இரான் - இஸ்ரேல் இரண்டில் எது வலிமையானது? இரு நாடுகளின் மோதல் பற்றிய முழு விவரம்

இரான் இஸ்ரேல்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ரஃபி பெர்க், டாம் ஸ்பென்டர், ஜானதன் பீல்
    • பதவி, பிபிசி செய்திகள்

முதல் முறையாக, இரான் தனது எல்லையில் இருந்து நேரடியாக இஸ்ரேல் மீது கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 13) இரவு நடந்த இந்தத் தாக்குதல் நடத்தியது.

சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள இரான் தூதரகத்தின் இஸ்ரேல் நடத்தியதாகக் கருதப்படும் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்ததாக இரான் கூறுகிறது. இஸ்ரேலை நோக்கி ட்ரோன்களையும், ஏவுகணைகளையும் ஏவியது இரான்.

சிரியாவில் இரான் தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தியதற்கு இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை.

இந்த நிலையில், இஸ்ரேலும் இரானில் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக இஸ்ரேலும் இரானும் பல ஆண்டுகளாக நிழல் யுத்தத்தில் ஈடுபட்டு வந்தன. அதாவது பொறுப்பை ஒப்புக்கொள்ளாமல் ஒரு நாடு மற்றொன்றுக்குச் சொந்தமான இடங்களின் மீது தாக்குதல் நடத்திவந்தன.

இந்நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் எல்லைப் பகுதி இஸ்ரேலில் உள்ள குடியிருப்புகள்மீது பாலத்தீன ஆயுதக்குழுவான ஹமாஸ் தாக்குதல் நடத்தியது. அதன்பின் இஸ்ரேல் காஸா மீது தீவிரமான தாக்குதல் நடத்திவருகிறது. இதனால், இரான் – இஸ்ரேல் தாக்குதல்கள் கணிசமாக அதிகரித்துள்ளன.

இரான் இஸ்ரேல் மீது நடத்திய முதல் தாக்குதல்
படக்குறிப்பு, இஸ்ரேலை நோக்கி ட்ரோன்களையும், ஏவுகணைகளையும் ஏவியது இரான்

நட்பாக இருந்த இஸ்ரேலும் இரானும் எப்படி எதிரிகளாயின?

இரானில் 1979-ஆம் ஆண்டு இஸ்லாமியப் புரட்சி நடக்கும் வரை இரு நாடுகளும் நட்பு நாடுகளாக இருந்தன. புரட்சிக்குப் பிறகு இரானில் அமைந்த அரசு, இஸ்ரேலை எதிர்ப்பதை தனது சித்தாந்தத்தின் முக்கிய பகுதியாக அமைத்துக்கொண்டது.

இரானின் இந்தப் புதிய இஸ்லாமிய ஆட்சி இஸ்ரேலின் இருப்புக்கான உரிமையை அங்கீகரிக்கவில்லை, மேலும் அதை ஒழிக்க வேண்டும் என்று கூறி வருகிறது.

இரானின் உச்ச தலைவரான ஆயத்துல்லா அலி காமனெயி, முன்னர் இஸ்ரேலை ஒரு ‘புற்றுநோய் கட்டி’ என்று அழைத்தார். மேலும் அக்கட்டி "நிச்சயமாக அகற்றப்படும்," என்றார்.

தெஹ்ரானின் சொல்லாட்சிகள், இஸ்ரேலை அழிக்க உறுதிமொழி அளித்த நிழல் படைகளை உருவாக்கியது, ஹமாஸ் மற்றும் ஹெஸ்பொலா போன்ற ஆயுதக் குழுக்களுக்கு நிதியுதவி மற்றும் ஆயுதம் வழங்குவது, மற்றும் இரான் ரகசியமாக அணு ஆயுதங்களை உருவாகுகிறது என்ற சந்தேகம் - இவற்றால் இரான் தனது இருப்புக்கே அச்சுறுத்தல் விடுப்பதாக இஸ்ரேல் நம்புகிறது.

இரான் இஸ்ரேல் மீது நடத்திய முதல் தாக்குதல்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள இரான் தூதரகத்தின் இஸ்ரேல் நடத்தியதாகக் கருதப்படும் தாக்குதல்

இப்போதைய தாக்குதலுக்கு உடனடியான காரணம் என்ன?

சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள இரானிய தூதரகக் கட்டடத்தின் மீது கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில், மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, கடந்த சனிக்கிழமை இரவு இஸ்ரேல் மீது குண்டுவீச்சு நடத்தப்பட்டது என்று இரான் கூறுகிறது.

தூதரகத்தின்மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலுக்கு இஸ்ரேல் மீது இரான் குற்றம்சாட்டுகிறது. இது தன் இறையாண்மையை மீறுவதாக இரான் கருதுகிறது. அத்தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை.

அந்தத் தாக்குதலில் இரானின் உயர்நிலைக் குடியரசுக் காவலர்களின் (Iran's elite Republican Guards - IRGC) வெளிநாட்டுக் கிளையான குத்ஸ் படையின் மூத்த தளபதியான பிரிகேடியர் ஜெனரல் முகமது ரெசா ஜாஹேதி உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர். லெபனானின் ஷியா ஆயுதக் குழுவான ஹெஸ்பொலாவுக்கு ஆயுதம் வழங்க இரான் எடுத்துவரும் முன்னெடுப்புகளில் அவர் முக்கிய நபராக இருந்தார்.

இந்தத் தூதரகத் தாக்குதல், இரானிய இலக்குகளுக்கு எதிராக இஸ்ரேல் நடத்துவதாகப் பரவலாகக் கூறப்படும் வான்வழித் தாக்குதல்களை ஒத்திருக்கிறது. கடந்த சில மாதங்களில் சிரியாவில் நடந்த வான்வழித் தாக்குதல்களில் பல மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

உயர் ரக துல்லிய ஏவுகணைகள் உட்பட ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை IRGC சிரியா வழியாக ஹெஸ்பொலாவுக்கு அனுப்புகிறது. இஸ்ரேல் இதைத் தடுக்க முயற்சிக்கிறது. அதே போல் இரான் சிரியாவில் ராணுவ இருப்பை வலுப்படுத்துவதையும் இஸ்ரேல் தடுக்க முயல்கிறது.

இரான் இஸ்ரேல் மீது நடத்திய முதல் தாக்குதல்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, இரான் ஆதரவளிக்கும் ஆயுதக் குழுக்களில் லெபனானில் உள்ள ஹெஸ்பொலா மிகவும் சக்தி வாய்ந்தது

இரானின் நட்பு நாடுகள் எவை?

இரான் மத்திய கிழக்கில் கூட்டாளிகள் மற்றும் நிழல் படைகளின் ஒரு வலையமைப்பை உருவாக்கியுள்ளது. இது அப்பகுதியில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய நலன்களுக்குச் சவால் விடும் எதிர்ப்பின் ஒரு பகுதியாக இருப்பதாக இரான் கூறுகிறது. பல்வேறு வகைகளில் இந்த நாடுகளையும் அமைப்புகளையும் இரான் ஆதரிக்கிறது.

சிரியா இரானின் மிக முக்கியமான நட்பு நாடாகும். இரான், ரஷ்யாவுடன் இணைந்து, சிரிய அதிபர் பஷர் அல்-அசாத்தின் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கி வருகிறது. இதனால் அசாத்தின் அரசாங்கம் கடந்த 10 ஆண்டுகளாக நடந்துவரும் சிரியாவின் உள்நாட்டுப் போரில் இருந்து தப்பித்து வந்திருக்கிறது.

இரான் ஆதரவளிக்கும் ஆயுதக் குழுக்களில் லெபனானில் உள்ள ஹெஸ்பொலா மிகவும் சக்தி வாய்ந்தது. இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர் மூண்டதில் இருந்து, ஹெஸ்பொலா அமைப்பு கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் இஸ்ரேலுடன் எல்லை தாண்டிய துப்பாக்கிச் சூடு நடத்தி வருகிறது. இதனால், எல்லையின் இருபுறமும் உள்ள பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இராக், சிரியா மற்றும் ஜோர்டானில் உள்ள அமெரிக்கத் தளங்களை ராக்கெட் மூலம் தாக்கிய, இராக்கின் பல ஷியா போராளிகளை இரான் ஆதரிக்கிறது.

இரான், ஏமனில் உள்ள ஹூதி இயக்கத்திற்கும் ஆதரவு தருகிறது. ஹூத்தி இயக்கம் ஏமனின் அதிக மக்கள் தொகை கொண்ட பகுதிகளைத் தனது கட்டுக்குள் வைத்திருக்கிறது. காஸாவில் ஹமாஸுக்குத் தனது ஆதரவைக் காட்ட, ஹூத்திகள் இஸ்ரேல் மீது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவியுள்ளனர். மேலும் கரையோரங்களில் வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி, ஒரு கப்பலை மூழ்கடித்துள்ளனர். இதற்கு பதிலடியாக அமெரிக்காவும் இங்கிலாந்தும் ஹூதி இலக்குகளைத் தாக்கின.

கடந்த ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி இஸ்ரேலைத் தாக்கிய ஹமாஸ் உட்பட பாலத்தீனிய ஆயுதக் குழுக்களுக்கு இரான் ஆயுதங்களையும் பயிற்சியையும் வழங்குகிறது. இந்தத் தாக்குதல்தான் தற்போது நடக்கும் இஸ்ரேல்-காஸா போருக்குக் காரணமாக அமைந்தது. இது மத்தியக் கிழக்கில் இரான் மற்றும் இஸ்ரேலின் நட்பு நாடுகளிடையே மோதல்களுக்கு காரணமானது. ஆனால், அக்டோபர் 7 தாக்குதலுக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று இரான் கூறி வருகிறது.

இரான் இஸ்ரேல் மீது நடத்திய முதல் தாக்குதல்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, இரானின் தாக்குதலை இடைமறிக்கும் இஸ்ரேலின் ஏவுகணைகள்

இரான் – இஸ்ரேல் யாருடைய ராணுவம் பலமானது?

புவியியல் ரீதியாக, இஸ்ரேலை விட இரான் மிகப்பெரியது. இரானின் மக்கள்தொகை 9 கோடி. இது இஸ்ரேலின் மக்கள்தொகையைவிட பத்து மடங்கு பெரியது. ஆனால் இது ராணுவ சக்தியில் பிரதிபலிக்கவில்லை.

இரான் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களில் அதிக முதலீடு செய்துள்ளது. தனக்கென ஒரு பரந்த ஆயுதக் களஞ்சியத்தைக் கொண்டுள்ளது. தன் பினாமிகளான ஏமனில் உள்ள ஹூத்திகள் மற்றும் லெபனானில் உள்ள ஹெஸ்பொலாக்களுக்கு கணிசமான ஆயுதங்களை வழங்கி வருகிறது.

ஆனால், இரானிடம் நவீன வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் போர் விமானங்கள் இல்லை. யுக்ரேன் போரில் போரில் ரஷ்யாவுக்கு இரான் ராணுவ ஆதரவு வழங்கியது. அற்கு ஈடாக ரஷ்யா இரானின் வான்வழிப் பாதுகாப்பை மேம்படுத்த உதவுவதாக நம்பப்படுகிறது.

இதற்கு நேர்மாறாக, இஸ்ரேல் உலகின் மிகவும் மேம்பட்ட விமானப்படைகளைக் கொண்டுள்ளது. IISS இராணுவ இருப்பு அறிக்கையின்படி, இஸ்ரேலிடம் குறைந்தது 14 ஸ்க்வாட்ரான் ஜெட் விமானங்கள் உள்ளன.

எதிரி நாட்டு எல்லைக்குள் வெகுதூரம் சென்று தாக்குதல் நடத்திய அனுபவமும் இஸ்ரேலுக்கு உள்ளது.

இரான் இஸ்ரேல் மீது நடத்திய முதல் தாக்குதல்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, இஸ்ரேலின் மீது ஏவப்பட்ட ஒரு ராக்கெய் பூஸ்டரின் எச்சம்

இரான் மற்றும் இஸ்ரேலிடம் அணு ஆயுதங்கள் உள்ளனவா?

இஸ்ரேல் சொந்தமாக அணு ஆயுதங்களைக் கொண்டிருப்பதாகக் கருதப்படுகிறது. ஆனால் இதைப்பற்றி அது தெளிவாகவோ வெளிப்படையாகவோ பேசுவதில்லை என்ற கொள்கையைப் பின்பற்றுகிறது.

இரானிடம் அணு ஆயுதங்கள் இல்லை. தனது அணுசக்தி திட்டத்தைப் பயன்படுத்தி அணு ஆயுத நாடாக மாறுவதற்கு முயற்சிக்கிறது என்ற குற்றச்சாட்டை இரான் தொடர்ந்து மறுத்து வருகிறது.

கடந்த ஆண்டு, உலகளாவிய அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு இரானின் நிலத்தடி ஃபோர்டோ தளத்தில் யுரேனியம் துகள்கள் 83.7% தூய்மையுடன் செறிவூட்டப்பட்டதைக் கண்டறிந்தது. இது அணு ஆயுதம் தயாரிப்பதற்கு தேவையான தரத்துக்கு மிக நெருக்கமான அளவாகும். இதுபற்றி, செறிவூட்டல் நிலைகளில் ‘எதிர்பார்க்கப்படாத ஏற்ற இறக்கங்கள்’ ஏற்பட்டிருக்கலாம் என்று இரான் கூறியது.

உலகின் வல்லரசு நாடுகளுடன் 2015 ஆன்டு செய்துகொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தை மீறி இரான் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக 60% தூய்மையான யுரேனியத்தை வெளிப்படையாகச் செறிவூட்டி வருகிறது.

இருப்பினும், இந்த ஒப்பந்தத்திலிருந்து அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியேறி, 2018-இல் இரான் மீது பொருளாதாரத் தடைகளை மீண்டும் கொண்டுவந்ததிலிருந்து இந்த ஒப்பந்தம் உடைந்துபோகும் நிலையில் உள்ளது. இஸ்ரேல் இந்த அணுசக்தி ஒப்பந்தத்திற்கு எதிராக இருந்து வந்துள்ளது.

இரான் இஸ்ரேல் மீது நடத்திய முதல் தாக்குதல்

இரான் நடத்திய தாக்குதலின் பின்னணி என்ன?

"நாங்கள் தடுத்தோம். இடைமறித்தோம். ஒன்றாக வெற்றி பெறுவோம்" என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்திருக்கிறார்.

ஆனால், பல பிரிட்டன் பிரதமர்களின் வெளியுறவுக் கொள்கை ஆலோசகரும், லெபனானுக்கான முன்னாள் பிரிட்டிஷ் தூதருமான டாம் பிளெட்சர், இரானிய தாக்குதல் ‘இரானின் திறன் மற்றும் பரவலைப் பற்றிய ஒரு சமிக்ஞை’ என்றார்.

இரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளின் தலைமைகளும் ‘உள்நாட்டில் அழுத்தத்தில் உள்ளன, சர்வதேச விமர்சனங்களை எதிர்கொள்கின்றன, நெருப்புடன் விளையாடத் தயாராக உள்ளன’ என்று அவர் எச்சரித்தார்.

ஆனால் இரானின் முன் எப்போதும் இல்லாத வகையிலான இந்தத் தாக்குதல் கவனமாகத் திட்டமிடப்பட்டதாகத் தெரிகிறது என்று அவர் பிபிசியிடம் கூறினார்.

"இரான் இந்தத் தாக்குதல்கள் தொடர்பாக முன்கூட்டியே தந்தி அனுப்பியது. இது அத்தாக்குதல்களை தடுப்பதை எளிதாக்கியது," என்று அவர் கூறினார். அவர் லெபனானில் தூதராக இருந்தபோது நடத்தப்பட்ட தாக்குதல்களோடு இதனை ஒப்பிட்டார். இதன் நோக்கம், தன்னால் என்ன முடியும் என்பதைக் காட்டுவதே தவிர உண்மையாகத் தாக்குவதல்ல.

இரான் ஹெஸ்பொலா மூலம் பதிலளிப்பதை விட நேரடியாக பதிலளிப்பதைத் தேர்ந்தெடுத்தது ‘சாதகமானது’ என்றும் அவர் கூறினார். சில இஸ்ரேலியர்கள் லெபனான் ஆயுதக் குழுவான ஹெஸ்பொலாவை நேரடியாகத் தாக்கி, இஸ்ரேல் எல்லையிலிருந்து அப்புறப்படுத்துமாறு ராணுவத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

'சத்தம்' ஹவுஸ் சிந்தனைக் குழுவைச் (Chatham House think tank) சேர்ந்த சனம் வக்கீல், இரானின் பார்வையில் இந்தத் தாக்குதல் வெற்றியடைந்துள்ளதாகவும், இஸ்ரேலுக்கு விடுத்திருக்கும் சவால் என்று கூறினார்.

"இரான் நேரடியாக இஸ்ரேலின் இறையாண்மையை மீறுவதும், அதன்மீது தாக்குதல் நடத்துவதும் இதுவே முதல் முறை," என்று அவர் பிபிசியிடம் கூறினார்.

“இந்தத் தாக்குதல் நிச்சயமாக தெளிவாகத் திட்டமிடப்பட்டது, அதிக சேதத்தை ஏற்படுத்தக்கூடாது அல்லது யாரையும் காயப்படுத்தக்கூடாது என்ற நோக்கத்துடன் ராணுவக் கட்டமைப்புகளை மட்டும் குறிவைத்தன," என்றார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)