அக்பரின் படைகளை திணறடித்த 'பெண் சுதந்திரத்தின் சின்னம்' - யார் இந்த சந்த் பீபி? என்ன செய்தார்?

பட மூலாதாரம், ANIL RELIA / THEINDIANPORTRAIT
- எழுதியவர், வகார் முஸ்தஃபா
- பதவி, செய்தியாளர் மற்றும் ஆராய்ச்சியாளர்
பிஜாபூரின் 5வது ஆட்சியாளர், அலி அடில் ஷா 1580ஆம் ஆண்டில் இறந்தபோது அவருடைய மனைவி சந்த் பீபி, தான் வெறும் கணவரை இழந்த பெண் அல்ல, அதற்கும் மேலானவள் என நிரூபித்தார்.
தென்னிந்திய தக்காணப் பகுதியில் கி.பி. 1347இல் அமைந்த பாமினி பேரரசு, 180 ஆண்டுகளுக்குப் பின் சிதைந்தது. 5 சிறிய ராஜ்ஜியங்கள் அதிலிருந்து பிறந்தன. அவற்றில் ஒன்றான பிஜாபூரின் ஐந்தாவது ஆட்சியாளராக இருந்தவர் அலி அடில் ஷா. அவரது மனைவிதான், அகமதுநகரின் மூன்றாம் சுல்தான் ஹூசை நிஜாம் ஷாவின் மகள் சந்த் பீபி நிஜாம் ஷாஹி.
ஹுசைன் ஷாவின் வாழ்க்கையில் அவருடைய மனைவி குன்சா ஹுமாயுன் ஆட்சி நிர்வாகத்தில் பங்கெடுத்தார். கணவர் இறந்த பின்பும் தன் மகன் முர்தாஸா சிறுவனாக இருந்ததால், ஆட்சியை பொறுப்பேற்று நடத்தினார்.
அசர்பைஜானின் அரச குடும்பத்தைச் சேர்ந்த குன்சா, முன்னோக்கிச் சிந்திப்பவராக இருந்தார் என, வரலாற்று எழுத்தாளர் மனு எஸ். பிள்ளை குறிப்பிடுகிறார்.
ரஃபியுதீன் ஷிராசி மற்றும் முகமது கசீம் ஃபிரிஷ்டா போன்ற வரலாற்று அறிஞர்களின் குறிப்புகள், குன்சா மிகுந்த திறமை, அறிவாற்றல் கொண்டரவராகவும் தைரியம் நிறைந்த, ஆட்சி நிர்வாகம் குறித்த புரிதல் கொண்டவராகவும் இருந்ததாக தெரிவிக்கின்றன.
குன்சாவே நிறைய போர்களில் ஈடுபட்டதாக, சையது அகமதுல்லா காத்ரி எழுதுகிறார். இந்த குன்சா ஹுமாயூன் தான் சந்த் பீபியின் தாயார்.
வசீர் ஹாசன் தன்னுடைய ‘சந்த் பீபி சுல்தான்: எ டாட்டர்’ எனும் புத்தகத்தில், “தன் தாயைப் போலவே சந்த் பீபி இருந்ததாக" குறிப்பிட்டுள்ளார்.
சந்த் பீபி வில் வித்தை, குதிரை சவாரி, வாள் சண்டை போன்றவற்றில் நிபுணராக இருந்தார். அரபு, பெர்சிய மொழி, துருக்கி, கன்னடம், மராத்தி ஆகிய மொழிகள் சந்த் பீபிக்கு தெரியும். சிதார் வாசித்தல், ஓவியம் வரைதல், குறிப்பாக பூக்களை ஓவியமாக வரைவது போன்றவற்றில் ஆர்வம் கொண்டவராக இருந்தார்.
கணவர் மீதான தாக்குதலை முறியடித்த சந்த் பீபி

பட மூலாதாரம், Getty Images
சந்த் பீபி, அலி அடில் ஷாவை மணந்தார். சந்த் பீபியின் சகோதாரர் முர்தாசா, அலி அடில் ஷாவின் சகோதரி ஹூடியா சுல்தானை மணந்தார்.
இந்த இரு திருமணங்களும் அகமதுநகர் மற்றும் பிஜாபூரில் நிலவிய போட்டி மனப்பான்மையை முடிவுக்குக் கொண்டு வந்ததாக அலி அகமது குறிப்பிடுகிறார். பல சூழல்களில் கணவருக்கு உறுதுணையாக இருந்துள்ளார் சந்த் பீபி. போர்க்களத்தின் கடுமைகளை தாங்கிக்கொண்டே, தேவையான சமயங்களில் அறிவுரைகளையும் தைரியத்தையும் வழங்கினார் சந்த் பீபி.
அவருடைய அறிவுரைகள் மற்றும் முயற்சிகளால் பிஜாபூர், அகமதுநகருடன் நல்ல உறவை பேணிக் காத்தது. பேரரசு வலுப்பெற்று கலகங்கள் முடிவுக்கு வந்தன.
ஒருமுறை, தன் கணவரைக் கொல்ல முயற்சிகள் நடப்பதாக சந்த் பீபிக்கு செய்தி வந்தது. கணவரை சமாதானப்படுத்திய சந்த் பீபி, இரவு நேரங்களில் தான் அவருக்கு காவலாக இருப்பதாகக் கூறினார். ஒருநாள் இரவு மேல்தளத்தில் யாரோ ஒருவர் குதிக்கும் சத்தம் கேட்டது. சந்த் பீபி வாளை எடுத்துக்கொண்டு தனி ஆளாக மேல் அறைக்குச் சென்றார்.
முகமூடி அணிந்த நபர்கள் தங்கள் வாள்களுடன் சந்த் பீபியை நோக்கி விரைந்தனர். அப்போது, சந்த் பீபி முன்னோக்கிச் சென்று, முழு ஆற்றலுடன் வாளை வீசி ஒருவரை தரையில் சாய்த்தார். இதையடுத்து, சந்த் பீபியை நோக்கி வந்த மற்றொருவருக்கும் இதே கதிதான் நேர்ந்தது.
இந்த சத்தத்தைக் கேட்ட அலி அடில் ஷா, மேல்தளத்திற்கு விரைந்தார். இந்தக் காட்சியைக் கண்ட அலி அடில் ஷா, தன் தைரியமான ராணியின் வாளை முத்தமிட்டு, “சந்த் பேகம், இந்த உலகமே எனக்கு எதிரியாக மாறினாலும், நீ என்னுடன் இருந்தால் எனக்கு எந்த பயமும் இல்லை” என கூறினார்.
அலி அடில் ஷா இறந்தபோது சந்த் பீபிக்கு 28 வயது. ஆனால், அந்த வயதிலும் அவர் அரசு விதிமுறைகளையும் அனைத்துத் தற்காப்புக் கலைகளையும் அறிந்திருந்ததாக வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர்.
கணவர் இறந்த நிலையில், சந்த் பீபிக்கு குழந்தையும் இல்லாததால் ஆட்சி நிர்வாகம் அவருடைய மருமகன் இப்ராஹிமுக்கு சென்றது. அவர், இரண்டாம் இப்ராஹிம் அடில் ஷா என வரலாற்றில் அறியப்படுகிறார்.
அகமதுநகர் அரசு

பட மூலாதாரம், Getty Images
இப்ராஹிமுக்கு முடிசூட்டப்பட்ட போது அவருக்கு வயது ஒன்பது. எனவே, அதிகாரத்தை அபகரித்துக்கொண்டிருந்த அமீர்த் கமல் கான்-ஐ அகற்றிய பிறகு, இப்ராஹிமின் கல்வி, பயிற்சி மற்றும் ராஜ்ஜிய விவகாரங்கள் ஆகியவற்றுக்கு சந்த் பீபி பொறுப்பேற்றார்.
பாமினி பேரரசு சிதைந்தபிறகு, பெரார், பிடாட், கோல்கொண்டே ஆகிய அரசுகள் ஒன்றாகத் தாக்கின. இந்த முற்றுகையின்போது, சந்த் பீபி ஒரு முனையிலிருந்து மற்றொரு முனைக்குத் தொடர்ந்து இடம்பெயர்ந்து கொண்டே இருந்தார். ஒருசமயத்தில், கனமழை காரணமாக ஓரிடத்தில் விரிசல் ஏற்பட்டபோது, சந்த் பீபியே பாதுகாப்புக்காக நின்று, தன்னுடைய கண்காணிப்பில் அந்த விரிசலைச் சரிசெய்தார். இந்த முற்றுகை ஓராண்டு காலம் நீடித்தது. அதன்பின், எதிரிப்படை பின்வாங்கியது.
கடந்த 1584ஆம் ஆண்டில் இப்ராஹிமின் சகோதரி, சந்த் பீபியின் மருமகன், அதாவது முர்தாசாவின் மகனை திருமணம் செய்துகொண்டார். எனவே, சந்த் பீபி பிஜாபூரில் இருந்து வெளியேறி அகமதுநகருக்கு சென்றார். முர்தாசாவுக்கு மனநல பிரச்னை இருந்தது. அவர் தன் மகனின் உயிரை எடுக்க முயன்றார். அதிலிருந்து தப்பிக்க முயன்றபோது அவருடைய மகனே முர்தாசாவை கொன்றார்.
அகமதுநகரின் வைசிராய் பதவியை சந்த் பீபிக்கு வழங்கியபோது, ஆட்சிக்கு மூன்று பேர் உரிமை கோரியதாக, பிரிட்டிஷ் வரலாற்று அறிஞர் எர்னஸ்ட் பேன்ஃபீல்ட் ஹோவெல் எழுதுகிறார்.
இந்த மூன்று தரப்புகளுள் ஒன்றின் தலைவர், அக்பரின் மகன் இளவரசர் முராத்திடம் உதவி கோரினார். இளவரசர் முராத் அச்சமயத்தில் குஜராத்தில் முகலாய ராணுவத்தின் தளபதியாக இருந்தார். முராத் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டார்.
அக்பர் அனுப்பிய தளபதி கான்-இ-கானன் உடன் இணைந்துகொண்டு அகமதுநகர் நோக்கி முன்னேறினார். முகலாய படைகள் கோட்டையின் வெளிப்புறத்தை வந்தடைந்தபோது, அவர்கள் நகருக்கு உள்ளே வருவதைத் தடுக்கும் வகையில், சந்த் பீபியின் தலைமையில் சில எதிர் அணியினர் ஒன்றாகத் திரண்டிருந்தது தெரிய வந்தது.
அக்பரின் மகன் முராத், அதிகமாக மது அருந்தியதாலும் தன்னுடைய கோபத்தாலும் அக்பர் தன்னுடைய ஆலோசகராக அனுப்பிய திறமையான மற்றும் அனுபவம் வாய்ந்த தளபதி கான்-இ-கானன் போன்றோரால் குழப்பம் அடைந்தார்.
ஒன்பது மாத முற்றுகைக்குப் பின்னும் சிறிதளவே முன்னேற்றம் ஏற்பட்டது. எனவே, இளவரசர் முராத் அகமதுநகரின் சுதந்திரத்தைத் தக்க வைத்துக்கொண்டு அதற்குப் பதிலாக பெரார் ராஜ்ஜியத்திற்கு உரிமை கோருவதை திரும்பப் பெற வேண்டும் என்ற சந்த் பீபியின் தேர்வை ஏற்றுக்கொண்டார். அப்போதிருந்துதான் அவரை முகலாயர்கள் சந்த் சுல்தான் என அழைக்க ஆரம்பித்தனர்.
ஆனாலும் சந்த் பீபியின் பிரச்னைகள் ஓயவில்லை. மிக விரைவிலேயே சந்த் பீபியின் முதன்மை அமைச்சரின் விசுவாசமின்மை, பெரார் ராஜ்ஜியத்தின் எல்லைகள் தொடர்பான பிரச்னை மீண்டும் அவரை முகலாயர்களிடம் இட்டுச் சென்றது.
இந்தமுறை முகலாயர்கள் ஒருங்கிணைந்த படைகளுடன் மயிரிழையில் தோல்வியிலிருந்து தப்பித்தது. கான்களுக்கும் இளவரசர் முராத்திற்கும் இடையிலான மோதலால், 1598இன் ஆரம்பத்தில் அக்பர் கான்களை திரும்பப் பெற்று, அபுல் ஃபாசல்-ஐ தக்காணத்திற்குச் செல்லும்படியும் இளவரசர் முராத்-ஐ அரசவைக்குத் திரும்புமாறும் உத்தரவிட்டார். ஆனால், அபுல் ஃபாசல் திரும்பிய நாளன்று முராத் மூச்சுத் திணறலால் உயிரிழந்தார்.
சந்த் பீபியின் கொலை

பட மூலாதாரம், Getty Images
தைரியமான, பயமில்லாத சந்த் பீபி அபுல் ஃபாசல் படையினருக்கு துரோகம் செய்ததாக எழுந்த வதந்தியின் பேரில், அப்படையினரால் கொல்லப்பட்டார். ஆனால், சந்த் பீபியே விஷம் அருந்தியதாக, அயர்லாந்து வரலாற்று அறிஞர் வின்சென்ட் ஆர்த்தர் ஸ்மித் எழுதியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இப்ராஹிம் சனி எழுதுகையில், “போர்க்களங்களில் எப்போதும் தைரியத்தை அவர் இழந்ததில்லை. அவர் விவேகமானவராகவும் எளியவர்களிடத்தில் கனிவாகவும் தேவைப்படுவோருக்கு தாராள மனதுடனும் இருந்தார். அவர்தான் சந்த் சுல்தான், பிஜாபூரின் அன்பான ராணி" எனக் குறிப்பிடுகிறார்.
சந்த் பீபியின் கொலை தூண்டுதலின்றி நடந்ததாக, வரலாற்று எழுத்தாளர் மனு எஸ். பிள்ளை எழுதுகிறார். அகமது நகர் திறமையான ஆட்சியாளரை இழந்துவிட்டது.
ஆறு மாத காலம் நீடித்த மற்றொரு முற்றுகையில், 1601ஆம் ஆண்டில் அகமதுநகர், இளவரசர் டானியலின் தலைமையில் ஏகாதிபத்திய ராணுவத்தால் தாக்குதலுக்கு ஆளானது. டானியல், அக்பரின் இளைய மகன். அப்போது படுகொலைகள் நிகழ்ந்தன, வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. ஆட்சியாளர் பகதூர் நிஜாம் ஷா குவாலியர் கோட்டையில் சிறை வைக்கப்பட்டார்.
சந்த் பீபியை கொலை செய்தவர்களையும் முகலாயர்கள் கொலை செய்தனர். அபுல் ஃபாசலின் ஆலோசனையின் பேரில், லாகூரில் இருந்து காந்தேஷின் ஃபரூக்கி வம்சத்தின் கடைசி ஆட்சியாளரான பகதூர் கானின் பிரதேசங்கள் வழியாக அக்பர் தக்காணத்திற்குள் நுழைந்தார்.
பகதூர் தனது முன்னோடியின் 30 ஆண்டு சிறைவாசத்திற்குப் பிறகு அப்போதுதான் அரியணை ஏறியிருந்தார். தொற்றுநோய் காரணமாக ஆசிர்கர் கோட்டையின் 11 மாத முற்றுகைக்குப் பிறகு பகதூர் அக்பரிடம் சரணடைந்தார்.
அவரும் குவாலியரில் சிறை வைக்கப்பட்டார். கந்தேஷ் பகுதி முகலாய பேரரசில் இணைக்கப்பட்டது. முகலாயர்களின் வெற்றிக்குப் பிறகு, பிஜாபூர் மற்றும் கோல்கொண்டாவின் சுல்தான்கள், அக்பருடன் சமாதானம் செய்துகொள்ள நினைத்தனர்.
இளவரசர் டானியலுக்கும் இப்ராஹிம் அடில் ஷாவின் மகளுக்கும் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது. 1602ஆம் ஆண்டு, அக்பர் வெற்றியுடன் ஆக்ராவுக்கு திரும்பினார். தக்காணத்தின் பேரரசர் என்ற பட்டத்தை ஏற்றுக்கொண்டு, நிர்வாகத்தை அபுல் ஃபாசலுக்கு வழங்கினார்.
பெண் சுதந்திரத்தின் சின்னம்

பட மூலாதாரம், Getty Images
இந்தி, பெர்சிய, தக்காண உலகைச் சேர்ந்தவராக சந்த் பீபி திகழ்ந்ததாக, ஆராய்ச்சியாளர் சாரா வாஹீத் குறிப்பிடுகிறார்.
“பருந்தை வேட்டையாடுவதைப் போன்றே சந்த் பீபியின் பல ஓவியங்கள் உள்ளன. பருந்து வேட்டை வழக்கமாக ஆண்களின் பொழுதுபோக்கு. ஆனால், இந்த ஓவியங்களில் பருந்து பெண் சுதந்திரத்தின் அடையாளமாக உள்ளது.”
அப்துல் காதிரின் ‘ஹிஸ்டரி ஆஃப் அகமதுநகர்' எனும் புத்தகத்தில் சந்த் பீபியின் அரசவையில் ஜோதிடர்கள், நடுவர்கள், சிற்பிகள், ஓவியர்கள், மருத்துவர்கள், தத்துவவாதிகள், தையல் கலைஞர்கள், பொற்கொல்லர்கள், கதை சொல்லிகள், நடனக் கலைஞர்கள் உள்ளிட்டோர் இருந்ததாகக் குறிப்பிடுகிறார்.
சந்த் பீபியின் பயணங்களின்போது அவருடன் ஏழு பெண்கள் இருந்தனர்.
யானைப் பாகன், ஒட்டக ஓட்டுநர் உள்ளிட்டோருடன் நூற்றுக்கும் மேற்பட்ட ஆயுதம் ஏந்திய வீரர்களும் இருப்பர். மேலும் தங்க நகைகள் அணிந்த, ஆண்களின் உடையில் நானூறுக்கும் மேற்பட்ட பெண்களும் இருப்பர்.
சாரா கூறுகையில், “தென்னிந்தியாவில் சந்த் பீபி ஆட்சி செய்த இடங்களுக்கு நான் சென்றுள்ளேன். மக்களின் மனதில் சந்த் பீபி இன்னும் உயிருடன் இருக்கிறார் என இப்பயணங்களின் வாயிலாக நான் முடிவுக்கு வந்துள்ளேன்,” என்றார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












