ஆஸ்துமா யாருக்கெல்லாம் வரும்? குணப்படுத்த முடியாதா? மருத்துவர் தரும் எளிய விளக்கம்

முக்கிய சாராம்சம்
  • தூசி - மாறிவிட்ட வாழ்க்கை முறையின் காரணமாக இந்தியாவின் பல நகரங்களில் காற்றில் தூசியும் கலந்து மாசுபாடு காணப்படுகிறது. இந்த தூசியில் உள்ள சிறு துகளை சுவாசிப்பதால் தூண்டப்படும் விளைவினால் ஒவ்வாமை ஏற்படுகிறது.
  • புகை - சிகரெட் புகை, சமையல் புகை, வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை என பல வகைகளில் வெளியாகும் புகையின் காரணமாகவும் ஒருவருக்கு ஆஸ்துமா ஏற்படுகிறது.
  • வாசனை - வாசனை திரவியம், பாடி ஸ்பிரே, உணவு சமைக்கும் வாசனை, கழிவுகளின் வாசனை என ஏதாவது ஒரு வாசனையினால் ஒவ்வாமை தூண்டப்பட்டு ஆஸ்துமா ஏற்படுகிறது. பூக்களின் மகரந்த சேர்க்கை வாசனையாலும் இது தூண்டப்படும்.
  • உணவு - சிலருக்கு ஒவ்வாமை ஏற்படுத்தும் உணவுகளை எடுத்துக் கொள்வதால் ஆஸ்துமா பாதிப்பு தூண்டப்படுகிறது. பொதுவாக கத்திரிக்காய், மீன், இறால், கருவாடு உள்ளிட்ட கடல் உணவுகள் ஒவ்வாமையை ஏற்படுத்து. இது ஒவ்வொரு நபருக்கும் வேறுபடும்.
  • பழங்கள் - சிட்ரஸ் பழங்கள் என்று அழைக்கக்கூடிய எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துகுடி உள்ளிட்ட பழங்கள் வழியாகவும் இந்த ஒவ்வாமை தூண்டப்படுகிறது.
  • உணர்ச்சி - அதிகமாக உணர்ச்சிவயப்படுவதால் உணர்வுக தூண்டப்பட்டு ஆஸ்துமா ஏற்படும். அதனால் அதிகம் மகிழ்ச்சி, கவலை என எந்த உணர்வாக இருந்தாலும் கட்டுபடுத்த வேண்டும்.
  • வைரஸ் தொற்று - வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் போது ஏற்படும் ஒவ்வாமையை காரணமாக ஆஸ்துமா ஏற்படுகிறது.
    • எழுதியவர், விஷ்ணுபிரகாஷ் நல்லதம்பி
    • பதவி, பிபிசி தமிழ்
ஆஸ்துமா

பட மூலாதாரம், Getty Images

ஒவ்வாமையின் காரணமாக சிலருக்கு மூச்சுக்குழாய், நுரையீரலில் ஏற்படும் பாதிப்பினால் ஆஸ்துமா ஏற்படுகிறது. இதை இளைப்பு நோய் என்றும் அழைக்கலாம்.

ஆஸ்துமா என்பது ஒரு நாள்பட்ட அழற்சி நோய் (Chronic Inflammatory Disease) என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

2019ஆம் ஆண்டு வரை உலகம் முழுவதும் 26.2 கோடி பேர் ஆஸ்துமாவினால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் உரிய மருந்தும், சிகிச்சையும் எடுத்துக் கொள்வதில்லை என இந்திய மார்பு சங்கம் (Indian Chest Society) குறிப்பிடுகிறது.

இதனால் ஆஸ்துமா குறித்த விழிப்புணர்வை மக்களிடம் பரவலாக்கும் நோக்கில் உலக ஆஸ்துமா தினம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின் முதல் செவ்வாய்க் கிழமை கடைபிடிக்கப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான கருப்பொருளாக ‘அனைவருக்கும் ஆஸ்துமா சிகிச்சை’ என்ற கருத்தாக்கம் வெளியிடப்பட்டுள்ளது.

ஆஸ்துமா தினத்தை முன்னிட்டு ஆஸ்துமா நோய் குறித்தும், அதன் சிகிச்சை முறைகள் குறித்தும் பிபிசி தமிழின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார் சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் மருத்துவரும், சென்னை மருத்துவக் கல்லூரியின் நெஞ்சகவியல் துறையின் பேராசிரியருமான நான்சி குளோரி.

ஆஸ்துமா, விழிப்புணர்வு, மாசு, மாஸ்க்
படக்குறிப்பு, மருத்துவர் நான்சி குளோரி

ஆஸ்துமா என்றால் என்ன?

நீண்டகால ஒவ்வாமையினால் நுரையீரல், மூச்சுக் குழாய்களில் ஏற்படும் பாதிப்பே ஆஸ்துமா. இது ஒரு தொற்று நோயல்ல. சிலர் தொற்று நோயான காச நோய்க்கும் (Tuberculosis), ஆஸ்துமாவுக்கும் வித்தியாசத்தை அறியாமல் இருக்கின்றனர்.

ஆஸ்துமா என்பது உட்புற, வெளிப்புற காரணிகளால் ஏற்படும் ஒவ்வாமையினால் உருவாகும் விளைவு. இது ஒரு நபரிடம் இருந்து மற்றொரு நபருக்கு பரவாது.

ஆனால் ஆஸ்துமா ஒரு நாள்பட்ட நோய். ஒருவருக்கு ஆஸ்துமா பாதிப்பு ஒருமுறை ஏற்பட்டால், வாழ்நாள் முழுவதும் அந்த பாதிப்பு இருக்கும்.

ஆஸ்துமா எதனால் ஏற்படுகிறது?

ஆஸ்துமாவுக்கான முக்கிய காரணம் ஒவ்வாமை (Allergy). ஆஸ்துமா இரண்டு வழிகளில் முக்கியமாக ஏற்படுகிறது.

ஒன்று உட்புற ஆஸ்துமா. ஒருவருக்கு மரபணு மூலமாகவோ, பரம்பரை வழியாகவோ ஆஸ்துமா பாதிப்பு ஏற்படுவது உட்புற ஆஸ்துமா (intrinsic asthma) எனப்படுகிறது.

இந்த முறையில் ஏற்படும் ஆஸ்துமா, சிறுவயதிலேயே அறிகுறிகளை வெளிப்படுகிறது. Intrinsic asthma பாதிப்பு 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பொதுவாக ஏற்படுகிறது.

இரண்டாவது புறக்காரணிகளால் ஏற்படும் ஆஸ்துமா. நம்மை சுற்றி இருக்கும் சூழலில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகளின் விளைவாக இந்த ஆஸ்துமா ஏற்படுகிறது.

யாருக்கு ஆஸ்துமா பாதிப்பு ஏற்படும்?

ஆஸ்துமா, விழிப்புணர்வு, மாசு, மாஸ்க்

பட மூலாதாரம், Getty Images

ஆஸ்துமா பாதிப்பு என்பது குறிப்பிட்ட வயதினருக்கு ஏற்படும் என சொல்ல முடியாது. ஆனால் பொதுவாக காணப்படும் ஆஸ்துமா வகைகளில், பரம்பரையின் தாக்கத்தால் சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு ஆஸ்துமா ஏற்படுகிறது.

Intrinsic asthma எனப்படும் உட்புற காரணிகளால் ஏற்படும் ஆஸ்துமா பாதிப்பு 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஏற்படுகிறது. இதனால் சிறுவயது குழந்தைகளுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுகிறது.

ஆனால் புறக்காரணிகளால் ஏற்படும் ஆஸ்துமா எந்த வயதில் வேண்டுமானாலும் வரலாம். ஆஸ்துமாவுக்கு பல முகங்கள் உள்ளன. சிலருக்கு Late Onset Asthma, அதாவது வயதான பிறகு கூட ஆஸ்துமா வரலாம்.

ஆஸ்துமா பாதிப்பை தூண்டக்கூடிய சூழலில் தொடர்ந்து இருக்கும் ஒரு நபருக்கு அவரின் 25 வயதிலோ, 40 வயதிலோ, 60 வயதிலோ கூட ஆஸ்துமா பாதிப்பு வரலாம்.

அதனால் ஆஸ்துமா பாதிப்பை ஒரு குறிப்பிட்ட வயது வரம்புக்குள் சுருக்க முடியாது.

உட்புற ஆஸ்துமாவுக்கான காரணங்கள் என்ன?

பரம்பரை, மரபணு வழியாக இந்த ஆஸ்துமா வருகிறது. நமது தாய்வழி அல்லது தந்தைவழியில் உள்ள ரத்த சொந்தங்களுக்கு ஆஸ்துமா பாதிப்பு ஏற்பட்டு இருந்தால், அதன் தொடச்சியாக உங்களுக்கும் ஆஸ்துமா ஏற்பட வாய்ப்புள்ளது.

சில சமயம் பரம்பரை ரீதியாக பாதிப்பு ஏற்படும் நபர்களுக்கு ஆஸ்துமா தூண்டும் காரணியாக ஏதாவது ஒரு சம்பவம் நடக்கும்.

வழக்கமாக குழந்தைகள் அதிக நேரம் விளையாடி விட்டு வரும் போது அவர்களின் நெஞ்சு அடைப்பது போல உணர்வு ஏற்படும். அவர்களால் மூச்சு விட முடியாது. இது போன்ற அறிகுறிகள் ஆஸ்துமா பாதிப்புக்கானது.

புறக்காரணிகளால் ஆஸ்துமா ஏற்பட என்ன காரணம்?

ஆஸ்துமா பாதிப்பு ஏற்பட ஏராளமான புறக்காரணிகள் உள்ளன. இந்த புறக்காரணிகளால் தூண்டப்படும் ஒவ்வாமை ஒருவருக்கு ஆஸ்துமா பாதிப்பை ஏற்படுத்துகிறது.

ஆஸ்துமா பாதிப்பின் அறிகுறிகள் என்ன?

ஆஸ்துமா உள்ளவர்களுக்கு இருக்கும் பொதுவான அறிகுறிகள் என சில வகைபடுத்தப்பட்டுள்ளன.

  • இருமல்
  • நெஞ்சு இறுக்கம்
  • மூச்சுத் திணறல்
  • Wheezing (பெருமூச்சு)

என்ன சிகிச்சை?

ஆஸ்துமா, விழிப்புணர்வு, மாசு, மாஸ்க்

பட மூலாதாரம், Getty Images

ஆஸ்துமா ஏற்படும் நபர்களுக்கு உரிய பரிசோதனைகளுக்கு பிறகு மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன.

ஆரம்ப நிலையில் நோயின் தன்மை உள்ளவர்களுக்கு இன்ஹேலர் மூலமாக மருந்துகள் எடுத்துக் கொண்டால் ஆஸ்துமாவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும்.

நோயின் தன்மை தீவிரமாக உள்ள நபர்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருக்கக்கூடும். அதை சரி செய்ய மூச்சுக் குழாய் பகுதியில் சிறிய அறுவை சிகிச்சை செய்வதன் மூலம் இதை சரி செய்ய முடியும்.

ஆஸ்துமா பாதிப்பை எப்படி தவிர்ப்பது?

ஆஸ்துமா பாதிப்பு என்பது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவாது. அதனால் இதை கட்டுப்படுத்த சில அம்சங்களை நாம் தவிர்க்க வேண்டும்.

  • ஒருவருக்கு ஆஸ்துமாவை தூண்டுவதற்கான காரணி என்ன, எதனால் ஒவ்வாமை ஏற்படுகிறது (Trigger Avoidance) என்பதை கண்டறிந்து அதை தவிர்க்க வேண்டும்.

உதாரணமாக சிலருக்கு தலையணை, மெத்தையில் உள்ள பூச்சிகள் காரணமாக ஒவ்வாமை ஏற்படும். அது போன்ற நபர்கள், மெத்தையை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும், வெயிலில் உலர்த்த வேண்டும்.

  • சிலருக்கு பனிக்காலத்தில், குளிர்ந்த காற்று டிரிக்கராக இருக்கும். அந்த நேரத்தில் காதுகளை நன்றாக சுற்றும்படியாக உடைகளை அணிய வேண்டும்.
  • புகை, தூசி, வாசனை போன்ற ஒவ்வாமையை தவிர்க்க மாஸ்க் அணிந்து கொள்ளலாம். கொரோனா காலத்தில் முக கவசம் அணியும் பழக்கத்தாலும், பொது முடக்கத்தின் விளைவாக குறைந்த காற்று மாசுபாடாலும் ஆஸ்துமா பாதிப்பு குறைவாக காணப்பட்டது. அதனால் முக கவசம் அணிந்து கொள்வது ஒவ்வாமையை தவிர்க்க உதவும்.
  • மூச்சுப் பயிற்சி, யோகா செய்வது மூலமாக இந்த பிரச்னையை தவிர்க்க முடியும்.
  • ஆஸ்துமா பாதிப்பு இருப்பவர்களின் நண்பர்களோ, குடும்பத்தினரோ யாராக இருந்தாலும், அவர்களும் சுத்தமாக இருக்க வேண்டும். வீட்டில் தூசி ஏதுமில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வீட்டில் உள்ளவர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் ஆஸ்துமா பாதிப்பை தவிர்க்க முடியாது.

ஆஸ்துமா முற்றிலும் குணப்படுத்த முடியாது என்பதால் நமது வாழ்வியல் நடவடிக்கைகளில் செய்யும் மாற்றங்கள் வழியாகவே ஆஸ்துமாவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும்.

உலக ஆஸ்துமா தினம் ஏன்?

ஆஸ்துமா, விழிப்புணர்வு, மாசு, மாஸ்க்

பட மூலாதாரம், GINA

ஆஸ்துமா நோயை தடுத்தல், சிகிச்சை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆஸ்துமாவிற்கான உலகளாவிய அமைப்பு (The Global Initiative for Asthma - GINA) கடந்த 1993ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது.

இது, அமெரிக்காவின் தேசிய இதயம், நுரையீரல் மற்றும் ரத்த நிறுவனம், தேசிய சுகாதார நிறுவனம், மற்றும் உலக சுகாதார அமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

ஆஸ்துமா பாதிப்பு மற்றும் இறப்பு ஆகியவற்றைக் குறைக்க உலகம் முழுவதும் உள்ள மருத்துவ நிபுணர்கள், பொது சுகாதாரத்துறை அதிகாரிகளை ஒருங்கிணைத்து பணியாற்றி வருகின்றனர்.

ஜினா அமைப்பு தொடங்கி, முதல் சந்திப்பு மே மாதம் முதல் செவ்வாய் கிழமை நடைபெற்றதையடுத்து, ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின் முதல் செவ்வாய்க் கிழமை உலக ஆஸ்துமா தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

இதன்படி, ஆஸ்துமா ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஒரு மையக் கருத்தை அறிவித்து வருகிறார்கள்.

இந்த ஆண்டுக்கான கருப்பொருளாக ‘அனைவருக்கும் ஆஸ்துமா சிகிச்சை’ என்ற கருத்தாக்கம் வெளியிடப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: