தோனி போல் ருதுராஜ் கெய்க்வாட் சாதிப்பதில் உள்ள 3 முக்கிய சவால்கள் என்ன தெரியுமா?

பட மூலாதாரம், Sportzpics
- எழுதியவர், அஷ்ஃபாக்
- பதவி, பிபிசி தமிழ்
"ரெடியா இரு; அடுத்த வருஷம் உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கும்" கேப்டன்சி மாற்றம் குறித்து ஓராண்டுக்கு முன்னதாகவே ருதுராஜிடம் சூசகமாக சொல்லிட்டார் தோனி.
சென்னை சூப்பர் கிங்ஸ்-க்கு 5 முறை ஐபிஎல் கோப்பைகளை வென்று கொடுத்த நட்சத்திர ஆட்டக்காரர் எம்.எஸ்.தோனி விட்டுச் செல்லும் மரபை ருதுராஜால் தொடர முடியுமா?
"ஸ்பார்க் இல்லை என விமர்சிக்கப்பட்டவர்"
ருத்து, ஸ்பார்க், ராக்கெட் ராஜா இதெல்லாம் ருதுராஜ் கெய்க்வாட்டின் செல்லப் பெயர்கள். மகாராஷ்டிராவை பூர்வீகமாகக் கொண்ட ருதுராஜை 2019 ஐபிஎல் தொடருக்காக டிசம்பர் 2018-ல் நடந்த ஏலத்தில் 20 லட்ச ரூபாய்க்கு வாங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ். அப்போது அவருக்கு வயது 21. 2019 சீசனில் ஒரு போட்டியில் கூட ருதுராஜ் களமிறக்கப்படவில்லை.
2020-இல் ருதுராஜுக்கு சி.எஸ்.கேவில் ஆடும் லெவனில் இடம் கிடைத்தது. அதுவும் வெறு ஆறு போட்டிகளில். இதில் 2 முறை டக் அவுட்டாகி வெளியேறினார். சி.எஸ்.கேவுக்காக களமிறங்கிய தொடக்கத்திலேயே கடும் நெருக்கடிக்குள்ளானார். கிடைத்த வாய்ப்பை வீணடிப்பதாக விமர்சனங்கள் எழுந்தன.
இளம் வீரர்களிடம் போதிய ஸ்பார்க் இல்லை என தோனியும் காட்டமாக பேசினார். அதன் பிறகு ருதுராஜின் ஆட்டப்பாணி வேறொரு திசையில் நகர்ந்தது. அதே தொடரில், தொடர்ச்சியாக 3 ஆட்டங்களில் அரைசதம் விளாசினார். 65*(51) vs RCB; 72(53) vs KKR; 62*(49) vs KXIP.

பட மூலாதாரம், SportsPicz
13 ஆண்டுகால சி.எஸ்.கே வரலாற்றில் தொடர்ந்து 3 போட்டிகளில் அரைசதம் விளாசிய முதல் வீரர் எனும் பெயரை தனது துடிப்பான பேட்டிங்கால் நிலைக்கச் செய்தார். சி.எஸ்.கேவின் ஜாம்பவான்கள் மைக்கேல் ஹஸி, ஷேன் வாட்சன், மேய்த்யூ ஹேடன், முரளி விஜய், சுரேஷ் ரெய்னாவால் கூட இந்த மைல்கல்லை எட்ட முடிந்ததில்லை. “ஸ்பார்க் இல்லை என்றார்கள்; கொளுந்துவிட்டு எரிகிறாரே” என சமூக ஊடகங்களில் அப்போது பாராட்டுகள் குவிந்தன.
2021-ல் ருதுராஜின் பங்களிப்பு சென்னை அணிக்கு கோப்பையை வென்று கொடுக்க முக்கிய காரணியாக அமைந்தது. டு பிளெசி உடன் அவர் ஓபனிங் ஆடினார். 16 போட்டிகளில் 4 அரைசதம் ஒரு சதம் என மொத்தம் 635 ரன்களை குவித்து ‘ஆரஞ்சு கேப்பை’ பெற்றார். அந்த சீசனில் சென்னை அணி கோப்பையை வென்றது. அதன் பின் 2022-ல் 6 கோடி ரூபாய்க்கு ருதுராஜ் கெய்க்வாட்டை தக்க வைத்தது சி.எஸ்.கே.

பட மூலாதாரம், SportsPicz
தோனி போல் வெற்றிகரமான கேப்டனாக வலம் வர முடியுமா?
தோனிக்கு தற்போது 42 வயதாகிறது. நடப்பு தொடருடன் அவர் ஓய்வு அறிவிப்பை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், “எதிர்பாராததை எதிர்பாருங்கள்” என்கிற பாணி தோனியுடையது. 2022-இல் தனது கேப்டன்ஸியை ஜடேஜா வசம் வழங்கினார். அப்போதே அவரது ஓய்வு குறித்து பரவலாக பேசப்பட்டது. ஆனால் ஜடேஜாவால் அணியை திறம்பட வழிநடத்த முடியவில்லை.
முதல் 8 ஆட்டங்களில் 6-இல் சி.எஸ்.கே தோல்வியைத் தழுவியது. இதனால் தொடரின் நடுவிலேயே மீண்டும் கேப்டன் பொறுப்பை தோனி வாங்கிக்கொண்டார். இருந்தாலும் அந்த சீசனில் சி.எஸ்.கே 7-ஆம் இடத்திற்கு பின் தங்கியது. அதன் பிறகு அடுத்த ஆண்டே சி.எஸ்.கே ‘கம்பேக்’ கொடுத்தது. குஜராத்தை வீழ்த்தி கோப்பையையும் வென்றது.
சென்னை சூப்பர் கிங்ஸ் பல தருணங்களில் முடியாததை முடித்துக் காட்டியிருக்கிறது. 2 ஆண்டு தடைக்குப் பிறகு 2018 கோப்பையை வென்றது. 2020-இல் மோசமான தொடராக அமைந்தாலும் 2021-இல் சாம்பியன் பட்டம் வென்றது. இப்படியான அணியை வெற்றிப்பாதைக்கு வழிநடத்துவதில் தோனி வல்லவராகவே திகழ்ந்திருக்கிறார். அதை ருதுராஜாலும் செய்ய முடியுமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு. ஆனால் "தோனிக்கு ஒத்த காலத்தில் விளையாடிய வீரர்கள் பலர் இப்போது வர்ணணையாளர்களாக மாறிவிட்டனர். சிலர் பயிற்சியாளராகிவிட்டனர். ஆனால் தோனி இன்னும் துடிப்பாக பேட்டிங் ஆடிக்கொண்டிருக்கிறார். தோனி தோனிதான். அவரை யாருடனும் ஒப்பிட முடியாது." என்கிறார் கிரிக்கெட் வல்லுநர் ஷ்யாம்

பட மூலாதாரம், SportsPicz
"தோனியுடன் ஒப்பிடுவது நியாயமில்லை"
“புதிதாக கேப்டன் பொறுப்பை ஏற்றிருக்கும் ருதுராஜை ஆரம்ப கட்டத்திலேயே தோனியுடன் ஒப்பிடுவது நியாயமற்றது” என கிரிக்கெட் விமர்சகர் கிஷோர் வைத்தியநாதனும் கூறுகிறார். “2007 டி20 உலகக்கோப்பையை இந்தியாவுக்கு வென்று கொடுத்த கையோடு தோனி தனது ஐபிஎல் பயணத்தை துவங்கினார். அதன் பிறகு படிப்படியாக சிறந்த தலைவராக மெருகேறினார். அவரது கேப்டன்ஸி ஸ்டைலே தனித்துவமாக இருக்கும்.” என அவர் குறிப்பிடுகிறார்.
“ருதுராஜ் இயல்பிலேயே அமைதியானவர் என்பதால் அது சி.எஸ்.கேவின் சூழலுக்கும் ஒத்துப்போகிறது. தொடக்கத்தில் ருதுராஜ் கடுமையாக தடுமாறியபோது சி.எஸ்.கே அவருக்கு பக்கமலமாக நின்றது. அதன் பிறகு தனது ஆட்டத்தை சிறப்பாக எடுத்துச் சென்றார். அதிலிருந்து ஒரு 3 – 4 ஆண்டுகளில் சி.எஸ்.கேவின் கேப்டனாக உயர்ந்திருப்பதே நல்ல சாதனைதான்” என்கிறார் கிஷோர் வைத்தியநாதன்.
சி.எஸ்.கே.வின் 'ரிக்கி பாண்டிங்காக' உருவெடுப்பாரா ருதுராஜ்?
சில அனுபவம் வாய்ந்த பேட்டர்களுக்கே கேப்டன் பொறுப்பை கையாளுவதில் சிக்கல் இருக்கும்போது ஓபனிங் பேட்டராக உள்ள ருதுராஜ் எப்படி இரண்டையும் கையாளுவார்?, கேப்டன் பணி ருதுராஜின் பேட்டிங் திறனை பாதிக்குமா என கிரிக்கெட் வல்லுநர் ஷ்யாமிடம் கேட்டோம்.
"சச்சின், லாரா போன்றவர்கள் சிறந்த பேட்டர்கள். ஆனால் அவர்கள் சிறந்த கேப்டன்களாக இருந்ததில்லை. கேப்டனாக இருந்துகொண்டே ஒரு நல்ல பேட்டராக அணியை வழிநடத்தியதில் ரிக்கி பாண்டிங் தனித்துவமானவர். 1995-ல் ஆஸ்திரேலிய அணியில் பாண்டிங் அறிமுகமானபோது அவர் மிடில் ஆர்டரில் இறங்கினார். அதன் பிறகு கேப்டனானதும் பேட்டிங்கில் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கினார். அணியை பலமுறை வெற்றிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். ஆஸ்திரேலியாவுக்கு உலகக்கோப்பைகளை வென்று கொடுத்திக்கிறார். கேப்டனாக இருந்துகொண்டும் பேட்டிங்கில் மிரட்ட முடியும் என்பதை நிரூபித்தவர் ரிக்கி பாண்டிங்."

பட மூலாதாரம், Getty Images
"பாண்டிங்கை போலவே பேட்டிங், கேப்டன்ஸி இரண்டிலும் ஜொலிக்கும் வீரராக ருதுராஜ் உருவாக முடியும். ருதுராஜ் இந்திய அணியில் தனக்கான இடத்தை தக்க வைக்கும் கட்டாயத்தில் இருக்கிறார். டி20 உலகக்கோப்பை நெருங்குகிறது. ஐபிஎல் 2 மாதங்கள்தான். இதில் விளையாடும் ஒவ்வொருவருமே இந்திய அணியில் இடம்பிடிப்பதை மனதில் வைத்தே செயல்படுகின்றனர். ருதுராஜுக்கு ஒத்த காலத்தில் வந்த கில், யஷஷ்வி ஜெய்ஷ்வால், இஷான் கிஷன் போன்ற வீரர்கள் இந்திய அணியில் தங்களுக்கான இடத்தை பிடிக்க உறுதியான பங்களிப்பை கொடுத்ததோடு பெயர் சொல்லும் அளவுக்குச் சிறப்பாக செயல்பட்டிருக்கின்றனர். அடுத்தடுத்து நிறைய வீரர்களும் இந்திய அணியில் இடம்பிடிக்க போட்டிப்போடுகின்றனர். இது ருதுராஜுக்கும் நன்கு தெரியும். இதனால் கேப்டன் பொறுப்போடு பேட்டிங்கையும் நேர்த்தியாகச் செய்து அதன் மூலம் கவனம் பெற முயற்சிப்பார்." என்கிறார் கிரிக்கெட் வல்லுநர் ஷ்யாம்.

பட மூலாதாரம், Getty Images
ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு இருக்கும் முக்கியமான 3 சவால்கள்
ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு முன் உள்ள சவால்கள் குறித்து கிஷோர் வைத்தியநாதன் பின் வருமாறு கூறுகிறார்.
- கோப்பையை வெல்ல வேண்டிய கட்டாயம்
சென்னை சூப்பர் கிங்ஸ் ஒரு வெற்றிகரமான அணி. இதுவரை 5 முறை சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறது. ரசிகர்களுக்கு எப்போதுமே அதிக எதிர்பார்ப்பு இருக்கும். மற்ற அணிகளை விட, சென்னை அணி கோப்பையை வெல்லத் தவறினால் அது ரசிகர்கள் மத்தியில் பெரும் தோல்வியாகவே கருதப்படும். காரணம் அந்தளவுக்கு சி.எஸ்.கேவின் மதிப்பு இன்று வரை உயர்ந்து விளங்குகிறது.
- மூத்த வீரர்களை கையாளுதல்
தோனி உள்பட அணியில் நிறைய மூத்த வீரர்கள் இருக்கின்றனர். சர்வதேச வீரர்கள் உள்ளனர். இவர்களை எப்படி கையாளப்போகிறார் என்பது மற்றொரு சவால். களத்திற்கு உள்ளே மட்டுமின்றி வெளியிலும் வீரர்களை கையாளுவதில் சில சவால்கள் இருக்கின்றன. அவர்களை எப்படி கையாளுகிறார். அணியை எப்படி கட்டமைக்குகிறார் என்பதும் முக்கியமானது.
- தோல்வியின்போது அணியை கையாளும் பக்குவம்
சி.எஸ்.கே தோல்வியடையும் தருணங்களில் அணியை எவ்வாறு பார்த்துக்கொள்கிறார் என்பதிலும் ருதுராஜுக்கு சவால் இருக்கிறது. சி.எஸ்.கேவிடம் உள்ள ஒரு பலமே அந்த அணி வெற்றியின்போதும் தோல்வியின்போதும் சமநிலையை பேணுவதுதான். வீரர்களை சமச்சீரான நிலையில் எப்போது அமைதியாக வைத்திருப்பார் தோனி. ஒன்று அல்லது இரண்டு போட்டிகளில் தொடர்ந்து தோல்வியைத் தழுவினால் சக வீரர்களுக்கு எந்த அழுத்தமும் ஏற்படாமல் எவ்வாறு பார்த்துக்கொள்கிறார் என்பதும் ருதுராஜுக்கு ஒரு சவாலாக இருக்கும்.

பட மூலாதாரம், SportsPicz
'கேப்டன்' ருதுராஜை சி.எஸ்.கே ரசிகர்கள் எப்படி பார்க்கிறார்கள்?
“தோனி எப்போது வேண்டுமானாலும் ஓய்வு அறிவிப்பை வெளியிடலாம். அதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அதேசமயம், மாற்று வீரரை அவரே அடையாளம் கண்டு கேப்டன்ஸியை வழங்கியது நல்ல உத்தி" என்கிறார் தோனியின் தீவிர ரசிகரான சரவணன்.
“கேப்டன் பொறுப்புக்கு ஒரு இளம் வீரரை கொண்டு வர வேண்டும் என்பதே அணி நிர்வாகமும் விரும்பியது. அந்த வகையில் ருதுராஜ் கெய்க்வாட் திறமைமிக்க வீரர். அவர்தான் தகுதியானவரும் கூட காரணம், உள்ளூர் கிரிக்கெட் மட்டுமின்றி ஆசிய கோப்பையிலும் இந்தியாவை வெற்றிப்பாதைக்கு வழிநடத்தியவர்” என சரவணன் குறிப்பிட்டார்.
2023 அக்டோபரில், சீனாவில் நடைபெற்ற 19-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், ருதுராஜ் தலைமையிலான இந்திய அணி கிரிக்கெட்டில் தங்கப் பதக்கம் வென்றது. ஆசிய விளையாட்டில் முதல்முறையாக தங்கம் வென்ற இந்திய கேப்டன் எனும் பெருமை ருதுராஜுக்கு கிடைத்தது. அதோடு, தோனிக்கு பிறகு கேப்டனாக பொறுப்பேற்ற முதல் முறையே சர்வதேச அரங்கில் கோப்பையை வென்ற வீரர் என்கிற பெருமையும் கிடைத்தது.
முன்னதாக 2023-ல் அயர்லாந்திற்கு இந்தியா சுற்றுப்பயணம் செய்தபோது துணை கேப்டனாக செயல்பட்டார் ருதுராஜ். அதன் பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரிலும் துணை கேப்டனாக செயல்பட்டிருக்கிறார்.

பட மூலாதாரம், SportsPicz
"ருதுராஜ் இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம்"
ருதுராஜால் ஐபிஎல்லில் கோப்பையை வெல்ல முடியுமா? என்கிற கேள்விக்கு பதிலளித்த சரவணன், "தோனிக்கு சி.எஸ்.கே கேப்டன் பொறுப்பை வழங்கியபோது அவர் இவ்வளவு சிறப்பாக அணியை வழிநடத்தி, 5 முறை கோப்பைகளை வென்று கொடுப்பார் என நாம் யாருமே நினைத்திருக்க மாட்டோம். வாய்ப்பு கொடுத்தால்தான் ஒருவர் எப்படி செயல்படுகிறார் என்பது தெரியும். தோனி தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார். அதே பாணியை ருதுராஜும் தொடர்வார் என்கிற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது" என்றார்.
"களத்திற்கு நேரடியாகச் சென்று பார்க்கும்போது ருதுராஜும் தோனியும் அதிகம் பேசிக்கொள்வதை கவனிக்க முடிகிறது. அவர்களுக்கு ஒரு புரிதல் இருக்கிறது. இது அணிக்கு தேவை மற்றும் ஆரோக்கியமான விஷயமும் கூட" என்கிறார் சரவணன்.
"தோனி சி.எஸ்.கேவுக்காக மட்டும் ருதுவை கைகாட்டவில்லை, இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத்திற்கு ருதுராஜ் அவசியமானவர் என்பதை சொல்லாமலேயே உணர்த்தியிருக்கிறார். தோனியை போன்றே ருதுராஜும் ஐசிசி கோப்பைகளை இந்தியாவுக்கு வென்று கொடுப்பார்" என நம்பிக்கையுடன் பேசினார் சரவணன்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












