"மோதிக்கு 'எம்' வார்த்தைகள் என்றால் ரொம்ப பிடிக்கும்" - பிபிசி பேட்டியில் காங்கிரஸ் தலைவர் கார்கே என்ன சொன்னார்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், இக்பால் அகமது
- பதவி, பிபிசி செய்தியாளர்
"பிரதமர் நரேந்திர மோதிக்கு ‘எம் வார்த்தைகள்’ மிகவும் பிடிக்கும். அதனால்தான் அவர் முஸ்லிம்கள், மட்டன், மங்களசூத்ரா (தாலி) என்று தொடர்ந்து பேசுகிறார்," என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.
பிபிசி உடனான நேர்காணலில், "மோதி அரசுக்கு எதிராக மக்கள் போராடி வருவகின்றனர், இதன் காரணமாக இந்தியா கூட்டணி நிச்சயம் ஆட்சி அமைக்கும்,” என்றும் கூறினார்.
மக்களவைத் தேர்தலில் தற்போது 4 கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துவிட்டன. அவருடனான இந்த உரையாடல் நான்காம் கட்ட வாக்குப்பதிவுக்கு ஒரு நாள் முன்னதாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதுவரையிலான தேர்தல் சூழலைப் பார்க்கும்போது, மோதி அரசுக்கு எதிராக மக்களே தேர்தலில் போட்டியிடுகின்றனர். எனவே இம்முறை இந்தியா கூட்டணியின் ஆட்சி அமையும் என்று மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.
"இந்தத் தேர்தலில் மோதிக்கு எதிராக பொதுமக்களே போட்டியிடுகின்றனர். நாங்கள் பொதுமக்களுக்கு ஆதரவாக இருக்கிறோம். எங்கள் கூட்டணிக்கு அதிகபட்ச இடங்கள் கிடைக்கும். இதன் மூலம் மோதி அரசை மீண்டும் அமைவதைத் தடுக்க முடியும்,” என்றார் அவர்.
மறுபுறம் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும் தாங்கள் வெற்றிபெறுவோம் என்று கூறிவருகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோதி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உட்பட பா.ஜ.க-வின் பல முக்கிய பிரமுகர்கள் கிட்டத்தட்ட ஒவ்வொரு தேர்தல் கூட்டத்திலும் 400 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று கூறி வருகின்றனர்.
பா.ஜ.க-வின் இந்தக்கூற்றை கிண்டல் செய்த கார்கே, “400 இடங்களை தாண்டுவோம் என்று அவர்கள் கூறுகிறார்கள். 600-ஐ தாண்டுவோம் என்று சொல்லாதது நமது அதிர்ஷ்டம். ஏனெனில் மக்களவையில் உறுப்பினர் எண்ணிக்கை 543 மட்டுமே,” என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.
பா.ஜ.க-வின் கூற்றுகளை நிராகரிப்பது ஒருபுறம் இருந்தாலும், இந்தியா கூட்டணியின் வெற்றியில் அவருக்கு ஏன் இவ்வளவு நம்பிக்கை இருக்கிறது என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “வேலையின்மை, விலைவாசி உயர்வு, விவசாயிகளின் பிரச்னைகள், மற்றும் குறைந்திருக்கும் ஏழைகளின் வருமானம் ஆகியவையால் மக்கள் மத்தியில் கோபம் நிலவுகிறது. பா.ஜ.க-வின் தோல்விக்கு அதுவே காரணமாக அமையும்,” என்று கூறினார்.
இந்த நான்கு காரணங்களால் இதுவரை நடந்த தேர்தல்களில் பா.ஜ.க-வை பொதுமக்கள் நிராகரித்ததாகவும், தங்கள் கூட்டணிக்கு பொதுமக்கள் ஆதரவு தெரிவித்து வருவதாகவும், ஆகவே இந்தியா கூட்டணி வெற்றிபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
தேர்தல் ஆணையம் பற்றி கார்கே என்ன சொன்னார்?
சமீபத்தில் இரண்டு கட்ட வாக்குப்பதிவு விவரங்களை தேர்தல் கமிஷன் வெளியிடுவதில் ஏற்பட்ட தாமதம் குறித்து செய்திகள் வெளியாயின. இந்தத் தாமதத்தை ஏற்க முடியாது என்று காங்கிரஸ் கூறியுள்ளது.
இது தொடர்பாக இந்தியா கூட்டணி தலைவர்களுக்கு கார்கே கடிதம் எழுதியுள்ளார். கார்கேவின் கடிதத்தை தேர்தல் ஆணையம், "தேர்தல் நடைமுறையில் இருக்கும் முக்கியமான அம்சம் மீதான தாக்குதல்," என்று குறிப்பிட்டிருந்தது.
இது குறித்து ஆச்சரியம் தெரிவித்த கார்கே, "இந்தியா கூட்டணியின் கட்சிகளுக்கு தாம் எழுதிய கடிதத்துக்கு தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது. ஆனால் தேர்தல் ஆணையத்திடம் பல புகார்கள் அளித்தபோதும், அதற்கு பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை, என்று ஆணையம் கருதுகிறது," என்று கூறினார்.
பிபிசியிடம் இதுபற்றிப் பேசிய கார்கே, தேர்தல் நடந்த அதே நாளில் தரவுகளை வெளியிடுவதில் என்ன பிரச்சனை என்று வினவினார்.
"நாங்கள் தலைமை தேர்தல் ஆணையத்துடன் நின்றோம். ஆனால் தவறுகள் நடந்து, அது எங்களுக்கு தெரியவந்தால் ஜனநாயகத்தைச் சரியான பாதையில் கொண்டு வர அறிவுரை வழங்குவது எங்கள் கடமை. ஆனால் அவர்கள் எங்களை மட்டுமே குற்றம் சாட்டுகிறார்கள். இந்தத் தரவுகள் விரைவில் வெளியிடப்பட்டால், மக்களுக்கு உண்மை தெரிய வரும்,” என்றார்.

பட மூலாதாரம், Getty Images
'மோதி தனது பணிகளை முன்வைத்து ஓட்டு கேட்பதில்லை'
பிரதமர் மோதி இந்த தேர்தலை ராகுல் காந்தி vs நரேந்திர மோதியாக ஆக்கியுள்ளாரா என்ற கேள்விக்கு பதிலளித்த கார்கே, "பிரதமர் மோதி வளர்ச்சி குறித்தோ தனது பணிகள் குறித்தோ எடுத்துச்சொல்லி வாக்குகளைக் கேட்பதில்லை. அவர் மக்களைப் பற்றி தனிப்பட்ட கருத்துகளை மட்டுமே சொல்லிவருகிறார்,” என்று கூறினார்.
ஒருபுறம் காங்கிரஸ் தனது பணிகளை முன்வைத்து வாக்குகளைக் கேட்கும் அதே வேளையில் பா.ஜ.க தனது வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று கார்கே குறிப்பிட்டார்.
"எங்களிடம் சொல்வதற்கு என்ன உள்ளதோ அதைச் சொல்லி வாக்கு கேட்கிறோம். ஆனால் அவர் சொன்னது எல்லாமே பொய்யாகிவிட்டது. அதாவது வெளிநாட்டில் இருந்து கொண்டுவந்து 15 லட்சம் ரூபாய் தருவேன், ஆண்டுக்கு இரண்டு கோடி வேலை தருவேன், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன், அகமதாபாத்தில் இருந்து மும்பைக்கு புல்லட் ரயிலைக் கொண்டு வருவேன் என்றார். இவையெல்லாம் எங்கே?” என்று கார்கே வினவினார்.
மோதிக்கு எதிராக ராகுல் என்று சொல்வதன் மூலம் பா.ஜ.க-வுக்கு தேர்தல் ஆதாயம் கிடைக்கும். ஏனெனில் அடிமட்ட நிலையில் மோதியுடன் ஒப்பிடும்போது ராகுல் எங்குமே நிலைத்து கணப்படவில்லை என்று பல அரசியல் ஆய்வாளர்கள் நம்புகிறார்கள்.
எப்போதுமே ராகுல் காந்தி அரசியலில் தீவிரம் காட்டவில்லை என்றும் அவரைச் சந்திப்பது காங்கிரஸ் தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் மிகவும் கடினம் என்றும் அரசியல் விமர்சகர்களைத் தவிர காங்கிரஸை விட்டு வெளியேறிய பல தலைவர்களும் குற்றம் சாட்டுகிறார்கள்.
"மோதி vs ராகுல் என்று சொல்பவர்கள் ஊடகங்களிலும் அவற்றின் வெளியிலும் உள்ளனர். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாத யாத்திரை சென்ற எங்கள் தலைவர் லட்சக்கணக்கான மக்களை சந்தித்தார். இவர்களுக்கு அடிப்படை யதார்த்தம் தெரியாதா? மணிப்பூரிலிருந்து மும்பை வரை சென்று சமூகத்தின் ஒவ்வொரு பிரிவைச் சேர்ந்த மக்களையும் சந்தித்தார். இப்படி இருக்கும்போதிலும் 'ராகுல் vs மோதி' என்ற வெறும் பரபரப்பு உருவாக்கப்படுகிறது,” என்று கார்கே குறிப்பிட்டார்.
இதை ஹிட்லர் காலத்தில் செய்த பிரசாரத்துடன் ஒப்பிடும் கார்கே, “ஹிட்லர் காலத்தில் பிரசார அமைச்சராக இருந்த கோயபல்ஸும் இதைத்தான் செய்தார். குறைவான வேலை, அதிக பேச்சு, மக்களை உற்சாகப்படுத்தும் பொய்யான வாக்குறுதிகள். உங்கள் பணிகளை முன்வைத்து வாக்குகளைக் கேளுங்கள்,” என்று அவர் குறிப்பிட்டார்.
தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் மோதியின் மொழி குறித்து கருத்து தெரிவித்த கார்கே, "அவர் 'எம் வார்த்தைகளை' மிகவும் நேசிக்கிறார், அதனால்தான் முஸ்லிம், மட்டன், மச்லி (மீன்) மங்களசூத்ரா (தாலி) என்ற வார்த்தைகள் அவரது வாயில் இருந்து எப்போதும் வெளிவருகின்றன,” என்றார்.
தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் இடஒதுக்கீட்டை காங்கிரஸ் பறித்து முஸ்லிம்களுக்கு வழங்கும் என்று தேர்தல் கூட்டங்களில் மோதி தொடர்ந்து கூறி வருகிறார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களின் மங்களசூத்ரா (தாலி) கூட பறிபோய்விடும் என்று மோதி கூறுகிறார்.
மோதியைக் குறி வைத்து கார்கே, “விஸ்வகுருவாக மாறப்போகும் பிரதமர், ஆட்டிறைச்சி, சிக்கன், தாலி பற்றி பேசினால், அவரால் விஸ்வகுருவாக முடியுமா? முதலில் உங்கள் நாட்டைக் கவனித்துக் கொள்ளுங்கள், மக்களைக் கவனித்துக் கொள்ளுங்கள். ஏழைகளுக்கு ஏதாவது செய்யுங்கள்,” என்று கூறினார்.
சமூக நீதியை நிறைவேற்றுவதில் காங்கிரஸ் கட்சி உறுதியாக உள்ளது என்றும், யாரிடமிருந்தும் எதையும் பறித்து வேறு ஒருவருக்குக் கொடுக்கும் எண்ணம் காங்கிரஸ் கட்சிக்கு இல்லை என்றும் கார்கே வலியுறுத்திக் கூறினார்.
அரசியல் சாசனத்தைப் பின்பற்ற வேண்டும் என்றும், மதத்தின் அடிப்படையில் எந்த முடிவும் எடுக்கப்பட மாட்டாது என்றும் அவர் கூறினார்.

பட மூலாதாரம், ANI
அமேதி-ரேபரேலி பற்றி மல்லிகார்ஜுன கார்கே என்ன சொன்னார்?
அமேதியில் ஸ்மிருதி இரானிக்கு காங்கிரஸ் கட்சி `வாக் ஓவர்` (போட்டியின்றி வெற்றி) கொடுத்துவிட்டதா? ராகுல் காந்தி ரேபரேலியில் இருந்து ஏன் போட்டியிடுகிறார்?
இந்தக் கேள்விக்கு பதிலளித்த கார்கே, "அமேதியில் வாக்ஓவர் அளிக்கப்பட்டதாக பாஜக நினைக்கிறது. வாக்ஓவர் தந்திருந்தால் பாஜக ஏன் பிரச்சாரம் செய்கிறது,” என்று வினவினார்.
அமேதி மற்றும் ரேபரேலி காங்கிரஸின் வலுவாம கோட்டைகள் என்றும் அங்கு காங்கிரஸை விரும்புபவர்கள் உள்ளனர் என்றும் அவர் கூறினார்.
"சோனியா காந்தியின் உடல்நிலையைப் பார்த்து நாங்கள்தான் அவரை 'தேர்தலில் போட்டியிடவேண்டாம், மாநிலங்களவைக்கு வாருங்கள்' என்றோம். அவரது குடும்ப உறுப்பினர்கள் எப்போதும் தேர்தலில் போட்டியிடும் இடம் (ரேபரேலி), இந்தக் காலி இடத்தில் நாங்கள் அவரை (ராகுல் காந்தி) தேர்தலில் போட்டியிட உத்தரவிட்டோம். இரண்டு மக்களவைத் தொகுதிகளையும் கவனித்து வந்த அமேதியைச் சேர்ந்த ஒரு நல்ல தொண்டருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது,” என்று கார்கே குறிப்பிட்டார்.
அமேதியின் போட்டியை பிரியங்கா காந்தியே முன்னின்று நடத்துகிறார் என்று கார்கே கூறினார்.
ராகுல் காந்தி கடந்த சில நாட்களாக சமூக நீதி பற்றிப் பேசிவருகிறார். எனவே 1990களில் அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் மற்றும் அப்போதைய நிதியமைச்சர் மன்மோகன் சிங்கின் பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கையை காங்கிரஸ் மறுபரிசீலனை செய்கிறதா?
இதற்கு பதிலளித்த அவர், அந்தந்தக் காலத்திற்கேற்ப காங்கிரஸ் கட்சி கொள்கைகளை உருவாக்குகிறது என்றார்.
ஆனால், சமூக நீதியைப் பற்றிப் பேசுவதன் மூலம், காங்கிரஸ் மீண்டும் வட இந்தியாவிலும் குறிப்பாக இந்தி மண்டலத்தில் தனது அரசியல் வேர்களை வலுப்படுத்த முயல்கிறதா?
இதற்கு பதிலளித்த அவர், "காங்கிரஸ் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க விரும்புகிறது. எனவே ஏழைகள், இளைஞர்கள், விவசாயிகள், பெண்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு 'ஐந்து நீதிகளைக்' கட்சி கொண்டு வந்துள்ளது,” என்று கூறினார்.
"ஒருபுறம் தொழில்துறையும் காப்பாற்றப்பட வேண்டும், மறுபுறம் நமது தொழிலாளர்களும் காப்பாற்றப்பட வேண்டும். நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்லும் அத்தகைய கொள்கையை நாங்கள் தேர்ந்தெடுப்போம்," என்று அவர் குறிப்பிட்டார்.
ராகுல் காந்தி 'பிஸினஸுக்கு எதிராக பேசுகிறார்' என்று சிலர் கூறி வருகின்றனர். இது பற்றி காங்கிரஸ் என்ன நினைக்கிறது?
இந்தக் கேள்விக்கு பதிலளித்த கார்கே, "காங்கிரஸ் முன்பு நடைமுறைப்படுத்திய கொள்கைகளால் ஏதேனும் தொழில்துறை மூடப்பட்டுள்ளதா?" என்று கேட்டார்.
புதிய முடிவை எடுக்கும்போது சூழ்நிலைக்கு ஏற்ப அதை எடுக்க வேண்டும் என்கிறார் அவர். பணக்காரர்களுக்கு அதிக வரி விதிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம். அவர்கள் வந்து அதை மேலும் குறைத்தனர். விவசாயிகளுக்கு ஜி.எஸ்.டி விதிக்கக் கூடாது என்று நாங்கள் விரும்பினோம். ஆனால் அவர்கள் விவசாயிகளுக்கும் ஜி.எஸ்.டியை விதித்தனர்.

பட மூலாதாரம், Getty Images
கேஜ்ரிவால் மற்ற மாநிலங்களுக்குப் பரப்புரைக்குச் செல்வாரா?
டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவால் ஜாமீனில் வெளிவந்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். ஆனால் கேஜ்ரிவால் இந்தியா கூட்டணி சார்பில் டெல்லி, பஞ்சாப் தவிர மற்ற மாநிலங்களுக்கும் செல்வாரா?
இந்தியா கூட்டணியில் உள்ள தலைவர்கள் எங்கு தேவையோ அங்கு அனுப்பப்படுவார்கள் என்று இது குறித்து மல்லிகார்ஜுன கார்கே குறிப்பிட்டார்.
பா.ஜ.க-வின் இடங்கள் குறைந்தால், தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியிலும், இந்தியா கூட்டணியிலும் இல்லாத கட்சிகளின் முக்கியத்துவம் மேலும் அதிகரிக்கும் என்று பல அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்தியா கூட்டணி மற்றும் என்டிஏ கூட்டணியில் இடம்பெறாத பிஜு ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், பாரத் ராஷ்ட்ர சமிதி போன்ற கட்சிகளுடன் காங்கிரஸ் தொடர்பில் உள்ளதா?
தேர்தலுக்குப் பிறகு இந்தியா கூட்டணி இது குறித்து முடிவு செய்யும் என்று மல்லிகார்ஜுன கார்கே பதில் அளித்தார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












