தமிழ்நாட்டில் வேலைக்காக நகரங்களுக்கு இடம் பெயரும் பெண்கள் - கிராமங்களின் நிலை என்ன? பிபிசி கள ஆய்வு

தமிழ்நாடு பெண்கள்
    • எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன்.
    • பதவி, பிபிசி தமிழ்

நாட்டிலேயே படித்த, வேலைக்குச் செல்லும் பெண்கள் அதிகம் இருப்பது தமிழ்நாட்டில்தான் என்கிறது மத்திய அரசின் புள்ளிவிவரம். தமிழ்நாட்டின் கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் கூட வேலைவாய்ப்புக்காக நகரங்களுக்கு இடம் பெயரும் சூழல் உள்ளது. அதற்கு என்ன காரணம்? கிராமங்களில் பெண்கள் சந்திக்கும் சவால்கள் என்ன?பெண்களுக்கு கிராமங்களில் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் என்ன?

அரசு சார்பில் உருவாக்கப்பட்டிருக்கும் வேலைகள் குறித்து அறிந்து கொள்ள தமிழ்நாட்டின் மத்திய மாவட்டங்களான திருச்சி, புதுக்கோட்டையில் பிபிசி கள ஆய்வு மேற்கொண்டது. தமிழ்நாட்டில் படித்த பெண்கள் என்ன வேலைக்காக நகர்கிறார்கள் என்பது குறித்து இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

தமிழ்நாட்டில் பெண்களுக்கான வேலை

பட மூலாதாரம், Getty Images

தமிழ்நாட்டில் பெண் கல்விக்கான முக்கியத்துவம்

தமிழ்நாடு பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மாநிலமாக இருப்பதால், கல்வியை முடித்து வேலைக்காக நகரங்களுக்கு நகரும் பெண்களின் எண்ணிக்கை மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் அதிகமாக இருக்கிறது.

தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை மாநில திட்ட ஆணைய தகவல்படி 64 சதவிகிதமாக இருக்கிறது. இது மத்திய அரசின் தேசிய சராசரியான 43 சதவித்தை விட 21 சதவிகிதம் அதிகம். பெரும்பாலான பட்டப்படிப்பு படித்த பெண்கள் சென்னை, கோவை, திருப்பூர் போன்ற மாவட்டங்களை நோக்கி உற்பத்தி, சேவை சார்ந்த தொழிற்சாலைகளில் பணி செய்வதற்காக நகர்கின்றனர்.

சமீபத்தில் மத்திய அரசின் புள்ளியல் மற்றும் திட்ட செயலாக்க அமைச்சகத்தின் (MINISTRY OF STATISTICS & PROGRAMME IMPLEMENTATION) 2021-2022 ஆண்டு தொழிற்சாலைகளில் நடத்திய சர்வேயின் முடிவில் இந்தியா முழுவதும் 14.9 லட்சம் பதிவு செய்த பெண் தொழிலாளர்கள் பணி செய்கிறார்கள்.

அதில், 6.3 லட்சம் பேர் தமிழ்நாட்டில் வேலை செய்கின்றனர். 70% பெண் தொழிலாளர்கள் தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என தகவல் கிடைத்திருக்கிறது.

கிராமப்புறங்களில் பெண்களுக்கு என்ன மாதிரியான வேலை வாய்ப்புகள் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள புதுக்கோட்டை மாவட்டத்தின் பல பகுதிகளுக்குச் சென்று பார்த்தோம். அங்கு விவசாயம் சார்ந்த பணிகள், சுய உதவிக் குழுக்கள் மூலம் விவசாய மதிப்புக் கூட்டுப் பொருட்கள் தயாரித்தல், மாடித் தோட்டம், கால்நடை வளர்ப்பு மட்டுமே பரவலான வேலைவாய்ப்புகளாக இருக்கிறது.

தமிழ்நாட்டில் பெண்களுக்கான வேலை

கிராமப்புறத்தில் விவசாயம், கால்நடை வளர்ப்புதான் பெண்களுக்கான வேலை

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குளம் அருகே இருக்கும் வடகாடு கிராமத்தில் வசிக்கும் மனோன்மணியம் என்றப் பெண்ணிடம் பிபிசி கிராமபுறப் பெண்களுக்கான வேலைவாய்ப்பு எப்படி இருக்கிறது என்ற கேள்வியை முன் வைத்தோம். இது குறித்து பிபிசி தமிழிடம் அவர் பேசிய போது,

“எனக்கு 35 வயதாக இருந்தபோது நான் கணவரை இழந்தேன். இரண்டு குழந்தைகளை பார்த்துக் கொள்ளவேண்டிய கடமை எனக்கு இருந்தது. எங்களது கிராமம் பின் தங்கியப் பகுதி என்பதால் வேலைவாய்ப்புகள் மிகவும் சொற்பமாகவே இருந்தன.

விவசாயப் பணிகளுக்காக எனது கிராமத்திலிருந்து தொலைதூரம் சென்று 5 முதல் 10 ரூபாய் சம்பளத்திற்கு வேலை செய்தேன். பின்னர் வேளாண் துறை, தோட்டக்கலைத்துறையில் அரசு அளித்த இலவச மண் புழு, வேளாண் உரம் தயாரிப்பது போன்ற பயிற்சிகளை ஆர்வமுடன் கற்று அதனை செயல்படுத்தி தற்போது 3 ஏக்கர் பரப்பளவில் விவசாயம், மலர் சாகுபடி, மண் புழு உரம் தயாரித்தல், கால்நடை வளர்ப்பு, மாடித் தோட்டம் போன்றவற்றை அமைத்து எனது கிராமத்தில் உள்ள பெண்களுக்கு வேலை வாய்ப்புகளை கொடுத்து வருகிறேன்”, என்றார்.

தமிழ்நாட்டில் பெண்களுக்கான வேலை

'படித்த பெண்களுக்கு இங்கே வேலையில்லை'

தொடர்ந்து பேசிய அவர், “நான் படிக்காததால் வெளியூர் நோக்கிச் செல்ல முடியவில்லை. ஆனால் தற்போது எங்கள் கிராமங்களில் படித்த பெண்கள் வேலைக்காக சென்னை, கோவை, திருச்சி போன்ற நகரங்களுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர்.

கல்வி பயிலாத பெண்களுக்கு வேலை வாய்ப்புகள் இல்லை, எனது பகுதியில் இருக்கும் படித்த மற்றும் கல்வி பயிலாத பெண்களுக்கு எங்களது கிராமத்தில் அம்புஆறு வேளாண் உற்பத்தியாளர் நிறுவனத்தை சுய உதவிக் குழுக்களுடன் இணைந்து துவங்கி சுற்றுவட்டாரப் பகுதிகளில் விளையும், கடலை, எள், விதைகள் கொள்முதல் செய்து மதிப்புக் கூட்டுப் பொருளாக அதனை மாற்றி விற்பனை செய்கிறோம்.

இதன் மூலம் கிராமப்புறப் பெண்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கி வருகிறோம்”, எனக் கூறுகிறார்.

புதுக்கோட்டையில் நிலைமை இப்படியிருந்தால், திருச்சியில் உள்ள பெண்கள் கூறுவது வேறாக இருக்கிறது. அந்த மாவட்டத்தில் பெண்களின் இடப் பெயர்வு எப்படி உள்ளது என்பதை அறிந்துகொள்ள திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள தில்லாம்பட்டி கிராமத்திற்கு சென்று அந்த பகுதி பெண்களிடம் பேசினோம்.

திருச்சி எல்லைப் பகுதியில் அமைந்திருக்கிறது தில்லாம்பட்டி கிராமம், 400 வீடுகளை மட்டுமே கொண்டது. இங்கிருக்கும் 75% பெண்கள் இவர்களது கிராமத்தில் வேலை வாய்ப்பு இல்லாததால் கோவையில் உள்ள நூற் பாலைகள், திருப்பூர் ஆயத்த ஆடை தொழிற்சாலைகளுக்கு பணிபுரியச் செல்கின்றனர்.

தமிழ்நாட்டில் பெண்களுக்கான வேலை
படக்குறிப்பு, யோகச்சித்ரா

கிராம பெண்கள் இடம்பெயரக் காரணம் என்ன?

பாரம்பரியத் தொழில் அழிவால் வேலை தேடி நகர்வதாக கூறுகிறார் அக்கிராமத்தைச் சேர்ந்த யோகசித்ரா. இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய போது,

“எங்களது கிராமம் ஒரு குக்கிராமம், டெல்டா பகுதியில்லை. மானாவாரி விவசாயம் தான் செய்து வந்தோம். செயற்கை வைரம் பட்டைத் தீட்டும் தொழிலை எங்கள் கிராமத்தில் உள்ள அனைத்து மக்களும் பாரம்பரியத் தொழிலாக பார்த்து வந்தனர்.

15 ஆண்டுகளுக்கு முன்பு சீன செயற்கை வைரக்கல் இறக்குமதி செய்யப்பட்டதால் எங்களது தொழில் முடங்கியது, பின்னர் வேலைக்காக எங்களது கிராமத்தில் வசித்த மக்கள் திருப்பூர், ஈரோடு போன்ற பகுதிகளில் இருக்கும் பனியன் கம்பெனிக்கு குடும்பம் குடும்பமாக நகரத் தொடங்கிவிட்டனர்”, என்றார்.

தமிழ்நாட்டில் பெண்களுக்கான வேலை

கிராமத்தை விட்டு வெளியேறும் இளம் பெண்கள்

தொடர்ந்து பேசிய யோகசித்ரா, “எங்களது கிராமத்தில் 75% பேருக்கு தையல் தொழில் தெரியும். +2 முடித்தவுடன் வேலைக்காக திருப்பூர் பனியன் கம்பெனி, கோவை, ஈரோடு நூற்பாலையில் வேலைக்காக 50% பெண்கள் சென்றுவிட்டனர். இவர்கள் ஒரு 4 ஆண்டுகள் வேலை செய்து பணம் சேமித்து வைத்து நகை வாங்கித் திருமணம் செய்து கொள்கின்றனர்.

அதன் பின்னர் அவர்களது வேலை வாய்ப்பு கேள்விக்குறிதான், எங்களுக்கு எந்த இலவசங்களும் வேண்டாம். திருச்சிப் பகுதியில் ஒரு தொழிற்சாலை உருவாக்கினால் சுற்றியுள்ள கிராமப் பெண்களுக்கு நிரந்தரமான வேலை வாய்ப்புகள் கிடைக்கும்”, என்பதே இவரது பார்வையாக இருக்கிறது.

வேலைக்காக நகர்ந்தால் பல்வேறு சிக்கல்களை சந்திப்பதாக கூறுகிறார் அந்த கிராமத்தைச் சேர்ந்த ஜெயலெட்சுமி. இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர் கூறும்போது,

“கிராமபுறத்தில் வேலைவாய்ப்புகள் இல்லாததால் இங்கிருந்து குடும்பத்துடன் திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை செய்ய இடம் பெயர்ந்தோம். அங்கே வாரம் 4 ஆயிரம் வரை சம்பளம் கிடைத்தது. ஆனால் அது வீட்டு வாடகை, சமையல் என செலவு செய்யவே சரியாக இருந்தது.

மேலும் அங்கிருந்து வீட்டிற்கு ஒரு திருவிழா என்றாலும்கூட வர முடியவில்லை, கடுமையான வேலைப்பளு இருந்ததால் குறைந்த அளவு வருவாய் கிடைத்தாலும் போது என மீண்டும் கிராமத்திற்கு திரும்பி, பள்ளி சீருடை தைத்துக் கொடுக்கும் வேலையை செய்து வருகிறேன்”, என்றார்.

குடும்ப கஷ்டத்திற்காக சவால்களை சந்தித்து பெண்கள் வேலை செய்வதாக கூறுகிறார் சரஸ்வதி. பிபிசி தமிழிடம் அவர் பேசிய போது,

“குடும்ப கஷ்டத்திற்காக திருப்பூர், கோவை போன்ற நகரங்களுக்கு வேலைக்காக புலம் பெயர்கிறோம். ஆனால், அங்கே கடும் பணி சுமையை சந்திக்கிறோம். குறிப்பாக இரண்டு ஷிப்ட் வேலை செய்ய சொல்வது, தரமற்ற உணவு, விடுமுறையின்மை, என பல பிரச்சனைகள் இருக்கின்றனர். 7 ஆண்டுகள் பணி புரிந்தேன், குழந்தை பிறந்ததால் சொந்த ஊர் திரும்பி உள்ளேன்.

இப்போது இங்கேயே தற்காலிகமாக பொருளாதார தேவையை பூர்த்தி செய்ய தையல் தொழில் செய்து வருகிறேன். இதில் போதிய வருவாய் கிடைப்பதில்லை”, என்கிறார் சரஸ்வதி.

திருச்சியில் பல்வேறு கிராமங்களில் பள்ளிப் படிப்பை முடித்தவுடன் வேலைக்கு இளம் வயது பெண்கள் செல்வதை பார்க்க முடிகிறது.

தமிழ்நாடு பெண்கள்

+2 முடித்தவுடன் நூற்பாலையில் வேலை

இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய ஜீவிதா கூறும்போது, "கடந்த இரண்டு வருடத்திற்கு முன்னால் பன்னிரெண்டாம் வகுப்பை முடித்தேன். வீட்டில் பொருளாதார நெருக்கடி. எனக்கு பின் இருக்கும் தம்பி, தங்கையை படிக்க வைப்பதற்காக கோவையில் உள்ள நூற்பாலைக்கு வேலைக்குச் சென்றேன்.

அங்கே நூல் கண்டுகளை பிரிப்பது, அதனை பேக்கிங் செய்வது போன்ற பணிகளை இரண்டு ஆண்டுகளாக செய்து வந்தேன். வேலையில் ஓய்வு கொடுக்க மாட்டார்கள் மாதவிடாய் நேரத்தில் கூட விடுப்பு இருக்காது.

அதனையும் பொறுத்துக் கொண்டுதான் வீட்டின் சூழ்நிலையை முன்னேற்ற பணி செய்தோம், தற்போது கோவில் திருவிழாவிற்காக ஊருக்கு வந்திருக்கிறேன், மீண்டும் செல்ல யோசனையாக இருக்கிறது. என்னைப்போல பல பெண்கள் குறைந்த சம்பளத்திற்கு அங்கே கடுமையான வேலையை செய்து வருகின்றனர்”, எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “கிராமபுறங்களில் அரசு வேலை வாய்ப்புகளை உருவாக்கினால் என்னை போன்ற இளம் பெண்கள் காலையில் பணிக்குச் சென்று இரவு வீட்டுக்குத் திரும்புவோம். குடும்பத்துடன் இருந்தால் அது சந்தோசத்தைக் கொடுக்கும்”, என்கிறார் அவர்.

தமிழ்நாட்டில் பெண்களுக்கான வேலை
படக்குறிப்பு, கிரியா அறக்கட்டளையைச் சேர்ந்த முனைவர் சிவபாலன்.

கிராமப்புற பெண்கள் புலம்பெயர்வுக்கான காரணங்கள் என்ன?

இது குறித்து கிரியா அறக்கட்டளையைச் சேர்ந்த முனைவர் சிவபாலன் பிபிசியிடம் பேசிய போது,

“பெண்கள் புலம் பெயர்வு என்பது பல்வேறு காரணங்களுக்காக நடைபெறுகிறது. 88% பெண்கள் திருமண வாழ்விற்காக புலம்பெயர்கின்றனர்.

52% பெண்கள் வேலை வாய்ப்பிற்காக கிராமபுறங்களிலிருந்து உற்பத்தித் துறை, நூற்பாலை, ஹோட்டல், கட்டிடப்பணி ஆகிய 4 துறைகளில் வேலை செய்வதற்காக இடப்பெயர்வு என்பது நடைபெறுகின்றனர்.

கிராமங்களில் விவசாய வேலைகள் இல்லை, அப்படியே விவசாய வேலை செய்தாலும் அதில் போதிய வருவாய் இல்லை. திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை கிராமங்களில் இருந்து மாவட்டத்தில் இருக்கும் தொழில் நிறுவனங்களில் பணி செய்ய காலையில் கிளம்பி வந்து மாலை திரும்பிச் செல்கின்றனர். கொரோனா காலத்திற்குப் பிறகு வேலைக்காக பலர் திருச்சி மாநகர் பகுதிக்கே இடம்பெயர்ந்து விட்டனர்”, என்றார்.

தமிழ்நாட்டில் பெண்களுக்கான வேலை

கிராமங்களில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவது எப்படி?

தொடர்ந்து பேசிய அவர், “திருச்சி மாவட்டத்தில் உள்ள கிராமப்புறங்களில் ஆய்வு செய்தோம். அதில் நிரந்தர வேலைவாய்ப்பின்மை, விவசாயத்தில் விளைவிக்கும் பொருட்களுக்கு சரியான விலை கிடைக்கவில்லை என பெண்கள் கூறியதை பார்க்க முடிந்தது.

எனவே எங்களது அறக்கட்டளை வழியாக பெண்களுக்கு விளைவிக்கும் விவசாயப் பொருட்களை மதிப்புக் கூட்டுப் பொருளாக மாற்றி விற்பனை செய்து லாபம் ஈட்டுவது என்ற பயிற்சியை வழங்கி அதன் வழியாக பெண்களை குழுவாக இணைத்து அவர்கள் மதிப்புக் கூட்டு பொருட்களைச் செய்யத் தேவையான இயந்திரங்களை அரசு, வங்கிகள் வழியாக செய்து வருகிறோம்.

பெண்களும் மசாலாப் பொடி, சத்துமாவு, சுக்குப் பொடி, அரிசி பொடி ஆகியவற்றைச் செய்து விற்பனை செய்வதால் பெண்கள் புலம்பெயர்வு செய்வதை தடுக்க முடியும், அவர்களும் பொருளாதார ரீதியாக தன்னிறைவை அடைகின்றனர்”, என்றார்.

தமிழ்நாடு அரசு கிராமபுறப் பெண்களுக்கு ஏற்படுத்தியிருக்கும் வேலை வாய்ப்புகள் தொடர்பான கேள்வியை சமூக நலத்துறையின் உயரதிகாரியிடம் முன் வைத்தது பிபிசி. இது தொடர்பாக பேசிய அவர் கூறும் போது,

"தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் புதுமை பெண் திட்டமும் ஓர் காரணமாக அமைகிறது. தற்போது 2.7 லட்சம் கல்லூரிச் செல்லும் மாணவிகள் பயனடைகின்றனர்.

தமிழ்நாட்டின் கிராமபுறப் பகுதியிலிருக்கும் பெண்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க 100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக அதிகரித்து இருக்கிறோம், அதேபோல் மகளிர் சுய உதவிக் குழுக்கள் வழியாக தொழில் செய்ய கடனுதவிகள் வழங்கி வருகிறோம். இதன் வழியாக அவர்கள் வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ளலாம். கிராமப்புறங்களின் பெண்கள் சார்ந்து தொழிற்சாலை அமைப்பது என்பது அரசு தான் முடிவு செய்யும். அது பற்றி நான் ஏதும் கூற இயலாது" என்றார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)