தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களுக்கு கள்ளக்கடல் சீற்ற எச்சரிக்கை - இதற்கும் சுனாமிக்கும் என்ன ஒற்றுமை?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சிராஜ்
- பதவி, பிபிசி தமிழ்
கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய நான்கு மாவட்டங்களில் கள்ளக் கடல் நிகழ்வுக்கான எச்சரிக்கை நாளை இரவு 11.30 வரை விடுக்கப்பட்டுள்ளது
கன்னியாகுமரியில் கடல் அலை 2.3 மீட்டர் முதல் 2.6 மீட்டர் வரை எழுக்கூடும். ராமநாதபுரம் மாவட்டத்தில் 2.7 முதல் 3 மீட்டர் வரை கடல் எழுக்கூடும் எனவும், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் 2.4 முதல் 2.7 மீட்டர் வரை கடல் அலை எழும் என இந்திய கடல்சார் தகவல் மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் அண்டை மாநிலமான கேரளாவில் சில கடற்கரையோரப் பகுதிகளுக்கும் கள்ளக்கடல் நிகழ்வுக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
கள்ளக்கடல் சீற்றம் என்றால் என்ன? இதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன? எச்சரிக்கை விடுக்கப்பட்டும் உயிரிழப்புகள் ஏற்பட்டது எப்படி?

கள்ளக்கடல் சீற்றம் (Swell Surge)
2012ஆம் ஆண்டில், ‘கள்ளக்கடல்’ என்ற சொல் ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பின் (யுனெஸ்கோ) முறையான ஒப்புதலைப் பெற்றது.
“கள்ளக்கடல் என்ற சொல் மலையாளத்திலிருந்து பெறப்பட்டது. 'கள்ளன் + கடல்', கள்ளன் என்றால் திருடன். திருடன் போல எந்தவித சத்தமும், முன்னறிவிப்பும் இல்லாமல் மக்கள் வசிக்கும் கரையோரப் பகுதிகளில் கொந்தளிப்புடன் நுழையும் கடல் நீர் என்ற அர்த்தத்தில் இந்த பெயர் வைக்கப்பட்டது” என்கிறார் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன்.
தொடர்ந்து பேசிய அவர், “கள்ளக்கடல் சீற்றம் குறித்து தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையத்துடன் இணைந்து வானிலை ஆய்வு மையம் மூலமாக பல எச்சரிக்கைகளை விடுத்து வந்தோம்.
பொதுவாக கடல் சீற்றம் மூன்று வகையில் ஏற்படும், ஒன்று கடலில் ஏற்படும் நிலநடுக்கம் போன்ற நிகழ்வுகளால் ஏற்படுவது, இரண்டாவது காற்றழுத்த தாழ்வு நிலை, புயல் காரணமாக ஏற்படுவது, மூன்றாவது எங்கோ தொலைதூரத்தில் வீசும் சூறாவளிகள் அல்லது பலத்த காற்றின் ஆற்றலால் உண்டாகும் அலைகள் அதே வேகத்தோடு கரையை நோக்கிச் செல்லும், மூன்றாவது வகையே கள்ளக்கடல்” என்று கூறினார்.
கள்ளக்கடல் சீற்றம் எதனால் ஏற்படுகிறது?

“கடற்கரையோரம் வாழும் மக்கள் சாதாரண கடல் சீற்றத்தையும் கள்ளக்கடல் சீற்றத்தையும் ஒன்று என நினைக்கிறார்கள். இந்த கள்ளக்கடல் சீற்றம் என்பது பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் உருவாகும் ஒரு ஆற்றல் கடல் அலைகள் மூலமாகப் பயணித்து பெரும் வேகத்துடன் கரையை அடைவது” என்கிறார் டாக்டர் வி.எஸ்.சந்திரசேகரன்.
இவர் மத்திய உவர்நீர் மீன் வளர்ப்புக் கழகத்தில் முதன்மை விஞ்ஞானியாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
தொடர்ந்து பேசிய அவர், “அவ்வாறு பெரும் ஆற்றலோடும் வேகத்தோடும் கரையை அடையும் அலைகள் மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தும். இந்த அலைகளில் மண், வண்டல் அதிகமாக இருக்கும். எனவே இத்தகைய கள்ளக்கடல் அலைகளில் நீச்சல் தெரிந்தவர்கள் சிக்கிக்கொண்டால் கூட தப்பிப்பது கடினம்.
காரணம் அந்த அலைகளில் சிக்கியவர்களின் நுரையீரலில் இந்த மண் மற்றும் வண்டல் நிறைந்து மூச்சுத்திணறி இறந்துவிடுவார்கள். அது மட்டுமல்லாது பெரும் வேகத்தோடும், ஆற்றலோடும் இந்த அலைகள் இருப்பதால் இதில் சிக்கியவர்கள் கரைகளில் இருக்கும் பாறைகளில் மோதி உயிரிழக்கவும் வாய்ப்புகள் உண்டு” என்கிறார்.
சுனாமி - கள்ளக்கடல் சீற்றம் என்ன ஒற்றுமை?

“சுனாமி என்பது கடலுக்குள் ஏற்படும் பூகம்பத்தால் நிகழ்வது. அவ்வாறு கடலுக்குள் பூகம்பம் ஏற்படும் போது ராட்சத அலைகள் தோன்றி அவை கரையை நோக்கி நகரும். ஆனால் இந்த கள்ளக்கடல் சீற்றத்தில் காற்றிலிருந்து அலைகளுக்கு கடத்தப்படும் ஆற்றல் மட்டுமே பல ஆயிரம் கிலோமீட்டர்களுக்கு பயணம் செய்யும்.
இதனால் கரையை நெருங்கும்போது போது தான் பெரும் அலைகள் தோன்றும், அதுவரை இந்த ஆற்றல் அலைகள் மூலம் பயணிப்பது வெளியே தெரியாது. அதனால் தான் கள்ளக்கடலில் திடீரென எந்த ஆரவாரமும் இல்லாமல் கடல் கொந்தளிப்பு ஏற்படுகிறது” என்று கூறுகிறார் டாக்டர் வி.எஸ்.சந்திரசேகரன்.
“சுனாமிக்கும் இந்த கள்ளக்கடல் அலைகளுக்கும் இருக்கும் ஒரு ஒற்றுமை என்னவென்றால், இரண்டுமே அதிகளவு கடல் மணலையும் வண்டலையும் சுமந்து வரும். கரையைத் தாண்டி அதிக தூரத்திற்கு அலைகள் செல்லும். இதனால் கூட சில சமயங்களில் சுனாமியும் கள்ளக்கடல் சீற்றமும் ஒன்று எனப் புரிந்துகொள்ளப்படும்” என்று கூறினார் அவர்.
மீனவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்

கள்ளக்கடல் சீற்றத்தால் அதிகம் பாதிக்கப்படுவது மீனவர்கள் தான் என்றும் ஆனால் அரசு கள்ளக்கடல் சீற்றம் குறித்து போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாமல் மெத்தனம் காட்டியதால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன என்கிறார் சமூக ஆய்வாளர் ஜோன்ஸ் தாமஸ்.
“கள்ளக்கடல் சீற்றம் ஒவ்வொரு வருடமும் கோடைகாலத்தில் நடக்கும் நிகழ்வு தான், ஆனால் இந்தமுறை தான் ‘ரெட் அலர்ட்’ கொடுக்கும் அளவுக்கு தீவிரமாக உள்ளது. மேற்கு கடற்கரைப் பகுதியில் கன்னியாகுமரி அமைந்திருப்பதால், இந்த பகுதி சற்று தாழ்வாக இருக்கும். இதனால் அலைகள் வழக்கமாகவே சற்று ஆக்ரோஷத்துடன் தான் வரும்.
இதனால் அதிகம் பாதிக்கப்படுவது மீனவர்கள் தான். கடந்த முறை குமரி மீனவர்களின் வீடுகளுக்குள் புகுந்த கடல் அலைகள், பல அடிகளுக்கு கடல் மண்ணை அப்படியே விட்டுச் சென்றன. இதனால் அவர்களுக்கு பொருளாதார ரீதியில் மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டது.” என்கிறார் ஜோன்ஸ்.
தொடர்ந்து பேசிய அவர், “கடந்த சில நாட்களாகவே கள்ளக்கடல் சீற்றம் குறித்த எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டும், கடற்கரைகளில் முறையான பாதுகாப்பு வசதிகள் செய்யப்படாததால் தான் இத்தனை உயிரிழப்புகள். மீனவர்களின் வீடுகளுக்குள் தொடர்ந்து கடல் நீர் வருவதை அரசு நிர்வாகம் வேடிக்கை பார்த்தவாறே தான் இருந்தது. இந்த முறையும் அது போல கடல் நீர் வீடுகளுக்குள் புகும் அவ்வளவு தானே என நினைத்து இருந்துவிட்டார்கள்” என்று குற்றம் சாட்டுகிறார் சமூக ஆய்வாளர் ஜோன்ஸ் தாமஸ்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












