அமெரிக்கா மோதி அரசை எதிர்க்கிறதா? சிஏஏ, அரவிந்த் கேஜ்ரிவால் விவகாரங்களில் தலையிடுவது ஏன்?

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவில் வரலாற்று ரீதியாகவே பல நேரங்களில் அவநம்பிக்கை நிலவி வந்துள்ளது. இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று இல்லாமலும் வாழ முடியாது, ஒன்றாகவும் வாழ முடியாது என்று பொதுவாகக் கூறப்படுவது உண்டு.
சமீப காலமாக இரு நாடுகளுக்கும் இடையே பல விஷயங்களில் வெளிப்படையான கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன. முன்னர், நரேந்திர மோதி அரசு பொதுத் தேர்தலுக்கு முன் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தியபோது அமெரிக்கா அதுகுறித்து தனது கருத்து வேறுபாட்டை வெளிப்படையாகவே தெரிவித்தது.
ஆனால், இந்தமுறை ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு சர்வதேச விவகாரம் தொடர்பானது அல்ல. இந்தியாவின் உள்நாட்டு அரசியல் சார்ந்த பிரச்னை.
இப்போது டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் ஊழலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டபோதும் அமெரிக்கா கருத்து தெரிவித்தது.
இந்தியாவின் முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் தனது வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டது தொடர்பாக செய்தியாளர் கூட்டத்தை கூட்டி மோதி அரசு மீது குற்றம்சாட்டியபோதும் அமெரிக்கா வெளிப்படையாக அதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளது.
சமீபத்தில் டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் காஷ்மீர் மக்களுக்கு இஃப்தார் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்வுகள் அனைத்தையும் பா.ஜ.க மற்றும் இந்தியாவுக்கு எதிராகவும், எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவாகவும் நரேந்திர மோதி அரசின் ஆதரவாளர்கள் மற்றும் சில ஆய்வாளர்கள் பார்க்கின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்கா யாருக்கு ஆதரவாக இருக்கிறது?
சர்வதேச அரசியல் விவகாரங்களின் நிபுணரான பிரம்மா செல்லானி, "பைடன் அரசு வங்கதேச தேர்தலில் தலையிட முயன்றது. வங்கதேச அதிகாரிகளுக்கு அமெரிக்கா, விசா தடை விதித்தது. ஆனால் ஷேக் ஹசீனாவின் வெற்றிக்குப் பிறகு அமெரிக்கா வங்கதேசத்துடனான நல்லுறவை அதிகரிக்க முயன்றது. இப்போது இந்தியாவின் தேர்தல் பணியில் அமெரிக்கா தலையிட முயல்கிறது,” என்று எழுதியிருக்கிறார்.
இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி கடந்த மார்ச் மாதம் 15ஆம் தேதி நடந்த ‘இந்தியா டுடே’ மாநாட்டில் இந்தியாவில் சிஏஏ சட்டம் அமலாக்கப்பட்டதை விமர்சித்திருந்தார். இந்தியாவுடன் நட்புறவு இருந்தாலும் அமெரிக்கா தனது கொள்கைகளைக் கைவிட முடியாது என்று அவர் கூறினார்.
"மத சுதந்திரம் ஜனநாயகத்தின் அடித்தளம். அமெரிக்கா அதைக் கைவிட முடியாது. ஒருவருடனான நட்பு மற்றும் நெருக்கம் காரணமாக எங்கள் கொள்கைகளை விட்டுவிட முடியாது. நம் உறவுகள் எவ்வளவு ஆழமானவை, யாருடன் நமக்கு எவ்வளவு பகை என்பது கொள்கை விஷயங்களில் முக்கியமல்ல. நாங்கள் எங்கள் கொள்கைகளில் உறுதியாக நிற்கிறோம். எங்கள் ஜனநாயகத்தில் ஏதேனும் தவறு இருந்தால், அதைச் சுட்டிக்காட்டுமாறு உங்களை அழைக்கிறேன். இது ஒருதலைப்பட்சமான விஷயம் அல்ல,” என்று எரிக் கார்செட்டி கூறினார்.
எரிக் கார்செட்டியின் இந்தக் கருத்தை இந்தியா நிராகரித்ததுடன், இந்த விஷயத்தில் அமெரிக்கா கூறும் தகவல் சரியானது இல்லை என்றும் கூறியது. இது இந்தியாவின் உள்விவகாரம் என்றும், இந்திய அரசமைப்புச் சட்டம் எல்லா குடிமக்களுக்கும் மத சுதந்திரத்தின் உரிமையை வழங்குகிறது என்றும் இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறினார்.
ஏ.என்.ஐ செய்தி முகமை எரிக் கார்செட்டியிடம் திங்களன்று சிஏஏ பற்றிய அவரது கருத்துகள் குறித்து ஒரு கேள்வியைக் கேட்டபோது, "எந்தவொரு ஜனநாயகத்திற்கும் மத சுதந்திரம் மிகவும் முக்கியமானது. சிறுபான்மையினரைப் பாதுகாப்பது ஜனநாயகத்தின் அடிப்படை விஷயம். இது எதிர்மறையான கருத்து அல்ல. நான் தூதராக இருக்கும் நாட்டில் என்ன நடக்கிறது என்பதை அமெரிக்க அரசுக்குத் தெரிவிப்பது எனது வேலை. இதுபோலவே இந்திய தூதரும் செய்வார் என்று நான் கருதுகிறேன்,” என்று பதில் அளித்தார்.
உண்மையில் அமெரிக்கா மோதி அரசை எதிர்க்கிறதா?

பட மூலாதாரம், Getty Images
அரவிந்த் கேஜ்ரிவால் கைது குறித்து, அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறுகையில், "டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் கைது உட்பட இந்த நடவடிக்கைகளை நாங்கள் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணிக்கிறோம். நியாயமான, வெளிப்படையான மற்றும் சரியான நேரத்தில் சட்ட நடவடிக்கைகளை முடிப்பதை அமெரிக்கா ஆதரிக்கிறது. இதில் யாருக்கும் எந்த ஆட்சேபணையும் இருக்கும் என்று அமெரிக்கா நினைக்கவில்லை," என்று குறிப்பிட்டார்.
காங்கிரஸின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த மேத்யூ மில்லர், "வருமான வரித்துறை தங்களது சில வங்கிக் கணக்குகளை முடக்கியுள்ளதாக காங்கிரஸ் கட்சி தெரிவிக்கும் குற்றச்சாட்டுகளை நாங்கள் அறிவோம். வரவிருக்கும் தேர்தலில் பிரசாரம் செய்ய அவர்களுக்கு இது சவாலை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரங்களில் நியாயமான, வெளிப்படையான, மற்றும் சரியான நேரத்தில் முடியும் சட்ட செயல்முறைகள் எடுக்கப்படுவதை நாங்கள் ஊக்குவிக்கிறோம்," என்றார்.
அமெரிக்காவின் இந்தக் கருத்துக்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்த இந்தியா இது இந்தியாவின் உள்விவகாரம் என்று கூறியது.
அமெரிக்காவின் இந்தக் கருத்துகள் இந்தியாவிற்கும் மோதி அரசுக்கும் எதிரானவை என்று பலர் கருதுகின்றனர். அமெரிக்கா இந்தியாவில் எதிர்க்கட்சிகளை ஆதரிக்கிறது, நரேந்திர மோதியை எதிர்க்கிறது என்றுகூடப் பலர் சொல்ல ஆரம்பித்துள்ளனர்.
சர்வதேச விவகாரங்கள் நிபுணரான மைக்கேல் ககல்மேன், சிந்தனைக் குழுவான ‘தி வில்சன் சென்டரில்’ உள்ள தெற்காசிய கழகத்தின் இயக்குநராக உள்ளார். இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இந்த சர்ச்சை குறித்து கடந்த மார்ச் 28ஆம் தேதி அவர் இவ்வாறு எழுதினார்:
"இன்று நான் இந்திய தொலைக்காட்சி சேனல் ஒன்றில், கேஜ்ரிவால் தொடர்பாக இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே நடந்து வரும் சர்ச்சை குறித்த விவாதத்தில் கலந்துகொண்டேன். இந்த விவாதத்தில் பங்கேற்ற விருந்தினர் ஒருவர், இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகளுக்கு அமெரிக்கா ஆதரவளிப்பதாகக் குற்றம் சாட்டினார்.
இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகளையோ அல்லது குறிப்பிட்ட கட்சியையோ அமெரிக்கா ஆதரிப்பதாக நான் நினைக்கவில்லை. ஆனால், இந்தியாவில் அமெரிக்காவை பற்றிய இந்தக் கருத்து, அமெரிக்காவின் மதிப்புகள் சார்ந்த வெளியுறவுக் கொள்கை ஏன் பிரச்னை உள்ளதாக இருக்கிறது என்பதை நமக்குச் சொல்கிறது.”
இந்தியா பலவீனமாக இருப்பதையே அமெரிக்கா விரும்புகிறதா?

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி மற்றும் ககல்மேனின் கருத்துகளுக்குப் பதிலளிக்கும் விதமாக, தி ப்ரூக்கிங்ஸ் இன்ஸ்டிடியூஷனின் மூத்த சர்வதேச அரசியல் ஆய்வாளரான தன்வி மதான் இவ்வாறு எழுதினார்: "பைடன், நரேந்திர மோதியை அரசு விருந்தினராக அழைத்தார். இந்தியாவில் ஜி20 உச்சிமாநாட்டை வெற்றிகரமாக நடத்த பைடன் உதவினார். குர்பர்வந்த் சிங் பன்னு வழக்கில் அமெரிக்க இறையாண்மை மீறப்பட்டது குறித்த குற்றச்சாட்டுகள் இருந்தாலும் பைடன் இந்தியாவுக்கு வந்தார். அப்படி இருக்கும்போது பைடன் நிர்வாகம் மோதியின் எதிரிகளை ஆதரிக்கிறது என்று இந்தியாவில் சிலர் நினைப்பது கேலிக்குரியது.”
தன்வி மதானின் கருத்துக்கு வலதுசாரி பத்திரிக்கையான ‘ஸ்வராஜ்யா’வின் இயக்குநர் ஜெகன்நாதன் பதிலளித்துள்ளார்.
"யுக்ரேன் போன்ற விஷயங்களில் அதன் கொள்கைகளை ஆதரிக்கச் செய்வதற்காக அமெரிக்கா நிச்சயமாக இந்தியா பலவீனமாக இருப்பதையே விரும்புகிறது. தனது சொந்த நலன்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வலிமையான இந்தியாவை அமெரிக்கா விரும்பவில்லை. மோதியின் எதிரிகளை அமெரிக்கா ஆதரிக்கிறதா இல்லையா என்பது பிரச்னை அல்ல. ஆனால் அமெரிக்கா இந்தியா பலவீனமாக இருப்பதையே விரும்புகிறது,” என்று அவர் எழுதியுள்ளார்.
ஆர் ஜெகன்நாதனின் கருத்துக்குப் பதிலளித்த அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள அல்பனி பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் இணைப் பேராசிரியர் கிறிஸ்டோபர் கிளியரி, "இந்தக் கருத்தை நீங்கள் ஏற்கிறீர்கள் என்றால், இந்தியா பலவீனமான ஒரு அமெரிக்காவை விரும்புவதாக எடுத்துக் கொள்ளலாமா?” என்று வினவினார்.
கிளியரியின் கேள்விக்குப் பதிலளித்த தன்வி மதான், "சில வலதுசாரிகளும் சில இடதுசாரிகளும் பலவீனமான அமெரிக்காவை பார்க்க விரும்புகிறார்கள் என்று நான் நினைக்கிறேன். ஆனால் இந்திய பிரதமரும் வெளியுறவு அமைச்சரும் அமெரிக்கா பலவீனமாவதைப் பார்க்க விரும்பவில்லை என்று பகிரங்கமாகச் சொன்னார்கள். இந்தப் பகுதியில் அமெரிக்காவின் இருப்பு முடிந்தவரை அதிகரிக்க வேண்டுமேயன்றி குறையக்கூடாது என்று இந்தியா விரும்புகிறது,” என்று அவர் எழுதியுள்ளார்.
ஆனால் சர்வதேச உறவுகள் நிபுணர் ஜோராவர் துலத் சிங், ஆர் ஜெகன்நாதனின் வார்த்தைகளை ஏற்றுக்கொள்வது போலத் தெரிகிறது.
ஜெகன்நாதனின் கருத்தை முன்னோக்கிக் கொண்டு சென்ற அவர் "தங்கள் இறையாண்மையை சமரசம் செய்து, தங்கள் பாதுகாப்புக் கொள்கையை யாரோ ஒருவருக்கு அடிபணியச் செய்யும் நாடுகளின் வலையமைப்பை அமெரிக்காவும் பிற சக்தி வாய்ந்த நாடுகளும் உருவாக்க விரும்புவது நிறுவப்பட்ட ஒரு தந்திரம்,” என்று எழுதினார்.
“அமெரிக்கா தலைமையிலான இந்த நெட்வொர்க் தன் சொந்த நலன்களுக்காகச் செயல்படுகிறது. மறுபுறம், இந்தியா தனது சுயாட்சியை இழக்காமல் அமெரிக்காவுடன் ஒரு செயல்தந்திர கூட்டாண்மையை உருவாக்குவதில் வெற்றிகரமாக உள்ளது. அதன் பெருமை இந்தியாவின் நிரந்தர மற்றும் சுதந்திரமான புவிசார் அரசியல் அடையாளம் மற்றும் தேசியவாதத்தில் உள்ளது. வளர்ந்து வரும் இந்தியாவை கட்டுப்படுத்தி தன் நலன்களைப் பாதுகாத்துக் கொள்வது அமெரிக்க உத்தி. இது அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையின் இயல்பான பகுதி,” என்று அவர் கூறினார்.
அரவிந்த் கேஜ்ரிவால் கைது, காங்கிரஸின் வங்கிக் கணக்கு முடக்கம், மற்றும் சிஏஏ குறித்த அமெரிக்காவின் கருத்துகள் நரேந்திர மோதிக்கு எதிரானவை என்று இந்தியாவில் பலரால் பார்க்கப்படலாம். ஆனால் அதற்கு மாறாக அமெரிக்கா குறித்த பிரதமர் மோதியின் கருத்துகளும் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன.
மோதியின் கருத்து குறித்த சர்ச்சை

பட மூலாதாரம், Getty Images
கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பரில் பிரதமர் மோதி ‘ஹவ்டி மோதி’ நிகழ்ச்சியை அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள ஹூஸ்டனில் நடத்தினார். இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் வந்திருந்தார்.
டிரம்ப் முன்னிலையிலேயே நரேந்திர மோதி ‘இந்த முறை டிரம்ப் அரசு’ என்று கூறினார். அமெரிக்காவில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவிருந்தது. மோதியின் இந்தக் கருத்து ஜனநாயக கட்சிக்கு எதிராகவும், டிரம்புக்கு ஆதரவாகவும் பார்க்கப்பட்டது. 2014இல் நரேந்திர மோதியின் பிரசாரத்தின் முழக்கமும் அது போலவே இருந்தது – ‘இந்த முறை மோதி அரசு.’
‘இந்த முறை டிரம்ப் அரசு’ என்ற மோதியின் முழக்கத்திற்குப் பலர் அப்போது கடுமையாக எதிர்வினையாற்றினர்.
“அமெரிக்காவில் குடியரசுக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் ஜனநாயகக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், எங்கள் உறவு இரு கட்சிகளின் தலைமையுடனும் இருந்து வந்துள்ளது. டிரம்ப்புக்கான உங்கள் பிரசாரம், இறையாண்மை ரீதியாகவும், ஜனநாயக நாடு என்ற ரீதியாகவும் அமெரிக்கா, இந்தியா ஆகிய இரண்டிற்கும் எதிரானது. பிரதமர் மோதி அவர்களே, நீங்கள் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை மீறிவிட்டீர்கள். அதன் கீழ் நாம் எந்த நாட்டின் தேர்தல்களிலும் தலையிட மாட்டோம். இது இந்தியாவின் நலன்களுக்கு எதிரானது,” என்று காங்கிரஸ் தலைவர் ஆனந்த் ஷர்மா எழுதினார்.
தன்வி மதானும் மோதியின் டிரம்ப் கோஷத்தை பகிர்ந்துகொண்டு “மக்கள் எப்படி இவ்வளவு சீக்கிரம் விஷயங்களை மறந்துவிடுகிறார்கள்.” என்று எழுதியிருந்தார். நரேந்திர மோதியின் மற்றொரு கருத்தையும் தன்வி மதான் பகிர்ந்துகொண்டுள்ளார். 2021ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி டிரம்ப் ஆதரவாளர்கள் பைடனின் வெற்றிக்கு எதிராக அமெரிக்க நாடாளுமன்றத்துக்குள் நுழைந்து அதை நாசப்படுத்தியபோது மோதி இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.
கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த இந்தச் சம்பவம் குறித்து பிரதமர் மோதி ட்வீட் செய்து, "வாஷிங்டன் டிசியில் கலவரம் மற்றும் வன்முறை நடந்த செய்திகளைக் கண்டு நான் வருத்தமடைந்தேன். சரியான நேரத்தில் அமைதியான முறையில் அதிகார கைமாறல் நடவடிக்கை தொடர வேண்டும். ஜனநாயக செயல்பாட்டில், சட்டவிரோத போராட்டங்கள் மூலம் விஷயங்களை மாற்ற முடியாது,” என்று கூறியிருந்தார்.
பிரதமர் மோதியின் இந்தப் பழைய ட்வீட்டை பகிர்ந்துகொண்ட மதான், "இந்தியா-அமெரிக்கா உறவுகளில் சட்ட நடைமுறைகள் மீதான நம்பிக்கையும் ஊக்கமும் புதிய விஷயம் அல்ல," என்று எழுதினார்.
அமெரிக்கா குறித்த இந்தியாவின் அவநம்பிக்கை

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவின் மனித உரிமைகள் நிலை, மத சுதந்திரம், அரவிந்த் கேஜ்ரிவால் கைது, காங்கிரஸின் கணக்கு முடக்கம் போன்றவற்றில் அமெரிக்காவின் கருத்துகள் மோதி அரசுடன் அதிகரித்து வரும் அதிருப்தியாகவும் பார்க்கப்படுகிறது.
இந்திய குடியரசு தினத்தில் அதிபர் பைடன் தலைமை விருந்தினராக வராததற்கும் பலர் இந்த அதிருப்தியைத் தொடர்புபடுத்துகின்றனர். தலைமை விருந்தினராக குடியரசு தின விழாவுக்கு வருமாறு அதிபர் பைடனை இந்தியா அழைத்தது. ஆனால் பைடன் அழைப்பை ஏற்கவில்லை.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு சோவியத் யூனியன் மற்றும் அமெரிக்காவின் தலைமையில் உலகம் இரு துருவங்களாகப் பிரிந்தபோது இந்தியா அணிசேராமை பற்றிப் பேசிக்கொண்டிருந்தது. ஆனால் கருத்தியல் ரீதியாக அது சோவியத் யூனியனுடன் இருந்தது.
கடந்த 1956ஆம் ஆண்டில் ஹங்கேரியையும், 1968இல் செக்கோஸ்லோவாக்கியாவையும், 1979இல் ஆப்கானிஸ்தானையும் ரஷ்யா தாக்கியபோது, இந்தியா அதைக் கண்டிக்கவில்லை. 2022இல் ரஷ்யா யுக்ரேன் மீது தாக்குதல் நடத்தியபோதும், இந்தியா அதைக் கண்டிக்கவில்லை.
இந்தியாவின் இந்த நிலைப்பாட்டை அமெரிக்கா விரும்பவில்லை. 1957இல் ஹங்கேரியில் சோவியத் யூனியன் தலையிட்டு ஓராண்டு கழித்து அப்போதைய இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேரு, இந்த விவகாரத்தில் சோவியத் யூனியனை இந்தியா ஏன் கண்டிக்கவில்லை என்று நாடாளுமன்றத்தில் கூறினார்.
“உலகில் வருடா வருடம், தினந்தினம் பல விஷயங்கள் நடக்கின்றன. அதை நாம் பொதுவாக விரும்புவதில்லை. ஆனால் நாம் அவர்களைக் கண்டிக்கவில்லை. ஏனென்றால் யாராவது ஒரு பிரச்னைக்குத் தீர்வைத் தேடும்போது கண்டனம் உதவாது,” என்று நேரு சொன்னார்.
அமெரிக்காவின் மீதான இந்தியாவின் அவநம்பிக்கை 1971இல் அதிகரித்தது. அப்போது பாகிஸ்தான் ராணுவம் கிழக்கு பாகிஸ்தானை (இப்போது வங்கதேசம்) தாக்கியது. அப்போது சீனாவும் அமெரிக்காவும் பாகிஸ்தானுடன் இருந்தன.
அந்த நேரத்தில் அப்போதைய இந்திய பிரதமர் இந்திரா காந்தி சோவியத் யூனியனுடன் நட்புறவு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அப்போதைய அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சன் பாகிஸ்தானுக்கு ஆதரவாக வங்காள விரிகுடாவிற்கு போர்க் கப்பலைக்கூட அனுப்பியிருந்தார். அப்போது இந்தியாவில் அமெரிக்க எதிர்ப்பு உச்சத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
அப்போதைய அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சன் இந்திரா காந்தி குறித்து ஆட்சேபத்திற்குரிய வார்த்தைகளைப் பயன்படுத்தினார். பனிப்போரின் போது பாகிஸ்தான் அமெரிக்க அணியுடன் இருந்தது. அது அமெரிக்காவிடம் இருந்து நிறைய நன்மைகளைப் பெற்றது. ஆனால் இந்தியாவில் அமெரிக்கா மீதான அவநம்பிக்கை அதிகரித்தது. அது இன்றும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












