நிலவில் நீர் இருப்பதாக இஸ்ரோவுக்கு கிடைத்த ஆதாரம்: ஆய்வில் தெரிய வந்த புது தகவல்

பட மூலாதாரம், Getty Images
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) நடத்திய சமீபத்திய ஆய்வில், நிலவின் துருவங்களில் உறைபனி இருப்பதற்கான அதிகப்படியான சாத்தியக்கூறுகள் கண்டறியப்பட்டுள்ளன.
இந்த சமீபத்திய ஆய்வின்படி, நிலவின் துருவங்களில் இருக்கும் பள்ளங்களில், மேற்பரப்பில் இருப்பதைவிட இரண்டு மீட்டர்கள் வரை தோண்டினால் இருக்கும் உறைபனி ஐந்து முதல் எட்டு மடங்கு அதிகம் என்று கண்டறியப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
மேலும், நிலவின் தென்துருவத்தில் இருப்பதைவிட வட துருவத்தில் இரண்டு மடங்கு உறைபனி இருப்பதாக இந்த ஆய்வு தெரிவிப்பதாக இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரோவுடன், ஐ.ஐ.டி கான்பூர், தெற்கு கலிஃபோர்னியா பல்கலைக் கழகம், ஜெட் புரொபல்ஷன் ஆய்வகம், மற்றும் ஐ.ஐ.டி தன்பாத் ஆகிய நிறுவனங்கள் இணைந்து நடத்திய இந்த ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.
இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிக்கையில், நிலவின் மேற்பரப்பைத் தோண்டி இந்த உறைபனியை வெளியே எடுத்தால், அது எதிர்காலத்தில் நிலாவில் மேற்கொள்ளும் ஆய்வுகளுக்கும், நிலாவில் மனிதர்கள் நீண்டகாலம் தங்குவதற்கும் இன்றியமையாததாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆய்வு எப்படி செய்யப்பட்டது?

பட மூலாதாரம், Getty Images
இந்த ஆய்வுக்குழு ஏழு கருவிகளைப் பயன்படுத்தி இந்த ஆய்வை மேற்கொண்டது. இதில் ரேடார், லேசர், ஆப்டிகல், நியூட்ரான், அல்ட்ரா-வயலட் அகியவற்றைப் பயன்படுத்தும் ஸ்பெக்ட்ரோமீட்டர் கருவிகளும் தெர்மல் ரேடியோமீட்டர் என்ற கருவியும் அடக்கம்.
இவை நாசா நிலவுக்கு அனுப்பிய 'லூனார் ரெக்கொனைசன்ஸ் ஆர்பிட்டர்' என்ற ஆய்வு விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த ஆய்வின் அறிக்கை, இந்த உறைபனி, 'இம்ப்ரியன் காலகட்டம்' என்றழைக்கப்படும் 38,500 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தில் நிலவின் பரப்பில் நிகழ்ந்த எரிமலை வாயு வெளியேற்றத்தால் உருவாகியிருக்கலாம் என்று தெரிவிக்கிறது. இது நிலவில் எரிமலைகள் இருந்ததற்கான நிரூபணம் என்றும் கூறுகிறது.
இந்த ஆய்வறிக்கை, சந்திரயான்-2 திட்டத்தில் இருந்து பெறப்பட்ட போலாரிமெட்ரிக் தரவுகளையும் நிரூபணம் செய்வதாக இஸ்ரோவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதற்கு முன்பு, சந்திரயான்-2 திட்டத்தின் மூலம் பெறப்பட்ட தரவுகள், நிலவின் துருவங்களில் உறைபனி இருக்கக்கூடும் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

'இது சந்திரயான் தரவுகளை உறுதிப்படுத்துகிறது'
இந்த ஆய்வறிக்கையின் முக்கியத்துவம் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய சந்திரயான்-1 திட்டத்தின் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை, இந்தப் புதிய அறிக்கை, சந்தரயான் 1 மற்றும் 2 ஆகிய திட்டங்களின் மூலம் பெறப்பட்ட தரவுகளை உறுதிப்படுத்துவதாகத் தெரிவித்தார்.
"சந்திரயான்-2 திட்டத்தில் `Dual-frequency Synthetic Aperture Radar` என்ற கருவியைப் பொருத்தியிருந்தோம். அது நிலவில் இருந்த உறைபனியின் அளவைக் கணக்கிட உதவியது. அது மேம்பட்ட கருவி என்பதால், கூடுதலான தகவல்களும் கிடைத்திருந்தன," என்றார்.
அந்தக் கருவிகளின் மூலம் நிலவின் துருவங்களில் உறைபனி இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் கண்டறியப்பட்டிருந்த நிலையில், இப்போது இந்த ஆய்வறிக்கையின் மூலம் அது உறுதியாகியுள்ளது.
இதன் எதிர்கால முக்கியத்துவம் குறித்துப் பேசிய மயில்சாமி அண்ணாதுரை, இனிவரும் காலங்களில் ஆர்டெமிஸ் போன்ற நிலவு ஆராய்ச்சித் திட்டங்கள் மேன்மேலும் நிலவில் தண்ணீர் இருக்கும் பகுதியை நோக்கியே அமையும் என்றார்.
"எதிர்காலத்தில் நிலவு ஆராய்ச்சித் திட்டங்களில், நீர் தேவைகளுக்காகவும், நீரை வேதியியல் முறையில் ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜனாக பிரித்து அதை ராக்கெட் எரிபொருளாகப் பயன்படுத்தவும் இருக்கும் சாத்தியக்கூறுகளுக்கு வழிவகுக்கிறது," என்றார்.
எதிர்காலத்தில் நிலவில் நீடித்த மனித இருப்பிற்கான சாத்தியத்தையும் இந்த ஆய்வு முடிவுகள் முன்வைப்பதாக அவர் கூறினார்.
'சந்திரயான் திட்டங்கள் சர்வதேசத் திட்டங்கள் ஆகலாம்'

மேலும் பேசிய மயில்சாமி அண்ணாதுரை, முதல் இரண்டு சந்திரயான் திட்டங்களின் மூலம் பெறப்பட்ட தரவுகளுக்கு சர்வதேச ஆய்வுகளின் மூலம் சாத்தியக்கூறுகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், எதிர்காலத்தில் சந்திரயான் திட்டங்கள் சர்வதேசத் திட்டங்களாகும் வாய்ப்பும் உள்ளதாகத் தாம் பார்ப்பதாகக் கூறினார்.
நிலவில் நீர் இருப்பது உறுதியான பிறகு, இனி உலக நாடுகள் அனைத்தும் இணைந்து நிலவு ஆராய்ச்சித் திட்டங்களை முன்னெடுப்பதே எதிர்காலமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
"தற்போது சர்வதேச விண்வெளி மையத்தில் அனைத்து உலக நாடுகளும் ஒன்றுபோல் பங்காற்றுவதில்லை. ஆனால் எதிர்காலத்தில் அனைத்து நாடுகளும் சமமான முறையில் பங்காற்ற வேண்டிய நிலை வரும்," என்றார்.

'நிலவில் நீர் எப்படி வந்திருக்கும்?'
நிலவில் நீர் இருப்பது குறித்து பிபிசி தமிழிடம் மேலும் தகவல்களைப் பகிர்ந்துகொண்டார் மஹாலியில் உள்ள இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர் முனைவர்.த.வி.வெங்கடேஸ்வரன்.
"நிலவில் நீர் இல்லையென்று நாம் நெடுங்காலமாகக் கூறி வந்தோம். அது தவறு இப்போது உறுதியாகியுள்ளதாக" கூறுகிறார் அவர். ஆனால், "சந்திரயான் திட்டத்திற்கு முன்பே நிலவில் உறைபனி இருக்கக்கூடும் என்பதற்கான அறிகுறிகள் இருந்தன," என்றார். "இப்போது அது உறுதிப்படுத்தப்பட்டு இருப்பதாகவும்" அவர் தெரிவித்தார்.
நிலவில் எப்படி நீர் வந்திருக்கக்கூடும் என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், "விண்கற்களில் 50% உறைபனி இருக்கும். நிலவின்மீது இந்த விண்கற்களும் பாறைகளும் மோதிக்கொண்டே இருக்கும். இதனால் நிலவின் பரப்பில் பள்ளங்கள் உருவாகின்றன. நிலவின் சுழற்சியால் இந்தப் பள்ளங்கள் பெரும்பாலும் இருட்டாகவே இருக்கின்றன. அதனால் வெப்பம் படாமல், அவற்றில் இருக்கும் உறைபனி உருகாமல் இருக்கிறது," என்றார்.
ஆனால், விண்கற்களில் எப்படி உறைபனி வந்தது என்பதற்கு இன்னும் சரியான விளக்கம் இல்லை என்றும் கூறுகிறார்.
நிலவில் உயிர்கள் இருப்பதற்கான சாத்தியம் உண்டா?

பட மூலாதாரம், Getty Images
நீர் இருப்பதால் மட்டுமே நிலவில் உயிர்கள் இருப்பதற்கான சாத்தியங்கள் இல்லை, என்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன்.
ஆனால், "தற்போதைய ஆய்வின் மூலம் கிடைத்திருக்கும் ஒரு நம்பிக்கை என்னவெனில், இந்த உறைபனியை உருக்கி அதை நீர்த் தேவைகளுக்காகப் பயன்படுத்தலாம்."
முனைவர் த.வி.வெங்கடேஸ்வரனின் கூற்றுப்படி, அந்த நீரை பூமிக்குக் கொண்டு வருவது செயல்முறையில் பலனளிக்காது. "இருப்பினும் எதிர்காலத்தில் நிலவில் மனிதர்கள் தங்கும் திட்டம் இருந்தால், அதற்கான நீர் ஆதாரமாக இது விளங்கும்."
மேலும் மயில்சாமி அண்ணாதுரை சொன்னது போலவே, நிலவின் நீரை வேதியியல் முறையில் பிரித்து அதை ராக்கெட் எரிபொருளாகப் பயன்படுத்தலாம், என்றார்.
அதாவது, ""ஹைட்ரஜனை எரிபொருளாகவும், ஆக்சிஜனை அதை எரிக்கவும் பயன்படுத்தலாம்."
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












