தமிழ்நாடு: 23 வகை வெளிநாட்டு நாய் இனங்களை விற்க, வளர்க்க மாநில அரசு தடை
சென்னையில் கடந்த மே 6ஆம் தேதி அயல்நாட்டு இன ராட்வீலர் நாய்கள் கடித்து குதறியதில் 5 வயது சிறுமி படுகாயம் அடைந்த சம்பவம் தமிழ்நாடு அளவில் பெரும் அதிர்வலையையும் பீதியையும் ஏற்படுத்தியிருந்தது.
இந்தச் சம்பவத்தின் எதிரொலியாக தற்போது தமிழ்நாடு அரசு 23 வகையான வெளிநாட்டு நாய் இனங்கள் மற்றும் அவற்றின் கலப்பினங்களை இறக்குமதி செய்ய, இனப்பெருக்கம் செய்ய, வளர்ப்புப் பிராணிகளாக விற்பனை செய்ய தடை விதித்துள்ளது. அவை என்ன வகை நாய்கள் என்பதைத் தற்போது பார்ப்போம். அதன்படி, பிட்புல் டெரியர்,தோசா இனு, அமெரிக்கன் ஸ்டப்போர்டு ஷயர் டெரியர், ஃபிலா ப்ரேசிலேரியா, டோகா அர்ஜெண்டினா, அமெரிக்கன் புல்டாக், போயர் போயல், கன்கல், செண்ட்ரல் ஆசியன் ஷெபர்டு டாக், காக்கேஷியன் ஹெபர்டு, சௌத் ரஷ்யன் ஷெபர்டு டாக், டோன் ஜாக், ஜாப்னிஸ் தோசா, ராட்வீலர்ஸ், டெரியர், ரொடீசியன் ரிட்ஜ்பேக், உல்ப் டாக், கேனரியோ அக்பாஸ், மாஸ்கோ கார்ட் டாக், கேன்கார்சோ, பேண்டாக், அகிதா மேஸ்டிப், சர்ப்ளேஎனினேக் ஆகிய நாய்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நாய் இனங்களை ஆக்ரோஷமானவை என்றும் மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் நாய்கள் எனவும் இந்திய அரசின் கால்நடை பராமரிப்பு வல்லுநர்கள் மற்றும் துறை சார்ந்த பங்கேற்பாளர்கள் குழு பட்டியலிட்டு உள்ளதாகவும் தமிழ்நாடு அரசின் செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



