101 வயது மூதாட்டிக்கு குழந்தைக்கான பயணச்சீட்டைத் தரும் விமான நிறுவனம் - என்ன காரணம்?

101 வயது மூதாட்டியை மீண்டும் மீண்டும் குழந்தை என்று தவறாக பதிவு செய்த ஏர்லைன்ஸ் நிறுவனம்
    • எழுதியவர், ஜோ டைடி
    • பதவி, சைபர் செய்தியாளர்

விமான நிறுவனத்தின் முன்பதிவு தளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக 101 வயது மூதாட்டி ஒருவரை குழந்தை என்று தவறாக பதிவு செய்து பயணச்சீட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

101 வயது மூதாட்டியான பாட்ரிசியா (தன் குடும்பப் பெயரை பகிர விரும்பாதவர்) விமானத்தில் பயணிக்க பயணச்சீட்டு பதிவு செய்த போது தான் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பயணச்சீட்டு விநியோக தளத்தால் பாட்ரிசியா 1922 இல் பிறந்தவர் என்பதை கணக்கிட முடியவில்லை, எனவே 2022 இல் பிறந்ததாக தளத்தில் பதிவாகிவிட்டது.

சமீபத்தில் நிகழ்ந்த இந்த நகைச்சுவையான சம்பவத்தின்போது பிபிசி செய்தியாளரும் அங்கிருந்தார். பாட்ரிசியாவுக்கு குழந்தைகளுக்கான பயணச்சீட்டு பதிவு செய்திருந்தது, கேபின் குழுவினர் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

"வயதான பெண்ணான என்னை சின்னக் குழந்தை என்று நினைத்தது வேடிக்கையாக உள்ளது" என்று சிரிக்கிறார் பாட்ரிசியா .

இப்படி நடப்பது முதல் முறை அல்ல. இதற்கு முன்னர் பயணச்சீட்டு பதிவு செய்த போதும் அதே தவறு நடந்ததாக கூறும் பாட்ரிசியா, “இதனால் எனக்கு வேறு சில பிரச்னைகளும் ஏற்படுகிறது. எனவே, இந்த தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட வேண்டும்” என்கிறார் நூறு வயதை கடந்த பாட்ரிசியா.

உதாரணமாக, ஒரு பயணத்தின்போது நான் குழந்தை என்று விமான நிலைய ஊழியர்கள் நினைத்துக் கொண்டதால், முனையத்திற்குள் வயதானவர்களுக்கான வசதிகளை தயார்படுத்தவில்லை.

சிரமங்களை எதிர்கொள்ளும் மூதாட்டி

101 வயது மூதாட்டியை மீண்டும் மீண்டும் குழந்தை என்று தவறாக பதிவு செய்த ஏர்லைன்ஸ் நிறுவனம்

பட மூலாதாரம், Getty Images

பாட்ரிசியா சிகாகோவில் இருந்து மிச்சிகனில் உள்ள மார்க்வெட்டிற்கு விமானத்தில் பயணம் மேற்கொண்டார். அவர் பயணித்த அதே விமானத்தில் பிபிசி-யின் நிருபரும் பயணித்தார்.

பாட்ரிசியா தனது மகள் கிரிஸுடன் வந்திருந்தார்.

"என் மகள் டிக்கெட்டுக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்தாள், விமான நிலையத்தில் உள்ள கணினி எனது பிறந்த தேதி 1922 ஆக இருக்காது, 2022 ஆக தான் இருக்கும் என அதுவாக கணித்துவிட்டது. கடந்த ஆண்டும் இதேதான் நடந்தது, ஒவ்வொரு முறையும் இந்த விமானத்தில் ஒரு குழந்தை பயணிக்கப் போகிறது என எதிர்பார்க்கிறார்கள். என்னை பார்த்ததும் அதிர்ச்சி அடைகின்றனர்" என்கின்றனர்.

பாட்ரிசியாவின் இருக்கை பெரியவர்களுக்கான டிக்கெட்டாக பதிவு செய்யப்பட்டது. ஆனால், விமான நிலைய கணினியால் 1922 என்ற பிறந்த ஆண்டை கணக்கிட இயலவில்லை. காரணம் இந்த பிறந்த தேதியில் இதற்கு முன்னர் அதிக பயணிகளை கண்டிருக்க வாய்ப்பில்லை. எனவே 1922 என்பதை ‘default’ ஆக 2022 என்று மாற்றிப் பதிவு செய்துவிட்டது.”

ஓய்வு பெற்ற செவிலியரான பாட்ரிசியா, ஒவ்வொரு ஆண்டும் குடும்பத்தைப் பார்க்கவும் குளிர்காலத்தில் இருந்து தப்பிக்கவும் மிச்சிகன் செல்வது வழக்கம். கடந்த இரண்டு பயணத்தின் போது அமெரிக்கன் ஏர்லைன்ஸ் என் வயதை தவறாக பதிவிட்டு குழப்பம் ஏற்படுத்திவிட்டது. ஆனாலும் ஊழியர்கள் அன்பாகவும் உதவியாகவும் நடந்து கொண்டனர்.

இந்த சம்பவம் குறித்து அமெரிக்கன் ஏர்லைன்ஸ் பதிலளிக்க மறுத்துவிட்டது.

மேலும் பேசிய மூதாட்டி, ”நான் இந்த பிரச்னை சரி செய்ய வேண்டும் என விரும்புகிறேன். முந்தைய விமான பயணத்தின் போது விமான நிலைய ஊழியர்கள் எனக்கு சக்கர நாற்காலியை ஏற்பாடு செய்யாததால், மற்ற பயணிகள் சென்ற பிறகும் நீண்ட நேரம் நானும் எனது மகளும் விமானத்தின் உள்ளே காத்திருந்தோம்.

என் உண்மையான வயதை பதிவு செய்திருந்தால் என் மகள் கிரிஸுக்கும் அது உதவியாக இருந்திருக்கும். என் மகள், எங்கள் அனைத்துப் பைகளையும் தனி ஆளாக ஒரு வாயிலில் இருந்து மற்றொரு வாயிலுக்குக் கிட்டத்தட்ட ஒரு மைல் தூரத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டியிருந்தது" என்று அவர் கூறினார்.

அடுத்த பயணம்...

101 வயது மூதாட்டியை மீண்டும் மீண்டும் குழந்தை என்று தவறாக பதிவு செய்த ஏர்லைன்ஸ் நிறுவனம்

பட மூலாதாரம், Getty Images

பாட்ரிசியா தனது 97 வயது வரை தனியாக தான் பயணம் செய்தார். ஆனால் அதன் பிறகு அவரால் குடும்பத்தின் துணை இன்றி பயணிக்க முடியவில்லை.

"எனக்கு கண் பார்வையில் சில பிரச்சனைகள் உள்ளன, அதனால் நான் தனியாக பயணம் செய்ய விரும்பவில்லை," என்கிறார் பாட்ரிசியா.

”ஆனால், இதுபோன்ற தொழில்நுட்ப கோளாறுகள் ஒருபோதும் என் பயணங்களை தடுத்து நிறுத்தாது” என்று உறுதியாகக் கூறுகிறார் அவர். மேலும் இலையுதிர் காலத்தில் தனது அடுத்த விமான பயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டிருக்கிறார்.

அப்போது அவருக்கு 102 வயது ஆகி இருக்கும் - ஒருவேளை அடுத்த முறை விமான நிலைய கணினிகள் அவரின் உண்மையான வயதை பதிவு செய்யக்கூடும்!

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)