பேரரசர் அக்பரை பித்து பிடிக்க வைத்த மாம்பழம் - வரலாற்றில் என்னவெல்லாம் செய்தது?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சிராஜ்
- பதவி, பிபிசி தமிழ்
இந்தியாவின் கோடைக்காலம் தொடங்கியவுடன் மக்களின் நினைவுக்கு வரும் ஒரு முக்கிய கனி, மாம்பழம். இந்திய நாட்டின் தேசியக் கனி மாம்பழம் என்பதை புத்தகங்களில் இருந்து மட்டுமல்லாது, கடந்த நிதியாண்டின் (2023-24) முதல் ஐந்து மாதங்களில் இந்தியா ஏற்றுமதி செய்த மாம்பழங்களின் மொத்த மதிப்பை வைத்தும் அறிந்துகொள்ளலாம்.
வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் தகவலின் படி, இந்த 5 மாதங்களில் மட்டும் 47.98 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு (இந்திய மதிப்பில் சுமார் 416 கோடி ரூபாய்) மாம்பழங்களை ஏற்றுமதி செய்தது இந்தியா. ஆனால் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மாம்பழங்களின் எண்ணிக்கையை விட உள்நாட்டில் மக்களால் உண்ணப்படும் மாம்பழங்களின் எண்ணிக்கை தான் அதிகம்.
1987ஆம் ஆண்டு முதல், ஒவ்வொரு வருடமும் டெல்லியில் இந்திய தேசிய தோட்டக்கலை வாரியத்தின் சார்பாக சர்வதேச மாம்பழத் திருவிழா கொண்டாடப்படுகிறது. அல்போன்ஸா, பங்கனப்பள்ளி, தசேரி, கேசர், மல்கோவா போன்ற பிரபலமான மா வகைகள் முதல் இந்திய கிராமங்களின் அதிகம் அறியப்படாத சுவையான மாம்பழங்கள் வரை பல வகையான மாங்கனிகளை இந்த விழாவில் காணலாம்.
இந்திய கலாசாரங்கள் மற்றும் புராணங்களுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டது மாம்பழம். ‘மாதா ஊட்டாத சோறு மாங்காய் ஊட்டும்’ என்ற பழமொழி கூட உண்டு. அதாவது சில சமயங்களில் தாய் ஊட்டும் சோறை உண்ணாத பிள்ளைகள், அதை மாங்காய் ஊறுகாயுடன் சேர்த்து ஊட்டும்போது விரும்பி உண்பார்கள் என்று அடிப்படையில் சொல்லப்படும் பழமொழி.
யுவான் சுவாங் முதல் ஜார்ஜ் புஷ் வரை, போர்த்துகீசியர்கள் முதல் முகலாய மன்னர்கள் வரை, மாம்பழச் சுவைக்கு அடிமையாக இருந்தவர்களின் பட்டியல் மிகவும் நீளம். கனிகளின் அரசன் என்று அழைக்கப்படும் இந்த மாம்பழத்தின் வரலாற்றையும் அது குறித்த சுவாரசியமான தகவல்களையும் இந்தக் கட்டுரையில் காணலாம்.
மாம்பழத்தின் வரலாறு

பட மூலாதாரம், Getty Images
“பொதுவாக ஒரு தாவரம் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பரவுதல் எவ்வாறு நிகழும், தாவர விதைகள் காற்றில் பரவும் அல்லது பறவைகள் பழங்களை விதைகளோடு உண்ணும்போது, அவற்றின் எச்சங்கள் மூலம் பரவும்.
ஆனால் மிகப்பெரிய மாங்கொட்டைகள் அவ்வாறு பரவியிருக்க வாய்ப்பில்லை. எனவே பெரும்பாலும் மனிதர்கள் மூலமாக தான் உலகமெங்கும் மாம்பழங்கள் பரவின” என்கிறார் எழுத்தாளர் முகில்.
உணவுச் சரித்திரம், கருப்பு- வெள்ளை இந்தியா, பயண சரித்திரம், செங்கிஸ்கான், யூதர்கள்: வரலாறும் வாழ்க்கையும், முகலாயர்கள் போன்ற பல வரலாற்று நூல்களை இவர் எழுதியுள்ளார்.
மாம்பழங்களின் வரலாறு குறித்தும், அதன் சுவாரசியமான பின்னணி குறித்தும் பிபிசி தமிழிடம் பேசினார் எழுத்தாளர் முகில்.
“மாம்பழம், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய உலகின் ஆதி கனி. 25 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே மாமரங்கள் இருந்ததற்கான படிமங்கள் கிடைத்திருக்கின்றன. இந்தியாவின் வடகிழக்கு பிரதேசங்கள், மியான்மர், வங்கதேசத்தின் பகுதிகள் மாம்பழத்தின் பிறப்பிடமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது."
"அங்கிருந்து தான் இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கும், உலகின் மற்ற நாடுகளுக்கும் இது காலப்போக்கில் பரவியுள்ளது. குறிப்பாக புத்த மதத்தைப் பரப்பும் விதமாக இந்தியாவிற்குள் வந்துச் சென்ற துறவிகள் மற்றும் இந்தியாவிலிருந்து மற்ற நாடுகளுக்குச் சென்ற புத்த துறவிகள் மூலமாக ஆசியாவின் பல பகுதிகளுக்கு மாம்பழங்கள் கொண்டு செல்லப்பட்டன.” என்கிறார் எழுத்தாளர் முகில்.
தொடர்ந்து பேசிய அவர், “இதில் அயல்தேச வணிகர்களுக்கும் பங்குண்டு. கிபி ஐந்தாம், நான்காம் நூற்றாண்டுகளில் ஆசியாவின் பல இடங்களில் மாமரங்கள் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. கிபி ஏழாம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வந்த சீனப் பயணி யுவான் சுவாங், ஆசியாவின் பிற பகுதிகளுக்கு மாம்பழங்களைக் கொண்டு சென்றதற்கான வரலாற்று குறிப்புகள் உள்ளன."
"பாரசீகத்தில் இருந்த இந்தியா வந்த வணிகர்கள் மூலம் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் கிழக்கு ஆப்பிரிக்காவிற்கும் பரவியது. 15ஆம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வணிகம் செய்ய வந்த போர்த்துகீசியர்கள், மாம்பழத்தின் சுவையில் மயங்கினார்கள். அவர்கள் மூலமாக ஐரோப்பாவின் சில பகுதிகளுக்கும், மேற்கு ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளுக்கும் பரவியது மாம்பழம்” என்று கூறினார்.

பட மூலாதாரம், writermugil/X
மாங்கிஃபெரா இண்டிகா
மாம்பழம் என்பது அனகார்டியேசி (Anacardiaceae) எனும் முந்திரி குடும்பத்தைச் சேர்ந்த தாவரம். மாங்கிஃபெரா (Mangifera) என்பது மாம்பழத்தின் தாவரவியல் பெயர், இதில் மொத்தம் 35 சிற்றினங்கள் இருக்கின்றன. அதில் மாங்கிஃபெரா இண்டிகா (Mangifera Indica) என்பது இந்திய மாம்பழத்தின் சிற்றினப் பெயர்.
சாதாரணமாக 35 முதல் 40 மீட்டர் வரை மாமரங்கள் வளரும். பொதுவாக 10 மீட்டர் விட்டத்துக்கு தன்னைச் சுற்றி கிளைகள் பரப்பும். நடப்பட்ட ஆறாவது ஆண்டில் மாமரங்கள் நல்ல பலன் கொடுக்க ஆரம்பிக்கும். முதலில் வெண்ணிற மாம்பூக்கள் பூக்கும். அதன் மணம் குறைவே. அந்தப் பூக்கள் காய்களாக மாற 3 முதல் 6 மாதங்கள் ஆகலாம். இது ஒவ்வொரு ரகங்களைப் பொறுத்தது.
ஒரு மாமரமானது சராசரியாக நாற்பது ஆண்டுகள் வரை நல்ல விளைச்சலைக் கொடுக்கிறது. இவை பொதுவாக பூமத்திய ரேகையை ஒட்டியப் பகுதிகளில் வளருகின்றன. மிதமான தட்பவெப்பநிலை மாமரங்கள் வளரச் சாதகமானது. அதிகக் குளிர், உறைபனி மற்றும் 40 டிகிரி செல்சியஸுக்குக் கூடுதலான வெப்பம் மாமரத்திற்கு ஆகாது. இந்த மித வெப்பச் சூழ்நிலை காரணமாகத் தான் இந்தியாவில் அதிக அளவில் மாம்பழங்கள் விளைகின்றன.
“சில மாமரங்கள் பல நூற்றாண்டுகளைக் கடந்தும் நிற்கும். அதற்கு ஒரு உதாரணம் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலின் தல விருட்சமாக சுமார் 3500 வருடப் பழமையான மாமரம், நான்கு பக்க கிளைகளுடன் இன்றும் காய்க்கிறது. இதுபோல தமிழ்நாட்டின் பல சிவன் கோயில்களில் பழமையான மாமரங்கள் தலவிருட்சமாக உள்ளன” என்கிறார் எழுத்தாளர் முகில்.

பட மூலாதாரம், Getty Images
முகலாயர்களுக்கும் மாம்பழங்களுக்கும் இருந்த தொடர்பு
“முகலாயர்கள் பற்றிப் பேசாமல் மாம்பழ வரலாறு முழுமையடையாது. முகலாயர்களின் ஆட்சிக்காலம் தான் ‘மாம்பழங்களின் பொற்காலம்’ என வர்ணிக்கப்படுகிறது. காரணம் மாம்பழத்தின் சுவையைக் கூட்டுவது குறித்தும், புதிய மா ரகங்களை உருவாக்குவது குறித்தும் அவர்கள் பல ஆராய்ச்சிகள் செய்தனர்” என்கிறார் எழுத்தாளர் முகில்.
தொடர்ந்து பேசிய அவர், “பண்டைய கால மாம்பழங்கள் அதிக சதைப்பிடிப்பு இன்றி தான் இருந்துள்ளன. அதை நல்ல புஷ்டியான, சுவை மிகுந்த மாம்பழங்களாக மாற்ற முகலாயர்களும் போர்த்துகீசியர்களும் தான் பல முயற்சிகள் எடுத்தனர். அதில் முக்கியமான ஒரு ஆராய்ச்சி தான் ‘ஒட்டு மா’.
அதாவது மூங்கில் குழாய்களில் அல்லது சிறு பைகளில் மண்ணை நிரப்பி, மாங்கொட்டையை விதைப்பார்கள். பின் அது முளைத்து சிறு மரமாக வளரும்போது, அதன் நுனிப் பகுதியை வெட்டி, ஏற்கனவே முதிர்ச்சி பெற்ற மாமரத்தின் கிளைகளை வெட்டி ஓட்ட வைப்பார்கள்.
விதையிலிருந்து வரும் மா ஒரு ரகமாக இருக்கும். வெட்டி ஒட்டவைக்கப்பட்ட கிளை, ஏற்கனவே சுவையான கனிகளைத் தருவதாக இருக்கும். இவ்விரண்டையும் ஒட்டுப் போட்டு புதிய கனிகளை விளைவிப்பது தான் ‘ஒட்டு மா’ முறை” என்று விளக்கினார்.

பட மூலாதாரம், Getty Images
“பேரரசர் அக்பர் மாம்பழ பித்தராக இருந்தார். கோடைக்காலங்களில் தவறாமல் அவரது உணவுகளில் மாம்பழம் அல்லது மாம்பழச் சாறு இருந்துள்ளது. இதுகுறித்து, அக்பரது அவைக்குறிப்புகளைச் சொல்லும், 16ஆம் நூற்றாண்டின் நூலான ‘அயின்-ஐ-அக்பரியில்’ (Ain-i-அக்பரி) கூறப்பட்டுள்ளது."
"மா, பலா, வாழை, அன்னாசி, திராட்சை, காஷ்மீர் ஆப்பிள் போன்ற பழங்களை துண்டுகளாக்கி, கலந்து, அதில் சர்பத்தும் ஐஸ்கட்டிகளும் போட்டு சாப்பிடுவது முகலாய மன்னர்களின் வழக்கமாக இருந்துள்ளது. எண்ணெய் அல்லது வினிகர் கலந்து செய்யப்பட்ட மாங்காய் ஊறுகாயும் முகலாய சமையலறைகளில் தயாரிக்கப்பட்டது” என்று கூறினார்.
புதுப்புது மாங்கனி வகைகளை உருவாக்குவதில் அக்பருக்கு பெரும் ஆர்வம் இருந்ததாகவும், அதற்காகவே பிரத்யேகமாக ஒரு மாபெரும் மாந்தோப்பை அவர் உருவாக்கியிருந்தார் என்று கூறுகிறார் முகில்.
“பிகாருக்கு கிழக்கே உள்ள தர்பங்கா என்ற பகுதியில் லாக்-பாக் (Lakh-Bagh) எனுமிடத்தில் அந்த மாந்தோப்பு உருவாக்கப்பட்டது. அதில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் மாமரங்கள் இருந்துள்ளன என்று அயின்-ஐ-அக்பரி கூறுகிறது. மேலும் அங்கு விளைவிக்கப்பட்ட மா வகைகள், சாகுபடி முறைகள், ரகங்கள், எந்த வருடத்தில் எவ்வளவு சாகுபடி நடந்தது என பல விஷயங்கள் அந்த நூலில் உள்ளது.
முகலாய அரண்மனைகளுக்கான மொத்த மாங்கனிகளும் இந்த தோப்பில் இருந்து தான் சென்றுள்ளன” என்கிறார் எழுத்தாளர் முகில்.

பட மூலாதாரம், Getty Images
தமிழ் இலக்கியத்தில் மாம்பழம்
மாம்பழம் தமிழர்களின் வாழ்வியலோடு கலந்த ஒரு கனி என்பதை நிரூபிக்கும் விதமாக பல பாடல்கள் இருக்கின்றன என்று கூறும் முகில், அதில் சில உதாரணங்களைச் சுட்டிக்காட்டுகிறார்.
‘மந்த மார்பொழில் மாங்கனி மாந்திட மந்திகள் மாணிக்கம்
உந்தி நீர்வரு காவிரி வடகரை மாந்துறை யுறைவானை….’
“குரங்குகள் மாங்கனிகளை உண்டு மகிழுமாறு அடர்ந்து வளர்ந்த மாந்தோப்புகளை உடைய மாந்தோப்புகளை உடைய மாந்துறையில் எழுந்தருளியுள்ள இறைவனே என்பது இந்த வரிகளின் பொருள். இது பன்னிரு திருமறையில், திருமாந்துறை பற்றிப் பாடப்பட்ட இரண்டாம் திருமுறைப் பாடல்.”
‘துறையின் நின்று உயர் மாங்கனி தூங்கிய சாறும்…
துள்ளி கொள்வன தூங்கிய மாங்கனி…
மாங்கனி நாறு நாறுவ…’
“இவை கம்ப ராமாயண வரிகள். இதுபோல ஐங்குறுநூறு, குறுந்தொகை என தமிழ் இலக்கியங்களில் மாங்கனி குறித்த பாடல்கள், வரிகள் பல உள்ளன” என்று கூறினார் எழுத்தாளர் முகில்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












