கானா: 150 ஆண்டுகளுக்கு முன் கொள்ளையடித்த பொக்கிஷங்களை கடனாக கொடுத்த பிரிட்டன் - கொண்டாடும் மக்கள்

கானா, ஆப்பிரிக்கா, பிரிட்டன்

பட மூலாதாரம், British Museum

படக்குறிப்பு, குமாசியில் இப்போது காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள பொருட்களில், முடிசூட்டு விழாக்களில் மன்றத்தினர் அணியும் ஒரு சடங்கு தொப்பியும் உள்ளது
    • எழுதியவர், ஃபேவர் நுனூ மற்றும் தாமஸ் நாடி
    • பதவி, பிபிசி நியூஸ், குமாசி

பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதிகள் 150 ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்பிரிக்காவின் கானா நாட்டிலிருந்து கொள்ளையடித்த கலைப் பொருட்கள், கானா மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

அசான்டே (Asante) சாம்ராஜ்யத்தில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட கலைப் பொருட்கள் ஒருவழியாக கானாவுக்கு மீண்டும் வந்தடைந்துள்ளன. பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதிகள் அவற்றை எடுத்துச் சென்ற 150 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது அவை கானாவில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

அசான்டே பிராந்தியத்தின் தலைநகரான குமாசியில் உள்ள மன்ஹியா அரண்மனை அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள 32 கலைப் பொருட்களைக் காண கானா மக்கள் அங்கு பெருங்கூட்டமாகத் திரண்டனர்.

"இது அசான்டேவுக்கு ஒரு முக்கியமான நாள். கறுப்பின ஆப்பிரிக்க கண்டத்துக்கும் முக்கியமான ஒரு நாள். நாங்கள் ஆத்மார்த்தமாக மதிக்கும் அற்புதமான ஒன்று மீண்டும் எங்களிடம் வந்துவிட்டது," என அசான்டே அரசர் இரண்டாம் ஓட்டம்போ ஓசி டுட்டு கூறினார்.

கானா, ஆப்பிரிக்கா, பிரிட்டன்

இந்தக் கலைப்பொருட்கள் கானாவிற்கு மூன்று ஆண்டுகளுக்கு மட்டும் கடனாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இருப்பினும், இந்தக் கடனை நீட்டிக்க வாய்ப்புள்ளது. இந்த ஒப்பந்தம் இரண்டு பிரிட்டிஷ் அருங்காட்சியகங்களுக்கும் அசான்டே மன்னருக்கும் இடையே கையெழுத்திடப்படுள்ளது. (விக்டோரியா & ஆல்பர்ட் அருங்காட்சியகம் மற்றும் பிரிட்டிஷ் அருங்காட்சியகம்) கானா அரசாங்கத்துக்கு இந்த ஒப்பந்தத்தில் சம்பந்தம் இல்லை.

அசான்டே அரசர், அல்லது அசான்டேஹேன் (Asantehene) என்னும் பதவி பாரம்பரிய அதிகாரத்தின் ஓர் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. அவரிடத்தில் அவரது முன்னோடிகளின் ஆன்ம பலம் கடத்தப்பட்டிருக்கும் என்றும் மக்களால் நம்பப்படுகிறது. ஆனால் அவரது ராஜ்ஜியம் தற்போது கானாவின் நவீன ஜனநாயகத்தின் ஒரு பகுதியாக மாறிவிட்டது.

ஓய்வுபெற்ற காவல்துறை ஆணையரும், பெருமைக்குரிய அசான்டேவாசியுமான ஹென்றி அமங்க்வாடியா, ஆரவாரமான பறை ஓசைக்கு மத்தியில், “எங்கள் கெளரவம் மீட்டெடுக்கப்பட்டது,” என்று பிபிசியிடம் மகிழ்ச்சி பொங்கப் பேசினார்.

'கறை படிந்த வரலாறு'

கானா, ஆப்பிரிக்கா, பிரிட்டன்

பட மூலாதாரம், British Museum

படக்குறிப்பு, தங்க முலாம் பூசிய வீணை (மேல் இடது), தங்க அணிகலன் (வலது) மற்றும் அரசரின் வாள்

பிரிட்டிஷ் அருங்காட்சியகத்திற்கு 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தங்க முலாம் பூசிய வீணை (மேல் இடது) வழங்கப்பட்டது. ஆனால் தங்க அணிகலன் (வலது) மற்றும் அரசரின் வாள் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்ட கலைப் பொருட்கள்.

விக்டோரியா & ஆல்பர்ட் அருங்காட்சியகம் 17 கலைப் பொருட்களை கானாவுக்கு கடனாக வழங்கியுள்ளது, மீதமுள்ள 15 கலைப் பொருட்கள் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் இருந்து பெறப்பட்டவை. கானா தேசத்திற்குள் கலைப் பொருட்கள் மீண்டும் வந்திருக்கும் அதே நேரம் அசான்டேஹேனின் வெள்ளி விழா கொண்டாட்டமும் நடக்கிறது.

"கானாவின் `அரச குடும்ப நகைகள்' என விவரிக்கப்படும் சில கலைப் பொருட்கள், 19ஆம் நூற்றாண்டின் ஆங்கிலோ-அசான்டே போர்களின்போது கொள்ளையடிக்கப்பட்டன, இதில் 1874ஆம் ஆண்டில் ஏற்பட்ட சர்கெண்டி போரும் அடங்கும். மேலும் தங்க வீணை (சாங்குவோ) போன்ற பிற கலைப் பொருட்கள் 1817இல் ஒரு பிரிட்டிஷ் தூதருக்கு விருப்பத்துடன் வழங்கப்பட்டது.

கானா, ஆப்பிரிக்கா, பிரிட்டன்

பட மூலாதாரம், AFP

"இந்தக் கலைப் பொருட்களை காட்சிப்படுத்தயிருப்பது மகிழ்ச்சியான தருணம் என்றபோதிலும், இதைச் சுற்றியுள்ள வரலாறு மிகவும் வேதனையான ஒன்று என்பதை நாங்கள் ஒப்புக் கொள்கிறோம். ஏகாதிபத்திய மோதல் மற்றும் காலனித்துவம் கொடுத்த காயங்களின் வடுக்களைச் சுமந்திருக்கும் கறை படிந்த வரலாறு அது" என்று இந்த விழாவிற்காக குமாசி வந்திருந்த விக்டோரியா & ஆல்பர்ட் அருங்காட்சியகத்தின் இயக்குநர் முனைவர் டிரிஸ்டம் ஹன்ட் கூறினார்.

கானாவுக்கு அனுப்பப்பட்டுள்ள கலைப் பொருட்களில் அரச வாள், தங்க அமைதிக் கோல் மற்றும் அரசரின் ஆன்மாவைத் தூய்மைப்படுத்தப் பணியமர்த்தப்படும் அதிகாரிகள் அணியும் தங்கப் பதக்கங்கள் ஆகியவை அடங்கும்.

"இந்தப் பொக்கிஷங்கள் ஒரு பெரிய ராஜ்ஜியத்தின் வெற்றி மற்றும் போராட்டங்களுக்கு சாட்சியாக உள்ளன. மேலும் அவை குமாசிக்கு கொண்டு வரப்பட்டது கலாசார பரிமாற்றமாகப் பார்க்கப்படுகிறது. இது நல்லிணக்கத்தின் சான்று," என்று டாக்டர் ஹன்ட் கூறினார்.

தீராத சர்ச்சை

கானா, ஆப்பிரிக்கா, பிரிட்டன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பாரம்பரிய உடையில் கானா பெண்கள்

கானா கொண்டுவரப்பட்டுள்ள கலைப் பொருட்களில் "இம்போம்போம்சுவோ (mpompomsuo)" என்று அழைக்கப்படும் வாள், அசான்டே மக்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இது முக்கியமான உயர்மட்டத் தலைவர்கள், அரசருக்குப் பதவிப் பிரமாணம் செய்யும்போது பயன்படுத்தப்பட்ட அதிகாரப்பூர்வ வாள்.

அரச வரலாற்றாசிரியர் ஓசெய் - போன்சு சஃபோ-கண்டங்கா பிபிசியிடம் பேசுகையில், அசான்டேவில் இருந்து கலைப் பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்ட போது, "எங்கள் இதயத்தின் ஒரு பகுதி, எங்கள் உணர்வு, எங்கள் முழு இருப்பு ஆகியவற்றை இழந்ததாக உணர்ந்தோம்,” என்றார்.

கானா: 150 ஆண்டுகளுக்கு முன் கொள்ளையடித்த பொக்கிஷங்களை கடனாக கொடுத்த பிரிட்டன் - கொண்டாடும் மக்கள்

கலைப் பொருட்கள் மீண்டும் ராஜ்ஜியத்திற்குள் வந்தது எவ்வளவு முக்கியமானதோ அதே அளவு சர்ச்சைக்குரியதும்கூட.

பிரிட்டன் சட்டத்தின்கீழ், விக்டோரியா & ஆல்பர்ட், பிரிட்டிஷ் அருங்காட்சியகம் போன்ற தேசிய அருங்காட்சியகங்கள் தங்களுடைய சேகரிப்பில் உள்ள அபகரிக்கப்பட்ட பொருட்களை நிரந்தரமாகத் திருப்பிக் கொடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும் இத்தகைய கடன் ஒப்பந்தங்கள், கலைப் பொருட்கள் அவற்றின் சொந்த நாடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கும் ஒரு வழியாகக் கருதப்படுகிறது.

கானா, ஆப்பிரிக்கா, பிரிட்டன்

பிரச்னைக்குரிய கலைப் பொருட்கள் மீது உரிமை கோரும் சில நாடுகள், இதுபோன்ற கடன்கள் பிரிட்டனின் உரிமையை ஏற்றுக்கொள்வதைக் குறிக்கப் பயன்படுத்தப்படலாம் என்று அஞ்சுகின்றனர். கானா மக்களில் பலர் இந்தக் கலைப் பொருட்கள் நிரந்தரமாக நாட்டில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

இருப்பினும், இந்தப் புதிய கலைப் பொருட்களைக் கடனாக வழங்கும் செயல்பாடு, பிரிட்டிஷ் சட்டக் கட்டுப்பாடுகளைக் கடக்க ஒரு வழியாகப் பார்க்கப்படுகிறது. சமீபத்திய ஆண்டுகளில் விலைமதிப்பற்ற வரலாற்று கலைப் பொருட்கள் மீதான உரிமையை மீட்டெடுக்கும் வகையில் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களைத் திருப்பித் தருமாறு ஆப்பிரிக்க நாடுகள் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளன.

'இருண்ட காலனித்துவ வரலாற்றை' கையாள்வதில் இது ஒரு படி என்று ஜெர்மன் வெளியுறவு அமைச்சர் கூறியது குறிப்பிடத்தக்கது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)