வீட்டில் நாய் வளர்ப்பவர்கள் முக்கியமாக பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சுபாஷ் சந்திர போஸ்
- பதவி, பிபிசி தமிழ்
சமீபத்தில் சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் 5 வயது சிறுமியை, ராட்வீலர் நாய்கள் கடித்துக் குதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதே பகுதியைச் சேர்ந்த புகழேந்தி என்பவர் தனது இரு ராட்வெய்லர் நாய்களை எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் பூங்காவுக்கு அழைத்து வர, அங்கிருந்த பூங்கா பாதுகாவலர் மகளான 5 வயது சிறுமியை கடித்துக் குதறியுள்ளன அந்த நாய்கள்.
இதையடுத்து அந்தச் சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நாய்களின் உரிமையாளர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால், சமீபகாலமாக அடிக்கடி நடந்து வரும் இந்த நாய்க்கடி பிரச்னைக்கு வழக்கு பதிவதும், அபராதமும் தீர்வாகிவிட முடியுமா?
யார் இதற்குப் பொறுப்பேற்பது? இதுபோன்ற நாய்கள் - மனிதர்களுக்கு இடையிலான பிரச்னையை முற்றிலுமாகத் தடுப்பது எப்படி? நாய் வளர்க்கும் உரிமையாளர்கள் முக்கியமாகப் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்ன?
செல்லப் பிராணிகள்

பட மூலாதாரம், Getty Images
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் தங்களுக்குப் பிடித்த ஏராளமான உயிரினங்களைத் தங்களது செல்லப் பிராணிகளாக வளர்க்கிறார்கள். அதில் நாய், பூனை தொடங்கி சிங்கம், புலி வரைகூட உண்டு.
எப்படி மனிதர்களைப் பராமரிக்க, கையாள சட்டங்கள் உள்ளதோ, அதே போல் செல்லப் பிராணிகளைக் கையாளவும், வளர்க்கவும் பல்வேறு சட்ட திட்டங்கள் உலக நாடுகளில் உள்ளது.
ஆனால், இந்தியா என்று வரும்போது அனைத்து உயிரினங்களையும் பாதுகாக்கும் வகையில் சட்டங்கள் இருந்தாலும்கூட, அது எந்தளவிற்கு நடைமுறையில் அமல்படுத்தப்பட்டுள்ளது என்பது மில்லியன் டாலர் கேள்வி.
இந்தியாவை பொறுத்தவரை 2021 கணக்கெடுப்பின்படி, 2.7 கோடி வீட்டு வளர்ப்பு நாய்கள் இருப்பதாகவும், இது 2026ஆம் ஆண்டில் 4.3 கோடியாக அதிகரிக்கலாம் என்றும் ஜெர்மனியை தளமாகக் கொண்டு இயங்கும் ஸ்டேட்டிஸ்டா(Statista) என்ற தரவு ஆய்வு நிறுவனம் கூறுகிறது.
ஆனால், பல நாய் உரிமையாளர்கள் தங்களது நாய்களைப் பதிவு செய்யாத காரணத்தால் தெளிவான எண்ணிக்கை அரசுத் துறைகளிடமே இல்லை.
மனிதர்களை தாக்கும் நாய்கள்

பட மூலாதாரம், SHRUTHI
என்னதான் நாய்களை அடக்கிக் கையாள மனிதர்கள் கற்றுக் கொண்டாலும், அவ்வப்போது நாய்கள் மனிதர்களைத் தாக்கும் நிகழ்வுகள் நடந்துகொண்டுதான் இருக்கிறது. அதிலும் குறிப்பாக தெரு நாய்களைவிட வீட்டில் வளர்க்கும் நாய்களே அதிகம் மனிதர்களைக் கடிப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்துப் பேசிய தமிழ்நாடு விலங்குகள் நல வாரியத்தின் உறுப்பினரான ஸ்ருதி வினோத் ராஜ், “இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் செய்த ஓர் ஆய்வின்படி தெரு நாய்களைவிட, வீட்டில் வளர்க்கும் நாய்களே மனிதர்களைக் கடிப்பது, தாக்குவது போன்ற செயல்களில் அதிகமாக ஈடுபடுகின்றன,” என்கிறார்.
அதற்குக் காரணம் தெருவில் வளரும் நாய்களைப் போல், வீட்டு நாய்கள் சமூகமயமாக்கல் அடையாததே என்று கூறுகிறார் மெட்ராஸ் கால்நடை மருத்துவக் கல்லூரியின் பேராசிரியர் மற்றும் மருத்துவர் ஜெயராஜ்.
“தெருவில் வளரும் நாய்கள் மனிதர்களைப் பார்த்துப் பழகி விடுகின்றன. அதனால் அதற்கு யாரும் புதிதாகத் தெரிவதில்லை. ஆனால், வீட்டு நாய்கள் பெரிதாக சமூகமயமாக்கல் அடையாமல் வீட்டிற்கு உள்ளேயே இருப்பதால் புதியவர்களைப் பார்க்கும்போது பயந்து ஏதோவொரு தூண்டுதலால் ஆக்ரோஷமாகி விடுகிறது.”
நாய்கள் அல்ல, உரிமையாளர்களே பிரச்னை

பட மூலாதாரம், TANUVAS
பொதுவாகவே இதுபோன்ற நாய்க்கடி சம்பவங்கள் ஏற்படும்போது நாய்கள் மீது பழியைப் போட்டுவிட்டு மனிதர்கள் தப்பித்துக் கொள்வதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
“எல்லா நாய்களும் ஆக்ரோஷமானது அல்லது எல்லா நாய்களும் சாதுவானது என்று சொல்லிவிட முடியாது. அதன் உரிமையாளர்கள் எப்படி அதை நடத்துகிறார்களோ, பயிற்சி வழங்குகிறார்களோ, தினசரி செயல்பாடுகளில் ஈடுபடுத்துகிறார்களோ அதைப் பொறுத்தே அதன் தன்மை அமையும் என்கிறார்,” ஸ்ருதி.
குறிப்பாக, “பயிற்சி அளிக்கும்போதே அது ஆக்ரோஷமாக இருப்பது தெரிந்தால் உடனே அதைக் கண்டறிந்து சரி செய்யவேண்டும். அப்படி சரி செய்யாமல் விட்டுவிட்டால் அதன் ஆக்ரோஷ மனநிலை அப்படியேதான் இருக்கும், அது எந்தச் சூழலிலும் வெளிவரலாம்,” என்று கூறுகிறார் மருத்துவர் ஜெயராஜ்.
மேலும், ஒரு நாய் வளரும் சூழல், அதன் உரிமையாளரின் அணுகுமுறை, அதன் தினசரி செயல்பாடுகள் என அனைத்துமே ஒரு நாயின் குணநலனைப் பாதிப்பதாக இருக்கிறது.
ஒரு நாய் வளரும் குடும்பத்தின் மோசமான சூழல் அந்த நாயை பாதிக்குமா என்று கேட்டபோது, அப்படி எதுவும் இதுவரை தெரியவில்லை. ஆனால், அந்த உரிமையாளர் அல்லது குடும்ப உறுப்பினர்கள் குறிப்பிட்ட நாயை பாதிக்குமாறு ஏதாவது செய்தால், அது ட்ராமாவாக(Trauma) மாறி அந்த நாய்க்கு ஆக்ரோஷ மனநிலையைத் தர வாய்ப்புள்ளது” என்கிறார் ஜெயராஜ்.
“குறிப்பாக அந்த நாயை அடித்தால், துன்புறுத்தினால், பதட்டமடைய செய்தால், அதிர்ச்சிக்கு உள்ளாக்கினால் அதன் மனநிலை பாதிப்படைய வாய்ப்புள்ளது.”
‘நச்சுத்தன்மை வாய்ந்த சூழல் பாதிக்கலாம்’

பட மூலாதாரம், SRIDEVI
ஒரு நாய் வளரும் சூழல் 100% அந்த நாயின் மனநிலையைப் பாதிக்க வாய்ப்புள்ளது என்கிறார் நாய்களுக்கான நடத்தையியல் நிபுணரான ஸ்ரீதேவி.
“நாய்களுக்கு அதன் பிறப்பு நடத்தையைக் காட்டிலும், அது வளரும்போது கற்றுக்கொள்ளும் நடத்தையே அதிகம். எனவே அதைச் சுற்றியிருக்கக்கூடிய சூழலைப் பொறுத்தே அதன் நடத்தை இருக்கும். அது நச்சுத்தன்மை வாய்ந்த சூழலாக இருந்தால் அது அந்த நாயின் ஆக்ரோஷ மனநிலையைத் தூண்டலாம்,” என்கிறார் அவர்.
அதேபோல், “ஒரு நாயை வெளியில் கொண்டு செல்லாமல் எப்போதும் வீட்டிற்குள் வைத்துக் கொள்வது, கூண்டுக்குள் அடைப்பது, நீண்ட நேரம் கட்டி வைப்பது போன்ற செயலில் ஈடுபட்டாலும் நாய்களின் குணம் மாறும்,” என்கிறார் ஸ்ருதி.
நாய்கள் பாதிக்கப்பட்டுள்ளதை எப்படி கண்டுபிடிப்பது?

பட மூலாதாரம், Getty Images
"மனிதர்களைப் போல நாய்களால் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் தொந்தரவுகளை வாய்விட்டுச் சொல்ல முடியாவிட்டாலும், குறிப்பால் உணர்த்த முடியும்."
"சொல்லப்போனால், மனித உடல் மொழிக்கும், நாய்களின் உடல்மொழிக்கும் பெரிய வித்தியாசம் இல்லை" என்று கூறுகிறார் நாய்கள் நடத்தையியல் நிபுணரான ஸ்ரீதேவி.
அப்படி ஒரு நாய் ஏதோவொரு காரணத்தால் பாதிக்கப்பட்டுள்ளது என்றால் கீழ்காணும் அறிகுறிகளைக் கொண்டு முன்னதாகவே தெரிந்து கொள்ளலாம் என்று கூறுகிறார் ஸ்ரீதேவி.
- எப்போதும் பதற்றமாக இருக்கும்.
- நடுக்கம்
- பிறர் தொடுதலை விரும்பாது
- அருகில் செல்லும்போது கோவமாகச் சத்தமிடுதல்
இந்த அறிகுறிகளைக் கவனிக்காமல் மேன்மேலும் அதைத் தொந்தரவு செய்தால் உரிமையாளரைக்கூட கடிக்கும் நிலைக்கு அது செல்லலாம். இப்படியான நாய்களுக்கு நிலையின் தீவிரத்தைப் பொறுத்து மருத்துவ ஆலோசனைப்படி சிகிச்சை அளிக்க வேண்டும்.
எந்த நாய்களை வீட்டில் வளர்க்கலாம்?

பட மூலாதாரம், Getty Images
சமீபத்தில் நிகழ்ந்த சம்பவத்தைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு 23 வகையான வெளிநாட்டு நாய் இனங்கள் மற்றும் அவற்றின் கலப்பினங்களை இறக்குதி செய்ய, இனப்பெருக்கம் செய்ய, வளர்ப்புப் பிராணிகளாக விற்பனை செய்யத் தடை விதித்துள்ளது.
இது ஒருபுறமிருக்க இந்தியாவில் உள்ள விலங்குகள் நல வாரிய விதிகளின்படி, எந்த நாய் இனத்தையும் வளர்க்கத் தடை கிடையாது. அதேபோல் ஒருவர் எத்தனை நாய் வளர்க்க வேண்டும் என்ற வரைமுறையும் கிடையாது.
ஜெயராஜ் பேசுகையில், “ஒரு நாய் வளர்ப்பது என்பது தனிநபரின் தேர்வைப் பொறுத்தது. ஆனால், அவர் வாழும் இடத்திற்குகேற்ப நாயின் தன்மையும் இருத்தல் நல்லது. மக்கள் அதிகம் உள்ள இடங்களில் வாழ்பவர்கள் கொஞ்சம் இலகுவான தன்மைகொண்ட லேப்ரடார், கோல்டன் ரெட்ரைவர் போன்ற நாய்களை வளர்க்கலாம்.”
இதுவே, “தனிவீட்டில் வசிப்பவர்கள் டாபர்மேன், ராட்வீய்லர் போன்ற நாய்களை வாங்கிக்கொள்ளலாம். ஆனால், அவை இயல்பிலேயே ஆக்ரோஷமான தன்மைகொண்டவை என்பதையும் மனதில் வைத்துக் கொண்டு அவற்றுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும்” என்கிறார் அவர்.
நாய் வளர்ப்பிற்கான விதிகள் குறித்துப் பேசுகையில், “நாய் வளர்ப்பிற்கான விதிமுறைகள் இந்தியாவில் இன்னும் அவ்வளவு தீவிரமாக இல்லை. காஜியாபாத்தில் ஒரு வீட்டிற்கு 2 நாய்கள் மட்டுமே வளர்க்க வேண்டும் என்று விதிமுறை இருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் அப்படி எதுவும் விதிகள் கிடையாது,” என்று கூறுகிறார் ஸ்ருதி.
ஆனால், வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளைப் பதிவு செய்து கொள்ளவேண்டும் என்று 40 வருடங்களாக விதி இருந்தும்கூட நாய் உரிமையாளர்கள் அதை மதிப்பதில்லை என்று கூறுகிறார் சென்னை மாநகராட்சி கால்நடை மருத்துவ அதிகாரி கமால் ஹுசைன்.
கட்டுப்பாடுகள் தீவிரம்

பட மூலாதாரம், Getty Images
நாய்க்கடியால் 5 வயது சிறுமி பாதிக்கப்பட்ட பிறகு சென்னை மாநகராட்சி சார்பில் நாய் வளர்ப்புக்கான விதிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய கால்நடை மருத்துவ அதிகாரி கமால் ஹுசைன், “இனி கட்டாயமாக நாய் உரிமையாளர்கள் தங்களது நாய்களைப் பதிவு செய்திருக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.
“அதைப் பின்பற்றாதவர்களுக்கு வீடு வீடாகச் சென்று முதலில் ஒரு வாரத்திற்கு முன்பு நோட்டீஸ் வழங்கப்படும். பின்னர் அபாரதம் விதிக்கப்படும். அப்போதும் பின்பற்றாதவர்கள் மீது சட்டக் குழுவோடு ஆலோசித்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று கூறுகிறார் கமால் ஹுசைன்.
மேலும், தேர்தல் முடிந்த பிறகு ஜூன் மாதத்தில் இருந்து ஒரு வீட்டிற்கு எத்தனை நாய் வளர்க்க வேண்டும் என்ற விதியையும் அறிமுகப்படுத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள விதிகள்

பட மூலாதாரம், Getty Images
- ஒருவர் ஒரு நேரத்தில் ஒரு செல்லப் பிராணியை மட்டுமே வெளியே கொண்டு வரவேண்டும்.
- வெளியே கொண்டு வரும் பிராணிக்கு உரிமம் இருக்க வேண்டும்.
- அந்த செல்லப் பிராணிக்கு காலர் பட்டையுடன் கூடிய இணைப்புக் கயிறு அணிவித்து வெளியே அழைத்து வரவேண்டும்.
- மனிதர்களுடன் இயல்பாகப் பழகாத நாயாக இருந்தால், கண்டிப்பாக முகவாய்கள்(muzzles) அணிவித்தே வெளியே அழைத்து வரவேண்டும்.
- பூங்காக்குள் நாய்களை அழைத்துச் செல்லத் தடை இல்லை என்றாலும், குழந்தைகள் விளையாடும் பகுதிக்கு அவற்றை அழைத்துச் செல்லக்கூடாது.
நாய்களுக்கான சட்டங்கள்
என்னதான் நாய்கள் மனிதர்களைக் கடித்தாலும்கூட அதன் பொறுப்பும் மனிதர்களையே சாரும் என்றே சட்டம் சொல்கிறது. குறிப்பாக அது வளர்ப்பு நாயாக இருந்தாலும் அது செய்யும் தவறுகளுக்கு அதன் உரிமையாளரே பொறுப்பாவார் என்று இந்தியாவில் உள்ள சட்டங்கள் கூறுகின்றன.
அவற்றில் சில முக்கியமான சட்டங்கள்:
- சென்னை நகராட்சி 1919 சட்டத்தின்படி அனைத்து நாய் உரிமையாளர்களும் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
- இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 289இன் படி, விலங்குகள் தொடர்பான அலட்சிய நடத்தை மற்றும் பிறரது உயிருக்கு அல்லது தனிப்பட்ட பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அந்த விலங்கு செயல்பட்டிருந்தால் அதன் உரிமையாளருக்கு சிறைத் தண்டனை மற்றும் அபராதம் வழங்கப்படலாம்.
- மிருகவதை தடுப்புச் சட்டம், 1960 பிரிவு 11இன் கீழ் வழங்கப்பட்டுள்ள நாய்கள் உட்பட விலங்குகளுக்கு எந்த வகை துன்புறுத்தல் செய்யப்பட்டாலும் அதன் உரிமையாளர் அல்லது செயலில் ஈடுபடும் நபருக்கு தண்டனை உண்டு.
- இவற்றில் அந்த நாய்களை முறையாகப் பராமரிக்காமல், நோய் தாக்குதல் ஏற்படக் காரணமாக இருத்தல், பாதுகாப்பற்ற சூழலில் வைத்தல் உள்ளிட்டவையும் அடங்கும்.
எப்படி நாய்கள் - மனிதர்கள் இடையிலான மோதலை தடுப்பது?

பட மூலாதாரம், Getty Images
என்னதான் விதிமுறைகள் இருந்தாலும் அதைப் பின்பற்றினால் மட்டுமே இந்தப் பிரச்னைக்கு ஒரு தீர்வு காண முடியும். அந்த வகையில் மேலே பேசிய நிபுணர்கள் அனைவருமே ஒருசேர சில தீர்வுகளை முன்வைக்கின்றனர்.
- நாய்களைப் பதிவு செய்து வைத்துகொள்ள வேண்டும்
- சரியாக தவணை முறையில் தடுப்பூசிகளைப் போட்டு வைத்திருக்க வேண்டும்
- மைக்ரோசிப் பொறுத்தியிருக்க வேண்டும்
- சரியாகப் பயிற்சி வழங்கியிருக்க வேண்டும்
- நாய்களைப் பராமரித்தல் குறித்தான விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












