ் கூறியுள்ளது.
படத்தில் ஒரெயொரு குறை இருப்பதாக சுட்டிகாட்டும் டைம்ஸ் ஆஃப் இந்தியா, பள்ளத்தில் விழுந்த ஸ்ரீநாத் பாஸியை காப்பாற்ற முயலும் காட்சி குறைந்த நேரமே வருவதால் அது படத்தோடு ஒட்டவில்லை என விமர்சித்துள்ளது
மலையாளத்தில் இந்த வருடம் தொடங்கி இரண்டு மாதத்திற்குள் ரசிகர்களின் வரவேற்பை பெற்ற படங்களான பிரம்மயுகம், பிரேமலு ஆகிய படங்களின் வரிசையில் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படமும் தனக்கான இடத்தை பிடித்திருப்பதாக தி இந்து ஆங்கில நாளிதழ் தெரிவித்துள்ளது.
பார்வையாளர்களால் கணிக்க கூடிய வகையில் படத்தின் முடிவு இருந்தாலும், எங்கேயும் விறுவிறுப்பு குறையாமல் பார்வையாளர்களை படத்திற்குள் கட்டிப்போட்டதுதான் படத்தின் வெற்றி என தி இந்து ஆங்கில நாளிதழ் பாராட்டியுள்ளது.
தமிழில் சந்தானபாரதி இயக்கத்தில் கமல் நடித்த குணா திரைப்படக் குழுவினருக்கு நன்றி என்ற கார்டு உடன் தான் இந்தப்படமே தொடங்குகிறது என இந்து தமிழ் திசை தமது விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு நன்றி தெரிவிக்கப்படுகிறது. கண்மணி அன்போடு காதலன் பாடல்தான் டைட்டில் கார்டில் வருகிறது. படத்தின் முக்கியமான ஒரு இடத்தில் இந்தப் பாட்டின் ஒரு குறிப்பிட்ட பகுதி வரும், அது படம் பார்க்கும் அனைவருக்கும் கூஸ்பம்ப்ஸைத் தருகிறது என இந்து தமிழ் திசை கூறியுள்ளது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)













