'போகன்' அரவிந்த் சாமி பாணியில் விநோத மோசடி - மற்றவரை வசியப்படுத்தி நகை, பணத்தை பறிப்பது எப்படி?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், தப்சீர் பாபு
- பதவி, பிபிசி வங்க சேவை
டாக்காவைச் சேர்ந்த தஹ்மினா பேகம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சில நாட்களுக்கு முன்பு ஒரு விநோதமான மோசடியில் சிக்கிக்கொண்டார்.
சந்தைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருக்கும் போது, திடீரென்று அடையாளம் தெரியாத பெண் ஒருவர் முகவரி ஒன்றை காட்டி அதுகுறித்து விசாரித்துள்ளார்.
அவரை தொடர்ந்து மற்றுமொரு இளைஞரும் இவருக்கு அருகில் வந்து நின்றுள்ளார். இவை எல்லாம் ஓரிரு நிமிடங்களில் அடுத்தடுத்து நடந்துள்ளன.
அதுகுறித்து தெஹ்மினா கூறுகையில், "இந்த சம்பவம் விசித்திரமாகவும் மற்றும் திகிலூட்டுவதாகவும் இருந்தது. அங்கு வந்த நபர் அந்த பகுதியில் எனக்கு தெரிந்த ஏழைகள் அல்லது ஆதரவற்றவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று என்னிடம் கேட்டார். அவர்களுக்கு உதவ விரும்புவதாகவும் கூறினார். எனது வீட்டிற்கு அருகில் ஒரு ஏழைக் குடும்பம் வசித்து வந்ததால் அவர்கள் குறித்து அவரிடம் கூறினேன். அந்த இளைஞரிடம் ஒரு சில நிமிடங்களே பேசியிருப்பேன். ஆனால் அங்கு என்ன நடந்தது என்றே எனக்கு தெரியவில்லை” என்று தெரிவித்தார்.
அந்த உரையாடலுக்கு பிறகு, தஹ்மினா தன்னிடம் இருந்த பணம், நகை என அனைத்தையும் அந்த இளைஞர் மற்றும் பெண்ணிடம் கொடுத்துள்ளார்.
“அவர்கள் என்னிடம் நகை மற்றும் பணத்தை பைக்குள் வைக்கவில்லையென்றால் அவை தொலைந்துவிடும் என்று சொன்னார்கள். அவர்கள் சொன்னபடியே நான் செய்தேன். ஆனால் நான் ஏன் நகையை எடுக்க வேண்டும்? அது எப்படி தொலையும் அல்லது நான் ஏன் அவற்றை பைக்குள் வைக்க வேண்டும் என்றெல்லாம் யோசிக்கவே இல்லை. பின் அந்த இளைஞர் அவரை பின்தொடருமாறு என்னிடம் சொல்ல, நானும் அவரை பின்தொடர்ந்து சென்றேன்” என்றார் தஹ்மினா.

பட மூலாதாரம், Getty Images
சுயநினைவுக்கு வந்த தஹ்மினா
சிறிது தூரம் நடந்த பிறகே தஹ்மினாவுக்கு சுயநினைவு வந்துள்ளது. அதற்குள் அந்த இளைஞர் அங்கிருந்து நழுவி விட்டார். அவர் முன்பு நின்று கொண்டிருந்த இடத்துக்கே வந்து பார்த்தபோது, அந்த பெண்ணையும் காணவில்லை. அந்த நாள் தனது மொபைல், தங்க நகைகள், பணம் என எல்லாவற்றையும் தொலைத்து விட்டு வீட்டிற்கு திரும்பினார் தஹ்மினா.
தஹ்மினா கூறுகையில், “ இன்னும் என்ன நடந்தது என்றே எனக்கு புரியவில்லை. அவர்கள் என்னை எதுவுமே செய்யவில்லை. இரண்டு பேருமே என் அருகில் வந்து நின்றார்கள். அந்த பெண் பேப்பரில் எழுதியிருந்த ஏதோ ஒரு முகவரியைக் காட்டி என்னிடம் விசாரித்துக் கொண்டிருந்தார் அவ்வளவுதான்” என்றார்.
சமீப காலமாகவே வங்கதேசத்தில் தஹ்மினா பேகம் போலவே பலரும் இதே போன்ற அனுபவத்தை எதிர்கொண்டுள்ளனர். இதற்கு காரணம் ஸ்கோபோலமைன் என்ற ஒருவகை போதைப்பொருள்தான் என்று கூறப்படுகிறது.
திரவ மற்றும் தூள் வடிவத்தில் கிடைக்கும் இந்த மருந்தை தவறான நோக்கங்களுக்காக காகிதம், கைக்குட்டை, மொபைல் ஸ்க்ரீன் உள்ளிட்ட ஏதாவது ஒன்றில் வைத்து பயன்படுத்தும் போது ஒருவரின் மனதை சிறிது நேரத்திற்கு கட்டுப்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது.
ஆனால், உண்மையில் அப்படி ஒரு மருந்து உள்ளதா? அப்படியே இருந்தாலும் வங்கதேசத்தில் அது பயன்படுத்தப்படுகிறது என்பதை எப்படி உறுதிப்படுத்துவது?

பட மூலாதாரம், Getty Images
வங்கதேசத்தில் ஸ்கோபோலமைன் பயன்படுத்தப்படுகிறதா?
செப்டம்பர் 2023 இல், பங்களாதேஷில் உள்ள நாராயண்கஞ்சில் தனியார் பள்ளி ஒன்றின் ஆசிரியர் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக ஒருவரை காவல்துறை கைது செய்தது. பின்னர் டாக்காவில் இருந்து மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அவர்களில் ஒருவரிடமிருந்து ஸ்கோபோலமைனை கைப்பற்றியதாக முதன்முறையாக காவல்துறையினர் ஒப்புக்கொண்டனர். அந்த நபரிடம் இருந்து பாட்டில்களில் தூள் வடிவிலான ஸ்கோபோலமைன் உள்ளிட்ட பல போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
பின் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், சிஐடி ஆய்வகத்தில் சோதனை செய்து அது ஸ்கோபோலமைன் தான் என உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து பிபிசி வங்க சேவையிடம் பேசிய நாராயண்கஞ்ச் காவல்துறை கண்காணிப்பாளர் குலாம் முஸ்தஃபா ரசல், இந்த ஸ்கோபொலமைன் குறித்து முதலில் தனக்கு எந்த தகவலும் தெரியாது என்று கூறினார்.
மேலும், "ரசாயன ஆய்வுக்குப் பிறகு, ஸ்கோபோலமைன், பொட்டாசியம் சயனைடு மற்றும் குளோரோஃபார்ம் இருப்பது அறிக்கை மூலம் உறுதியானது. இவற்றில் ஸ்கோபோலமைன் எங்களுக்கு முற்றிலும் புதிது. அதன் பெயர் கூட எங்களுக்குத் தெரியாது. அதை எப்படி, எங்கு பயன்படுத்தலாம் என்பதைப் படித்த பிறகு தான், உண்மையில் பலரும் இதை ‘டெவில்ஸ் ப்ரீத்’ என்று அழைப்பது தெரியவந்தது” என்கிறார் அவர்.
போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கூரியர் அல்லது வேறு வழிகளில் இந்த போதைப் பொருட்களை நாட்டிற்குள் கொண்டு வருவதாக இது வரையில் நடந்துள்ள விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று முஸ்தஃபா குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், Getty Images
கரு ஊமத்தை பூவில் இருந்து ஸ்கோபோலமைன் தயாரிப்பு
ஸ்கோபோலமைன் அடிப்படையில் செயற்கையாக தயாரிக்கப்படும் ஒரு மருந்து. இது மருந்து உற்பத்தியில் பயன்படுத்தப்படுகிறது.
குமட்டல், பயணத்தின் போது உடல்நலக் குறைவு மற்றும் சில சந்தர்ப்பங்களில் அறுவை சிகிச்சைக்குப் பிறகு சில நோயாளிகளுக்கு தேவையான மருந்துகளை தயாரிக்க இது பயன்படுகிறது.
ஆனால் இது இயற்கையான மருந்து அல்ல. இயற்கையான பொருட்களுடன் வேறு சில பொருட்களைச் சேர்ப்பதன் மூலம் ஸ்கோபோலமைன் செயற்கையாகத் தயாரிக்கப்படுகிறது. இது திரவ மற்றும் தூள் வடிவங்களில் கிடைக்கிறது.
இதைத் தயாரிக்க தேவைப்படும் முக்கியமான அல்லது அடிப்படை மூலப்பொருள் கரு ஊமத்தை பூவில் இருந்து எடுக்கப்படுகிறது.
போதைப்பொருள் கட்டுப்பாட்டுத் துறையின் தலைமை இரசாயன ஆய்வாளர் டாக்டர். துலால் கிருஷ்ண சாஹா இதுகுறித்து நம்மிடம் விளக்கியுள்ளார்.
"ஒரு காலத்தில், மக்களின் மனநலனை சிதைவடைய செய்வதற்காக, கரு ஊமத்தை பூவை அரைத்து பாலில் கலந்துக் கொடுத்தனர். இந்த பூ ஒரு வகையான விஷம். அதில் இருந்து சில பகுதியை பிரித்தெடுத்து ஸ்கோபோலமைன் செயற்கையாக தயாரிக்கப்படுகிறது. போதைப்பொருள் கும்பல்கள். மெக்சிகோவில் இந்த மருந்தை தயாரித்து உலகம் முழுவதும் பரப்புகிறார்கள்."

பட மூலாதாரம், Getty Images
யாரையும் எளிதில் வசப்படுத்தும் ஸ்கோபோலமைன்
இரண்டாம் உலகப் போரின் போது புலனாய்வு அமைப்புகளால் ஸ்கோபோலமைன் பயன்படுத்தப்பட்டதற்கான சான்றுகள் உள்ளன. அப்போது இது ஊசி மூலம் திரவ வடிவில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
"ஸ்கோபோலமைன் இன்னமும் ஒரு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது," என்று கூறுகிறார் பங்காபந்து ஷேக் முஜிப் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் மருந்தியல் துறைத் தலைவர் பேராசிரியர் (டாக்டர்) சைதுர் ரஹ்மான்.
இரண்டாம் உலகப்போரில் உளவு அமைப்புகள் இந்த மருந்தை எதிரிகளிடமிருந்து உண்மையைக் கண்டறிய செய்யும் கருவியாக பயன்படுத்தியுள்ளனர். இந்த மருந்தின் மூலம் ஒரு நபர் தனது கட்டுப்பாட்டை இழந்து, பிறரின் கட்டளைகளுக்கு கீழ்ப்படிய தொடங்கி விடுவார் என்று கூறுகிறார் அவர்.
இதுகுறித்து ரஹ்மான் விளக்குகையில், "ஒருவரிடமிருந்து உண்மையை வாங்குவதற்கு நீங்கள் அதைப் பயன்படுத்தினால் அது உண்மை சீரம் ஆகும். இதுவே அதன் வாசனையை தூள் வடிவில் ஒருவரை சுவாசிக்க செய்தால், அது டெவில்ஸ் ப்ரீத்' அல்லது ‘சாத்தானின் சுவாசம்’ ஆகும்” என்கிறார்.
மேலும் இதையே குமட்டல், வாந்தி அல்லது பயணத்தின் போது ஏற்படும் உடல்நல குறைபாடுகளுக்கு பயன்படுத்தப்படும் போது, அது உண்மையில் ஒரு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது என்கிறார் ரஹ்மான்.
பெரும்பாலான மோசடி வழக்குகளில் இந்த மருந்து தூள் வடிவில் பயன்படுத்தப்படுகிறது. விசிட்டிங் கார்டு, பேப்பர், துணி அல்லது மொபைல் ஸ்க்ரீனில் தடவினால், அது மிகவும் புத்திசாலித்தனமாக பாதிக்கப்பட்டவரின் மூக்கின் முன்னே கொண்டு வரப்பட்டு, அவரால் சுவாசிக்க செய்யப்படுகிறது.
டாக்டர் துலால் கிருஷ்ணா சாஹா கூறுகையில், “இந்த மருந்து ஒருவரின் மூக்கிலிருந்து நான்கு முதல் ஆறு அங்குலம் தூரத்தில் வரும்போதே, அவரது சுவாச எல்லைக்குள் நுழைந்து அவரை பாதிப்படைய செய்கிறது. ஒருவரை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் என்றால் இந்த மருந்தை அவரது வாயில் வைக்க வேண்டும்” என்கிறார்.
"இந்த மருந்தை சுவாசித்த 10 நிமிடங்களுக்குள் அல்லது அதற்கு முன்னரே கூட அதன் விளைவைக் காட்டத் தொடங்குகிறது. அதன் பிறகு, நினைவாற்றல் மற்றும் மூளை சரியாக செயல்படாது. மருந்து ஏற்படுத்தும் தாக்கத்திலிருந்து மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப சிலருக்கு ஒரு மணி நேரம் ஆகும். சிலருக்கு மூன்று முதல் நான்கு மணிநேரம் வரை கூட ஆகலாம்.”

பட மூலாதாரம், Getty Images
பாதுகாப்பு அமைப்புகள் என்ன செய்கின்றன?
வங்கதேசத்தில் இந்த போதைப்பொருளைப் பயன்படுத்தி மோசடிகள் நடந்துவருவதாக தொடக்கத்தில் தலைநகர் டாக்காவில் மட்டுமே புகார்கள் வந்தன. ஆனால் இப்போது டாக்காவிற்கு வெளியே பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் இது போன்ற புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
இருப்பினும், இந்த சம்பவங்கள் குறித்து உறுதியான தகவல்கள் எதுவும் காவல்துறையிடம் இல்லை. இதில் எழும் பெரிய கேள்வி என்னவென்றால், போதைப்பொருள் கடத்தல்காரர்கள், நாட்டின் பாதுகாப்பு நிறுவனங்களை ஏமாற்றிவிட்டு எப்படி இந்த ஸ்கோபோலமைனை நாட்டுக்குள் கொண்டு வருகிறார்கள் என்பதே.
நாராயண்கஞ்ச் சம்பவத்திற்குப் பிறகு, இணையம் வழியாக ஸ்கோபோலமைன் விற்கப்படுவதாக புலனாய்வு அமைப்புகளுக்கு தகவல் கிடைத்தது. முன்னதாக கைது செய்யப்பட்ட இருவரும் கூட இந்த மருந்தை இணையம் வழியாக விற்று வந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். உண்மையில் இந்த மருந்து வெளிநாட்டில் இருந்து இங்கு வந்தடைகிறது.
இந்த மருந்தை நாட்டிற்குள் கொண்டு வருவதற்கு கூரியர் சேவை அதிகம் பயன்படுத்தப்படுகிறது. யாரேனும் ஸ்கோபோலமைனை மருந்துக்கான மூலப்பொருளாக இங்கு கொண்டு வருகிறார்களா அல்லது சட்டத்தில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி உள்ளே கொண்டு வருகிறார்களா என்றும் காவல்துறை மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றன.
இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்துள்ள காவல்துறை தலைமையக ஏஐஜி எனாமுல் ஹக் சாகர், "இந்த குற்றத்தில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதுவரை பலரை கைது செய்துள்ளோம். முன்னதாக நாராயண்கஞ்சிலும் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது அவர்களிடம் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த தொழிலில் வேறு யாரெல்லாம் ஈடுபட்டுள்ளார்கள் என கண்டறியப்பட்டு அவர்களும் கைது செய்யப்படுவார்கள்” என்று தெரிவித்தார்.
ஏற்கனவே ஸ்கோபோலமைன் மோசடியால் பாதிக்கப்பட்ட நபர்கள் பதிவு செய்யும் புகார்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் மத்தியில் இந்த மோசடி குறித்த அச்சம் அதிகரித்துள்ளது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












