ஆபாச தளத்தில் போலி வீடியோ: உருவாக்கிய நண்பரே ஆறுதலும் கூறியதை பெண் கண்டுபிடித்தது எப்படி?

டீப்ஃபேக் தொழில்நுட்பம்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், கேட் வெஸ்ட்
    • பதவி, பிபிசி ஃபைல் 4

எச்சரிக்கை: புண்படுத்தும் மொழி மற்றும் பாலியல் வன்முறை பற்றிய விளக்கங்கள் உள்ளன.

டீப்ஃபேக் ஆபாசப்படத்தில் தன்னுடைய படத்தை ‘ஜோடி’ பார்த்தார். பின்னர் மற்றொரு பயங்கரமான அதிர்ச்சியை அவர் எதிர்கொண்டார். இதைச் செய்தவர் தன்னுடைய நெருங்கிய நண்பர்களில் ஒருவர் என்று தான் உணர்ந்ததாக பிபிசி ஃபைல் 4 இடம் அவர் கூறினார்.

2021 வசந்த காலத்தில் ’ஜோடிக்கு’ (அவரது உண்மையான பெயர் அல்ல) ஒரு அநாமதேய மின்னஞ்சல் கணக்கிலிருந்து ஆபாச இணையதளத்தின் இணைப்பு அனுப்பப்பட்டது.

அதைக் கிளிக் செய்தபோது பல்வேறு ஆண்களுடன் அவர் உடலுறவு கொள்வது போன்ற வெளிப்படையான படங்கள் மற்றும் வீடியோவை அவர் கண்டார். ஜோடியின் முகம் மற்றொரு பெண்ணின் உடலில் டிஜிட்டல் முறையில் சேர்க்கப்பட்டிருந்தது. இது "டீப்ஃபேக்" என்று அழைக்கப்படுகிறது.

யாரோ ஒருவர் ஜோடியின் முகம் கொண்ட புகைப்படங்களை ஒரு ஆபாச தளத்தில் வெளியிட்டார். இவர் "தன்னை மிகவும் கிளர்ச்சி அடையச் செய்ததாக’ அவர் குறிப்பிட்டிருந்தார். தளத்தில் உள்ள பிற பயனர்கள் அவரை வைத்து போலி ஆபாசப்படங்களை உருவாக்க முடியுமா என்று அவர் கேள்வியும் கேட்டிருந்தார். இந்த போலி படங்களுக்கு ஈடாக ஜோடியின் கூடுதல் புகைப்படங்களையும் அவரைப் பற்றிய விவரங்களையும் பகிர்ந்து கொள்ள அந்த நபர் முன்வந்தார்.

இப்போது 20-களின் நடுப்பகுதியில் இருக்கும் ஜோடி தனது அனுபவத்தைப் பற்றி முதன்முறையாகப் பேசினார். "நான் அழுதேன், கதறினேன், ஃபோனை ஸ்க்ரோல் செய்து கொண்டிருந்தேன். என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தேன்,” என்றார் அவர்.

"இது உண்மையிலேயே என் வாழ்க்கையை அழிக்கக்கூடும் என்று எனக்குத் தெரிந்தது." என்று அவர் மேலும் கூறினார்.

வேறு வழியில்லாமல் ஆபாச தளத்தை ஸ்க்ரோல் செய்த ஜோடி, தனது "உலகமே அழிந்துவிட்டதாக" உணர்ந்ததாக தெரிவித்தார்.

பின்னர் ஜோடி ஒரு குறிப்பிட்ட படத்தைப் பார்த்தார். ஒரு பயங்கரமான உண்மை அவரைத் தாக்கியது.

டீப்ஃபேக் தொழில்நுட்பம்

பதற வைக்கும் தொடர் நிகழ்வுகள்

ஜோடி குறிவைக்கப்படுவது இது முதல் முறை அல்ல.

உண்மையில் இது பல ஆண்டுகளாக நடந்து வந்த அநாமதேய ஆன்லைன் துஷ்பிரயோகத்தின் உச்சம்.

ஜோடி டீனேஜராக இருந்த போது அவரது அனுமதியின்றி டேட்டிங் ஆப்பில் அவரது பெயர் மற்றும் புகைப்படங்கள் பயன்படுத்தப்படுவதை கண்டுபிடித்தார்.

டீப்ஃபேக் தொழில்நுட்பம்

டீப்ஃபேக் வீடியோக்களால் சீரழிவு

டீப்ஃபேக் ஆபாசத்தை உருவாக்குவதற்குப் பொறுப்பான நபரின் முகமூடியை அவிழ்க்க ஒரு பெண் மேற்கொண்ட முயற்சி மற்றும் மனதை உலுக்கும் பதில்.

இது பல ஆண்டுகளாக தொடர்ந்தது. 2019 இல் ஒரு முன்பின் தெரியாத நபரிடமிருந்து ஒரு ஃபேஸ்புக் செய்தியை அவர் பெற்றார். டேட்டிற்காக லண்டனில் உள்ள லிவர்பூல் ஸ்ட்ரீட் ரயில் நிலையத்தில் அவர் தன்னைச் சந்திக்க இருப்பதாக அந்த செய்தி தெரிவித்தது.

அவர் பேசிக் கொண்டிருக்கும் பெண் தான் அல்ல என்று ஜோடி அவரிடம் கூறினாள். அவள் யார் என்பது பற்றி அவருக்குத் தெரிந்திருந்தது. மேலும் ஆன்லைனில் அவளை அவர் கண்டுபிடித்ததால் தான் "பதற்றமாக" உணர்ந்ததாக ஜோடி கூறுகிறார்.

"ஜோடி" டேட்டிங் பயன்பாட்டில் பதிலளிப்பதை நிறுத்திய பிறகு அவர் அவளை பேஸ்புக்கில் கண்டுபிடித்தார்.

2020 மே மாதம் பிரிட்டனில் பொது முடக்கத்தின் போது ஜோடி ஒரு பாலியல் தொழிலாளி என்பதைக் குறிக்கும் தலைப்புகளுடன் அவரது புகைப்படங்களை வெளியிடும் பல ட்விட்டர் கணக்குகளைப் பற்றி ஒரு நண்பர் எச்சரித்தார்.

"சின்ன டீன் ஜோடியுடன் நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள்?" பிகினியில் இருக்கும் ஜோடியின் புகைப்படத்திற்கு அடுத்து இந்த தலைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. இந்த புகைப்படம் அவரது தனிப்பட்ட சமூக ஊடக கணக்கில் இருந்து எடுக்கப்பட்டது.

இந்த புகைப்படங்களை வெளியிட்ட ட்விட்டர் ஹேண்டில்கள் "ஸ்லட் எக்ஸ்போஷர்" மற்றும் "சீஃப் பெர்வ்" போன்ற பெயர்களைக் கொண்டிருந்தன.

பயன்படுத்தப்பட்ட படங்கள் அனைத்தும் அவர் தனது சமூக ஊடகத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக பகிர்ந்து கொண்டவை. வேறு யாருடனும் அவர் இவற்றை பகிர்ந்துகொண்டதில்லை.

பல்கலைக்கழகம் மற்றும் அவரது சொந்த ஊரான கேம்பிரிட்ஜில் இருந்து தனக்குத் தெரிந்த மற்ற பெண்களின் புகைப்படங்களையும் இந்த அக்கவுண்டுகள் இடுகையிடுவதை அவள் கண்டுபிடித்தாள்.

"நான் அதன் மையத்தில் இருக்கிறேன், இந்த நபர் என்னை காயப்படுத்த முயற்சிக்கிறார் என்று அந்த நேரத்தில் தனக்கு தோன்றியதாக “அவர் கூறினார்.

டீப்ஃபேக் தொழில்நுட்பம்

தப்பிக்க முயற்சி

புகைப்படங்களில் உள்ள மற்ற பெண்களை எச்சரிக்க ஜோடி அவர்களை தொடர்பு கொள்ளத் தொடங்கினார். அவரது நெருங்கிய தோழியை நாங்கள் டெய்சி என்று அழைக்கிறோம்.

"நான் மிகவும் அருவெறுப்பாக உணர்ந்தேன்," என்று டெய்சி கூறினார்.

தங்கள் புகைப்படங்களை வெளியிடும் பல ட்விட்டர் கணக்குகளை தோழிகள் இருவரும் சேர்ந்து கண்டுபிடித்தனர்.

"நாங்கள் எவ்வளவு அதிகமாகப் பார்த்தோமோ, அது அவ்வளவு மோசமாகிக் கொண்டே போனது," என்று டெய்சி கூறினார்.

அவர்களுக்கு தன் புகைப்படங்கள் எங்கிருந்து கிடைத்தன என்று அந்த ட்விட்டர் பயனர்களுக்கு டெய்சி செய்தி அனுப்பினார். அந்தப் புகைப்படங்கள் பகிரப்பட வேண்டும் என்று விரும்பும் அநாமதேய அனுப்புநர்களிடமிருந்து "பெறப்பட்டவை" என்று பதில் வந்தது.

"இது ஒரு முன்னாள் காதலர் அல்லது உங்கள் மீது கோபமாக இருக்கும் ஒருவராக இருக்கலாம்" என்று ஒரு பயனர் பதிலளித்தார்.

சமூக ஊடகங்களில் இருவரையும் பின்தொடரும் மற்றும் இருவரின் புகைப்படங்களையும் அணுகக்கூடிய எல்லா ஆண்களின் பட்டியலை டெய்சியும் ஜோடியும் உருவாக்கினர்.

அது டெய்சியின் முன்னாள் காதலனாக இருக்க வேண்டும் என்று தோழிகள் முடிவு செய்தனர். டெய்சி அவரிடம் சண்டை போட்டு அவரை ப்ளாக் செய்தார்.

சில மாதங்களுக்கு இடுகைகள் நின்றன. ஆனால் பின்னர் ஒரு அநாமதேய மின்னஞ்சல் வந்தது.

"அநாமதேயமாக இருப்பதற்கு மன்னிக்கவும். ஆனால் இந்த நபர் உங்கள் படங்களை மோசமான சப்ரெடிட்களில் இடுகையிடுவதை நான் கவனித்தேன். அது உண்மையில் பயமாக இருக்கும் என்று எனக்குத் தெரியும்.”

மின்னஞ்சல் ஸ்கிரீன்ஷாட் இவ்வாறு கூறியது: "யாரோ உங்கள் புகைப்படங்களை ஆன்லைனில் இடுகையிடுகிறார்கள்"

ஜோடி இணைப்பைக் கிளிக் செய்த போது ஆன்லைன் மன்றமான Reddit க்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு ஒரு பயனர் ஜோடி மற்றும் அவரது இரண்டு தோழிகளின் புகைப்படங்களை 1, 2 மற்றும் 3 என்று வரிசைப்படுத்தியிருந்தார்.

ஆன்லைனில் ஒரு கேமில் பங்கேற்க மற்றவர்கள் அழைக்கப்பட்டனர். இந்த பெண்களில் யாருடன் நீங்கள் உடலுறவு கொள்ள, திருமணம் செய்து கொள்ள அல்லது கொல்ல நினைக்கிறீர்கள் என்பதை தேர்வுசெய்யவும் என்று கேட்டப்பட்டிருந்தது.

பதிவின் கீழ் ஏற்கனவே 55 பேர் கருத்து தெரிவித்திருந்தனர்.

தளத்தில் பயன்படுத்தப்பட்ட புகைப்படங்கள் சமீபத்தியவை. டெய்சி தனது முன்னாள் காதலரை ப்ளாக் செய்த பிறகு வெளியிடப்பட்டவை இவை. தவறான நபர் மீது தாங்கள் குற்றம் சாட்டியிருப்பதை தோழிகள் உணர்ந்தனர்.

ஆறு வாரங்களுக்குப் பிறகு அதே மின்னஞ்சல் அனுப்பியவர் மீண்டும் தொடர்பு கொண்டார். இந்த முறை டீப்ஃபேக்குகளைப் பற்றி அவர் குறிப்பிட்டார்.

டீப்ஃபேக் தொழில்நுட்பம்

பட மூலாதாரம், Getty Images

'நம்பிக்கை துரோகம்'

பட்டியலைத் தொகுக்கும்போது ஜோடியும் டெய்சியும் தங்கள் குடும்பம் மற்றும் ஜோடியின் சிறந்த நண்பரான அலெக்ஸ் வுல்ஃப் போன்ற தாங்கள் முழுமையாக நம்பிய ஒரு சில ஆண்களை அதில் சேர்க்கவில்லை.

ஜோடியும், அலெக்ஸும் இளம் வயதில் இருந்து நெருங்கிய நண்பர்கள். அவர்கள் இருவருக்கும் கிளாசிக்கல் மியூசிக் மிகவும் பிடித்தமான ஒன்று.

தனது அனுமதியின்றி டேட்டிங் ஆப்பில் தனது பெயர் மற்றும் புகைப்படங்கள் பயன்படுத்தப்படுவதை ஜோடி கண்டுபிடித்த போது, அவர் வுல்ஃபிடம் அது பற்றிக் கூறி ஆறுதல் தேடினார்.

வுல்ஃப், கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் இசையில் இரட்டை முதல் இடத்தைப் பெற்றார். 2012 ஆம் ஆண்டின் பிபிசி இளம் இசையமைப்பாளர் விருதையும் அவர் வென்றார். 2021 இல் மாஸ்டர் மைண்டிலும் அவர் தோன்றினார்.

"அவர் (வுல்ஃப்) பெண்கள் குறிப்பாக அவர்கள் இணையத்தில் எதிர்கொள்ளும் பிரச்னைகளை அறிந்திருந்தார்," என்கிறார் ஜோடி.

”அவர் பெண்களுக்கு ஆதரவானவர் என்று உண்மையில் நான் நினைத்தேன்."

இருப்பினும் ஜோடி டீப்ஃபேக் ஆபாச புகைப்படங்களைப் பார்த்தபோது ஒரு படத்தில் கேம்பிரிட்ஜ் கிங்ஸ் கல்லூரியின் படத்துடன் அவரது ப்ரொஃபைல் புகைப்படம் இருந்தது.

அது எடுக்கப்பட்ட நாள் ஜோடிக்கு தெளிவாக நினைவில் இருந்தது. மேலும் வுல்ஃபும் அந்த புகைப்படத்தில் இருந்தார். இந்தப் படத்தை பகிர்ந்து கொண்ட ஒரே நபர் அவர்தான் என்று ஜோடி உணர்ந்தார்.

ஜோடியின் அசல் புகைப்படங்களை டீப்ஃபேக்குகளாக மாற்றுவதற்கு ஈடாக அவற்றைப் பகிர முன்வந்தவர் வுல்ஃப்.

"அது என் வாழ்க்கையை எவ்வளவு ஆழமாக பாதிக்கிறது என்பதை அவர் அறிந்திருந்தார். ஆனாலும் அவர் அதை செய்தார்," என்றார் ஜோடி.

டீப்ஃபேக் தொழில்நுட்பம்

பட மூலாதாரம், Getty Images

'நான் மிகவும் வெட்கப்படுகிறேன்'

26 வயதான வுல்ஃப், ஜோடி உட்பட 15 பெண்களின் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் இருந்து எடுத்து ஆபாச இணையதளங்களில் பதிவேற்றியதற்காக 2021 ஆகஸ்டில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டார்.

அவருக்கு 20 வார சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். மேலும் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் இழப்பீடாக 100 பவுண்டுகள் வழங்கவும் உத்தரவிடப்பட்டது.

”என் நடத்தை குறித்து நான் "மிகவும் வெட்கப்படுகிறேன்", என் செயல்களுக்காக "ஆழமாக வருந்துகிறேன்" என்று வுல்ஃப் பிபிசியிடம் கூறினார்.

"நான் அளித்த மன வருத்தம் பற்றி ஒவ்வொரு நாளும் நான் சிந்திக்கிறேன். என் வாழ்நாள் முழுவதும் நான் அதைச்செய்வேன் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை," என்று அவர் கூறுகிறார்.

"நான் செய்ததற்கு எனக்கு மன்னிப்பே இல்லை. அந்த நேரத்தில் நான் ஏன் இவ்வளவு இழிவாக செயல்பட்டேன் என்பதை என்னால் விளக்க முடியவில்லை."

தான் குற்றம்சாட்டப்பட்ட நிகழ்வுகளுக்கு முன்பு நடந்த ஜோடியின் துன்புறுத்தலுடன் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று வுல்ஃப் கூறுகிறார்.

தன்னுடைய நண்பர் செய்திருப்பது "நம்பிக்கை துரோகம் மற்றும் அவமானம்" என்கிறார் ஜோடி.

"எங்களுக்கு இடையே நடந்த உரையாடலை நான் மீண்டும் நினைவுபடுத்தி பார்க்கிறேன். அவர் என்னை ஆறுதல்படுத்தினார், எனக்கு ஆதரவளித்தார் மற்றும் என்னிடம் அன்பாக இருந்தார். அது எல்லாமே பொய்."

இந்த இடுகை தொடர்பாக நாங்கள் எக்ஸ் தளத்தை( முன்பு ட்விட்டர்) மற்றும் ரெட்டிட்டை தொடர்புகொண்டோம். X பதிலளிக்கவில்லை. ஆனால், "Non-consensual intimate media (NCIM)க்கு Reddit தளத்தில் இடமில்லை. கேள்விக்குரிய subreddit தடைசெய்யப்பட்டுள்ளது. ஆபாச தளமும் அகற்றப்பட்ட்டுவிட்டது,” என்று ஒரு Reddit செய்தித் தொடர்பாளர் கூறினார்.

2023 அக்டோபரில் ஆன்லைன் பாதுகாப்பு மசோதாவின் கீழ் டீப்ஃபேக் ஆபாசத்தைப் பகிர்வது கிரிமினல் குற்றமாக மாறியது.

ஆன்லைனில் ஆயிரக்கணக்கான டீப்ஃபேக் வீடியோக்கள் உள்ளன. இவற்றில் 98 சதவிகித வீடியோக்கள் ஆபாசப் படங்கள் என்று சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இருப்பினும், டீப்ஃபேக்குகளை உருவாக்குமாறு மற்றவர்களைக் கேட்ட நபரை புதிய சட்டம் குற்றவாளியாக்கவில்லை என்பதில் ஜோடிக்கு கோபம் உள்ளது. அதைத்தான் அலெக்ஸ் வுல்ஃப் செய்தார். டீப்ஃபேக்குகளை உருவாக்குவதும் சட்டவிரோதமானது அல்ல.

"ஆயிரக்கணக்கான பெண்கள் இதனால் பாதிக்கப்படுகிறார்கள். மக்கள் இதைச் செய்வதைத் தடுக்க சரியான சட்டங்களையும் கருவிகளையும் நாம் உருவாக்க வேண்டும்," என்று அவர் கூறுகிறார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)