தமிழ்நாட்டில் முஸ்லிம்களும் விளக்கேற்றி வழிபடும் இந்து கோயில் எங்கே உள்ளது தெரியுமா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், மாயகிருஷ்ணன் கண்ணன்.
- பதவி, பிபிசி தமிழுக்காக
இந்தியாவில் இந்து, இஸ்லாம், கிறித்தவர் என பல்வேறு மதங்களை சார்ந்த மக்கள் வசித்து வருகின்றார்கள். இவர்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சமூக ஒருங்கிணைப்புடன் வேற்றுமையில் ஒற்றுமை உணர்வோடு வசித்து வருகின்றனர் என்ற போதிலும் தற்போதைய காலத்தில் ஆங்காங்கே இன, மதம் சார்ந்த மோதல்கள் அவ்வப்போது ஆங்காங்கே நடக்கவே செய்கின்றன.
ஆனால் சோழ, பாண்டிய, நாயக்கர் காலங்களில் அவர்கள் இணக்கத்துடன் வாழ்ந்ததற்கான பல்வேறு நிகழ்வுகளும் அதற்கான சான்றுகளும் காணப்படுகின்றன.
இவர்கள் மதம் சார்ந்த நம்பிக்கையில் ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருந்ததுடன் மதம் சார்ந்த விழாக்களில் ஆர்வமுடன் பங்கெடுத்து வந்துள்ளனர்.
குறிப்பாக இந்து-முஸ்லிம் ஒற்றுமையை வெளிப்படுத்தும் கல்வெட்டுக்கள், செப்பேடுகள் பல உள்ளன.
அது பற்றி இந்த கட்டுரையில் விரிவாக காண்போம்.

இந்து-முஸ்லிம் இருதரப்பும் விளக்கேற்றி வழிபடும் கோவில்
இந்து- முஸ்லிம் மக்களிடையே இருந்த ஒற்றுமையை சொல்லும் 200 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டு குறித்து திருச்சி ஆற்றுப்படை அமைப்பின் நிறுவனர் பார்த்திபன் பிபிசி தமிழிடம் விவரித்தார்.
"தஞ்சாவூர் அருகே திருநாகேஸ்வரம் கோவிலின் உட்பகுதியில் 'குன்று மாமுலையம்மன்' சன்னதி உள்ளது. இச்சன்னதியின் மூலையில் ஒரு பலகைக்கல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதில் இந்து-முஸ்லிம் மக்கள் ஒருங்கிணைந்து வழிபாடு நடத்தியது தொடர்பான தகவல் உள்ளது என்று பார்த்திபன் தெரிவித்தார். அதில் சகம் 1705ஐ (கி.பி.1783) சேர்ந்த கல்வெட்டான இது, மொத்தம் 39 வரிகளையுடையது.
இதில் திருநாகேஸ்வரத்தின் தெற்கு எல்லையான உப்பிலியப்பன் கோவில் முதல், வடக்கு எல்லையான ராவுத்தர் கடை வரை அரைக்காசு வீதம் மகமை (வரி) வசூலித்து விளக்கு ஏற்றியுள்ளனர். மேலும் இதில் இரண்டு கடைகளின் பணம் பள்ளிவாசலுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த செயல் தடைபடாமல் நடைபெறுவதை ஒருவர் கண்காணிக்க வேண்டும்.
நிகழ்ச்சிகளுக்கு வருபவர்களை முன்னரே கணக்கெடுத்து அவர்களுக்கு மரியாதை செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இச்செயல்களுக்கு எவரேனும் இடையூறு செய்தால், அவர் இந்துவெனில் 'கங்கைக் கரையில் காராம்பசுவை கொன்ற' தண்டனைக்கும், இஸ்லாமியரெனில் 'மக்கா நகரில் செய்யக்கூடாததை செய்த தோஷத்திற்கு' ஆளாவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
கி.பி.1783ஐ போல இன்றும் இவ்விரு மதத்தினவரும் இணைந்து விளக்கேற்றுவதால் மத நல்லிணக்கம் தொடர்வது குறிப்பிடத்தக்கது" என்று கல்வெட்டு விவரங்களை விரிவாக நம்மிடம் கூறினார் பார்த்திபன்.

ஒற்றுமை சீர்குலைந்தால் தண்டனை
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு வட்டம் நெடுங்குணம் அருகே வெள்ளைமலை கிராமத்தின் கிழக்குப் பகுதியின் வயல்வெளியில் உள்ள பாறையில் இந்து-முஸ்லிம் மக்கள் ஒற்றுமையோடு வாழ வழிவகை செய்யும் 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாறை கல்வெட்டு குறித்து திருக்கோவிலூர் கபிலர் தொன்மை ஆய்வு மையத்தின் தலைவர் சிங்கார உதியன் பிபிசி தமிழிடம் விவரித்தார்.
அந்தப் பாறை கல்வெட்டில் இந்து-முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழவும், அதில் சீர்குலைவு ஏற்பட்டால் அதற்கு உண்டான தண்டனையையும் கல்வெட்டில் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது என்று கூறியவர் அதை வாசித்தும் காண்பித்தார்.
"விஜய வருடம் தை மாதம் மூன்றாம் தேதியுடன் கூடிய நட்சத்திர குறிப்புகளுடன் 57 வரி கல்வெட்டு காணப்படுகிறது. 5 அடிக்கு 11 அடி பரப்பில் இக்கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. இது கி.பி .1669ஆம் வருடத்திற்கு (சக ஆண்டு 1591) உரியது. இதில் மன்னர் பெயர் ஏதும் குறிப்பிடப்படவில்லை.
சேத்துப்பட்டுங்காரு சமூகத்துக்கு நெடுங்குன்றம், கொற்றன்பட்டு, வில்வலம் வன்னி ஏந்தல் ஆகிய 3 கிராமத்து எல்லைக்குட்பட்ட காமப்பட்டினத்தில் வருணாசிரம மக்கள் நான்கு சாதியரும் வீடுகள் கட்டிக் கொண்டு குடியிருக்கிறார்களோ அவர்கள் வழிவழியாக ஆண்டு அனுபவித்துக் கொள்ளவும், இந்தப் பட்டிணத்திலே யாரெல்லாம் குடிவந்து இருக்கிறார்களோ ஆறு வருஷத்துக்கு சர்வ மானியமாக அனுபவித்துக் கொள்ளலாம் என்று கட்டளையிடப்பட்டுள்ளதை இந்த முடங்கல் கூறுகிறது.
பௌத்திர பாரம்பரியமாக அனுபவித்து சுகத்தில் இருக்க வேண்டுமென அதில் கட்டளையிடப்பட்டுள்ளது.
இந்த ஆறு வருடம் கழிந்த பிறகு வருவாயில் 5 விழுக்காடு கொடுக்கவும் மற்ற இடங்கை வலங்கை சாதியர் மற்றும் பிற இனத்தவர் வருஷத்துக்கு ஒரு விழுக்காடு வரி கொடுக்கவும், இது மூன்று வருடங்களுக்கு உரியதாகவும் உள்ளது.
துலுக்கர், பிராமணர், கணக்குப்பிள்ளை சகவாசியான சாத்திர தர்மத்தார் ஆளாய் இருக்கிறார்களோ அவர்களுக்கு போனகத்தில் சர்வ மானியமாக வழங்கப்பட்டதை இவ்வாணை குறிப்பிடுகிறது" என்று கூறிய சிங்கார உதியன், கல்வெட்டில் உள்ளதை வாசித்துக் காண்பித்தார்.

"'இந்தப் பட்டணத்திலே அஸ்தர வருணாசில் வாரா ஆளா குடிவந்தாலும், ஆளா கலியாணம் பண்ணினாலும் சாதி வயிரங்கள் இல்லாமல் வருணாசிரம மக்கள் இடங்கை வலங்கை நாலா சாதியாரும், எல்லா வீதிகளிலும் ஊர்வலம் வர கடவோராகவும்,
பேதமில்லாமல் குடியுடையாரும் அசலூராராக கணக்கிடப்பட்டு வந்திருந்தாலும் இந்த பட்ட(ண)த்திலே ஊர் வந்திருந்தாலும் இங்கே வந்து தெகரு கடையப் பண்ணிக்கொண்டு சம்மதித்து மேலே ராசிபண்ணி அமைத்து போகவும், இல்லாவிட்டால் இந்த கல்லிலே எழுதின பாவத்தில் போகவும்.
இந்துகளுக்கு ஆறாகிலும் விரகம் பண்ணினால் துலுக்கர், நாலாம் சித்திலே பன்றியை கொன்றவனனும், மெக்காவிலே அகோர பாவம் பண்ணினவன் பாவம் செய்ததற்கு சமமாகும்.
பிரம்ம ஷத்திரிய வைசிய முதலாகிய வருணாசிரம சாதியாரும் பாவம் பண்ணினால் காசியிலே, கங்கைக் கரையிலே காராம் பசுவைக் கொன்ற தோஷத்திலேயும் சிசு, மாதா, பிதா, குருக்களையும், பிராமணரை கொன்ற தோஷத்திலே போகவும், அவர்களுக்கு எந்த நரகம் உண்டோ அந்த நரகத்திற்கு போகவும்.' என இம்முடங்கல் கல்வெட்டு கூறுகிறது.
இதில் அனைத்து மதத்தவர்களும் ஒற்றுமையுடன் வாழ, அரசாங்கம் அவர்களுக்கு வழங்கிய மானியம் மற்றும் சலுகைகள் குறித்து விவரிக்கப்பட்டுள்ளதையும், இதில் குழப்பம் ஏற்படுத்தாமல் இருக்கவும் அப்படி ஏற்படுத்தினால் அவர்கள் மதம் சார்ந்த புனிதமான விஷயங்களுக்கு பாவம் செய்தவர்களாக கருதப்படுவார்கள் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது" என்று கூறினார் சிங்கார உதயன்.
மக்கள் மத நல்லிணக்கத்தோடு வாழ்ந்ததற்கு மிகப்பெரிய சான்றாக இது உள்ளது எனவும், இதில் அந்தந்த சமயத்தின் புனிதமான இடங்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

அனைத்து மதங்களையும் மதித்த ராணி மங்கம்மாள்
தமிழ்நாட்டின் வரலாற்றில் இந்து- முஸ்லிம் மக்கள் இடையே நிலவிய ஒற்றுமை மற்றும் பிற மதங்களிடையே இருந்த உறவுகள் குறித்து பிபிசி தமிழிடம் பேசினார் விழுப்புரம்- பேரறிஞர் அண்ணா கலைக் கல்லூரியின் வரலாற்று துறை பேராசிரியர் ரமேஷ்.
"ராணி மங்கம்மாள் அவர்களின் ஆட்சியில் மத நல்லிணக்கம் மேம்பாடு அடைந்திருந்தது. அவர் அனைத்து மதங்களையும் மதித்தார். அவர் ஆட்சியில் திருச்சிராப்பள்ளியில் பள்ளிவாசலுக்கு சொக்கநாதர் பெயரால் நிலக்கொடைகள், ஊர்கள் வழங்கி உள்ளார்.
அதேபோல் கி.பி. 1739இல் மதுரை வட்டத்தில் காமாட்சி நாயக்கர் என்பவரும், கி.பி. 1776இல் ஊத்துமலை சின்ன நயினாத்தேவர் என்ற மருதப்பத்தேவரும், கி.பி. 1784இல் சிவகங்கை முத்து வடுக நாததேவரும் இஸ்லாமியரது பள்ளிகளுக்கும், தர்ஹாக்களுக்கும் பல நிலக்கொடைகள் வழங்கிய செய்திகள் உள்ளன.
குமாரமுத்து விசய ரகுநாத சேதுபதி, பிற மதத்தினரையும் மதித்து 1734இல் ராமநாதபுரம் பள்ளிவாசலுக்கு 'கிழவனேரி' எனும் ஊரைத் தானம் செய்தார்.
கி.பி. 1742இல் முத்துக்குமார விசய ரகுநாத சேதுபதி ஏர்வாடி பள்ளிவாசலுக்கும், ராமேஸ்வரத்தில் உள்ள ஆபில்- காபில் தர்காவுக்கும் நிலக்கொடைகள் அளித்துள்ளார்.
கடைசி சேதுபதியான முத்துராமலிங்கம், முத்துப்பேட்டை கிறிஸ்தவ தேவாலயத்திற்கு 1781இல் 'தெஞ்சியேந்தல்' எனும் ஊரைக் கொடையாகத் தந்துள்ளார் என்று பேராசிரியர் ரமேஷ் தெரிவித்தார்.
இதைப்போல் இஸ்லாமியர்கள், இந்துக்கள் கோவிலுக்கும் அவர்கள் கொண்டாடும் விழாக்களுக்கும் கொடைகள் தந்துள்ள செய்திகளும், இந்துக்கள் இஸ்லாமியர்களுக்கு செய்துள்ள உதவிகளும் வரலாற்றில் காணப்படுகின்றன" என்று அவர் கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












