கேரளாவில் பரவும் வெஸ்ட் நைல் வைரசால் தமிழ்நாட்டிற்கும் ஆபத்தா? மூளையை பாதிக்கும் இந்த வைரஸ் எப்படி பரவுகிறது?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சுபாஷ் சந்திர போஸ்
- பதவி, பிபிசி தமிழ்
கேரளாவில் வெஸ்ட் நைல் வைரஸ் (West Nile Virus) என்ற கொசுக்களால் பரவும் வைரஸ் ஒன்றால் காய்ச்சல் பரவி வருவதாக கேரள அரசு சமீபத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தற்போது வரை கேரளாவில் உள்ள சில மாவட்டங்களில் மட்டுமே பரவி வரும் இந்தக் காய்ச்சல், தமிழ்நாட்டில் இன்னும் பதிவாகவில்லை என்றாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை.
இந்தக் காய்ச்சல் மனிதர்களில் இருந்து மனிதர்களுக்குப் பரவாது என்றாலும்கூட, எச்சரிக்கையாக இருக்க வேண்டிய சூழல் உள்ளதாக மருத்துவத்துறை நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்த வைரஸ் காய்ச்சலின் முழு விவரம் என்ன? மருத்துவர்கள் இதுகுறித்து கூறுவது என்ன?

பட மூலாதாரம், Getty Images
வெஸ்ட் நைல் வைரஸ்
வெஸ்ட் நைல் வைரஸ் என்னும் இந்த வைரஸ் 1937ஆம் ஆண்டு முதன் முதலில் உகாண்டாவில் உள்ள வெஸ்ட் நைல் என்ற மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வெஸ்ட் நைல் வைரஸ் என்பது ‘கியூலக்ஸ்’ என்ற ஒரு வகை கொசுவால் பரவும் நோய் எனவும், இந்த வைரஸ் பறவைகளிடம் இருந்து கொசுக்களுக்கும், பிறகு கொசுக்கள் மூலம் மனிதர்களுக்கும் பரவுகிறது எனவும் ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியரும் மருத்துவத் துறை தலைவருமான எஸ். சந்திரசேகர் கூறுகிறார்.
உலக சுகாதார நிறுவனத்தின்படி, வைரஸ் தொற்றுள்ள ஒரு பறவையின் ரத்தத்தில் இருந்து கொசுக்களுக்கு அந்த வைரஸ் பரவுகிறது. கொசுக்களின் உமிழ்நீர் சுரப்பிக்குள் நுழையும் இந்த வைரஸ், பின்னர் அதே கொசு மனிதர்களைக் கடிக்கும்போது அவர்களுக்குள்ளும் நுழைந்து பல்கிப் பெருகுகிறது.
அதேநேரம் இந்த வைரஸ் வேறு பாதிக்கப்பட்ட மிருகங்களின் ரத்தம் மனிதர்களுக்குள் ஏதோ ஒரு வகையில் செல்லும்போதும் மனிதர்களைப் பாதிக்கலாம். ஆனால், ஒரு மனிதரில் இருந்து மற்றொரு மனிதருக்கு நேரடியாகப் பரவாது.
பெரும்பாலும் காடுகள் மற்றும் நீர்நிலைகள் அதிகமுள்ள சூழல்களில் இந்தக் கொசுக்கள் அதிகம் உருவாகி, மக்களைத் தாக்குவதாகவும் அவர் கூறுகிறார். கேரளாவில் இதுபோன்ற சூழல் அதிகம் இருப்பதால் அங்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், அங்குள்ள மருத்துவக் கண்காணிப்பு கட்டமைப்பு பலமாக இருப்பதால் இது எளிதில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கிறார்.
தற்போது கோழிக்கோடு, திருச்சூர் உள்ளிட்ட கேரளாவின் ஒரு சில மாவட்டங்களில் இரட்டை இலக்க எண்ணிக்கையில் இந்த நோய்த்தொற்று அறிகுறி உடையவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இதனால், கேரளா, தமிழகத்தின் எல்லை மாவட்டங்களான கோவை உள்ளிட்ட பகுதிகளில் மருத்துவக் கட்டமைப்பு பலப்படுத்தப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
வெஸ்ட் நைல் காய்ச்சலின் அறிகுறிகள்
இந்த நோய் பாதிப்பு ஏற்படும் 80 சதவீத மக்களுக்கு எந்தவிதமான அறிகுறிகளும் தென்படுவதில்லை என்கிறார் மருத்துவர் சந்திரசேகர். அதைத் தாண்டி இந்த வைரஸ் தாக்கினால் கீழ்காணும் அறிகுறிகள் காணப்படுகின்றன.
- காய்ச்சல்
- தலைவலி
- வாந்தி
- உடல்வலி
இதைத் தாண்டி ஒரு சிலருக்கு கீழ்காணும் கடுமையான அறிகுறிகளும் ஏற்படும் என்று மருத்துவர் சந்திரசேகர் மற்றும் தமிழக அரசின் மருத்துவத்துறை அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
- அதிக காய்ச்சல்
- கழுத்து விரைப்பு
- மயக்கம்
- கோமா
- பலவீனம்
- உணர்வின்மை
- வலிப்பு
- தசை பலவீனம்
- பக்கவாதம்
- நினநீர் சுரப்பியில் வீக்கம்
- மூளைக் காய்ச்சல் (Encephalitis)
உயிரிழப்பு ஏற்படுமா?

பட மூலாதாரம், Getty Images
வெஸ்ட் நைல் வைரஸ் இந்தியாவுக்கு ஒன்றும் புதிதல்ல. 2011ஆம் ஆண்டே கேரளாவில் பதிவாகியுள்ளது. 2019ஆம் ஆண்டும் கேரளாவில் ஒரு சிறுவன் இந்த நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளார். மேலும் சமீபத்தில் கேரளாவில் ஏற்பட்டுள்ள ஒரு சில இறப்புகளும் இந்த வைரசால் இருக்குமோ என்று சந்தேகிக்கப்படுகிறது என கேரள செய்தி ஊடகங்கள் கூறுகின்றன.
வேலூரில்கூட சில ஆண்டுகளுக்கு முன்பு பதிவாகியுள்ளதாகக் குறிப்பிடுகிறார் மருத்துவர் சந்திரசேகர். இந்நிலையில், இந்த நோய் தீவிரத்தன்மை அடைந்தால் இறப்பும்கூட நிகழலாம் என்று கூறுகிறார் அவர்.
இதுகுறித்துப் பேசிய அவர், “இந்த நோயை ஆரம்பக் கட்டத்திலேயே பரிசோதித்து அதற்கான சிகிச்சை அளித்துவிட்டால் பிரச்னையில்லை. இதுவே தாமதமாகக் கண்டறிந்து அதற்குள் வைரஸ் தாக்கம் பிற உறுப்புகளுக்கும் பரவிவிட்டால், வலிப்பு, சுயநினைவற்ற நிலை ஆகியவை ஏற்பட்டு மரணம் நிகழ வாய்ப்புள்ளது,” என்கிறார்.
உலக சுகாதார நிறுவனத்தின்படி, வெஸ்ட் நைல் வைரஸ் நரம்பியல் நோய்களை ஏற்படுத்தி மரணத்தை விளைவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
அதன் இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ள தகவலின்படி, இந்த வைரஸ் அதிகம் ஆப்பிரிக்கா, ஐரோப்பியா, மத்திய கிழக்கு, வட அமெரிக்கா மற்றும் மேற்கு ஆசிய பகுதிகளில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாரையெல்லாம் இந்த வைரஸ் பாதிக்கலாம்?
வெஸ்ட் நைல் வைரஸ் எந்த வயதிலான மனிதர்களையும் தாக்கக் கூடியது. ஆனாலும், 50 வயதுக்கு மேல் உள்ளவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் மற்றும் இதர கிளை நோய்கள் உள்ளவர்களுக்கு எளிதில் பாதிக்கும் என்று தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருத்துத்துறையின் எச்சரிக்கை அறிவிப்பு கூறுகிறது.
இந்த நோய்க்கான பரிசோதனைகள்

பட மூலாதாரம், Getty Images
இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டால் எலைசா (Elisa) மற்றும் ஆர்டிபிசிஆர் (RTPCR) சோதனைகள் மூலமே கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் சந்திரசேகர்.
இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தமிழக எல்லையில் உள்ள மாவட்டங்களில் எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி பிபிசி தமிழிடம் கூறியுள்ளார்.
தமிழகத்தில் பாதிப்பு ஏற்படுமா?
தற்போது வெளியிடப்பட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பு பொதுவாகவே கேரளாவில் ஏதாவது நோய்த்தொற்று ஏற்பட்டால், தமிழகத்தின் எல்லை மாவட்டங்களில் செய்யப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைதான் என்றும் கூறினார் ககன்தீப் சிங் பேடி.
மேலும், இதுவரை தமிழகத்தில் எந்தவிதமான நோய்த்தொற்றும் பதிவாகவில்லை என்றும், அதனால் கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை எனவும் நம்மிடம் தெரிவித்துள்ளார் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறையின் இயக்குநர் டாக்டர் செல்வவிநாயகம்.
இதுகுறித்துக் கூடுதல் விவரங்களைக் கேட்பதற்காக கோழிக்கோடு மாவட்ட மருத்துவ அதிகாரியைத் தொடர்பு கொண்டபோது, தற்போது கருத்து தெரிவிக்க இயலாது என்று கூறிவிட்டார்.
எப்படி தற்காத்து கொள்வது?

பட மூலாதாரம், CHANDRASEKAR
இந்த கொசுக்கள் அதிகம் தாவரங்கள் நிறைந்த பகுதிகள் மற்றும் நீர் தேங்கியுள்ள பகுதிகளில்தான் இருக்கும் என்று கூறுகிறார் மருத்துவர் சந்திரசேகர்.
எனவே, "வீட்டிற்கே அருகே எங்கும் தண்ணீர் தேங்கி நிற்காமல் பார்த்துக் கொள்வது, செடிகள் மற்றும் பூந்தொட்டிகளை முறையாகப் பராமரிப்பது, கொசு மருந்துப்புகை மூலம் கொசுக்களை விரட்டுவது என முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்."
அதேபோல், இந்த நோயின் அறிகுறிகள் லேசாகத் தென்பட்டாலோ அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தாலோ உடனடியாக பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றும் பரிந்துரைக்கின்றனர் மருத்துவர்கள்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












