கூகுள், அமேசான் போன்ற பெரு நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டினாலும் ஆள் குறைப்பு செய்வது ஏன்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், கிறிஸ்டினா ஜெ.ஆர்காஸ்
- பதவி, பிபிசி நியூஸ்
பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் இதுவரை இல்லாத அளவிலான லாபங்களை ஈட்டிய போதிலும் ஆள் குறைப்பு ஏன் தொடர்கதையாக உள்ளது?
அமெரிக்க பங்குச் சந்தைகளை தீர்மானிக்கக் கூடியவை அந்த பெரு நிறுவனங்கள். வால் ஸ்ட்ரீட்டின் செல்ல நண்பர்கள். "மேக்னிஃபிசென்ட் 7" என்று அழைக்கப்படும் குழுவில் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்களின் விற்பனையும் லாபமும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அவர்களின் மதிப்பும் கூட அதிகரிக்கின்றன.
பிற துறையில் உள்ள நிறுவனங்களை விட, இந்த ஆண்டு 12% அதிகமாகவும், 2025 -ல் மற்றொரு 12% அதிகமாகவும் அவர்களின் விற்பனை இருக்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
கூகுளின் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட், ஆப்பிள், அமேசான், மெடா மற்றும் மைக்ரோசாஃப்ட் ஆகியவை கூட்டாக சுமார் 327 பில்லியன் டாலர் சம்பாதித்தன. இது கடந்த ஆண்டை விட 25.6% அதிகமாகும். இது, கொலம்பியா அல்லது சிலி நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை ஒத்ததாகும்.
எனினும்கூட, டெஸ்லா மற்றும் என்விடியா ஆகியவற்றை உள்ளடக்கிய "மேக்னிஃபிசென்ட் 7" என்ற பிரத்யேக குழு, அதிக அளவிலான ஆட்குறைப்புகளை மேற்கொண்டு வருகின்றது. கடந்த ஆண்டும் இதே போன்ற ஆட்குறைப்பு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
ஜூலை 2023 மைக்ரோசாஃப்ட் தனது பணியாளர்களைக் குறைத்தது. Activision Blizzard ஐ $69 பில்லியனுக்கு வாங்குவதற்கான ஒப்பந்தத்தை முடிவு செய்த பிறகு, 2024 -ல் மேலும் 1,900 பேர் பணிநீக்கம் செய்யவுள்ளது.
அமேசான் நிறுவனத்திலும் இதேநிலை தான். கடந்த ஆண்டில் 9,000 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து, அதன் ட்விச் இயங்குதளத்தின் 35% பணியாளர்களையும், அமேசான் பிரைம்-ல் பணிபுரியும் 100 பேரையும் பணி நீக்கம் செய்யவுள்ளது.
அதுபோதாதென்று, இந்த பிரத்யேக குழுவில் மேலும் பல சிறிய நிறுவனங்கள் இணைந்துள்ளன. மொத்தத்தில், இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து ஒரே மாதத்தில் 122 தொழில்நுட்ப நிறுவனங்களில் இருந்து கிட்டத்தட்ட 32,000 தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த தகவல் ராய்ட்டர்ஸ் பத்திரிகையால் மேற்கோள் காட்டப்பட்ட Layoffs.fyi என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் இன்னும் 11 மாதங்கள் மீதம் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

பட மூலாதாரம், Getty Images
முன்னணி நிறுவனங்களில் எவ்வளவு ஆட்குறைப்பு?
இந்த ஆண்டு PayPal நிறுவனத்தில் 2,500 பணியாளர்களும் , Spotify நிறுவனத்தில் 1,500 பணியாளர்களும், eBay நிறுவனத்தில் 1,000 பணியாளர்களும், Snapchat நிறுவனத்தில் 500 பணியாளர்களும் நீக்கப்படவுள்ளனர். தொழில்நுட்பத் துறையில் நன்கு அறியப்பட்ட நிறுவனங்களின் நிலை இதுவே.
2000-ம் ஆண்டு மற்றும் அதற்கு அடுத்த ஓரிரு ஆண்டுகளில், இணையத்தின் எழுச்சி டாட்-காம் பபிளுக்கு வழிவகுத்தது. (இணையவழி நிறுவனங்களில் செய்யப்பட்ட அதிக முதலீடுகள் காரணமாக, பங்குச்சந்தை மதிப்புகள் அபரிமிதமாக உயர்ந்தன. இதுவே டாட்-காம் பபிள் (dotcom bubble) என்றழைக்கப்படுகிறது. )
தற்போது நடைபெறும் ஆட்குறைப்பை டாட்காம் பபிளுடன் பலர் ஒப்பிட்டு வருகின்றனர்.
பிரபல நிதி நிறுவனமான ஜூலியஸ் பேயரின் தலைமை ஆய்வாளரான மாத்தியூ ராச்சேட்டரைப் பொறுத்தவரை, இந்த ஒப்பீடு சரியல்ல. ஏனெனில், ‘மெகா கேப்’ எனப்படும் நிறுவனங்களின் (200 பில்லியன் டாலருக்கும் அதிகமான சந்தை மதிப்பை கொண்ட நிறுவனங்கள்) பங்குகளின் மதிப்பு இன்னும் 2000 களின் நிலையை அடையவில்லை என்கிறார். "மேக்னிஃபிசென்ட் 7" நிறுவனங்கள் அதிக வருவாய் ஈட்டக்கூடியவை என்றும், இது சிக்கல்கள் ஏற்பட்டால் உதவும் என்று பேயர் கூறுகிறார்.
எனவே இந்த இரண்டாவது அலை ஆட்குறைப்பின் பின்னணி என்ன? முக்கியமான 3 காரணங்கள் பார்க்கலாம்.

பட மூலாதாரம், Getty Images
1. செயற்கை நுண்ணறிவு மற்றும் மூலோபாய மாற்றங்கள்
"தொழில்நுட்பத் துறையின் வரலாற்றில் பெரிய நிறுவனங்களின் எழுச்சி மற்றும் வீழ்ச்சி, அந்த துறையில் ஏற்படும் மாற்றங்கள், மற்றும் அடுத்த தலைமுறை நிறுவனங்களின் புதுமையான முயற்சிகள் காரணமாக ஏற்படும்”என்று முதலீட்டு ஆலோசனைகள் வழங்கும், ODDO BHF AM நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு மேலாளர் பிரைஸ் ப்ருனாஸ் கூறுகிறார்.
டாட்காம் பபிளின் போது இதுதான் நடைபெற்றது. இந்த தசாப்தத்தில், செயற்கை நுண்ணறிவு (AI) மாதிரிகளின் வளர்ச்சி ஒரு புரட்சியாகும்.
"உதாரணத்திற்கு மொழி சார்ந்த நிறுவனமான டியோலிங்கோவை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களில் சிலர் எழுத்தாளர்கள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்கள். அவர்களுக்கு பதிலாக செயற்கை நுண்ணறிவு செயல்முறைகள் பயன்படுத்தப்படும்" என்று குவார்க் வலைத்தளம் விளக்குகிறது.
செயற்கை நுண்ணறிவு வேகமாக செயல்படக் கூடியது. ஒருவர் 60 முதல் 90 நிமிடங்களில் எழுதுவதை, செயற்கை நுண்ணறிவு 10 நிமிடங்கள் அல்லது அதற்கும் குறைவான நேரத்தில் எழுதி முடிக்கும்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், கோல்ட்மேன் சாக்ஸ் அறிக்கை ஒன்று, செயற்கை நுண்ணறிவு 30 கோடி முழுநேர வேலைகளுக்கு சமமான வேலைகளை செய்யக்கூடும் என்று கூறியது .
"நாங்கள் அதை 2000 களின் டாட்காம் பபிளின் போது பார்த்தோம். இடையூறுகள் எப்போதும் நிறுவனங்கள் தங்களை மறுகட்டமைக்க வழிவகுக்கின்றன" என்று eToro -ன் மூத்த சந்தை ஆய்வாளர் ஜேவியர் மோலினா கூறுகிறார்.
"ஒருபுறம், நிறுவனத்தின் உத்தியில் சில மாற்றங்கள் ஏற்படுவதையும், சில துறைகள் மூடப்படுவதையும் காண முடியும். மறுபுறம், செயற்கை நுண்ணறிவை நோக்கிய ஒரு நகர்வையும் காண்கிறோம். இது பல பணியிடங்கள் காணாமல் போவதற்கு காரணமாகிறது"என்கிறார் மோலினா.

பட மூலாதாரம், Getty Images
2. 2022-ன் நினைவும் பாடங்களும்
2023 ஆம் ஆண்டில் தொழில்நுட்பத் துறை 1,68,032 பேரை பணிநீக்கம் செய்தது. பிற துறைகளை ஒப்பிடும் போது, அதிக எண்ணிக்கையிலான ஆட்குறைப்பு தொழில்நுட்பத் துறையிலேயே நடைபெற்றது என்று சேலஞ்சர், கிரே & கிறிஸ்துமஸ் என்ற நிறுவனம் கூறுகிறது.
கொரோனா பெருந்தொதொற்று காலத்தில், பல சிலிகான் பள்ளத்தாக்கு நிறுவனங்கள் ஆள் சேர்ப்பை அதிகரித்து, காற்று தொடர்ந்து தங்களுக்கு சாதகமாக வீசும் என்ற எண்ணத்துடன் தங்கள் வளர்ச்சித் திட்டங்களை விரிவுபடுத்தின. ஆனால் நிலைமைகள் மாறிய போது, 2022-ம் மற்றும் 2023-ம் ஆண்டில் ஆள் குறைப்பு தொடங்கின.
புதிய திட்டங்கள் தொடங்கப்படாமல் போனதற்கு மற்றொரு காரணம், பணவீக்கத்திற்கு பதிலளிக்கும் விதமாக அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்தியதே.
பல தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஆரம்ப நிலையில், நிறைய மூலதனம் தேவைப்படும். ஆனால், கடன் வாங்குவது இப்போது அதீத செலவினமாக மாறிவிட்டது.
"சமீபத்திய வட்டி விகித உயர்வுகள் பல திட்டங்களை பாதித்துள்ளன. கடந்த காலங்களில் இந்த திட்டங்களில் முதலீடு செய்து, பின்னர் வளரவும் லாபத்தை அடையவும் முடியும்" என்று ஏ & ஜி நிதிகளில் டிஐபி மதிப்பு நிதியின் மேலாளர் ஆண்ட்ரேஸ் அலெண்டே கூறுகிறார்.
"கடன் பெறுவது சிரமமானதால், முதலீடுகள் மிகவும் குறைந்துவிட்டன. இதனால் தொழில்நுட்ப திட்டங்கள் மேலும் முடங்கியுள்ளன "என்று அவர் மேலும் கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
3. தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சிப் பாதை
200 பில்லியன் டாலருக்கும் அதிகமான சந்தை மதிப்பை கொண்ட ‘மெகா கேப்’ எனப்படும் நிறுவனங்கள் கூட, அதிக லாபம் என்ற முதலீட்டாளர்களின் கோரிக்கையை பூர்த்தி செய்ய செலவுகளை குறைத்துக் கொள்கின்றன.
ஆனால் உண்மை என்னவென்றால், "தொழில்நுட்பத் துறையின் சுழற்சி பொதுவாக அப்படி தான் இருக்கும். திடீரென, ஆனால் வேகமாகவும், இருக்கும். விரைவில், இந்த நிறுவனங்கள் மற்றும் அதன் திட்டங்கள் மாற்றியமைத்து மீண்டும் புதுப்பிக்கப்படும். இதில் தப்பிப் பிழைப்பவை மீண்டும் மிகப்பெரிய வாய்ப்புகளை பெறலாம்." என்று அலண்டே விளக்குகிறார்.
புதிய சுழற்சிக்கான அறிகுறிகள் ஏற்கெனவே காண தொடங்கி விட்டன. இந்த சுழற்சி ஏற்படும் வரை தொழில்நுட்பத் துறையில் உள்ள சிரமங்கள் பிற துறைகளின் நுகர்வு மற்றும் முதலீட்டில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
சிறிய நிறுவனங்களில் உள்ள நிலைமகளையும் பெரிய நிறுவனங்களின் நிலைமைகலையும் ஒரே தட்டில் வைத்து பார்க்கக் கூடாது என்று நிபுணர்கள் ஒப்புக் கொள்கின்றனர். சிறிய நிறுவனங்களில் தங்கள் இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்காக சில முடிவுகள் எடுக்கப்படும். பெரிய அளவிலான மூலதனத்தைக் கொண்டு சிரமங்களை சமாளிக்கக் கூடிய பெரிய நிறுவனங்களின் முடிவுகளை சிறிய நிறுவனங்களுடன் ஒப்பிட முடியாது என்று கூறுகின்றனர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












