உத்தரப் பிரதேசத்தின் கான்பூர் அரசு மருத்துவமனையில் குவியும் பிணங்கள் - காரணம் என்ன?

பட மூலாதாரம், Getty Images
உத்தரப் பிரதேசம் முழுவதும் தற்போது கடும் வெப்பத்தின் பிடியில் சிக்கியுள்ளது. மாநிலத்தின் பல நகரங்களில் வெப்பநிலை 49 டிகிரியை எட்டியுள்ளது. கான்பூரிலும் தொடர்ந்து வெப்ப அலை நிலவுகிறது.
இங்குள்ள அரசு மருத்துவமனையின் பிரேத பரிசோதனை கூடத்திற்கு கொண்டு வரப்படும் இறந்த உடல்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக கணிசமாக அதிகரித்துள்ளது.
சனிக்கிழமை அன்று, கான்பூரைச் சேர்ந்த பத்திரிகையாளர் அங்கித் சுக்லா பிபிசி இந்திக்காக செய்தி சேகரிக்கச் சென்ற போது, அடையாளம் தெரியாத 32 பேரின் உடல்கள் இங்கு கொண்டு வரப்பட்டதாக கூறினார்.
நகரின் பல்வேறு இடங்களில் இந்த உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. அதேசமயம், 30க்கும் மேற்பட்ட உடல்களுக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
அடையாளம் தெரிந்த மற்றும் தெரியாத சடலங்கள் தொடர்ந்து கொண்டு வரப்பட்டதால், பிணவறையில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டது. தொடர்ந்து பணிபுரிந்ததால் மருத்துவர் ஒருவரின் உடல்நிலையும் மோசமடைந்தது.
பிபிசி தமிழ் இப்போது வாட்ஸ்ஆப்பிலும்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
அடையாளம் தெரியாத 32 பேரின் உடல்கள்

பட மூலாதாரம், ANKIT SHUKLA
32 அடையாளம் தெரியாத உடல்கள் கண்டெடுக்கப்பட்டதை தலைமை மருத்துவ அதிகாரியும் மருத்துவருமான அலோக் ரஞ்சன் உறுதிப்படுத்தியுள்ளார்.
“பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே இறப்புக்கான காரணம் தெரியவரும். இறந்த உடல்களை வைக்க தனி அறையும், ஏ.சி.யும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 3 மருத்துவர்கள் கொண்ட குழு இன்று (சனிக்கிழமை) பிரேத பரிசோதனைப் பணிகளை கவனித்து வருகிறது. 19 உடல்களின் பிரேத பரிசோதனை முடிந்துவிட்டது. இன்னும் 14 உடல்களுக்கான சோதனை நடந்துவருகிறது. 32 அடையாளம் தெரியாத உடல்களை அடையாளம் காண்பதற்காக குறைந்தது 48 மணிநேரம் இங்கு வைக்கப்படும்." என அலோக் ரஞ்சன் கூறினார்.
கூடுதல் மாவட்ட ஆட்சியர் ராஜேஷ் குமார் கூறுகையில், ''இன்னும் உடல்கள் வரவுள்ளன. அவற்றை வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இறந்த உடல்களை ஐஸ்கட்டிகளில் வைக்க ஆலோசனை செய்யப்பட்டது, ஆனால் இடப்பற்றாக்குறை காரணமாக இதைச் செய்ய முடியவில்லை.” என்றார்.
கான்பூரில் வெள்ளிக்கிழமை வெப்பநிலை 48.2 டிகிரி செல்சியஸ் ஆக இருந்தது. அன்றைய நாளில் உத்தரப் பிரதேசத்தின் மிகவும் வெப்பமான நகரமாக கான்பூர் இருந்தது. நகரில் உள்ள எல்.எல்.ஆர் மருத்துவமனையில் வெப்ப வாதத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்த மரணங்கள் வெப்பத்தின் காரணமாக ஏற்பட்டதா இல்லையா என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படல்லை, ஆனால் 'இது அதீத வெப்பத்தின் விளைவு தான்' என கான்பூரின் கூடுதல் போலீஸ் கமிஷனர் ஹரிஷ்சந்திரா ஒப்புக்கொண்டார்.
பிரேத பரிசோதனைக்கு பின் இறுதிச் சடங்குகளை செய்த தனிராம் பாந்தர் கூறுகையில், “கடந்த ஒரு வாரமாக, தினமும் 10-12 சடலங்கள் வருகின்றன. இங்கு போதிய டீப் ஃப்ரீசர் (Deep freezer) இயந்திரங்கள் மற்றும் ஏ.சி இல்லாததால், சடலங்களை பெற்றுக் கொள்ள வருபவர்களும் அதிக சிரமங்களை எதிர்கொள்கிறார்கள். உரிமை கோரப்படாத ஏராளமான சடலங்கள் வெளியில் வைக்கப்பட்டுள்ளன” என்றார்.
ஊர்க்காவல் படையினர் 6 பேர் உயிரிழப்பு

பட மூலாதாரம், @INDIAMETDEPT
பிபிசி இந்திக்காக மிர்சாபூரில் இருந்து ஹரிஷ் சந்திர கேவட்.
உத்தரப் பிரதேசத்தின் கிழக்கு மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிப்பால் பலர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மிர்சாபூர் மற்றும் பல்லியா மாவட்டங்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.
மிர்சாபூரில் அதீத வெப்பம் காரணமாக தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த 13 பேர் உயிரிழந்ததாகவும், 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலின் ஏழாவது கட்ட வாக்குப்பதிவு நாளான சனிக்கிழமையன்று, கடும் வெயிலில் வாக்களிக்க மிர்சாபூருக்கு வந்த பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் வெப்பத்தினால் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு உயிரைக் கூட இழந்தனர்.
அதில் 6 ஊர்க்காவல் படை வீரர்கள் உட்பட மொத்தம் 12 பேர் உயிரிழந்தனர்.
இது தவிர, தேர்தல் பணியில் இல்லாத மேலும் இரண்டு ஊர்க்காவல் படையினரும் உயிரிழந்துள்ளனர்.
ஊர்க்காவல் படையினர் கூறியது என்ன?

பட மூலாதாரம், Getty Images
வாக்குபதிவு இயந்திரங்களை வைப்பதற்கான ‘ஸ்ட்ராங் ரூம்’ (Strong room) மிர்சாபூரின் அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மஜ்வா பிளாக்கின் கட்கா சாவடியில் நிறுத்தப்பட்டுள்ள ஊர்க்காவல் படையினர் பேசுகையில், "நாங்கள் 31ஆம் தேதி இரவு 11 மணிக்கு வந்தோம், ரயிலில் இருந்து இறங்கி, ஸ்ட்ராங் ரூமுக்கு நடந்து சென்றோம், அங்கு எங்களுக்கான பேருந்து மற்றும் சாவடியைத் தேடத் தொடங்கினோம். பேருந்துகள் அங்கும் இங்கும் நின்று கொண்டிருந்தன” என்றார்கள்.
மேலும், “எங்கள் பேருந்தில் நாங்கள் அமர்ந்திருந்தபோது, பேருந்தின் மேற்கூரையிலிருந்து நெருப்பு மழை பொழிவது போல் இருந்தது, நாங்கள் அனைவரும் வியர்வையில் நனைத்திருந்தோம், எங்கள் கண்கள் எரிந்தன.”
“குடிநீர் என்ற பெயரில் இரண்டு டேங்கர்கள் மட்டுமே இருந்தன, நிழலுக்கு ஒதுங்க ஒரு இடமும் இல்லை, பேருந்துகள் ஒரு வரிசையில் நிறுத்தப்படவில்லை. இதனால் நெரிசல் ஏற்பட்டு, மூன்று மணிநேரத்திற்கு மேலாக பேருந்துகளில் இருக்க வேண்டிய நிலை இருந்தது. பின்னர் மதியம் 12 மணிக்குப் பிறகு தான், நாங்கள் வாக்குச் சாவடிக்குக் கிளம்பினோம்." என்று ஊர்க்காவல் படையினர் கூறினார்கள்.
அங்கு வந்திருந்த தேர்தல் அலுவலரிடம் பேசியபோது, 'இதற்கு தான் பொறுப்பல்ல' என்று அவர் திட்டவட்டமாக பதிலளித்தார். வசதிகள் குறித்த கேள்விக்கு, "அன்று காலை மேகமூட்டமாக இருந்தது, அது மட்டுமல்லாது வாக்குச்சாவடிகளில் கூலர் (Cooler) வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது" என்று அவர் பதிலளித்தார்.
வாக்குச்சாவடியில் இருந்த ஆஷா மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கூறுகையில், “வாக்களிப்பு நிலையத்திற்குள் அமர்ந்திருப்பவர்களுக்கு, நிழலும் மின்விசிறிகளும் கிடைப்பதால் சற்று நிம்மதியாக இருக்கும், ஆனால் எங்களுக்கு? நாங்கள் நாள் முழுவதும் வெளியில் வெயிலில் உட்கார்ந்து வேலை செய்கிறோம், எங்களுக்கு எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை” என்றார்கள்.
பிபிசி தமிழ் இப்போது வாட்ஸ்ஆப்பிலும்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
சோன்பத்ராவில் 9 தேர்தல் பணியாளர்களும், வாரணாசியில் 3 பேரும் உயிரிழப்பு

பட மூலாதாரம், Getty Images
கௌரவ் குல்மோகர், பிபிசி இந்திக்காக.
வெள்ளிக்கிழமை, கிழக்கு உத்தரப் பிரதேசத்தின் சோன்பத்ரா மாவட்டத்தில் அதிகபட்சமாக 45.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. பதோஹியில் 43.7 டிகிரி செல்சியஸ், வாரணாசியில் 43 டிகிரி செல்சியஸ், மிர்சாபூரில் 42.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
இதுவரை, சோன்பத்ராவில் மொத்தம் 9 வாக்குச்சாவடி ஊழியர்கள் வெப்ப அலைக்கு இறந்துள்ளனர். சோன்பத்ரா மாவட்ட மாஜிஸ்திரேட் சந்திர விஜய் சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில், "ராபர்ட்ஸ்கஞ்ச் பாலிடெக்னிக் கல்லூரியில் இருந்து தேர்தல் பணியாளர் குழு புறப்பட இருந்தது. மதியம் 11 முதல் 2 மணிக்குள் சில வாக்குச்சாவடி பணியாளர்கள், ஓட்டுனர்கள் மற்றும் உதவியாளர்கள் வெப்ப வாதத்தால் பாதிக்கப்பட்டனர்." என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "ஒரு போலீஸ்காரர் உட்பட 3 வாக்குச்சாவடி பணியாளர்கள் ஐசியூ-வில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு நோயாளிகள் ‘ஹீட் ஸ்ட்ரோக்’ வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நித்யானந்த் பாண்டே (குமாஸ்தா) மற்றும் மேலும் ஒருவர் என இரண்டு வாக்குச்சாவடி பணியாளர்கள் வெப்ப அலையால் இறந்துள்ளனர்." என்றார்.
தகவலின்படி, வாரணாசியிலும், 3 வாக்குச்சாவடி ஊழியர்கள் உட்பட ஏராளமான பொதுமக்கள் கடுமையான வெப்பத்தால் இறந்துள்ளனர். ஆனால், இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலையும் இதுவரை வெளியிடவில்லை.
பல்லியாவின் சக்பஹவுதீன் கிராமத்தில் உள்ள வாக்குச் சாவடியில் ராம்பச்சன் சவுகான் என்ற எழுபது வயது முதியவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
சம்பவ இடத்தில் இருந்த கிராமத் தலைவர் அருண்ஜெய் சவுகான் பிபிசியிடம் பேசுகையில், "ராம்பச்சன் சுமார் 5 நிமிடம் வாக்குப்பதிவு வரிசையில் நின்றிருந்தார். திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்தார். ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். ஆனால் அவர் ஆரோக்கியமான ஒரு நபர் தான்” என்று கூறினார்.
பல்லியா மாவட்ட மாஜிஸ்திரேட் ராஜேந்திர குமார் பிபிசியிடம் பேசுகையில், “துணை மாவட்ட மாஜிஸ்திரேட்டின் அறிக்கையின்படி, அவருக்கு ஏற்கனவே உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. அதே சமயம், பல்லியாவில் வெப்பம் காரணமாக வேறு யாரும் இறக்கவில்லை” என்றார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












