மூன்று இந்தியர்கள் கைதால் கனடா - இந்தியா உறவில் மீண்டும் பதற்றம் - என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், Getty Images
கனடாவில் காலிஸ்தான் ஆதரவு தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட வழக்கில் மூன்று இந்தியர்கள் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே மீண்டும் ஒரு பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.
இந்த கைது குறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, "கனடா வலுவான மற்றும் சுதந்திரமான நீதி அமைப்பைக் கொண்ட நாடு," என்று கூறியுள்ளார்.
மேலும் அவர், கனடா தனது குடிமக்களின் பாதுகாப்பிற்கு உறுதியளிக்கும் `சட்டப்பூர்வமான நாடு` என்று அவர் கூறினார்.
2023-ஆம் ஆண்டு, ஜூன் 18-ஆம் தேதி அன்று, கனடிய குடிமகன் ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கனடாவில் இருக்கும் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் உள்ள ஒரு குருத்வாரா முன் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த வழக்கில், கனடாவின் எட்மண்டன் நகரில் வசிக்கும் இந்தியக் குடிமக்களான 22 வயது கரண் ப்ரார், 22 வயது கமல்ப்ரீத் சிங் மற்றும் 28 வயது கரன்ப்ரீத் சிங் ஆகியோர் முதல் நிலை கொலை மற்றும் கொலை செய்ய சதி செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் வெள்ளிக்கிழமை (மே 3) கைது செய்யப்பட்டனர்.
சனிக்கிழமையன்று (மே 4) கனடாவின் டொரோண்டோ நகரில் இந்தக் கைது நடவடிக்கை பற்றிப் பேசிய கனடா பிரதமர் ட்ரூடோ, “கனடா சட்டத்தை மதிக்கும் ஒரு நாடு என்பதால் இது முக்கியமானது. எங்களிடம் வலுவான மற்றும் சுதந்திரமான நீதி அமைப்பு உள்ளது. எங்கள் குடிமக்கள் அனைவரின் பாதுகாப்பிற்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்," என்றார்.
“ஆர்.சி.எம்.பி (கனடா நாட்டின் காவல்துறை) கூறியது போல், விசாரணை நடந்து வருகிறது. இந்த விசாரணை இந்த மூன்று பேரை கைது செய்வதோடு மட்டும் நின்றுவிடப் போவதில்லை," என்றார்.
நிஜ்ஜார் கொலைக்குப் பிறகு, கனடாவில் உள்ள சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாகவும் ட்ரூடோ கூறினார்.
"கனடாவில் உள்ள அனைவருக்கும் பாரபட்சம் மற்றும் அச்சமின்றி சுதந்திரமாக வாழ உரிமை உள்ளது," என்று அவர் கூறினார்.

பட மூலாதாரம், ANI
இந்திய வெளியுறவு அமைச்சர் கூறியது என்ன?
இந்தக் கைது நடவடிக்கைகள் குறித்து சனிக்கிழமை (மே 4) பேசிய இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், இந்தியாவில் தேடப்படுபவர்களுக்கு கனடா விசா வழங்க்குவதாகக் குற்றம் சாட்டினார்.
இதுகுறித்துப் பேசிய ஜெய்சங்கர், "இந்தியாவின் பஞ்சாபில் திட்டமிடப்பட்டக் குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் கனடாவில் வரவேற்கப்படுகிறார்கள்," என்று கூறினார். ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற போது அவர் இதைத் தெரிவித்தார்.
மேலும் பேசிய ஜெய்சங்கர், தான் இந்தச் செய்தியைப் பார்த்ததாகச் சொன்னார். "போலீஸ் விசாரணையில் யாரையாவது கைது செய்திருக்க வேண்டும். ஆனால் உண்மை என்னவெனில், திட்டமிட்ட குற்றங்களில் தொடர்புடைய பஞ்சாபைச் சேர்ந்தவர்கள் கனடாவில் வரவேற்கப்படுகிறார்கள். அவர்களுக்கு கனடா விசா வழங்குகிறது," என்றார்.
“இந்தியாவில் தேடப்படுபவர்களுக்கு விசா கொடுக்கிறீர்கள். பலர் பொய்யான ஆவணங்களுடன் வருகிறார்கள். ஆனாலும் நீங்கள் அவர்களை தங்க அனுமதிக்கிறீர்கள். அரசியல் ஆதாயத்துக்காக அவர்களை இருக்க விடுகிறீர்கள். இதனால் உங்களுக்கும் பிரச்னைகள் இருக்கும். சில சமயங்களில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. அவர்கள் சிந்திக்க வேண்டும்," என்றார்.
கனடாவுடன் இந்தியாவுக்கு பிரச்னை இருப்பதை வெளியுறவு அமைச்சர் வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.
ஜெய்சங்கர் கூறுகையில், “அமெரிக்காவுடன் இந்தியாவுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால் கனடாவுடன் பிரச்னை உள்ளது," என்றார்.
"கனடாவில் ஆட்சியில் இருக்கும் கட்சியும் எதிர்க்கட்சியும் பேச்சு சுதந்திரம் என்ற பெயரில் தீவிரவாதம் மற்றும் வன்முறையை ஆதரிப்பவர்களுக்கு அங்கீகாரம் அளித்துள்ளன," என்றார் ஜெய்சங்கர்.
கடந்த ஆண்டு செப்டம்பரில், நிஜ்ஜார் கொலையில் இந்திய அரசின் ஏஜெண்டுகளுக்கு தொடர்பு இருப்பதற்குத் தன்னிடம் வலுவான ஆதாரம் இருப்பதாக ஜஸ்டின் ட்ரூடோ கூறியிருந்தார். அப்போதிருந்து, இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான உறவுகள் மிகவும் பதற்றமான நிலையில் இருக்கின்றன.
அப்போது கனடாவின் குற்றச்சாட்டுகளை 'அடிப்படையற்றது மற்றும் அபத்தமானது' என்று இந்தியா விவரித்திருந்தது.

கைது செய்யப்பட்ட மூன்று பேர் யார்?
காலிஸ்தான் ஆதரவாளர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் மூன்று இந்தியர்களை கனடா போலீசார் வெள்ளிக்கிழமை (மே 3) கைது செய்தனர். கனடாவின் ஒருங்கிணைந்த படுகொலை விசாரணைக் குழு இவர்களைக் கைது செய்தது.
அவர்கள் இந்தியக் குடிமக்களான கரண் ப்ரார், கரன்ப்ரீத் சிங் மற்றும் கமல்பிரீத் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கரண் ப்ரார், 22, பஞ்சாபின் ஃபரித்கோட்டில் வசிப்பவர், கரன்ப்ரீத் பஞ்சாபின் குர்தாஸ்பூரைச் சேர்ந்தவர், மூன்றாவது நபரான கமல்ப்ரீத் பஞ்சாபின் ஜலந்தர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
கரண் கல்விக்கான அனுமதியில் (ஸ்டடி பெர்மிட்) கனடா சென்றவர். பஞ்சாப் போலீஸ் வட்டாரங்களின்படி, கரண் ப்ரார் ஃபரித்கோட் மாவட்டத்தின் கோட்காபுரா நகரை சேர்ந்தவர்.
பஞ்சாப் போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், "கரண் ப்ரார் தனது பள்ளிப் படிப்பை கோட்காபுராவில் முடித்தார், பின்னர் அவர் 2020-இல் கல்வி அனுமதியில் கனடா சென்றார்," என்றனர்.
கரண் ப்ராரின் குடும்பத்துக்கு நிலபுலன்கள் இருப்பதாக காவல்துறை கூறுகிறது. அக்கம்பக்கத்தினர் மற்றும் அருகிலுள்ளவர்களிடமிருந்து பெறப்பட்ட தகவலின்படி, கரணின் தாத்தா பல்பீர் சிங் ப்ரார் ஒரு உள்ளூர் தொழிலதிபர். கரண் தனது பெற்றோருக்கு ஒரே மகன். அவரது தாயார் ரமன் ப்ரார் வேலை நிமித்தமாக சிங்கப்பூரில் வசிப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
கரண் ப்ராரின் தந்தை மன்தீப் பிரார் கடந்த மாதம் 18-ஆம் தேதி காலமானார். இதன் காரணமாக கரணின் தாயும் இந்தியா வந்தார்.
குர்தாஸ்பூரைச் சேர்ந்த கரண் ப்ரீத் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை துபாயில் லாரி ஓட்டுநராக வேலை செய்கிறார். கரன்ப்ரீத் சிங்கின் மாமாவும் கிராம சர்பஞ்சின் மகனுமான ரஞ்சித் சிங் ராணா, "கரண் ப்ரீத் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்," என்றார்.
ஆரம்பக் கல்வியை முடித்த கரண்ப்ரீத் 2016-இல் துபாய்க்குச் சென்றதாகவும், அங்கு தனது தந்தையுடன் சுமார் நான்கு ஆண்டுகள் லாரி ஓட்டுநராகப் பணிபுரிந்ததாகவும் அவர் கூறினார்.
கரண்ப்ரீத் கனடா சென்றது குறித்து ரஞ்சித் சிங் கூறுகையில், "கரண்ப்ரீத் பணி அனுமதிச் சீட்டில் கனடா சென்றுள்ளார்," என்றார்.
கரண்ப்ரீத் கடந்த மூன்று ஆண்டுகளாக கனடாவில் இருப்பதாகவும், அங்கு லாரி ஓட்டுவதாகவும் கூறினார்.
மூன்றாவது நபரான கமல்ப்ரீத் சிங் பஞ்சாபின் ஜலந்தர் மாவட்டத்தின் நாகோதரில் இருக்கும் கலான் கிராமத்தில் வசிப்பவர்.
கமல்பிரீத் சிங் நகோதரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்தார். 2019-ஆம் ஆண்டில் 12-ஆம் வகுப்பை முடித்தார். அதன் பிறகு கல்வி விசாவில் கனடா சென்றார்.
கமல்ப்ரீத்தின் தந்தை சத்னம் சிங் வருமானம் ஈட்டுவதாலும், கிராமத்தில் அவர்களுக்கு நிலம் உள்ளதாலும் அவரது குடும்பம் பொருளாதார ரீதியாக வலுவாக உள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.
கமல்ப்ரீத்தின் சகோதரி கனடாவில் வசிக்கிறார் என்று பஞ்சாப் காவல்துறை அதிகாரி ஒருவர் கூறினார். 2022-இல் அவரைச் சந்திக்க அவரது தாயும் கனடா சென்றார்.

கனடா-இந்தியா வார்த்தைப் போர்
கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி கனடாவின் டொராண்டோ நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த `கல்சா தின` நிகழ்ச்சியில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கனடாவில் வசிக்கும் சீக்கிய சமூக மக்களிடையே உரையாற்றினார்.
ஊடக அறிக்கைகளின்படி, இந்த நிகழ்வில் ட்ரூடோ, கனடா சீக்கிய சமூகத்தின் மத உரிமையை `பாகுபாடு` இன்றி ஆதரிக்கும் என்று கூறியிருந்தார்.
இந்த நிகழ்வில் காலிஸ்தானுக்கு ஆதரவாகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இந்த நிகழ்வில் ஊடகங்களிடம் பேசிய ட்ரூடோ, காலிஸ்தான் ஆதரவு போராட்டங்களை சுட்டிக்காட்டி, “எங்கள் வேலை அரசியல் போராட்டங்களை நிறுத்துவது அல்ல," என்றார்.
இதற்கு அடுத்த நாள், இந்திய வெளியுறவு அமைச்சகம், இந்தியாவுக்கான கனடா துணை உயர் ஸ்தானிகரை வரவழைத்து தனது கடும் எதிர்ப்பைத் தெரிவித்தது.
இந்த விவகாரம் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கடந்த வியாழன் அன்று (மே 2), "கனடாவில் பிரிவினைவாதம், தீவிரவாதம் மற்றும் வன்முறைக்கு எப்படி அரசியல் இடம் கொடுக்கப்படுகிறது என்பது மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது கனடா-இந்தியா உறவுகளை மட்டும் பாதிக்காது. கனடா தனது சொந்த குடிமக்களுக்கு வன்முறை மற்றும் குற்றச் சூழ்நிலையை உருவாக்குகிறது," என்றார்.

பட மூலாதாரம், SIKH PA
என்.ஐ.ஏ வெளியிட்ட காலிஸ்தான் ஆதரவாளர்களின் பட்டியல்
கடந்த ஆண்டு, தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) காலிஸ்தான் ஆதரவு தலைவர்களின் பெயர்ப் பட்டியலை வெளியிட்டது. அதில் உள்ளவர்களின் சொத்துகளை அந்த நிறுவனம் பறிமுதல் செய்ய முடிவு செய்தது.
கடந்த ஆண்டு, காலிஸ்தான் தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னுவின் சொத்துகளை என்.ஐ.ஏ பறிமுதல் செய்தது.
இந்தப் பட்டியலில், அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் வசிக்கும் காலிஸ்தான் ஆதரவு தலைவர்கள் பலரின் பெயர்கள் இருந்தன. அவர்களை என்.ஐ.ஏ 'பயங்கரவாதிகள்' என்று குறிப்பிட்டிருந்தது.
- பரம்ஜித் சிங் பம்மா - இங்கிலாந்து
- வாத்வா சிங் (பாபர் சாச்சா) - பாகிஸ்தான்
- குல்வந்த் சிங் முத்ரா - இங்கிலாந்து
- ஜே.எஸ்.தலிவால் - அமெரிக்கா
- சுக்பால் சிங் - இங்கிலாந்து
- ஹர்பிரீத் சிங் (ராணா சிங்) - அமெரிக்கா
- சரப்ஜித் சிங் பெனூர் - இங்கிலாந்து
- குல்வந்த் சிங் (காந்தா) - இங்கிலாந்து
- ஹர்ஜப் சிங் (ஜப்பி சிங்) - அமெரிக்கா
- ரஞ்சித் சிங் நீத்தா - பாகிஸ்தான்
- குர்மீத் சிங் (பக்கா பாபா)
- குர்பிரீத் சிங் (ரிபெல்) - இங்கிலாந்து
- ஜஸ்மீத் சிங் ஹக்கிம்கஜாதா - துபாயில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்
- குர்ஜந்த் சிங் தில்லோங் - ஆஸ்திரேலியா
- லக்பீர் சிங் ரோட் - கனடா
- அமர்தீப் சிங் பூரேவால் - அமெரிக்கா
- ஜதீந்தர் சிங் க்ரேவால் - கனடா
- துபிந்தர் சிங் - இங்கிலாந்து
- ஹிம்மத் சிங் - அமெரிக்கா
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












