‘சிகரெட்டால் சூடு வைத்தனர், எரியும் கட்டையால் அடித்தனர்’ – டங்கி பாதையில் ரஷ்யா சென்ற இளைஞர்கள் அனுபவித்த கொடூரம்

பட மூலாதாரம், KAMAL SAINI/BBC
- எழுதியவர், கமல் சைனி
- பதவி, பிபிசி பஞ்சாபிக்காக
‘கழுதைப் பாதை’ எனப்படும் சட்டவிரோத குடியேற்றப் பாதையின் மூலம் ஹரியாணா மாநிலத்தில் இருந்து ரஷ்யா சென்று, அங்கு சிறைத் தண்டனை அனுபவித்த இரண்டு நபர்கள், தாம் அனுபவித்த சித்ரவதைகளை பிபிசி பஞ்சாபி சேவையிடம் பகிர்ந்துகொண்டனர்.
ஹரியாணாவின் கர்ணல் நகரைச் சேர்ந்த முகேஷ் மற்றும் சன்னி ஆகிய இரு சகோதரர்கள் ரஷ்யாவில் சிறைத்தண்டனை அனுபவித்துவிட்டு, இப்போது தங்கள் ஊருக்குத் திரும்பியுள்ளனர்.
முகேஷ், தான் ரஷ்ய சிறையில் மனரீதியாகப் பல சித்ரவதைகளை அனுபவித்ததாகக் கூறினார். “இப்போது எனக்கு வெளிநாடு செல்லும் எண்ணமே இல்லை, மனரீதியாக நிறைய சித்ரவதை அனுபவித்தேன். என் குடும்பத்திடம் இப்போது பணம் இல்லை," என்றார்.
முகேஷ் மற்றும் அவரது சகோதரர் சன்னிக்கு வெளிநாடு சென்று பணம் சம்பாதித்து, அவர்களது குடும்பத்தை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என்பதே கனவு.
அவர்கள் இருவரும் வெளிநாடு செல்வதற்கான முகவரைச் சந்தித்தபோது, அவர்களுக்கு அந்த முகவர் பணி அனுமதி வழங்குவதாக உறுதியளித்தார். ஆனால் முகேஷ் சென்றபோது, அவர்களுக்குப் பணி அனுமதி வழங்கப்படவில்லை. அவர்கள் கழுதைப் பாதையில் விடப்பட்டனர்.
அதாவது, ஒரு பகுதியிலிருந்து வேறு பகுதிக்கு சட்டவிரோதமாக எல்லைகளைக் கடந்து பல்வேறு நாடுகளைக் கடந்து பயணிப்பதே பஞ்சாபி மொழியில் டங்கி என்று அழைக்கப்படும் கழுதைப் பாதை எனப்படுகிறது.
அந்த முகவர், தனக்கு ஜெர்மனியில் ஒரு உணவகம் இருப்பதாகவும், அவர்கள் அங்கு அனுப்பப்படுவார்கள் எனவும் கூறினார்.
அதில் பயணம் செய்யும்போது அவர்கள் ரஷ்ய ராணுவத்திடம் பிடிபட்டால், அவர்களுக்கு இரண்டு தேர்வுகள் இருந்தன. ரஷ்ய ராணுவத்தில் சேர்ந்து யுக்ரேனுக்கு எதிராகப் போரில் ஈடுபடுவது, அல்லது 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிப்பது.
தங்களுக்கு நல்ல எதிர்காலம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் சென்றதாக முகேஷ் கூறுகிறார்.
‘ஜெர்மனி செல்ல ரூ.34 லட்சம் கொடுத்தோம்’

பட மூலாதாரம், KAMAL SAINI/BBC
வேலைக்காக முகேஷ் வெளிநாடு செல்ல வேண்டியிருந்தது. மூன்று முகவர்கள் தனக்கு ஜெர்மனி செல்லும் கனவைக் காட்டினர் என்று அவர் கூறினார். சில நாட்கள் ரஷ்யாவில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் பயிற்சி அளிக்கப்பட்டு அவர்கள் ஜெர்மனிக்கு அனுப்பப்படுவார்கள் என்று அவர்களிடம் கூறப்பட்டது.
ரூ.14 லட்சத்துக்கு ஜெர்மனி செல்ல ஏஜெண்டுடன் ஒப்பந்தம் செய்தனர். அதில் செல்லும் முன் ரூ.2 லட்சம், ரஷ்யா சென்றபின் ரூ. 8 லட்சம், ஜெர்மனியை அடைந்ததும் மீதிப் பணம் செலுத்தவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
முகவருக்கு இதுவரை ரூ.34 லட்சம் கொடுத்துள்ளதாக முகேஷ் கூறினார். தங்களை நேரடியாக விமானம் மூலம் ரஷ்யாவுக்கு கொண்டு செல்லப் போவதாக உறுதியளிக்கப்பட்டதாக முகேஷ் கூறினார்.
ரஷ்யாவுக்கு செல்வதற்கான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டன. ஆனால் "விமான நிலையத்தை அடைந்தபோது எங்களுக்கு தாய்லாந்திற்கு செல்ல டிக்கெட் வழங்கப்பட்டது. தாய்லாந்தில் சில நாட்கள் தங்க வேண்டும், அங்கிருந்து மேலதிக ஆவணங்கள் தயாரிக்கப்படும் என்று எங்களிடம் கூறப்பட்டது," என்று அவர் கூறினார்.
‘தாய்லாந்தில் தங்க வைக்கப்பட்டோம்’
மேலும் தொடர்ந்த முகேஷ், தாய்லாந்தில் அவர் சில நாட்கள் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டதாகக் கூறினார். அப்போது பல்ஜித் கவுர் என்ற பெண் அவரைத் தொலைபேசியில் அழைத்து, முகேஷை தாய்லாந்து வரை அனுப்ப மட்டுமே தங்களுக்குப் பணம் கிடைத்ததாகவும், அதற்கு மேல் செல்ல பணம் கிடைக்கவில்லை என்றும் சொன்னதாக முகேஷ் கூறுகிறார்.
முகேஷும் அவரது குடும்பத்தினரும் முகவரைத் தொடர்பு கொண்டபோது, அவர் பல்ஜீத் கவுர்தான் தனது முதலாளி என்றும், இனிமேல் பல்ஜீத் கவுர்தான் அவருடன் பேசுவார் என்றும் கூறினார்.
இது தொடர்பாக காவல்துறையில் புகாரளித்துள்ளதாகக் கூறுகிறார் முகேஷ். இவ்வழக்கு ஹரியாணா காவல்துறையால் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இருப்பினும், இதுவொன்றும் முதல் வழக்கு அல்ல. முன்னதாக, ரஷ்யா-யுக்ரேனில் சிக்கிய பல இந்திய இளைஞர்கள் தங்கள் வீடியோக்களை பகிர்ந்து இந்திய அரசிடம் முறையிட்டுள்ளனர்.
இது தொடர்பாக இந்திய வெளிவிவகார அமைச்சகம் ஓர் அறிக்கையை வெளியிட்டது. வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், அவர்கள் ரஷ்ய அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும், ரஷ்யாவில் சிக்கியுள்ள இந்தியர்களை விரைவில் திருப்பி அனுப்புமாறு கேட்டுக் கொண்டுள்ளதாகவும் கூறினார்.
‘மாஸ்கோவில் சில நாட்கள் மகிழ்ச்சியாக இருந்தேன்’

பட மூலாதாரம், KAMAL SAINI/BBC
தாய்லாந்தில் அவர் தனது முகவர்களைத் தொடர்புகொள்ள முயன்றபோது, அவர்களது எண்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை.
பயந்துபோன முகேஷ், முகவரிடம் பணம் கொடுக்குமாறு தனது தந்தையிடம் கேட்க, அவரது தந்தையும் முகவரிடம் பணம் கொடுத்ததாக அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர்.
முகேஷ் மேலும் கூறுகையில், "அதன்பிறகும் அவர்கள் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை. பின்னர் அவர்கள் எனக்கு ரஷ்யாவில் மாஸ்கோவிற்கு செல்ல ஒரு டிக்கெட் அனுப்பினார்கள்," என்றார்.
"சிலர் என்னை மாஸ்கோ விமான நிலையத்தில் இருந்து தங்குமிடத்திற்கு அழைத்துச் சென்றனர். சில நாட்கள் நான் நன்றாக இருந்தேன்," என்கிறார் முகேஷ்.
அவர் திருப்தியாக இருந்ததாக அவரது குடும்பத்தினரும் கூறுகின்றனர். பல்ஜித் கவுரும் அவரது குடும்பத்தினருடன் தொடர்பில் இருந்தார். பின்னர் முகேஷின் அத்தை மகன் சன்னியும் ரஷ்யா சென்றபோது, எல்லாம் தலைகீழாக மாறியது.
‘சிகரெட்டால் சூடு வைத்தார்கள், அடித்தார்கள்’
சன்னி வந்த பிறகுதான் சித்ரவதை செய்யப்படுவது ஆரம்பித்ததாக முகேஷ் கூறுகிறார்.
முகேஷ் மீண்டும் முகவர்களைத் தொடர்புகொள்ள முயன்றார். ஆனால் முகேஷின் எண்ணை அவர்கள் ப்ளாக் செய்துவிட்டதாக அவர் கூறுகிறார்.
"அதன்பிறகு, பல்ஜித் கவுர் என்னை பாகிஸ்தானை சேர்ந்த சில நபர்களிடம் ஒப்படைத்தார். அவர்கள் என்னை காட்டு வழியாக, சட்டவிரோதமாக பெலாரஸுக்கு அழைத்துச் சென்றனர்," என்றார்.
"அவர்கள் என் மேல் கத்தியை வைத்தபடி என் குடும்ப உறுப்பினர்களுக்கு வீடியோ கால் செய்து மிரட்டுவார்கள். என் குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து பணம் வர ஓரிரு நாட்கள் தாமதமானால், என் உடலில் எரியும் சிகரெட்டால் சூடு வைப்பார்கள், எரியும் மரக் கட்டைகளாலும், கம்பிகளாலும் அடிப்பார்கள்," என்றார்.

பட மூலாதாரம், KAMAL SAINI/BBC
தப்பித்தது எப்படி?
அதன்பிறகு தன்னை அவர்கள் மாஃபியாவிடம் ஒப்படைத்ததாக முகேஷ் கூறினார். மாஃபியாக்கள் ரஷ்ய ராணுவத்துடன் சேர்ந்து, தன்னை ரஷ்ய ராணுவத்தில் சேருமாறும், இல்லாவிட்டால் 10 ஆண்டு சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டி வரும் என்றும் அவர்கள் கூறியதாகத் தெரிவித்தார்.
"நான் 10 ஆண்டு சிறைத் தண்டனையை அனுபவிப்பதாகச் சொன்னென். இதற்கிடையில், நான் நோய்வாய்ப்பட்டபோது, அவர்கள் என்னை மருத்துவமனையில் சேர்த்தனர்," என்று கூறுகிறார் முகேஷ்.
"இதற்கிடையில், என்னுடன் இருந்த இளைஞர்கள் சிறைக்கு அனுப்பப்பட்டனர். 12-13 நாட்களுக்குப் பிறகு நான் மருத்துவமனையில் இருந்து திரும்பியபோது, என்னையும் சிறைக்கு அழைத்துச் சென்றனர்," என்றார்.
இந்த நேரத்தில் தனது குடும்பத்தாருடன் ஓரிரு முறை தொடர்பு கொள்ள முடிந்ததாகக் கூறுகிறார் முகேஷ்.
முகேஷ் மேலும் கூறுகையில், "நாங்கள் சிறையில் இருக்கிறோம் என்பது முகவர்களுக்குத் தெரியும். வேறொரு நபர் மூலம் அதை என் குடும்பத்திடம் தெரிவித்தனர். என்னை வழக்கறிஞர் மூலம் சிறையில் இருந்து வெளியே கொண்டு வருவோம் என்று முகவர்கள் வீட்டில் தெரிவித்தனர்," என்றார்.
“அதன்பிறகு எனது குடும்பத்தினர் தனி வழக்கறிஞரை அணுகி ரூ.6 லட்சம் செலவு செய்து எனக்கு ஜாமீன் பெற்றுத் தந்தனர். அந்த வழக்கறிஞர் அங்கிருந்து என்னை இங்கு கொண்டு வந்தார்,” என்றார்.
இந்த வழக்கில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளதாக முகேஷ் கூறுகிறார்.
‘பணம் தராதவர்கள் கொல்லப்பட்டனர்’
சிகரெட், எரியும் மரக்கட்டைகள், கத்தியால் தாக்கப்பட்ட காயங்கள் தனது உடலிலும் இருப்பதை சன்னியும் காட்டினார்.
மேல்லும் பேசிய சன்னி, "அவர்கள் எங்களிடம் ஷெங்கன் விசாவைப் பற்றிச் சொன்னார்கள். ஆனால் அவர்கள் எங்களை பெலாரஸில் சிக்க வைத்தார்கள். நாங்கள் சித்திரவதை செய்யப்பட்டோம்," என்றார்.
"எங்களோடு வேறு பல இளைஞர்களும் இருந்தனர். அவர்களின் குடும்பம் பணம் அனுப்பினால், அவர்கள் உயிருடன் இருந்தனர். பணம் வராவிட்டால், அவர்கள் கொல்லப்பட்டனர்," என்று சன்னி கூறினார்.
“பணம் அனுப்ப வசதியில்லாத குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் சடலங்களை நாங்கள் எங்கள் கண்களால் பார்த்தோம்,” என்றும் அவர் தெரிவித்தார்.
‘நிலத்தை விற்று மகனை மீட்டோம்’

பட மூலாதாரம், KAMAL SAINI/BBC
முகேஷின் தந்தை ஷியாம் லால், முகேஷ் பிபிஏ படித்துவிட்டு சட்டம் படிக்க விரும்பியதாகவும், ஆனால் தனது நண்பரைப் பார்த்து தானும் வெளிநாட்டிற்குச் செல்லும் எண்ணம் கொண்டதாகவும் கூறினார்.
“என் மகன் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்திருக்கிறார். ஜெர்மனிக்கு சென்றால் மாதம் இரண்டரை லட்ச ருர்பாய் சம்பளம் கிடைக்கும் என்பதால் அங்கு அனுப்ப முடிவு செய்தோம்,” என்று ஷியாம் லால் கூறுகிறார்.
"நாங்கள் இந்தச் சிக்கலில் சிக்கியதால் பணம் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. என் மகன் அவர்களிடம் சிக்கிக் கொண்டான். முகேஷை மீட்க நிலத்தை விற்க வேண்டியிருந்தது," என்றார்.
"எனது மகன் திரும்பி வரவேண்டும் என்று நான் விரும்பினேன். அதற்குப் பணம் செலவானது. ஆனால் நீதித்துறை அதை மீட்டுத் தரும் என்று நம்புகிறேன்,” என்றார்.
அவர் மேலும் கூறுகையில், "என் மகன் முகேஷுடன் நான் ஒருநாள்கூட பேசாமல் இருந்ததில்லை. ஆனால் அங்கு அவன் ரஷ்ய ராணுவத்தில் சேரச் சொல்லி சித்ரவதை செய்யப்பட்டிருக்கிறான்,” என்றார்.

பட மூலாதாரம், KAMAL SAINI/BBC
மறுபுறம், சன்னியின் தாய் மீனா தேவி, "எங்கள் குழந்தைகள் ஏமாற்றப்பட்டுவிட்டனர். அவர்கள் எங்களிடம் பணம் கேட்டு எங்கள் குழந்தைகளை அடித்திருக்கிறார்கள். சன்னியின் தந்தை இதய நோயாளி, அவரால் வேலை செய்ய முடியாது," என்று கூறுகிறார்.
"நாங்கள் நடத்திவந்த உணவகத்தை விற்று அந்தப் பணத்தை அனுப்பினோம். இரவு முழுவதும் தூங்காமல் எங்கள் குழந்தைகளிடமிருந்து வரும் தகவலுக்காகக் காத்திருந்தோம்," என்கிறார்.

பட மூலாதாரம், KAMAL SAINI/BBC
காவல்துறையினர் சொல்வது என்ன?
ஷியாம் லால் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
போலீஸ் அதிகாரி அசோக்குமார் “ரூ.35 லட்சம் மோசடி நடந்துள்ளது. இதற்காக, 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்,’’ என்றார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












