உத்தரபிரதேசத்தில் பாஜகவின் ராமர் கோவில் உத்தியை உடைத்த அகிலேஷ் வியூகம்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ரஜ்னிஷ் குமார்
- பதவி, பிபிசி நிருபர்
உத்தரப் பிரதேச மாநிலத்தில் மக்களவைத் தேர்தல் முடிவுகள் வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளுக்கு நேரெதிராக வந்துள்ளன.
ஃபைசாபாத் தொகுதியில் இருக்கும் அயோத்தி நகரில் ராமர் கோவிலை முன் வைத்து பாஜக அதிக அளவில் விளம்பரம் செய்தது. ஆனால், அந்த தொகுதியில் மூன்று முறை எம்பியாக இருந்த பாஜக வேட்பாளர் லல்லு சிங்கை சமாஜ்வாதி கட்சியின் அவதேஷ் பிரசாத் தோற்கடித்திருக்கிறார்.
தேர்தல் முடிவுகளுக்கு முன்னர் வெளியான பெரும்பாலான கருத்துக்கணிப்புகளிலும் உத்தரப் பிரதேசத்தில் பாஜக 70 தொகுதிகளை கைப்பற்றும் என கூறப்பட்டது. ஆனால், வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும், `உத்தரப் பிரதேசம்’ வேறு ஒரு கதையை சொல்லத் தொடங்கியது.
`400-ஐ தாண்டும்’ என்று பிரதமர் நரேந்திர மோதி சவால்விட்டு பரப்புரை செய்த நிலையில், உத்தரப் பிரதேசத்தில் அதிகபட்ச இடங்களை கைப்பற்ற வேண்டும் என்பது பாஜகவின் ஆசையாக இருந்தது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
ஆனால் தேர்தல் முடிவுகளின்படி உத்தரப் பிரதேசத்தில் பாஜகவை இந்தியா கூட்டணி வீழ்த்திவிட்டது.
பாஜக 33 தொகுகளிலும், இந்தியா கூட்டணி 43 தொகுகளிலும் வெற்றி பெற்றுள்ளன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆர்எல்டி இரண்டு இடங்களை கைப்பற்றியுள்ளது.
அதாவது, தேசிய ஜனநாயக கூட்டணி 35 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது. இதன் விளைவாக பாஜகவால் தனிப்பெரும்பான்மையை பெற முடியவில்லை. 543 இடங்களைக் கொண்ட மக்களவையில் தனிப் பெரும்பான்மைக்கு பாஜக 272 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். இந்த முறை உத்தரப் பிரதேசம் பாஜகவுக்கு கைகொடுக்கவில்லை.
இம்முறை உ.பி.யில் சமாஜ்வாதி கட்சி 62 தொகுதிகளிலும், காங்கிரஸ் 17 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தின. மொத்தமுள்ள 62 தொகுதிகளில் சமாஜ்வாதி கட்சி 37 தொகுதிகளிலும், காங்கிரஸ் 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.
2019 பொதுத் தேர்தலில் உ.பி.யில் பாஜக 63 தொகுதிகளைப் பெற்றிருந்தது. பிஎஸ்பி 9 தொகுதிகளிலும், சமாஜ்வாதி கட்சி 5 தொகுதிகளிலும், அப்னா தளம் (சோனேலால்) 2 தொகுதிகளிலும், காங்கிரஸ் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றன.
ஆனால், உத்தரப் பிரதேசத்தில் பாஜக 2019 தேர்தலில் பெற்ற வெற்றியை இந்த முறை சாத்தியமாக்க முடியவில்லை. அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி தோல்வியைத் தழுவினார். இந்த முறை, காந்தி-நேரு குடும்பத்தின் விசுவாசியான கிஷோரி லால் சர்மா அத்தொகுதியில் போட்டியிட்டதால், ஸ்மிருதி இரானியால் அங்கு வெற்றி பெற முடியவில்லை.

பட மூலாதாரம், Getty Images
பாஜகவுக்கு அதிர்ச்சியளித்த முடிவுகள்
2019 தேர்தலில் அமேதி தொகுதியில் பாஜக ஸ்மிருதி இரானியை நிறுத்தி, ராகுல் காந்தியைத் தோற்கடித்தபோது, 'நேரு-காந்தி குடும்பத்தின் வாரிசை ஒரு சாதரண பாஜக தலைவர் அவரது கோட்டையிலேயே தோற்கடித்துவிட்டார்’ என்ற பேச்சுகள் எழுந்தது.
இந்த முறை ராகுல் காந்தி ஸ்மிருதி இரானியை எதிர்த்து தேர்தலில் போட்டியிடவில்லை, மாறாக ஒரு சாதாரண வேட்பாளரை களமிறக்கி வெற்றி பெற்றுள்ளார்.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியபோது ஆரம்பத்தில் பிரதமர் மோதியும் வாரணாசி தொகுதியில் பின்னடைவை சந்தித்த போதிலும், பின்னர் முன்னிலை பெற்றார். ஆனால், இம்முறை வாரணாசியில் மோதி எவ்வளவு பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றிருக்கிறார் என்பதை நாம் பார்க்க வேண்டும்.
இந்த தேர்தலில் மோதிக்கு வாரணாசி தொகுதியில் 6,12,970 வாக்குகள் கிடைத்திருக்கிறது. அவருக்கு எதிராக போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராயை விட 1,52,513 வாக்குகள் கூடுதலாக பெற்று தொகுதியை கைப்பற்றியிருக்கிறார். இருப்பினும் கடந்த தேர்தலை விட குறைவான வாக்கு சதவீதத்தை பெற்றிருக்கிறார் மோதி.
2019 மக்களவைத் தேர்தலில், நரேந்திர மோதி வாரணாசியில் சுமார் 4,80,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதாவது 63 சதவீத வாக்குகளைப் பெற்றார். ஆனால் இந்த முறை பிரதமர் மோதிக்கு அவ்வளவு பெரிய வெற்றி கிடைக்கவில்லை.
2014 இல், மோதி வாரணாசியில் மொத்தம் 5,81,022 வாக்குகளைப் பெற்றார், இது அங்கு மொத்த வாக்குகளில் 56 சதவீதமாக இருந்தது. அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு 2,09,238 வாக்குகள் கிடைத்தது.
உத்தரப் பிரதேசத்தில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள் களத்தில் இருந்தனர். பிரதமர் மோதி வாரணாசி தொகுதியிலும், ராகுல் காந்தி ரேபரேலி தொகுதியிலும் போட்டியிட்டனர். ராஜ்நாத் சிங் மற்றும் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோரும் களத்தில் இருந்தனர். அகிலேஷ் மனைவி டிம்பிள் யாதவும் மெயின்புரியில் போட்டியிட்டார்.
உத்தரப் பிரதேசத்தில் நிலவிய பொருளாதார நெருக்கடி, விவசாயம் சார்ந்த பிரச்னைகள் மற்றும் அரசியல் சாசனத்தை பலவீனப்படுத்துதல் போன்ற பிரச்னைகளை சமாஜ்வாதி கட்சியும், காங்கிரஸும் கடுமையாக விமர்சித்தன. இடஒதுக்கீடு பிரச்னையை பற்றி இரு கட்சிகளும் மக்களிடையே பேசியது.
இடஒதுக்கீட்டை நிறுத்த பாஜக விரும்புவதாக காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் குற்றம்சாட்டின. இதனுடன், இந்திய ராணுவத்தில் ஆள் சேர்ப்பதற்கான அக்னிவீர் திட்டம் குறித்தும் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார். அக்னிவீர் திட்டத்துக்கு எதிராக இளைஞர்கள் மத்தியில் எழுந்த கோபம் போராட்டங்களில் பலமுறை பிரதிபலித்தது.

பட மூலாதாரம், Getty Images
இது யோகிக்கு எந்த மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தும்?
உ.பி.யில் தொகுதிகளை பாஜக இழந்திருப்பது, பிரதமர் மோதிக்கு மட்டுமின்றி, முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கும் கெட்ட செய்தி என, உத்தரப் பிரதேச மூத்த பத்திரிகையாளர் ஷரத் பிரதான் தெரிவித்துள்ளார்.
ஷரத் பிரதான் கூறுகையில், “பாஜகவுக்கு 50 இடங்கள் கிடைக்கும் என்று நினைத்தேன். ஆனால், எதிர்பார்க்காத வண்ணம் 33 இடங்கள் தான் கிடைத்துள்ளது. இது பிரதமர் மோதி மற்றும் அமித்ஷாவின் ஆணவத்தை மக்கள் நிராகரித்ததை காட்டுகிறது. மோதி பலம் அதிகரித்தால் அரசியலமைப்புச் சட்டத்திற்கு ஆபத்து ஏற்படும் என்று தாராளவாத ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட தலித்துகள், பிற்படுத்தப்பட்ட சாதிகள் மற்றும் சாமானியர்களை எதிர்க்கட்சிகள் நம்ப வைத்தன. இதுவே உபியில் அவர்களின் வெற்றிக்கு வழிவகுத்தது.
அதனால்தான் தலித் வாக்காளர்களும் மாயாவதி கட்சியை விட்டு வெளியேறி இந்தியா கூட்டணிக்கு வாக்களித்தனர். பாஜக ஆட்சியில் இருந்தால் இடஒதுக்கீட்டை வலுவிழக்கச் செய்யும் என்ற இந்தச் செய்தி தலித்துகள் மத்தியில் ஆழமாகப் போய் சேர்ந்தது. மாயாவதி ஜாதவ் பிரிவை சேர்ந்தவர். ஆனால், ஜாதவ் இன மக்கள் கூட அவருக்கு வாக்களிக்காமல் இந்தியா கூட்டணிக்கு வாக்களித்தனர்.” என்றார்.
ஷரத் பிரதான் மேலும் கூறுகையில், “உ.பி.யில் பாஜக 30க்கும் மேற்பட்ட தொகுதிகளை இழந்திருப்பது யோகி ஆதித்யநாத்தையும் பாதிக்கும். அமித் ஷாவும், நரேந்திர மோதியும் இந்தத் தோல்விக்கு யோகி மீது குற்றம் சாட்டி, அவரை முதல்வர் நாற்காலியில் இருந்து இறக்க வாய்ப்புகள் உள்ளன. நரேந்திர மோதி உ.பி.யில் தான் அடைந்த உச்சத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக இறங்கத் தொடங்கியுள்ளார்.
பிரதான் கூறுகையில், "உ.பி.யில் தன்னை விட பெரிய தலைவர் யாரும் இல்லை என்றும், இந்துத்துவா முன் யாரும் நிற்க முடியாது என்றும் யோகி நினைத்தார். ஆனால் தேர்தல் முடிவுகள் அவரின் எண்ணம் தவறு என்பதை நிரூபித்துள்ளது. இந்திய மக்கள் சர்வாதிகாரத்தை விரும்புவதில்லை. ஸ்மிருதி இரானியின் தோல்வி மோதியின் தோல்வியை பிரதிபலிக்கிறது. மோதியின் பாணியிலேயே சென்று ஸ்மிருதி இரானியை சரியாக தோற்கடித்துள்ளார் ராகுல் காந்தி. ஸ்மிருதியை தோற்கடிப்பது ராகுலின் நல்ல உத்தி, அதுவும் ஒரு சாதாரண வேட்பாளரை முன்னிறுத்தி!

பட மூலாதாரம், Getty Images
உபி தோல்விக்கு என்ன காரணம்?
ஷரத் பிரதான் கூறுகையில், "இந்த தேர்தலில் உத்தரப் பிரதேசம் நமக்கு இரண்டு முக்கிய விஷயங்களை கூறுகிறது. முதல் செய்தி, தலித்துகள் தனது அடிமைகள் அல்லர் என்பது மாயாவதிக்கு தெரிந்திருக்கும். இரண்டாவது, இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் மத்தியில் பிரிவினை ஏற்படுத்தி ஒவ்வொரு தேர்தலிலும் வெற்றி பெற முடியாது என்பது பாஜகவுக்கு புரிந்திருக்கும்" என்றார்.
அலஹாபாத் தொகுதியில் இருந்து எம்.பி., ஆன ரீட்டா பகுகுணா ஜோஷி யோகியின் ஆட்சியில் அமைச்சராகவும் இருந்தவர். இந்த முறை அவருக்கு பாஜக தொகுதி கொடுக்கவில்லை. அவருக்குப் பதிலாக, பாஜக மூத்த தலைவர் கேசரிநாத் திரிபாதியின் மகன் நீரஜ் திரிபாதிக்கு தொகுதி ஒதுக்கப்பட்டது.
இந்த முறை உ.பி.யில் பாஜகவுக்கு 33 தொகுதிகள் மட்டுமே கிடைத்திருப்பது ஏன் என்று ரீட்டா பகுகுணா ஜோஷியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
ரீட்டா பகுகுணா ஜோஷி கூறுகையில், "நாங்கள் ஆட்சி அமைப்போம், ஆனால் 2014 மற்றும் 2019 தேர்தல்களில் கிடைத்த வெற்றியை இம்முறை பெறப் போவதில்லை. நாங்கள் உ.பி.யில் பல்வேறு செயல்பாடுகளை மேற்கொண்டோம், ஆனால் வேலைவாய்ப்பு பற்றிய கேள்வியும் விமர்சனமும் எங்கள் முன் வைக்கப்பட்டது. அயோத்தியிலும் கூட நாங்கள் பின்தங்கியுள்ளோம். இந்த முறை ஏன் இப்படி நடந்தது என்பதை பற்றி சிந்திக்க வேண்டும்.” என்றார்.
உத்தரப் பிரதேச தேர்தல் முடிவுகள் யோகி ஆதித்யநாத்தையும் பாதிக்குமா என்று ரீட்டா பகுகுணா ஜோஷியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
ஜோஷி பதிலளிக்கையில், "எங்களுக்கு பெரும்பான்மை உள்ளது, எந்த பாதிப்பும் ஏற்படாது." என்றார்.

பட மூலாதாரம், Getty Images
அகிலேஷ் யாதவின் வியூகம் என்ன?
இந்த தேர்தலில் சமாஜ்வாதி கட்சியின் தெளிவான வியூகத்தை பல அரசியல் ஆய்வாளர்கள் பாராட்டி வருகின்றனர்.
இம்முறை, அகிலேஷ் யாதவ், யாதவ் அல்லாத சாதியினருக்கு கூடுதல் கவனம் செலுத்தி தொகுதிகள் ஒதுக்கினார்.
முஸ்லிம்கள் மற்றும் யாதவர்கள் சமாஜ்வாதி கட்சியின் வாக்கு வங்கியாகக் கருதப்படுகிறார்கள். ஆனால் இந்த முறை அகிலேஷ் யாதவ் 62 பேரில் ஐந்து யாதவ் வேட்பாளர்களை மட்டுமே தேர்தலில் நிறுத்தினார், அவர்கள் அனைவரும் அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
2019 இல், சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் ஜெயந்த் சவுத்ரியின் ராஷ்ட்ரிய லோக் தளம் ஆகியவற்றுடன் கூட்டணி வைத்திருந்தது. அப்போது சமாஜ்வாதி கட்சி 37 தொகுகளில் போட்டியிட்டு 10 யாதவ் வேட்பாளர்களை நிறுத்தியது. 2014 ஆம் ஆண்டில், உ.பி.யில் 78 இடங்களில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர்களை நிறுத்தியது, இதில் மொத்தம் 12 பேர் யாதவ் வேட்பாளர்கள் மற்றும் நான்கு பேர் முலாயம் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
அலஹாபாத் பல்கலைக்கழகத்தின் அரசியல் பிரிவு பேராசிரியர் பங்கஜ் குமார், தொகுதி ஒதுக்கீட்டு வியூகத்திற்காக அகிலேஷ் யாதவை பாராட்டியுள்ளார்.
பேராசிரியர் பங்கஜ் குமார் கூறுகையில், “சமாஜ்வாதி கட்சி தொகுதி ஒதுக்கீட்டை மிகச் சிறப்பாக செய்துள்ளது. அயோத்தியில் தலித் ஒருவருக்கு தொகுதி ஒதுக்கியது மிகவும் புத்திசாலித்தனமான முடிவு. அங்கு போட்டியிட்ட அவதேஷ் பிரசாத் மூத்த சமாஜ்வாதி உறுப்பினர் ஆவார். அதே போல் பல்லியா தொகுதியில் சனாதன் பாண்டேவுக்கு தொகுதி ஒதுக்கியதும் புத்திசாலித்தனமான முடிவு.”
“அகிலேஷ் யாதவ் பிடிஏ ('PDA' or 'Pichde -backward classes or OBCs) என்னும் திட்டத்தை முன்வைத்து அனைத்து சாதியினரும் அதில் சேர்க்கப்பட்டனர், மறுபுறம், பாஜக முஸ்லிம்களுக்கு எதிரான பல விஷயங்களைச் செய்தது. பாஜக தொகுதி ஒதுக்கீட்டையும் மிக மோசமான முறையில் செய்தது. தொகுதி ஒதுக்கீடு பற்றி யோகியிடம் ஆலோசிக்கவில்லை என்று நினைக்கிறேன். கௌஷாம்பி தொகுதியில், ராஜா பையா தனக்கு வேண்டப்பட்ட ஒருவருக்கு தொகுதி ஒதுக்கச் சொன்னார் ஆனால் அமித் ஷா ஒப்புக்கொள்ளவில்லை. அலஹாபாத்தில் நீரஜ் திரிபாதி நிறுத்தப்பட்டார். ஆனால் அவரது தோல்வி தற்போது உறுதியாகி விட்டது. அமித் ஷா டெல்லியில் இருந்து கொண்டு தொகுதி ஒதுக்கீடு செய்து கொண்டிருந்தது தான் இதற்கு காரணம்” என்று விளக்கினார்.

பட மூலாதாரம், Getty Images
மாநில அரசியலில் என்ன தாக்கம் ஏற்படும்
பேராசிரியர் பங்கஜ் குமார் கூறுகையில், "யோகியின் ஆலோசனைப்படி தொகுதிகள் வழங்கப்படவில்லை, ஆனால் யோகி மீதும் தவறு உள்ளது. யோகி தொண்டர்களுடன் எந்த தொடர்பும் இல்லாமல் இருக்கிறார். அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை."
"அவர்கள் குஜராத் பாணியில் ஆட்சியை நடத்த விரும்புகிறார்கள். அதிகார வர்க்கத்தின் பலத்தில் அவர்களின் அரசாங்கம் இயங்குகிறது. பொதுமக்கள் மற்றும் கட்சித் தொண்டர்களை விட காவல்துறையைத்தான் அதிகம் நம்புகிறார்கள். இந்தத் தேர்தலில் ஆர்எஸ்எஸ்ஸும் பாஜக சார்பில் இல்லை என்று நினைக்கிறேன். மோதி மிகவும் பலம் மிக்கவர் ஆகி வருகிறார் என்றும் இது தங்களுக்கு நல்லதல்ல என்றும் ஆர்எஸ்எஸ் உணரத் தொடங்கியது.” என்றார்.
இந்தத் தேர்தலில் மாயாவதி முற்றிலும் ஓரங்கட்டப்பட்டு விட்டதாகவும், இனி அவர் பழைய இடத்தை அடைவது கடினம் என்றும் பேராசிரியர் பங்கஜ் நம்புகிறார். "மாயாவதி இடத்தை சந்திரசேகர் நிரப்பலாம்" என்கிறார் பேராசிரியர் பங்கஜ் குமார். நாகினா தொகுதியில் இருந்து அவர் பெற்ற வெற்றியும் இதையே காட்டுகிறது. தேர்தலில் சுயேச்சையாக வெற்றி பெறுவதுதான் முக்கியம்.
உத்தர பிரதேசத்தில் பாஜகவின் மோசமான செயல்பாடு, நரேந்திர மோதியின் மூன்றாவது ஆட்சிக்காலத்தில் பல திட்டங்களை கெடுக்கக்கூடும். மற்றொரு புறம் வட இந்தியாவில் மாநிலக் கட்சிகள் வீழ்ச்சி அடைந்து வரும் நிலையில் அகிலேஷ் யாதவ் வலிமையான தலைவராக உருவெடுத்துள்ளார். அமேதி மற்றும் ரேபரேலியிலும் காங்கிரஸ் வலுவாக உருவெடுத்துள்ளது. இது நரேந்திர மோதி மற்றும் அமித்ஷாவின் விருப்பத்திற்கு மாறானது!
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












