பங்குச்சந்தைகளில் ஏற்றம் - 2 மாதங்களாக தொடர்ந்து வெளியேறும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்

உச்சம் தொட்ட பங்குச் சந்தைகள்: தேர்தல் முடிவுகளால் என்ன நடக்கும்?

பட மூலாதாரம், Getty Images

மக்களவைத் தேர்தலின் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் பா.ஜ.க தலைமையிலான தே.ஜ.கூட்டணிக்கு சாதகமாக வந்துள்ளதை தொடர்ந்து, திங்கள்கிழமை (ஜூன் 3) காலை பங்குச் சந்தைகள் மிகப்பெரிய ஏற்றத்துடன் துவங்கின.

சென்செக்ஸ் சுமார் 2,000 புள்ளிகள் ஏற்றத்துடன் துவங்கியது. நாளின் முடிவில் சென்செக்ஸ் சுமார் 2,500 புள்ளிகள் ஏற்றம் பெற்றிருந்தது.

நிஃப்டி ப்ரீ- ஓப்பனிங்கில் (pre-opening) சுமார் 1,000 புள்ளிகள் ஏற்றத்துடன் துவங்கியது. நாளின் இறுதியில் சுமார் 700 புள்ளிகள் ஏற்றத்தில் முடித்தது.

வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியானதைத் தொடர்ந்து, பங்குச் சந்தைகளில் உச்சபட்ச ஏற்றம் காணப்பட்டது. தேர்தல் முடிவுகளால் ஆட்சியில் மாற்றம் இல்லை என்றால், சந்தையின் ஏற்றம் அப்படியே இருக்கும் அல்லது நிலையாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

2024 மக்களவைத் தேர்தலுக்கான கருத்துக் கணிப்புகள், நரேந்திர மோதி மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வருவார் என்று கணித்துள்ளன.

ஆனால், எதிர்க்கட்சிகளின் 'இந்தியா’ கூட்டணி, "இந்த கருத்துக் கணிப்புகள் உண்மை நிலைக்கு அப்பாற்பட்டவை. இந்தியா கூட்டணி 295 இடங்களை வெல்லும்,” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது.

பங்குச் சந்தையில் என்னென்ன மாற்றங்கள் நிகழும்?

உச்சம் தொட்ட பங்குச் சந்தைகள்: தேர்தல் முடிவுகளால் என்ன நடக்கும்?

பட மூலாதாரம், Getty Images

முதலீட்டாளர் பரிமல் அடே, இன்று சந்தை தொடங்கிய பிறகு சமூக ஊடக வலைதளமான எக்ஸ்-இல் சில கணிப்புகளைப் பதிவிட்டார்.

மே 2029-இல் நிஃப்டி 50 ஆயிரத்தைத் தாண்டும் என்றும், சென்செக்ஸ் 1.5 லட்சத்தைத் தாண்டும் என்றும் அவர் மதிப்பிட்டிருக்கிறார்.

திங்கட்கிழமை ஆரம்ப வர்த்தகத்தில் சென்செக்ஸ் இரண்டாயிரம் புள்ளிகள் அதிகரித்த பிறகு சந்தை ஆய்வாளர் சுனில் ஷா செய்தி முகமையான பிடிஐ-க்கு பேட்டியளித்தார்.

"சந்தை ஏற்கனவே கணிக்கப்பட்ட ஏற்றத்துடன் தொடங்கியது,” என்றார்.

சுனில் ஷா-வின் கூற்றுபடி, "பங்குச்சந்தை ஒரு குறிப்பிடத்தக்க இடைவெளியுடன் துவங்கியது (பங்குச்சந்தை முந்தைய நாளை விட அதிக விலையில் தொடங்கும் நிலை), இது ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது தான். ஏனெனில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு சனிக்கிழமை அன்று முடிந்தது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் அறிவிக்கப்பட்டன, அதில் தற்போது ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வரும் என்பதற்கான தெளிவான அறிகுறிகள் இருந்தன,” என்றார்.

பங்குச் சந்தை ஏற்றத்துடன் துவங்கியது ஏன்?

"பங்குச்சந்தையைப் பொறுத்தவரை, கொள்கைகளின் தொடர்ச்சி முக்கியம். அதனால் இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. தற்போதைய அரசாங்கத்தின் கொள்கைகள் தொடர வேண்டும் என பலர் நினைக்கின்றனர். அதிக வளர்ச்சி விகிதங்களை எட்டுவது, முதலீட்டாளர் மற்றும் வணிக நிறுவனத்துடன் நட்புறவு போன்ற கொள்கைகள் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உள்கட்டமைப்பு மற்றும் பிற தொழில்களுக்கான செலவினங்களும் தொடரும். கருத்துக்கணிப்பு முடிவுகள் சந்தையில் வரவேற்பைப் பெற்றுள்ளன. இதன் காரணமாகப் பங்குச்சந்தை 2,000 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்து, ஏறுமுகத்துடன் துவங்கியது,” என்று விளக்கினார்.

சமூக ஊடகங்களில், பங்குச்சந்தை ஏற்ற நிலை குறித்து மக்கள் வெவ்வேறு கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட கருத்தையும் சிலர் பகிர்ந்து வருகின்றனர்.

இடைக்கால ஜாமீன் முடிவடைந்ததை அடுத்து, ஞாயிற்றுக்கிழமை ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில் கட்சியினர் மத்தியில் கேஜ்ரிவால் பேசினார்.

"அவர்களைச் சார்ந்திருக்கும் பலர் பங்குச் சந்தையில் முதலீடு செய்திருக்கிறார்கள். அதனால் தான் கருத்துக்கணிப்பில் அதிக தொகுதிகளைக் காட்டியுள்ளனர். நாளை பங்குச் சந்தைகள் தொடங்கும் போது, ​​அவை ஏற்ற நிலையில் இருக்கும், அந்தச் சமயத்தில் அவர்களின் பங்குகளை விற்று விட்டு வெளியேறிவிடுவார்கள்,” என்று குற்றம்சாட்டினார்.

சர்வதேச ஊடகங்கள் என்ன சொல்கின்றன?

உச்சம் தொட்ட பங்குச் சந்தைகள்: தேர்தல் முடிவுகளால் என்ன நடக்கும்?

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்க ஊடக நிறுவனமான ப்ளூம்பெர்க், இந்தியத் தேர்தலின் கருத்துக் கணிப்புகள் தொடர்பான செய்திகளை வெளியிடும் போது, ​​'இந்தியத் தேர்தலில் மகத்தான வெற்றிக்கு மோதி தயாராகிவிட்டார் என்பதை வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன' என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்தச் செய்தி அறிக்கையில், “பிரதமர் நரேந்திர மோதியின் கட்சி தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்தியத் தேர்தலில் தீர்க்கமான பெரும்பான்மையை வெல்லும் என்று பல கருத்துக் கணிப்புகள் காட்டுகின்றன. இந்த முடிவுகள் கடந்த வாரத்தில் அதிக ஏற்ற இறக்கத்துடன் இருந்த இந்திய பங்குச் சந்தையை ஊக்குவிக்கும்.” இவ்வாறு செய்தி அறிக்கையில் பதிவிடப்பட்டுள்ளது.

ஜியோஜித் பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் தலைமை முதலீட்டு வியூக நிபுணர் வி.கே.விஜயகுமார் புளூம்பெர்க் ஊடகத்துக்கு அளித்தப் பேட்டியில் திங்கட்கிழமை பங்குச் சந்தையில் ஏற்றம் இருக்கும் என்று கணித்திருந்தார்.

மே மாத ஆரம்பத்திலிருந்து அதிகரித்து வரும் தேர்தல் தொடர்பான பதற்ற நிலையை எக்ஸிட் போல் முடிவுகள் சீராக்கி உள்ளது என்றும் அவர் கூறினார்.

செய்தி அறிக்கையில், "மார்ச் மாதத்துடன் முடிவடைந்த கடந்த நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 8%-க்கும் அதிகமாக வளர்ச்சியடைந்துள்ளது. இந்த வளர்ச்சி விகிதத்தால் சர்வதேச அளவில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம் என்ற நிலையை இந்தியா எட்டியுள்ளது. இந்த ஆண்டு வளர்ச்சி விகிதம் 7%-க்கும் இருக்கும் என மத்திய வங்கி மதிப்பிட்டுள்ளது. கடந்த வாரம் எஸ்&பி குளோபல் ரேட்டிங்ஸ் நிறுவனம், இந்தியாவின் கிரெடிட் ரேட்டிங் அதிகரிக்கும் என்று கணித்தது.

எலாரா செக்யூரிட்டீஸ் இந்தியா லிமிடெட்-இன் பொருளாதார நிபுணர் கரிமா கபூர் கூறுகையில், “தேர்தல் முடிவுகள் கருத்துக்கணிப்புகளுக்கு ஏற்ப இருந்தால், அது பங்குச் சந்தைகளுக்கு மிகவும் சாதகமாக இருக்கும், ஏனெனில் ஆட்சி மாறவில்லை எனில் தற்போதைய கொள்கைகள் தொடரும். மேக்ரோ பொருளாதார ஸ்திரத்தன்மை, மீட்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தும். உள்கட்டமைப்பு உருவாக்கத்திலும் தொடர்ந்து கவனம் செலுத்தப்படும்,” என்றார்.

எம்கே குளோபல் ஃபைனான்சியல் சர்வீசஸின் பொருளாதார நிபுணர் மாதவி அரோரா, 'ஆட்சி தொடர்வது பங்குச்சந்தைக்கு நல்லது’ என்று பிரிட்டிஷ் வணிகச் செய்தித்தாளான 'ஃபினான்ஷியல் டைம்'ஸிடம் கூறினார்.

அவர் கூற்றுப்படி "தேர்தல் முடிவுகள் கருத்துக்கணிப்பு முடிவுகளில் இருந்து வேறுபட்டிருக்கலாம், ஆனால் அரசியல் நிலைத்தன்மை தற்போதைய சூழ்நிலைக்கு நல்லது. அது பொருளாதாரத்தில் நிலைத்தன்மையைக் கொண்டுவரும்," என்றார்.

சந்தையை விட்டு வெளியேறிய வெளிநாட்டு முதலீட்டாளர்கள்

உச்சம் தொட்ட பங்குச் சந்தைகள்: தேர்தல் முடிவுகளால் என்ன நடக்கும்?

பட மூலாதாரம், ANI

அனைத்து முதலீட்டாளர்களும் இந்திய சந்தையைத் தேடி வருகிறார்கள் என்று சொல்லி விட முடியாது. பிரிட்டன் வார இதழான 'தி எகனாமிஸ்ட்' கடந்த வாரம் ஒரு செய்தி அறிக்கையை வெளியிட்டது. அதன்படி ஏப்ரல் மாதத்தில் மட்டும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஒரு பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ 8,311 கோடி) மதிப்புள்ள இந்திய பங்குகளை விற்றதாகக் கூறப்பட்டது.

மே மாதத்தில், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 4.2 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ 34,906 கோடி) மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளனர். இருப்பினும், இது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வைத்திருக்கும் சுமார் 900 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ 74 லட்சம் கோடி) மதிப்புள்ள இந்தியப் பங்குகளில் ஒரு சிறிய பகுதிதான்.

அதே சமயம் இந்தியப் பங்குச் சந்தையில் வெளிநாட்டினரின் பங்கு 18% ஆக இருப்பதாகவும், இது கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில் மிகக் குறைந்த சதவீதம் என்றும் அச்செய்தி அறிக்கை சுட்டிக்காட்டியது.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியச் சந்தையில் இருந்து வெளியேறிய போதிலும், இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்து வருகிறது. நாட்டின் பொருளாதாரம், வருமானம் உயர்வதையும் கடன் சுமை குறைவதையும் உறுதிப்படுத்துகிறது. அதாவது குறைந்த அபாயத்துடன் அதிக லாபத்தை அளிக்கிறது என்று அச்செய்தி அறிக்கையில் வெளியிடப்பட்டது.

"இந்தியா வெளிநாட்டு முதலீட்டாளர்களை எவ்வாறு நடத்துகிறது என்பதற்கான எளிய பதில்: இந்தியாவில் வெளிநாட்டு மூலதனத்தின் நேரடி முதலீட்டுக்கு வாய்ப்புகள் இல்லை, ஏனெனில் மூலதன ஆதாயங்கள் மற்றும் பங்குத்தொகைகளுக்கு வரிகள் விதிக்கப்படும். இருப்பினும், இந்த நிறுவனங்கள் இந்தியாவில் பதிவு செய்யப்பட்டிருந்தால், அவற்றுக்கு வரி விலக்கு அளிக்கப்படலாம் அல்லது குறைந்தபட்ச வரி வரம்பில் சேர்க்கப்படலாம்," என்றும் அச்செய்தி அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)