சிவாஜியுடன் போருக்குச் செல்லும் முன் அப்சல் கான் தனது 63 மனைவிகளை என்ன செய்தார் தெரியுமா?

அஃப்சல்கான்

பட மூலாதாரம், SOCIAL MEDIA

படக்குறிப்பு, கர்நாடகாவின் பிஜாபூரில் அமைந்துள்ள சுற்றுலாத்தலம் ”ஸாட் கப்ரு” (அறுபது கல்லறைகள்).” ஜெனரல் அஃப்சல் கான் தனது 63 மனைவிகளைக் கொன்று அடக்கம் செய்த இடம் இது என்று கூறப்படுகிறது.
    • எழுதியவர், வக்கார் முஸ்தஃபா
    • பதவி, ஆய்வாளர்

கர்நாடகாவின் பிஜாப்பூரில் ஒரு மேடையில் ஏழு வரிசைகளில் கல்லறைகள் உள்ளன.

முதல் நான்கு வரிசைகளில் பதினொன்று, ஐந்தாவது வரிசையில் ஐந்து, ஆறாவது மற்றும் ஏழாவது வரிசைகளில் ஏழு கல்லறைகள் அமைந்துள்ளன.

ஆக மொத்தம் அங்கு 63 கல்லறைகள் உள்ளன.

அவற்றுக்கு இடையிலான ஒத்த இடைவெளி, அளவு மற்றும் வடிவமைப்பு ஆகியவற்றை பார்க்கும்போது இந்த கல்லறைகள் தோராயமாக ஒரே நேரத்தில் இறந்தவர்களுக்காக அமைக்கப்பட்டவை என்று தோன்றுகிறது.

கல்லறைகளின் தட்டையான மேற்பகுதி அவை அனைத்தும் பெண்களுடையது என்பதைக் காட்டுகிறது.

கர்நாடகாவில் உள்ள பிஜாப்பூரின் பெயர் 2014 ஆம் ஆண்டு விஜய்பூர் என மாற்றப்பட்டது.

நகரின் ஒரு மூலையில் மறைந்திருக்கும் இந்த 'சுற்றுலாத் தலம்', ' ஸாட் கப்ரு' என்று அழைக்கப்படுகிறது.

இந்த நகரம் 1668 வரை ஆதில் ஷாஹி ஆட்சியாளர்களின் தலைநகராக இருந்தது.

பிஜாப்பூர் சுல்தானகத்தின் தளபதியான அஃப்சல் கான், பிஜாப்பூர் பேரரசின் தெற்கு நோக்கிய விரிவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்தார்.

மராட்டிய மன்னர் சிவாஜி, ’புலி நக’ ஆயுதத்தால் அஃப்சல் கானை கொன்றார்.

அஃப்சல்கான்

பட மூலாதாரம், BAIJAPUR

படக்குறிப்பு, அஃப்சல் கான் ஜோதிடத்தில் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார் என கசின்ஸ் தனது 'பீஜாப்பூர்: தி ஓல்ட் கேபிடல் ஆஃப் தி ஆதில் ஷாஹி கிங்ஸ்' என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

1659 ஆம் ஆண்டில், அப்போதைய பிஜாப்பூர் சுல்தான் இரண்டாம் அலி ஆதில் ஷா, சிவாஜியுடன் போரிட அஃப்சல் கானை அனுப்பினார்.

இந்த பயணத்தை மேற்கொள்வதற்கு முன்பு ஜோதிடர்கள் அஃப்சல் கானிடம் போரில் இருந்து அவர் உயிருடன் திரும்ப மாட்டார் என்று கூறியதாக இந்திய தொல்லியல் துறையின் ஹென்ரி கசின்ஸ் கூறுகிறார்.

கசின்ஸ் தனது 'பிஜாப்பூர்: தி ஓல்ட் கேபிடல் ஆஃப் தி ஆதில் ஷாஹி கிங்ஸ்' என்ற புத்தகத்தில், ’அஃப்சல் கான் ஜோதிடத்தில் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். அதன்படியே தனது ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைப்பார்’ என்று எழுதியுள்ளார்.

ஹென்ரி கசின்ஸ் 1891 முதல் 1910 வரை இந்திய தொல்லியல் துறையின் மேற்குப் பிரிவின் கண்காணிப்பாளராக இருந்தார்.

1905 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்த புத்தகத்தில், பாரம்பரியத்தின் படி அவர் அதாவது அஃப்சல் கான் தனது அரண்மனைக்கு அருகில் தனக்கான ஒரு கல்லறையையும், ஒரு மசூதியையும் கட்டிக் கொண்டிருந்தார் என்று எழுதப்பட்டுள்ளது.

இந்த இரண்டு மாடி மசூதி 1653 இல் கட்டி முடிக்கப்பட்டது. மேல் தளம் பெண்களுக்காக வைக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இந்த தேதி மசூதியின் நுழைவாயில் வளைவில் அஃப்சல் கானின் பெயருடன் பொறிக்கப்பட்டுள்ளது.

சிவாஜிக்கு எதிராகப் போரிட அஃப்சல்கானுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போது இந்தக் கல்லறை முழுமையாக கட்டி முடிக்கப்பட்டிருக்கவில்லை.

அஃப்சல் கான்

பட மூலாதாரம், QUIZ MUMBAI / X

படக்குறிப்பு, இந்த வளாகத்தில் 63 பெண்களின் கல்லறைகளைத் தவிர, இன்னும் ஒரு கல்லறை காலியாக உள்ளது என்று ஹென்ரி கசின்ஸ் குறிப்பிடுகிறார்.

மனைவிகளை தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்ய முடிவு

ஜோதிடர்களின் கணிப்புகளை நம்பிய அஃப்சல் கான், தான் போருக்கு புறப்பட்டுச் சென்ற ஆண்டை தனது இறந்த தேதியாக தன் கல்லறையில் எழுதினார்.

பிஜாப்பூரை விட்டு வெளியேறும் போது அஃப்சல் கானும் அவரது கூட்டாளிகளும் தாங்கள் திரும்பி வர மாட்டோம் என்ற எண்ணத்துடன் கிளம்பியதற்கு இதுவே காரணம்.

இதன் காரணமாகவே அவர் தன் ”மனைவிகளை நீரில் மூழ்கடித்து கொல்ல முடிவு செய்தார்” என்று அந்த புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது.

போரில் இறந்த பிறகு வேறு யாருடைய கையிலும் அவர்கள் சிக்கிவிடக் கூடாது என்பதற்காக அஃப்சல் கான் தனது மனைவிகள் அனைவரையும் ஒருவர் பின் ஒருவராக கிணற்றில் தள்ளிவிட்டதாக வரலாற்றாசிரியர் லட்சுமி ஷரத் 'தி இந்து' நாளிதழில் எழுதியுள்ளார்.

"அவரது மனைவிகளில் ஒருவர் தப்பிக்க முயன்றார். ஆனால் அவரும் பின்னர் பிடிக்கப்பட்டு, கொல்லப்பட்டார்,” என்று அவர் எழுதுகிறார்.

இந்த வளாகத்தில் 63 பெண்களின் கல்லறைகளைத் தவிர, இன்னும் ஒரு கல்லறை காலியாக உள்ளது என்று ஹென்ரி கசின்ஸ் குறிப்பிடுகிறார்.

"ஒருவேளை ஒன்று அல்லது இரண்டு பெண்கள் உயிர் தப்பியிருக்கக் கூடும். காலி கல்லறை இதைக் குறிக்கிறது," என்று அவர் எழுதுகிறார்.

"அஃப்சல் கானின் இந்தப் படையெடுப்பு பற்றிய பல கதைகள் பிற்காலத்தில் பிரபலமடைந்தன," என்று வரலாற்றாசிரியர் ஜதுநாத் சர்க்கார் கூறுகிறார்.

"அந்தக் கதைகளில் இதுவும் ஒன்று, சிவாஜிக்கு எதிராக அஃப்சல் கான் தனது படையெடுப்பை மேற்கொள்வதற்கு முன்பு, அவர் போரில் இருந்து உயிருடன் திரும்ப மாட்டார் என்று ஜோதிடர் ஒருவர் கணித்ததாகக் கூறப்படுகிறது."

"எனவே, அவர் தனது 63 மனைவிகளையும் பிஜாப்பூருக்கு அருகிலுள்ள அஃப்சல்புராவில் கொன்றார். தான் இறந்த பிறகு அவர்கள் வேறு யாரிடமும் சிக்கக் கூடாது என்பதற்காகவே இதைச்செய்தார்,” என்று ஜாதுநாத் சர்க்கார் எழுதுகிறார்.

கர்நாடகாவின் பிஜாப்பூரில் உள்ள அலாமின் மருத்துவக் கல்லூரிக்கு அருகில் உள்ள ஒரு பழைய கட்டிடத்தின் நடுவில் ஒரு மேடையில் ஏழு வரிசைகளில் ஒரே மாதிரியான பல கல்லறைகள் உள்ளன. உள்ளூர் மக்கள் அதை 'ஸாட் கப்ரு’( அறுபது கல்லறைகள்) என்று கூறுகிறார்கள் என்று ஆராய்ச்சியாளர் முகமது அனிசுர் ரஹ்மான் கான் கூறுகிறார்.

"இந்த கல்லறைகள் அனைத்தும் அஃப்சல் கானின் மனைவிகளுடையது. அவர் சிவாஜியுடன் போருக்குக்குச் செல்வதற்கு முன்பு தன் மனைவிகளை கொன்றார். தான் இறந்த பிறகு தன் மனைவிகளை வேறு யாரும் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்பதற்காக அவர் இவ்வாறு செய்தார்,” என்று அனிசூர் ரஹ்மான் கானின் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

அஃப்சல்கான்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அஃப்சல்கான் புதைக்கப்பட்ட இடம்

அஃப்சல் கான் தனது மனைவிகளுக்கு அருகில் அடக்கம் செய்யப்பட விரும்பினார். ஆனால் அவர் போரிலிருந்து திரும்பவில்லை.

"இங்கு 60 கல்லறைகள் உள்ளன என்பது மக்களிடையே நிலவும் கருத்து. ஆனால் இது உண்மையல்ல. ஏனெனில் இங்கு மொத்தம் 64 கல்லறைகள் உள்ளன. அவற்றில் ஒன்று காலியாக உள்ளது," என்று அனிசுர் ரஹ்மான் கான், முகமது ஷேக் இக்பால் சிஷ்டியை மேற்கோள் காட்டி எழுதியுள்ளார்.

"இந்த மயானம் அரச குடும்பத்துப் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கலாம். அந்தக் காலத்தில் போர் என்பது சர்வ சாதாரணமாக இருந்தது. இருந்த போதிலும் ஒரு தளபதி எப்படி இப்படிப்பட்ட அறியாமை நிறைந்த கோழைத்தனமான நடவடிக்கையை எடுக்க முடியும்?" என்று அனிசுர் ரஹ்மான் கான் எழுதுகிறார்,

இந்தக் கல்லறைகளுக்குப் பின்னால் இருக்கும் இந்தக் கதையை லக்ஷ்மி ஷரத் நம்புகிறார்.

"கருப்புக் கல்லால் ஆன இந்தக் கல்லறைகள் சேதமடையாமல் உள்ளன. சிலவற்றின் கற்கள் உடைந்துள்ளன. அங்கு ஒரு விசித்திரமான அமைதி நிலவுகிறது. சாவின் வாயில் தள்ளப்பட்ட அந்தப் பெண்களின் கடைசி அலறல்கள் அங்கு எதிரொலிப்பதுபோல உள்ளது. நான் அங்கு ஒரு நடுக்கத்தை உணர்ந்தேன்," என்று லக்ஷ்மி ஷரத் கூறுகிறார்.

"உண்மையில் அஃப்சல் கான் தனது மனைவிகளுக்கு அருகில் அடக்கம் செய்யப்பட விரும்பினார். ஆனால் அவர் போர்க்களத்திலிருந்து திரும்பவில்லை," என்று அவர் மேலும் எழுதுகிறார்.

"அஃப்சல் கான் அரண்மனையின் இடிபாடுகளுக்கு வடக்கே அமைந்துள்ள அவரது கல்லறை காலியாகவே உள்ளது." என்று கஸின்ஸ் குறிப்பிடுகிறார்.

"அஃப்சல் கான் சிவாஜியால் கொல்லப்பட்ட இடத்திற்கு அருகில் பிரதாப்கரில் அடக்கம் செய்யப்பட்டார். அவரது உடல் பிஜாப்பூரில் கட்டப்பட்ட கல்லறைக்கு கொண்டு செல்லப்படவில்லை." என்று அவர் மேலும் கூறுகிறார்.

சிவாஜியின் கைகளில் அஃப்சல் கான் இறந்தது இந்திய வரலாற்றில் ஒரு சுவாரசியமான அத்தியாயம். சிவாஜி, ’புலி நக’ ஆயுதத்தால் அஃப்சல் கானைக் கொன்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)