வாசனை திரவிய உற்பத்தியில் குழந்தைத் தொழிலாளர்கள் - ஆதாரங்களுடன் அம்பலப்படுத்திய பிபிசி

வாசனைத் திரவியம், அழகுசாதனப் பொருட்கள், குழந்தைத் தொழிலாளர்
படக்குறிப்பு, பத்து வயதான பஸ்மல்லாவும் அவரது உடன்பிறப்புகளும் இரவு முழுவதும் மல்லிகைப் பூக்களைப் பறிப்பதில் தங்கள் தாய்க்கு உதவி செய்கிறார்கள்
    • எழுதியவர், அகமது எல்ஷாமி மற்றும் நடாஷா காக்ஸ்
    • பதவி, பிபிசி ஐ புலனாய்வுகள்

அழகு சாதனப் பொருட்கள் தயாரிக்கும் இரண்டு பெரிய நிறுவனங்களுக்கு விநியோகிக்கப்படும் மூலப் பொருட்களைச் சேகரிக்கும் பணியில் குழந்தைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்பதை பிபிசி கண்டறிந்துள்ளது.

லான்கோம் (Lancôme) மற்றும் ஏரின் பியூட்டி (Aerin Beauty) ஆகிய பிரபல அழகு சாதன பிராண்டுகளுக்கு, வாசனை திரவியம் தயாரிப்பதற்காகக் கடந்த கோடைக் காலத்தில் விநியோகஸ்தர்களால் வழங்கப்பட்ட மல்லிகைப் பூக்கள் குழந்தைத் தொழிலாளர்கள் மூலம் பறிக்கப்பட்டவை என பிபிசி நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அனைத்து ஆடம்பர வாசனை திரவிய பிராண்டுகளும் குழந்தைத் தொழிலாளர்களைப் பணியில் அமர்த்துவதைக் கடுமையாக எதிர்ப்பதாகக் கூறி வருகின்றன.

லான்கோம் நிறுவனத்தின் உரிமையாளரான லோரியல் (L'Oréal) நிறுவனம், மனித உரிமைகளை மதிப்பதில் தங்களது நிறுவனம் உறுதியாக இருப்பதாகக் கூறுகிறது. ஏரின் பியூட்டி நிறுவனத்தின் உரிமையாளரான (Estée Lauder) எஸ்டீ லாடர், தனது சப்ளையர்களிடம் இதுதொடர்பாக கேள்வி எழுப்பியுள்ளதாகக் கூறியுள்ளது.

லான்கோம் மற்றும் ஏரின் பியூட்டி வாசனைத் திரவியங்களில் பயன்படுத்தப்படும் மல்லிகைப் பூக்கள் எகிப்தில் இருந்து வருகின்றன. உலகின் மல்லிகைப் பூக்களில் பாதியை எகிப்துதான் உற்பத்தி செய்கிறது. வாசனைத் திரவிய தயாரிப்பில் மல்லிகை ஒரு முக்கியப் பொருள்.

பல ஆடம்பர பிராண்டுகளை நிர்வகிக்கும் சில நிறுவனங்கள் பட்ஜெட்டை தொடர்ந்து குறைத்து வருகின்றன, இதன் விளைவாக மிகக் குறைந்த ஊதியமே கிடைப்பதாக இந்தத் தொழில்துறையினர் பிபிசியிடம் தெரிவித்தனர். இந்தக் காரணத்தால்தான் தங்கள் குழந்தைகளை இதில் ஈடுபடுத்துவதாக, மல்லிகைப் பூக்கள் பறிக்கும் பணியில் ஈடுபடும் எகிப்தியர்கள் கூறுகிறார்கள்.

வாசனைத் திரவிய நிறுவனங்கள் மூலப் பொருட்களின் விநியோகச் சங்கிலிகளைச் சரிபார்க்கப் பயன்படுத்தும் தணிக்கை முறைகளில் குறைபாடுகள் உள்ளன என்பதையும் பிபிசி கண்டறிந்துள்ளது.

அடிமைத்தனத்தின் சமகால வடிவங்கள் குறித்த ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் டொமோயா ஒபோகாடா, குழந்தைத் தொழிலாளர் குறித்து பிபிசி உலக சேவை சேகரித்த சான்றுகள் தன்னை மிகவும் கவலையுறச் செய்ததாகக் கூறினார். அந்தச் சான்றுகளில், கடந்த ஆண்டு எகிப்திய மல்லிகை வயல்களில் மேற்கொள்ளப்பட்ட ரகசியப் படப்பிடிப்பும் அடக்கம்.

"தொழில்துறையினர் தங்கள் நிறுவனம் பற்றிய ஆவணங்களில், விநியோகச் சங்கிலியின் வெளிப்படைத்தன்மை, மற்றும் குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிரான போராட்டம் போன்ற பல நல்ல விஷயங்கள் குறித்து உறுதியளிக்கிறார்கள். ஆனால் இந்தக் காட்சிகளைப் பார்க்கும்போது, அவர்கள் சொல்வதை உண்மையில் உறுதி செய்யவில்லை," என்று குறிப்பிட்டார்.

நீங்கள் மொபைல் போன் அல்லது கணிணி/ மடிக்கணிணியில் வாட்ஸ் ஆப்பை பயன்படுத்துபவராக இருந்தால் பிபிசி தமிழின் வாட்ஸ்ஆப் சேனலைப் பின்தொடர இந்த லிங்கை க்ளிக் செய்யவும். பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

5 முதல் 15 வயது குழந்தைகள்

வாசனைத் திரவியம், அழகுசாதனப் பொருட்கள், குழந்தைத் தொழிலாளர்
படக்குறிப்பு, பிபிசியின் புலனாய்வில் கண்டறியப்பட்ட மல்லிகை பறிக்கும் குழந்தைத் தொழிலாளர்கள்

எகிப்தில் மல்லிகை விளையும் மையப்பகுதியான கர்பியா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் ஹெபா, சூரியனின் வெப்பம் பூக்களைச் சேதப்படுத்துவதற்கு முன் அவற்றைப் பறிக்கத் தொடங்குவதற்காக அதிகாலை 03:00 மணிக்குத் தனது குடும்பத்தினரை எழுப்புகிறார்.

மல்லிகைப் பூக்கள் பறிப்பதில் தனக்கு உதவ 5 முதல் 15 வயது வரையிலான நான்கு குழந்தைகள் தேவை என்கிறார் ஹெபா. எகிப்தில் உள்ள பெரும்பாலான மல்லிகை பறிக்கும் தொழிலாளர்கள் போலவே, அவரும் ஒரு ‘சுதந்திரமான பணியாளர்’. ஹெபா ஒரு சிறிய தோட்டக்காரரின் பண்ணையில் வேலை செய்கிறார். அவரும் அவருடைய குழந்தைகளும் எவ்வளவு அதிகமாகப் பறிக்க முடியுமோ அவ்வளவு அதிகமாகச் சம்பாதிக்க முடியும்.

நாங்கள் ஹெபா என்னும் அந்தப் பெண்ணைப் படம்பிடித்த அன்று இரவு, அவரும் அவருடைய குழந்தைகளும் 1.5 கிலோ மல்லிகைப் பூக்களைப் பறித்திருந்தனர். அவர் சம்பாதித்ததில் மூன்றில் ஒரு பகுதியை நில உரிமையாளருக்குச் செலுத்திய பிறகு, அந்த இரவு நேர பூப்பறிக்கும் பணிக்காக அவரிடம் தோராயமாக 1.5 டாலர் (ரூ.125) இருந்தது. இது முன்னெப்போதையும்விடக் குறைவான கூலி. காரணம், எகிப்தில் பணவீக்கம் எப்பொழுதும் இல்லாத அளவுக்கு அதிகமாக உள்ளது. மேலும் இப்பணியில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்வதால் குறைவான கூலி பற்றி கேள்வியெழுப்புவது இல்லை.

ஹெபாவின் 10 வயது மகள் பஸ்மல்லாவுக்கும் கடுமையான கண் நோய்தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பஸ்மல்லாவுடன் நாங்களும் மருத்துவரைச் சந்தித்தோம். கண் வீக்கத்திற்குச் சிகிச்சை எடுக்காமல் தொடர்ந்து மல்லிகைப் பூ பறித்தால் பார்வைத் திறன் பாதிக்கப்படும் என்று மருத்துவர் கூறினார்.

மல்லிகைப் பூக்களைப் பறித்து எடை போட்டவுடன், அவை, பூக்களில் இருந்து எண்ணெயைப் பிரித்தெடுக்கும் பல உள்ளூர் தொழிற்சாலைகளில் ஒன்றுக்குச் சேகரிப்பு மையங்கள் வழியாக அனுப்பப்படுகின்றன. இதில் முக்கிய மூன்று நிறுவனங்கள் ஏ ஃபக்ரி அண்ட் கோ, ஹாஷெம் பிரதர்ஸ் மற்றும் மச்சாலிகோ ஆகியவை. ஒவ்வோர் ஆண்டும் ஹெபா போன்றவர்கள் பறிக்கும் மல்லிகைப் பூக்களுக்கு தொழிற்சாலைகள்தான் விலை நிர்ணயம் செய்கின்றன.

ரகசியப் படப்பிடிப்பில் அம்பலமான உண்மைகள்

வாசனைத் திரவியம், அழகுசாதனப் பொருட்கள், குழந்தைத் தொழிலாளர்
படக்குறிப்பு, இரவில் தெளிவாகப் பார்க்க ஹெபாவின் குடும்பத்தினர் தலையில் அணியும் ஒரு டார்ச் விளக்கைப் பகிர்ந்து கொள்கிறார்கள்

எகிப்தில் மல்லிகைப் பூக்கள் பறிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள 30,000 பேரில் எத்தனை பேர் குழந்தைகள் என்பதைத் துல்லியமாகச் சொல்வது கடினம். ஆனால் 2023ஆம் ஆண்டு கோடையில் பிபிசி இந்தப் பகுதி முழுவதும் வீடியோ பதிவு செய்தது மற்றும் பல குடியிருப்பாளர்களிடம் பேசியது. அவர்கள் மல்லிகை பறிக்கும் பணிக்குக் குறைந்த கூலி கொடுக்கப்படுவதால், தங்கள் குழந்தைகளையும் வேலைக்கு அழைத்துச் செல்ல வேண்டியுள்ளது என்று எங்களிடம் தெரிவித்தனர்.

நான்கு வெவ்வேறு இடங்களில் அமைந்திருக்கும் சிறு தோட்டக்காரர்களின் பண்ணைகளில் பணிபுரியும் தொழிலாளர்களில் கணிசமானோர் 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் என்பதை நாங்கள் கண்டறிந்தோம். மச்சாலிகோ தொழிற்சாலைக்கு நேரடியாகச் சொந்தமான பண்ணைகளில் குழந்தைகள் வேலை செய்வது பல ஆதாரங்கள் மூலம் எங்களுக்குத் தெரிய வந்தது.

அது தொழிற்சாலை என்பதால் நாங்கள் அங்கு ரகசியமாக வீடியோ பதிவு செய்யச் சென்றோம். அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த பல சிறுவர்கள் தங்களுக்கு வயது 12 முதல் 14 வரை இருக்கும் என்று எங்களிடம் கூறினர். 15 வயதுக்கு உட்பட்ட எவரும் எகிப்தில் இரவு 7 மணி முதல் முதல் காலை 07:00 மணி வரை பணிபுரிவது சட்டவிரோதமானது.

இந்தத் தொழிற்சாலைகள் மல்லிகை எண்ணெயை சர்வதேச வாசனை திரவியங்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு ஏற்றுமதி செய்கின்றன. சுவிட்சர்லாந்தை தளமாகக் கொண்ட கிவோதான் (Givaudan) மிகப்பெரிய அழகு சாதன நிறுவனமாகும், இது ஏ ஃபக்ரி அண்ட் கோ தொழிற்சாலை உடன் நீண்டகால உறவைக் கொண்டுள்ளது.

அழகு சாதன நிறுவனங்களில் மிகப்பெரிய ஜாம்பவான்களான - லோரியல் (L'Oréal) மற்றும் எஸ்டே லாடர் (Estée Lauder) ஆகியவை இத்துறையில் மிகப்பெரிய ஆதிக்கம் செலுத்துகின்றன என்று சுயாதீன வாசனை திரவிய நிறுவனமான கிறிஸ்டோஃப் லொதாமியே மற்றும் பல துறைகளைச் சார்ந்தவர்கள் கூறுகின்றனர்.

இத்துறையில் ‘மாஸ்டர்கள்’ என்று அழைக்கப்படும் அந்த நிறுவனங்கள், நறுமணத் தொழிற்சாலைகளுக்குக் குறைவான மற்றும் மிகவும் மலிவான பட்ஜெட்டை அமைத்துள்ளனர் என்று கிறிஸ்டோஃப் லொதாமியே கூறுகிறார்.

“லோரியல் போன்ற ஆதிக்கம் செலுத்தும் நிறுவனங்களின் விருப்பம் என்னவென்றால், வாசனைத் திரவிய பாட்டிலில் பயன்படுத்த மலிவான எண்ணெய் இருந்தால் போதும். அதன் பின்னர் அந்தத் தயாரிப்புகளை பிராண்ட் ஆக்கி அதிகபட்ச விலையில் விற்க வேண்டும்,” என்று வாசனை திரவியத் தொழிற்சாலை ஒன்றில் பல ஆண்டுகளாக வேலை செய்த லொதாமியே கூறினார்.

"அவர்கள் உண்மையில் தொழிலாளர்களின் சம்பளத்தையோ பூக்களை அறுவடை செய்பவர்களின் கூலியையோ அல்லது மல்லிகையின் உண்மையான விலையையோ நிர்வகிப்பதில்லை. ஏனென்றால் அவை அவர்களின் வணிகத்திற்கு அப்பாற்பட்டவை," என்று அவர் விளக்கினார்.

ஆனால், அவர்கள் நிர்ணயித்த வரவு செலவுத் திட்டத்தால், நறுமண எண்ணெய் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கும், இறுதியில், பூ பறிக்கும் பணியாளர்களுக்கும் ஊதியம் "குறைகிறது".

"பிராண்டுகளின் மார்க்கெட்டிங் பேச்சுகளில் குறிப்பிடப்படும் விலைமதிப்பற்ற தன்மைக்கும் உண்மையில் பூக்களை அறுவடை செய்பவர்களுக்குத் தரும் கூலிக்கு இடையேயும் ஒரு பெரிய இடைவெளி உள்ளது," என்று அவர் மேலும் கூறினார்.

பிரச்னை எங்கே துவங்குகிறது?

வாசனைத் திரவியம், அழகுசாதனப் பொருட்கள், குழந்தைத் தொழிலாளர்
படக்குறிப்பு, நிதி மிகவும் குறைவாக ஒதுக்கப்படுவதாக கிறிஸ்தொஃப் லொதாமியே கூறுகிறார்

வாசனை திரவிய நிறுவனங்கள் தங்கள் விளம்பரக் காணொளிகளில், வாசனை திரவியங்கள் தயாரிப்பில் பின்பற்றப்படும் நெறிமுறைகளைக் காட்டுகின்றனர். மேலும் விநியோகச் சங்கிலியில் உள்ள ஒவ்வொரு முதலாளியும் ஐ.நா-வுக்கு கொடுக்கும் உறுதிமொழி கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர். பாதுகாப்பான பணி நடைமுறைகள் மற்றும் குழந்தைத் தொழிலாளர்களை ஒழிப்பது தொடர்பான அதன் வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிப்பதாக உறுதியளித்துள்ளனர்.

நறுமண எண்ணெய் தொழிற்சாலையான கிவோதான்-இன் மூத்த நிர்வாகியின் கூற்றுப்படி, வாசனை திரவிய நிறுவனங்கள் தங்கள் விநியோகச் சங்கிலிகளைக் கண்காணிக்காததுதான் பிரச்னையின் ஆரம்பப் புள்ளி.

பெயர் குறிப்பிடாமல் பேசிய அந்த நிர்வாகி, இந்த நிறுவனங்கள் தொழிற்சாலைகளைக் கண்காணிக்க மூன்றாம் தரப்பு தணிக்கை நிறுவனங்களை நம்பியிருக்கின்றன என்று கூறினார்.

பெருநிறுவனங்கள் மற்றும் வாசனைத் திரவிய நிறுவனங்கள் தங்கள் இணையதளங்களிலும், ஐ.நா.வுக்கு அனுப்பும் கடிதங்களிலும் அடிக்கடி குறிப்பிடப்படும் தணிக்கை நிறுவனங்கள் செடக்ஸ் (Sedex) மற்றும் UEBT ஆகும். அவர்களின் தணிக்கை அறிக்கைகள் பொதுவெளியில் பகிரப்படவில்லை. ஆனால் ‘ஃபக்ரி அண்ட் கோ’ தொழிற்சாலையிடம் அவர்களிடம் மல்லிகைப் பூக்களைப் பெறும் வாடிக்கையாளர் போன்று காட்டிக் கொண்டதில் இரண்டு தணிக்கை நிறுவனங்களின் அறிக்கையையும் எங்களால் பெற முடிந்தது.

UEBTஇன் அறிக்கை, கடந்த ஆண்டு தொழிற்சாலைக்கு ஆய்வு செய்யச் சென்றதன் அடிப்படையில், அங்கு மனித உரிமை மீறல் பிரச்னைக்கான அறிகுறி இருப்பதாகக் காட்டுகிறது. ஆனால் அது விரிவாக விளக்கப்படவில்லை. இருந்தபோதிலும், நிறுவனத்திற்கு ‘ஒப்புதல்’ வழங்கப்பட்டது. அதாவது ‘சமூகப் பொறுப்புடன் தயாரிக்கப்படும் மல்லிகை எண்ணெயை’ அந்தத் தொழிற்சாலை வழங்குவதாகக் கூறி ‘உறுதி’ செய்துள்ளனர்.

"ஒரு நிறுவனத்திற்குப் பொறுப்பான ஆதாரச் சான்றொப்பம் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் செயல் திட்டத்தை மாற்ற வேண்டும். 2024ஆம் ஆண்டின் நடுப்பகுதி வரை இது செல்லுபடியாகும். மாற்றங்கள் செயல்படுத்தப்படாவிட்டால் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஒப்புதல் திரும்பப் பெறப்படும்," இதுகுறித்த கேள்விக்கு UEBT பதிலளித்தது.

செடக்ஸ் (Sedex) அறிக்கை தொழிற்சாலைக்கு ஒரு நல்ல மதிப்பீட்டைக் கொடுத்துள்ளது. ஆனால் அதன் பதிவுகளில் இருந்து ஒரு விஷயம் தெளிவாகத் தெரிகிறது. தணிக்கை செய்ய வருவதை முன்கூட்டியே தொழிற்சாலையில் தெரியப்படுத்தி உள்ளனர். மேலும் தொழிற்சாலை மட்டுமே தணிக்கை செய்யப்பட்டுள்ளது. மல்லிகைத் தோட்டங்கள் தணிக்கை செய்யப்படவில்லை.

செடக்ஸ் எங்களிடம் கூறியதாவது: "நாங்கள் அனைத்து வகையான தொழிலாளர் உரிமை மீறல்களுக்கும் எதிரான நிலைபாட்டில் உறுதியாக உள்ளோம். ஆனால் சுற்றுச்சூழல் மற்றும் மனித உரிமைகள் அபாயங்கள் அல்லது தாக்கங்களை வெளிக்கொணரவும், சரிசெய்வதற்கும் ஒரு வழியை மட்டுமே நம்பியிருக்க முடியாது.”

‘கவலைக்குரிய விஷயம்’

வாசனைத் திரவியம், அழகுசாதனப் பொருட்கள், குழந்தைத் தொழிலாளர்
படக்குறிப்பு, கண் அலர்ஜி பரிசோதனைக்காக மருத்துவமனை செல்லும் பஸ்மல்லா

உலகளாவிய விநியோகச் சங்கிலிகளில் மனித உரிமைகளை மேம்படுத்த முயற்சிக்குப் பொறுப்பான ஒப்பந்தத் திட்டத்தின் (Responsible Contracting Project) நிறுவனர் வழக்கறிஞர் சாரா தாதுஷ், “பிபிசியின் விசாரணை அந்த தணிக்கை அமைப்புகள் செயல்படவில்லை என்பதை வெளிப்படுத்துகிறது," என்றார்.

“பிரச்னை என்னவென்றால், தணிக்கையாளர்கள் தணிக்கைக்குச் செலுத்தும் தொகையை மட்டுமே தணிக்கை செய்கிறார்கள். மேலும் தொழிலாளருக்குச் செலுத்தப்படும் கூலியைப் பற்றி இவர்கள் விசாரிக்கவில்லை. குழந்தைத் தொழிலாளர்கள் உருவாக முக்கிய மூல காரணம் இதுதான்,” என்றார்.

ஃபக்ரி அண்ட் கோ எங்களிடம் கூறுகையில், "அதன் தோட்டம் மற்றும் தொழிற்சாலை இரண்டிலும் குழந்தைத் தொழிலாளர்கள் தடை செய்யப்பட்டுள்ளனர்" என்றது. ஆனால், அவர்களுக்குக் கிடைக்கும் மல்லிகையின் பெரும்பகுதி சுயாதீனப் பூக்கள் சேகரிப்பாளர்களிடம் இருந்து பெறப்படுவதாகவும் தெரிவித்தது.

"கடந்த 2018ஆம் ஆண்டில், UEBTஇன் கண்காணிப்பின் கீழ், நாங்கள் மல்லிகைத் தாவரப் பாதுகாப்புத் தயாரிப்புகளைத் தணிக்கும் திட்டத்தைத் துவங்கினோம். இது 18 வயதுக்கு உட்பட்ட தனிநபர்கள் தோட்டத்தில் பணிபுரிவதைத் தடை செய்கிறது. எகிப்தில் மற்ற இடங்களை ஒப்பிடுகையில் இங்கு நல்ல ஊதியம் கிடைக்கும்," என்று அது மேலும் கூறியது.

மச்சாலிகோ, 18 வயதுக்கு உட்பட்ட பணியாளர்களைப் பயன்படுத்துவதில்லை என்றும், கடந்த இரண்டு ஆண்டுகளாக மல்லிகைக்குக் கொடுக்கும் விலையை உயர்த்தி இருப்பதாகவும், இந்த ஆண்டும் அதைச் செய்வதாகவும் கூறியது. எங்கள் அறிக்கை ‘தவறான தகவலை அடிப்படையாகக் கொண்டது, என்று ஹாஷெம் பிரதர்ஸ் கூறினார்.

லாங்கோம் லிதோல் லின்டென்ஸ் (Lancôme Idôle L'intense) என்னும் வாசனை திரவியத்தைத் தயாரிக்கும் கிவோதான் நிறுவனம், எங்கள் விசாரணையை ‘கவலைக்குரிய ஒன்று’ என்று விவரித்தது. மேலும் "குழந்தைத் தொழிலாளர் அபாயத்தை முற்றிலுமாக அகற்ற நடவடிக்கை எடுப்பது நம் அனைவரின் கடமை," என்றும் கூறியது.

ஏரின் பியூட்டி நிறுவனத்துக்காக இகாட் ஜாஸ்மின் மற்றும் லிமோன் டி சிசிலியா (Ikat Jasmine and Limone Di Sicilia for Aerin Beauty) உருவாக்கும் நறுமண எண்ணெய்த் தொழிற்சாலையான ஃபிர்மெனிச், 2023ஆம் ஆண்டு கோடையில் மச்சாலிகோவில் இருந்து மல்லிகையை வாங்கியது என்றும் இப்போது எகிப்தில் ஒரு புதிய விநியோகஸ்தருடன் ஒப்பந்தம் போட்டுள்ளதாவும் எங்களிடம் கூறியது. "தொழில் பங்குதாரர்கள் மற்றும் உள்ளூர் மல்லிகை விவசாயிகளுடன் இந்தக் குழந்தைத் தொழிலாளர் சிக்கலைக் கூட்டாகத் தீர்க்கும் முயற்சிகளுக்கு ஆதரவளிப்போம்," என்று மேலும் கூறியது.

வாசனைத் திரவிய நிறுவனங்கள் கூறுவது என்ன?

வாசனைத் திரவியம், அழகுசாதனப் பொருட்கள், குழந்தைத் தொழிலாளர்
படக்குறிப்பு, மச்சாலிக்கோ நிறுவனத்தில் ரகசியப் படப்பிடிப்பின்போது பார்த்த ஒரு குழந்தைத் தொழிலாளி

பிபிசி விசாரணையின் கண்டுபிடிப்புகளை வாசனைத் திரவிய நிறுவனங்களிடம் முன்வைத்தோம்.

லோரியல் (L'Oréal) நிறுவனம் கூறியதாவது: "சர்வதேச அளவில் மிகப் பாதுகாப்பான தயாரிப்புச் செயல்முறை, அங்கீகரிக்கப்பட்ட மனித உரிமை தரங்கள் ஆகியவற்றுக்கு மதிப்பளிப்பதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம். பூ பறிப்பவர்களுக்குச் சந்தை விலையைக் காட்டிலும் குறைவாகக் கூலி கொடுக்குமாறு தொழிற்சாலைகளில் ஒருபோதும் கோருவதில்லை. லோரியல் நிறுவனத்தில் விநியோகஸ்தர்கள் செயல்படும் சில பகுதிகளில் எங்கள் கடமைகள் உறுதி செய்யப்படுவதில் ஆபத்துகள் உள்ளன என்பதை நாங்கள் அறிவோம்."

அது மேலும் கூறியது: "ஒரு சிக்கல் எழும்போதெல்லாம், அடிப்படைக் காரணங்களையும் சிக்கலைத் தீர்ப்பதற்கான வழியையும் அடையாளம் காண லோரியல் முனைப்புடன் செயல்படுகிறது. ஜனவரி 2024இல், குழந்தைத் தொழிலாளர் அபாயங்களை மையமாகக் கொண்டு, சாத்தியமான மனித உரிமை மீறல்களைக் கண்டறிந்து, அவற்றைத் தடுப்பதற்கும் குறைப்பதற்கும் வழிகளைக் கண்டறிய, எங்கள் கூட்டாளர் நேரடியாக ஆய்வு செய்தார்.”

லோரியல் நிறுவனம் பிபிசிக்கு கொடுத்த கூடுதல் தகவலில்: “எங்கள் நிறுவனம் தொழிலாளர்களுக்குக் கண்ணியமான ஊதியம் வழங்கப்படுவதையும், அவர்களின் குழந்தைகள் கல்வி பெறுவதையும், குழந்தைகளை வேலை செய்வதைத் தடுக்க மனித உரிமைகள் சட்டங்கள், கொள்கைகள் மற்றும் நடைமுறைகள் இருப்பதையும் உறுதிப்படுத்த முயல்கிறது. இந்த ஆண்டு ஜூன் மாதம் பூ அறுவடைக்கு முன்னதாக, விநியோகஸ்தர்களிடம் செயல்படுத்த விரிவான செயல் திட்டம் உள்ளது. எங்கள் குழுக்கள் எகிப்தில் அந்தச் செயல்திட்டத்தின் வெற்றியை மதிப்பிடும்," என்றது.

எஸ்டீ லாடர் நிறுவனம் கூறுகையில்: "அனைத்து குழந்தைகளின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த மிகத் தீவிரமான விஷயத்தை விசாரிக்க எங்கள் விநியோகஸ்தர்களை தொடர்பு கொண்டுள்ளோம். உள்ளூர் மல்லிகை விநியோகச் சங்கிலியைச் சுற்றியுள்ள சிக்கலான சமூகப்-பொருளாதாரச் சூழலை நாங்கள் அறிவோம். மேலும் சிறந்த வெளிப்படைத்தன்மையைப் பெறவும், மூலப்பொருள் வழங்கும் சமூகங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கிறோம்," என்றது.

மீண்டும் கர்பியாவுக்கு வருவோம்.

மல்லிகைப் பூ பறிக்கும் ஹெபாவிடம், சர்வதேச சந்தையில் வாசனைத் திரவியம் விற்கப்படும் விலையைக் கூறியபோது அதிர்ச்சியடைந்தார்.

"இங்குள்ள மக்களின் மதிப்பு மிகவும் குறைவு,” என்று அவர் கூறினார்.

"விலை உயர்ந்த பெர்ஃப்யூம் பயன்படுத்துங்கள். அது பற்றி எனக்குக் கவலையில்லை. ஆனால் இந்த வாசனைத் திரவியத் தயாரிப்பில் இருக்கும் குழந்தைகளின் வலியையும் நீங்கள் பார்க்க வேண்டும்," என்றார்.

ஆனால், அந்தப் பொறுப்பு பெர்ஃப்யூம் பயன்படுத்தும் நுகர்வோரிடம் இல்லை என்று வழக்கறிஞர் சாரா தாதுஷ் கூறினார்.

"இது நாம் தீர்க்க வேண்டிய பிரச்னை அல்ல. எங்களுக்கு சட்டம் தேவை. பெருநிறுவன பொறுப்புக்கூறல் தேவை. இதை நுகர்வோர் மீது மட்டுமே சுமத்த முடியாது," என்றார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)