பணம் சேர்க்க சீனர்களின் நூதன வழி - அறிமுகமில்லா நபருடன் பெண்கள் கூட்டு சேர்வது ஏன்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சில்வியா சாங்
- பதவி, பிபிசி சீன சேவை, ஹாங்காங்
சீனாவின் பொருளாதாரம் பலவீனமடைந்து வரும் நிலையில் பெண்கள் தங்கள் குடும்பங்களின் சேமிப்பை அதிகரிக்க புதிய வழிகளைத் தேடுகிறார்கள்.
"ஒவ்வொரு ஆண்டும் எங்களிடம் பணம் எதுவும் மிச்சமாகாது. நான் பாதுகாப்பு இல்லாதது போல உணர்ந்தேன். ஆனால் என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை," என்று தென்கிழக்கு சீன நகரமான ஷீயாமென் நகரில் வசிக்கும் 36 வயதான இரண்டு குழந்தைகளின் தாயான சியாவோ ஜுவோ கூறினார்.
தொற்றுநோய் காலத்தில் சியாவோ ஜுவோவும் அவரது கணவரும் 50 சதவிகித ஊதியக் குறைப்பை சந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இது அவரது குடும்பத்திற்கு பெரும் அடியாக இருந்தது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட தனது தாயையும் அவர் கவனித்துக் கொள்ள வேண்டியிருந்தது.
இளம் சீனர்கள் இணையத்தில் இதேபோன்ற ஒத்த ஆர்வங்களைக் கொண்ட "da zi" அதாவது கூட்டாளிகளைத் தேடி, அவர்களை சந்திப்பது இப்போது ஒரு போக்காக மாறிவிட்டது. ஆனால் ஒன்றாக பயணம் அல்லது உடற்பயிற்சி செய்வதற்கு பதிலாக சியாவோ ஜுவோ, பணத்தை சேமிக்க விரும்பும் நபர்களைத் தேடினார்.

"சேவிங் டா ஜி" என்ற ஹேஷ்டேக் முதன்முதலில் 2023 பிப்ரவரியில் சீனாவின் இன்ஸ்டாகிராம் பதிப்பான Xiahongshu இல் தோன்றியது. இதுவரை 17 லட்சம் பார்வைகளை அது பெற்றுள்ளது என்று தரவு பகுப்பாய்வு நிறுவனமான NewsRank தெரிவித்துள்ளது. சமூக ஊடக தளமான Weibo வில், தொடர்புடைய தலைப்புகள் மில்லியன்கணக்கான முறை பார்க்கப்பட்டுள்ளது. சரியான எண்ணிக்கையை பெறுவது கடினம். ஆனால் குறைந்தபட்சம் ஆயிரக்கணக்கான மக்கள் இப்போது ஆன்லைன் குழுக்களில் இருந்து சேமிப்புக் கூட்டாளிகளைக் கண்டறிந்துள்ளனர் என்று சமூக ஊடக ஆய்விலிருந்து தெரியவந்துள்ளது.
பெரும்பாலான உறுப்பினர்கள் 20 முதல் 40 வயதுக்குட்பட்ட பெண்கள். அவர்களில் பலர் தாய்மார்கள். சிலர் தங்கள் குழந்தைகளின் கல்விக்காக சேமிக்க விரும்புவதாகச் சொல்கிறார்கள். அங்கு கல்விக்கான செலவு அதிகம். பங்குகள், வீடுகள் உட்பட சில முதலீடுகளே லாபகரமானவை என்பதால் சிலர் ரொக்கப்பணத்தை வைத்திருக்க விரும்புவதாகக் கூறுகிறார்கள். பொருளாதாரம் இப்போது தள்ளாடி வருவதால், சாத்தியமான வேலை இழப்புகள் அல்லது ஊதியக் குறைப்புகளுக்குத் தயாராக வேண்டும் என்றும் சிலர் கூறுகிறார்கள்.
உலகிலேயே மிக உயர்ந்த வீட்டு சேமிப்பு விகிதங்கள் உள்ள நாடுகளில் ஒன்றாக சீனா விளங்குகிறது. ஆனால் சமீபத்திய சேமிப்பு அதிகரிப்பு, "எதிர்கால பொருளாதாரத்தின் மீது குறைந்த நம்பிக்கையை" காட்டுகிறது என்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் பொதுக் கொள்கை பேராசிரியரான லூ ஷி கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
2023 ஆம் ஆண்டில் சீனக் குடும்பங்கள் சுமார் 138 டிரில்லியன் யுவானை (19.1 டிரில்லியன் டாலர்கள்; 15.1 டிரில்லியன் பவுண்டுகள்) வங்கி வைப்புகளில் சேமித்துள்ளன என்று அதிகாரபூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன. இது முந்தைய ஆண்டை விட சுமார் 14% அதிகமாகும்.
பல ஆண்டுகளாக கடுமையான ஜீரோ கோவிட் கொள்கையை பின்பற்றிய பிறகு சீனப் பொருளாதாரத்தின் மீட்சி குறுகிய காலமே இருந்தது. அது இப்போது சொத்து நெருக்கடி, விலையிறக்க அழுத்தங்கள், வெளிநாட்டு முதலீடு வீழ்ச்சி மற்றும் அதிகரித்து வரும் உள்ளூர் அரசு கடன் ஆகியவற்றை எதிர்கொண்டுள்ளது.
சீனாவில் அன்றாட வீட்டுச் செலவுகளை நிர்வகிப்பது பொதுவாக பெண்களின் பொறுப்பு. அதிகமான பெண்கள் சேமிப்பில் இறங்கியிருப்பது இளைஞர்களிடையே மட்டுமல்லாமல் எல்லா இடங்களிலும் வேலையில்லாத் திண்டாட்டம் பரவுகிறது என்பதற்கான ஒரு அறிகுறியாகும் என்று டாக்டர். லூ கூறுகிறார். சமீபத்திய அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, வேலையின்மை விகிதம் தொடர்ந்து மூன்று மாதங்களாக அதிகரித்துள்ளது.
தனிநபர்களிடையே காணப்படும் சேமிப்பதற்கான வலுவான விருப்பம், சீனா தனது பொருளாதாரத்தை மறுசீரமைப்பதை மிகவும் கடினமாக்கும். முந்தைய தசாப்தங்களில், விரைவான வளர்ச்சியானது உள்கட்டமைப்பு முதலீடு மற்றும் குறைந்த உற்பத்தி விலை ஆகியவற்றால் உந்தப்பட்டது. ஆனால் சீனப் பொருளாதாரம் முதிர்ச்சியடையும் போது வளர்ச்சியை தக்கவைக்க உள்நாட்டு நுகர்வு அதிகரிக்க வேண்டும் என்று நிபுணர்கள் வாதிடுகின்றனர்.
1990 களில் ஜப்பானின் அனுபவத்தை பிரதிபலிக்கும் வகையில் அதிக சேமிப்பானது சீனாவை பணப்புழக்கப் பொறிக்குள் தள்ளிவிடக்கூடும் என்று டாக்டர் லூ கூறுகிறார். இதன் பொருள்
வட்டி விகிதங்கள் மிகக் குறைவாக இருந்தாலும் மக்கள் பணத்தை வைத்திருப்பார்கள், செலவு அல்லது முதலீடு செய்வதைத் தவிர்ப்பார்கள். இதனால் பொருளாதாரத்தைத் தூண்டுவதில் பணவியல் கொள்கை பயனற்றதாக இருக்கும்.
அக்கறை மற்றும் நட்பு
கடந்த ஆண்டு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் 40% பங்களிப்பதாகக் கூறப்படும் ஒரு விரிவடைந்து வரும் தொழிலான தூய்மை எரிசக்தித்துறையில் பணிபுரிவது தனது அதிர்ஷ்டம் என்று சியாவோ ஜுவோ கருதுகிறார். இருப்பினும், மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகள் போன்ற பொதுச் சேவைகளில் பணிபுரிபவர்கள் உட்பட அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் பலர் தங்கள் வேலையை இழந்துவருவதால் "ஆபத்துக்குத் தயாராக இருக்க வேண்டிய கட்டாயத்தில்" இருப்பதாக அவர் உணர்கிறார்.
சியாவோ ஜுவோ பிப்ரவரியில் பல்வேறு சேமிப்புக் குழுக்களில் சேர்ந்தார். ஒவ்வொரு நாளும் உறுப்பினர்கள் தங்கள் பட்ஜெட் மற்றும் நுகர்வை பதிவு செய்ய வேண்டும். திடீர் தூண்டுதல் காரணமான வாங்கல்களை அவர்கள் பரஸ்பரம் தடுக்கிறார்கள். ஒரு உறுப்பினர் 5,000 யுவான் விலையில் ஒரு சொகுசு பையை வாங்க ஆசைப்பட்டார். மற்ற பெண்களிடம் பேசிவிட்டு அவர் 1,000 யுவானுக்கும் குறைவான விலையுள்ள ஒரு செகண்ட் ஹேண்ட் பையை வாங்கினார்.

சியாவோ ஜுவோ பணத்தை சேமிக்கும் சில தந்திரங்களையும் கற்றுக்கொண்டார். எடுத்துக்காட்டாக, 1 முதல் 183 யுவான் வரையிலான தினசரி சேமிப்பு இலக்கைக் குறிக்கும் 365 செல்கள் உடைய இதய வடிவ விரிதாளைக் கொண்ட மொபைல் பயன்பாட்டைப் பற்றி அவர் அறிந்துகொண்டார். ஒரு வருடம் கழித்து அவரால் சுமார் 34,000 யுவான் சேமிக்க முடியும்.
மேலும் பலர் பணத்தைச் சேமிக்க விரும்புவதைக் கண்டு அவர் வியப்படைந்தார். தாங்கள் அனைவரும் ஒன்று என்ற உணர்வு இந்த சேமிப்புக் கூட்டாளிகள் மீது அவருக்கு ஏற்படுகிறது. "நான் தனியாக இந்த இலக்கை அடைவது கடினமாக இருந்திருக்கும்," என்றார் அவர்.
கர்ப்பமாக இருக்கும் ஒரு ஆசிரியரான "டா ஜி" யுடன் சியாவோ ஜுவோ நல்ல நண்பரானார். மாதாந்திர சேமிப்பு இலக்கை அடைந்த பிறகு சியாவோ ஜுவோ ஆன்லைனில் இளஞ்சிவப்பு ரோஜாக்களை ஆர்டர் செய்து 2,000 கிமீ தொலைவில் உள்ள கன்ஷூவிற்கு டெலிவரி செய்தார்.
சியாவோ ஜுவோவின் ஷாப்பிங் உந்துதல் குறைந்துள்ளது. முன்பெல்லாம் சூப்பர் மார்க்கெட்டில் தனக்கு விருப்பமான எல்லா பொருளையும் அவர் விருப்பம் போல் வாங்கிவிடுவிர். ஆனால் இப்போது மளிகைச் சாமான் பட்டியலைத் தயாரித்து அதன்படி வாங்குகிறார். சேமிப்புக் கூட்டாளிகளை கண்டுபிடித்த ஒரு மாதத்திற்குப் பிறகு அவர் தனது செலவுகளை 40% குறைத்துள்ளார். ஒரு வருடத்தில் 100,000 யுவானை சேமிக்க முடியும் என்று அவர் நம்பிக்கையுடன் இருக்கிறார். இது முன்பை விட பத்து மடங்கு அதிகம்.
"டா ஜி" வைத்திருப்பது பணத்தை சேமிக்க உதவியது என்று மற்ற பெண்களும் கூறுகிறார்கள். இப்போது தனது உணவைத் தானே சமைப்பதாகவும், தேவையற்ற ஷாப்பிங்கை குறைத்துக் கொண்டதாகவும் ஒரு உறுப்பினர் கூறுகிறார். வேலையில் தன்னை மும்முரமாக வைத்துக் கொள்வதன் மூலம் அதிகம் சேமித்ததாகவும், அதிகச் செலவு இல்லாத புதிய பொழுதுபோக்குகளை ஆராய்வதாகவும் மற்றொருவர் கூறுகிறார்.

பணம்தான் ராஜா
சில பெண்கள் மிகவும் பாரம்பரியமான சேமிப்பு முறையைத் தேர்ந்தெடுத்துள்ளனர் அதாவது ரொக்கப் பணத்தை வீட்டில் வைத்திருப்பது. சீனாவில் சுமார் 70% மக்கள் மொபைல் பேமெண்ட்டுகளை பயன்படுத்துகின்றனர் என்று ஸ்டேடிஸ்டா தெரிவிக்கிறது. எனவே கையில் பணம் வைத்திருப்பது மிகவும் அசாதாரணமானது.
"பணத்தாள்களின் அடுக்குகள் தடிமனாக ஆகிவருவதை பார்க்கும்போது நான் பாதுகாப்பாகவும் திருப்தியாகவும் உணர்கிறேன்,” என்று மத்திய மாகாணமான ஹெனானில் அழகு நிலையத்தை நடத்தி வரும் 32 வயதான சென் கூறுகிறார்.
ஒவ்வொரு மாதமும் அவர் தனது வருமானத்தின் பெரும்பகுதியை வங்கியில் இருந்து எடுத்து அந்தப்பணத்தை ஒரு பெட்டியில் வைப்பார். அது 50,000 யுவானை எட்டியவுடன் நிலையான வைப்புத்தொகை கணக்கை அவர் துவக்க உள்ளார்.
அவர் இப்போது ஷாப்பிங்கிற்கு கூட ரொக்கப்பணத்தை பயன்படுத்துகிறார். இது சிரமமாக உல்ளது. ஆனால் தனது நுகர்வைக் குறைக்கவும், "திருப்தியை தாமதப்படுத்தவும்" இது ஒரு வழி என்கிறார் அவர்.
பொருளாதார வீழ்ச்சியின் மத்தியில் சென் அதிக எண்ணிக்கையில் தனது வாடிக்கையாளர்களை இழந்துள்ளார். அவரது வழக்கமான வாடிக்கையாளர்கள் பலர் செலவுகளை குறைத்துவிட்டனர்.
சென்னும், அவரது கணவரும் தங்கள் பெற்றொருக்கு ஒரே குழந்தைகள். அதாவது அவர்கள் நான்கு வயதான பெற்றோரை கவனித்துக் கொள்ள வேண்டும். தனது இரண்டு மகன்களுக்காக தலா ஒரு மில்லியன் யுவானையாவது சேமிக்க அவர் விரும்புகிறார். சீனாவில் ஆண்கள் திருமணம் செய்து கொள்ளும் போது சொந்தமாக வீடு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தங்கள் மகன்களுக்கு பெற்றோர் வீடு வாங்குவது பொதுவாக நடக்கும் ஒன்று.
தனது குடும்பத்திற்காக குறைந்தது ஐந்து மில்லியன் யுவான் சேமிக்க வேண்டும் என்று அவர் மதிப்பிட்டுள்ளார். ஆனால் அவர் இப்போது மீண்டும் கர்ப்பமாக இருப்பதால் இது ஒருவேளை போதுமானதாக இருக்காது.
"கடந்த காலத்தில் என்னிடம் சேமிப்புத் திட்டம் எதுவும் இருக்கவில்லை. ஆனாலும் கொஞ்சம் பணம் மீதம் இருந்தது. இப்போது சேமிப்பது மிகவும் சவாலானதாகிவிட்டது. கையில் ரொக்கப்பணம் வைத்திருப்பது என் கவலையை குறைக்கிறது," என்று அவர் குறிப்பிட்டார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












