அமெரிக்காவில் பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்ட நபர் 2 மாதங்களில் உயிரிழப்பு - என்ன காரணம்?

பட மூலாதாரம், Massachussets General Hospital
- எழுதியவர், நதீன் யூசிஃப்
- பதவி, பிபிசி செய்திகள்
மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்ட உலகின் முதல் நபர், அடுத்த 2 மாதங்களில் உயிரிழந்துள்ளார்.
62 வயதான ரிச்சர்ட் 'ரிக்' ஸ்லேமேன் என்ற அந்த நபருக்கு மசாசூசெட்ஸ் பொது மருத்துவமனையில் கடந்த மார்ச் மாதம் மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்டது. இந்த சிறுநீரகம் குறைந்தபட்சம் 2 ஆண்டுகளாவது சிறப்பாக வேலை செய்யும் என்று மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்திருந்தனர்.
அந்த மருத்துவர்கள் குழு தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், ஸ்லேமேன் மரணம் குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது. அவரது குடும்பத்தினருக்கும் மருத்துவர்கள் குழு ஆறுதல் தெரிவித்துள்ளது. அத்துடன், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை காரணமாகவே ஸ்லேமேன் இறந்தார் என்பதற்கான எந்தவொரு அறிகுறிகளும் தென்படவில்லை என்று அவர்கள் கூறியுள்ளனர்.
ஸ்லேமேன் குடும்பத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவர்கள் குழுவுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். அவர்களது அளவற்ற அர்ப்பணிப்பும், முயற்சிகளுமே ரிக்குடன் மேலும் 7 வார காலத்தை தங்களால் செலவழிக்க முடிந்தது என்று அந்த அறிக்கையில் அவர்கள் கூறியுள்ளனர்.
மார்ச் மாதம் அறுவை சிகிச்சை
உலகில் முதன்முறையாக பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்ட நபர், ஏப்ரல் 2-ம் தேதி சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். 62 வயதான அந்த நபருக்கு, மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகம், அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டது.
அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் பொது மருத்துவமனையில் (MGH) இரண்டு வாரங்களாக அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவ உலகில் புதிய சாதனையாக இந்த சிகிச்சை கருதப்படுகிறது.
பன்றி சிறுநீரகம் வெற்றிகரமாக பொருத்தம்
மருத்துவமனை வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில், மாசசூசெட்ஸ் மாகாணத்தின் வெய்மவுத் பகுதியைச் சேர்ந்த ரிச்சர்ட் ‘ரிக்’ ஸ்லேமன் என்பவர், மிகத் தீவிரமான சிறுநீரக நோயுடன் போராடி வந்ததாகத் தெரிவித்தது. அவருக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தேவைப்பட்டதாகவும் மருத்துவமனையின் செய்திக்குறிப்பு கூறியது.
ஸ்லேமனின் மருத்துவர்கள் கடந்த மார்ச் 16ஆம் தேதி நான்கு மணிநேர அறுவை சிகிச்சையின் மூலம் மரபணு மாற்றப்பட்ட பன்றி சிறுநீரகத்தை அவரது உடலில் வெற்றிகரமாகப் பொருத்தினர்.
ஸ்லேமனின் சிறுநீரகம் இப்போது நன்றாகச் செயல்பட்டு வருவதாகவும், அவருக்கு இப்போது டயாலிசிஸ் செயல்முறை நிறுத்தப்பட்டு விட்டதாகவும் மருத்துவமனையின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஸ்லேமன் வெளியிட்டிருந்த ஓர் அறிக்கையில், மருத்துவமனையில் இருந்து வெளியேறி வீட்டிற்குச் செல்வது தனது வாழ்க்கையின் ‘மகிழ்ச்சியான தருணங்களில் ஒன்று’ என்று கூறினார்.
‘இது ஆயிரக்கணக்கான மக்களுக்கு நம்பிக்கை தரும்’

பட மூலாதாரம், Getty Images
அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஸ்லேமன் வெளியிட்டிருந்த அறிக்கையில், "பல ஆண்டுகளாக எனது வாழ்க்கையை பாதித்த டயாலிசிஸ் சுமையில் இருந்து விடுபட்டு, எனது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அன்புக்குரியவர்களுடன் நேரத்தைச் செலவிவிடப் போவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்," என்றார்.
கடந்த 2018ஆம் ஆண்டு, இறந்த ஒருவருடைய சிறுநீரகம், ஸ்லேமனுக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டது. ஆனால், அது கடந்த ஆண்டு தோல்வியடையத் துவங்கியது.
அதன்பிறகு மருத்துவர்கள் பன்றியின் சிறுநீரகத்தை அவருக்குப் பொருத்தும் யோசனையை முன்வைத்தனர்.
"என் ஒருவனுக்கு உதவுவதற்கான வழி மட்டுமல்ல. உயிர் வாழ்வதற்கு மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு நம்பிக்கையை வழங்கும் ஒரு வழியாகவும் நான் இதைப் பார்க்கிறேன்," என்று அவர் தனது அறிக்கையில் கூறியிருந்தார்.
இரண்டாவது சாதனை

பட மூலாதாரம், Massachussets General Hospital
ஸ்லேமேனுக்கு பொருத்தப்பட்டுள்ள புதிய பன்றி சிறுநீரகம், கேம்பிரிட்ஜ் நகரில் இருக்கும் மருந்து நிறுவனமான இஜெனிசிஸ்(eGenesis) நிறுவனம், மரபணு முறையில் மாற்றியமைத்தது. அதில் ‘தீங்கு விளைவிக்கும் பன்றி மரபணுக்களை அகற்றி, மனிதர்களுடன் அதன் இணப்பதற்கான தன்மையை மேம்படுத்த சில மனித மரபணுக்கள் சேர்க்கப்பட்டன,’ என்று அந்நிறுவனம் கூறியது.
இதே மாசசூசெட்ஸ் பொது மருத்துவமனைதான் 1954ஆம் ஆண்டு, உலகின் முதல் வெற்றிகரமான மனித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை – சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை – மேற்கொண்டது.
மேலும், கடந்த ஐந்து ஆண்டுகளில் இஜெனிசிஸ் நிறுவனத்துடன் இணைந்து விலங்குகளின் உறுப்பை மனிதர்களுக்குப் பொருத்துவதற்கான (xenotransplantation) ஆராய்ச்சியையும் இம்மருத்துவமனை மேற்கொண்டது.
இவற்றில் இருந்து கிடைக்கப்பெற்ற அறிவையும் திறனையும் பயன்படுத்தி இந்த அறுவை சிகிச்சையைச் செய்து முடித்திருப்பதாக மருத்துவமனை தெரிவித்திருக்கிறது.
‘சிறுநீரகச் செயலிழப்புக்கு சிறந்த தீர்வு’
இந்தச் செயல்முறைக்கு, அமெரிக்காவின் தேசிய உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ஒப்புதல் அளித்தது. அந்த அமைப்பின் அதிகாரிகள், மிகத் தீவிரமான நோய்களால் அவதிப்படும் நபர்களுக்குக் கருணை அடிப்படையில் பரிசோதனை முறை சிகிச்சைகள் அளிப்பதற்கான அனுமதியை வழங்கினர்.
இந்த சிகிச்சையை மேற்கொண்ட மருத்துவர்கள் குழு, இதை ஒரு வரலாற்றுச் சாதனை என்று குறிப்பிட்டது. மேலும், இது உலகம் முழுவதும் நிலவி வரும் மாற்று அறுவை சிகிச்சைக்கான மாற்று உறுப்புகளின் தட்டுப்பாட்டைத் தீர்க்கும் வழியை வழங்கும் என்றும் கூறுகிறது. முக்கியமாக, சிறுமான்மை இனங்களைச் சேர்ந்த மக்களுக்கு மாற்று உறுப்புகள் கிடைப்பதில் நிலவி வரும் ஏற்றத்தாழ்வுகளையும் இது தீர்க்கும் என்று அக்குழு தெரிவித்தது.
ஸ்லேமனுக்கு சிகிச்சையளித்த மாசசூசெட்ஸ் பொது மருத்துவமனையின் மருத்துவர் வின்ஃப்ரெட் வில்லியம்ஸ், இந்தத் தொழில்நுட்ப முன்னேற்றத்தின் மூலம் கிடைக்கப்பெறும் அதிகப்படியான மாற்று உறுப்புகள், ‘அனைவருக்கும் சமமான மருத்துவமும் ஆரோக்கியமும் கிடைப்பதற்கான வழிவகையைச் செய்யும்’ என்று தெரிவித்தார்.
“இது சிறுநீரக செயலிழப்புக்கு ஆகச் சிறந்த தீர்வான, நன்கு வேலை செய்யும் ஒரு மாற்று சிறுநீரகத்தை, தேவைப்படும் அனைவருக்கும் வழங்கும்,” என்று மருத்துவர் வில்லியம்ஸ் கூறினார்.
தோல்வியடைந்த பன்றி இதய மாற்று அறுவை சிகிச்சைகள்

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்கத் தன்னார்வ நிறுவனமான ‘Network for Organ Sharing’ அமைப்பின் தரவுகள்படி, ஒரு லட்சத்துக்கும் அதிகமான அமெரிக்க மக்களுக்கு உயிர்காக்கும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது.
ஆனால் 2023ஆம் ஆண்டு, இந்த மாற்று உறுப்புகளை தானமாகக் கொடுக்கக் கூடியவர்கள் – உயிருடன் இருப்பவர்கள் மற்றும் இறந்தவர்களைச் சேர்த்து – 23,500 பேருக்கும் குறைவாக இருப்பதாக அத்தரவுகள் தெரிவிக்கின்றன.
மேலும், ஒவ்வொரு நாளும் அமெரிக்காவில் மாற்று உறுப்புக்காகக் காத்திருக்கும் 17 பேர் உயிரிழப்பதாகக் கணக்கிடப்பட்டிருக்கிறது. மிகப் பரவலாகத் தேவைப்படும் உறுப்பு சிறிநீரகம்தான்.
பன்றியின் சிறுநீரகம் மனித உடலில் பொருத்தப்படுவது இது முதல்முறை என்றாலும், பன்றியின் ஒரு உறுப்பு மனித உடலில் பொருத்தப்படுவது இது முதல்முறையல்ல.
இதற்குமுன், இரண்டு பேருக்கு பன்றியின் இதயம் பொருத்தப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த அறுவை சிகிச்சைகள் தோல்வியடைந்தன. அந்த இருவரும் சிகிச்சை முடிந்து சில வாரங்களிலேயே உயிரிழந்தனர்.
அவர்களில் ஒரு நபருக்கு, அவரது நோய் எதிர்ப்பு அமைப்பு அந்த இதயத்தை ஏற்றுக்கொள்ளாதாதற்கான அறிகுறிகள் தென்பட்டன. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளில் இது பொதுவாக நிகழும் ஒரு சிக்கலாகும்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












