இரான்: ஹிஜாப் எதிர்ப்புப் போராளியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற காவல்படை - எப்படி? பிபிசி புலனாய்வு

பதின்பருவ பெண் போராளியை பாலியல் வன்முறை செய்து கொலை செய்த இரான் பாதுகாப்புப் படையினர்: ரகசிய ஆவணத்தின் பின்னணி

பட மூலாதாரம், Atash Shakarami

படக்குறிப்பு, இரானில் பெண்களுக்கான கடுமையான ஆடைக் கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டங்களின் போது நிக்கா காணாமல் போனார். அப்போது அவருக்கு வயது 16.
    • எழுதியவர், பெர்ட்ரம் ஹில், ஐடா மில்லர் & மைக்கேல் சிம்கின்
    • பதவி, பிபிசி ஐ இன்வஸ்டிகேஷன்ஸ்

எச்சரிக்கை - இந்தச் செய்தியறிக்கையில் உள்ள புகைப்படங்களும் விளக்கங்களும் சில வாசகர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்.

இரானின் பாதுகாப்புப் படையில் பணிபுரியும் மூன்று ஆண்களால் பதின்பருவ பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். இந்த தகவல் இரான் பாதுகாப்புப் படையினரால் எழுதப்பட்டதாகக் கசிந்த ஒரு ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2022 இல் அரசுக்கு எதிரான போராட்டத்தின் போது காணாமல் போன 16 வயது பெண் நிக்கா ஷகராமிக்கு என்ன நடந்தது என்பது இந்த ஆவணத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. காணாமல் போன ஒன்பது நாட்களுக்குப் பிறகு அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. நிக்கா தற்கொலை செய்து கொண்டதாக அரசாங்கம் கூறியது.

இந்த ஆவண அறிக்கையில் உள்ள குற்றச்சாட்டுகளை குறித்து இரானின் அரசாங்கம் மற்றும் அதன் புரட்சிகர காவல் படையிடம் கேள்வி எழுப்பினோம். ஆனால் அவர்கள் பதிலளிக்கவில்லை.

"மிகவும் ரகசியமானது" எனக் குறிப்பிடப்பட்ட இந்த ஆவண அறிக்கையில் நிக்கா ஷகராமி வழக்கில் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை (IRGC) மேற்கொண்ட விசாரணை குறித்து சுருக்கமாக விளக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் நிக்காவை கொன்றவர்களின் பெயர்களும் உண்மையை மறைக்க முயன்ற மூத்த தளபதிகளின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.

மேலும், அன்று என்ன நடந்தது, நிக்கா எப்படி கொல்லப்பட்டார் என்பதும் விவரிக்கப்பட்டுள்ளது. அதில் சொல்லப்பட்ட தகவல்கள் மனதை உலுக்குகிறது. போராட்டத்தின் போது பாதுகாப்புப் படையினர் நிக்காவை தடுத்து நிறுத்தி, ரகசிய வேனுக்கு இழுத்துச் சென்றனர். காவலர்களில் ஒருவர் நிக்காவை பாலியல் ரீதியாக சித்ரவதை செய்துள்ளார்.

நிக்காவுக்கு கைவிலங்கிடப்பட்டு இருந்தாலும், காவலர்களுக்கு எதிராக கால்களை உதைத்தும் கூச்சலிட்டும் தன் எதிர்ப்பை அவர் வெளிப்படுத்தியுள்ளார். தன்னால் முடிந்த அளவுக்கு அவர்களை எதிர்த்துப் போராடியதால் ஆத்திரம் அடைந்த காவலர்கள் நிக்காவை தடியால் அடித்துள்ளனர். நிக்கா எதிர்ப்பு தெரிவித்ததால் அவரை அடித்து துன்புறுத்தினோம் என காவலர்கள் விசாரணையின் போது ஒப்புக் கொண்டதாக ரகசிய ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆவணம் நம்பகத்தன்மை உடையதா என்ற சந்தேகம் ஆரம்பத்தில் எங்களுக்கு இருந்தது. காரணம், ஏராளமான போலியான இரானிய ஆவணங்கள் புழக்கத்தில் உள்ளன. எனவே பிபிசி, இந்த ஆவணத்தில் இருக்கும் தகவல்களை, பல ஆதாரங்களை ஒப்பிட்டு, ஒவ்வொரு விவரத்தையும் பல மாதங்கள் சரிபார்த்தது. எங்கள் விரிவான விசாரணைகளுக்குப் பிறகு எங்கள் கைக்குக் கிடைத்துள்ள இந்த ஆவணங்கள் பதின்பருவ பெண் நிக்காவுக்கு நடந்தவற்றை விவரிக்கின்றன என்பதை உறுதி செய்தோம்.

நிக்காவை கண்காணித்த பாதுகாப்புப் படை

பதின்பருவ பெண் போராளியை பாலியல் வன்முறை செய்து கொலை செய்த இரான் பாதுகாப்புப் படையினர்: ரகசிய ஆவணத்தின் பின்னணி

பட மூலாதாரம், Social media

படக்குறிப்பு, நிக்கா தனது சகோதரி ஐடா உடன் இருந்த புகைப்படம்.

நிக்கா ஷகராமி காணாமல் போனது முதல் மரணித்த தகவல் வரை பரவலாக மக்கள் மத்தியில் பேசப்பட்டது. அவரது புகைப்படம் இரானில் சுதந்திரத்திற்காக பெண்கள் நடத்திய போராட்டத்தின் முகமாக மாறியது.

2022 இல் இலையுதிர் காலத்தில் இரான் முழுவதும் மக்கள் சாலைகளில் இறங்கி போராட்டங்கள் நடத்தினர். 'கட்டாய ஹிஜாப்' தொடர்பான கடுமையான விதிகளால் கோபமடைந்த பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

'பெண், வாழ்க்கை, சுதந்திரம்' என்ற இயக்கம் சில நாட்களுக்கு முன்பு 22 வயது பெண் மாசா அமினியின் மரணத்தால் வெகுண்டெழுந்தது. 'மாசா அமினி சரியாக ஹிஜாப் அணியவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டு, கைதாகி, போலீஸ் காவலில் ஏற்பட்ட காயங்களால் அவர் இறந்தார்.’ என்று ஐ.நா உண்மை கண்டறியும் குழு கூறுகிறது.

நிக்காவின் வழக்கில், போராட்டத்திலிருந்து காணாமல் போன ஒரு வாரத்திற்குப் பிறகு அவரது குடும்பத்தினர் அவரது உடல் சவக்கிடங்கில் இருப்பதை கண்டுபிடித்தனர். ஆனால், இரான் அதிகாரிகள் நிக்காவின் மரணம் போராட்டத்தின் போது ஏற்பட்டது என்று கூறி, அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று கூறி வழக்கை முடித்தனர்.

செப்டம்பர் 20 அன்று மாலை, நிக்கா காணாமல் போவதற்கு சற்று முன்பு, மத்திய தெஹ்ரானில் உள்ள லாலே பூங்காவிற்கு அருகில், குப்பைத்தொட்டி பக்கத்தில் நின்றபடி ஹிஜாப்களுக்கு தீ வைத்துப் போராட்டம் நடத்தியது வீடியோவாக பதிவு செய்யப்பட்டிருந்தது. அவரைச் சுற்றியிருந்த மற்றவர்கள் இரானின் உச்ச தலைவரான ஆயத்துல்லா அலி காமனெயி-யைக் குறிப்பிட்டு "சர்வாதிகாரி ஒழிக" என்று கோஷமிட்டனர்.

அந்த நேரத்தில் நிக்கா தான் கண்காணிக்கப்படுவதை அறிந்திருக்க வாய்ப்பில்லை. போராட்டம் தொடங்கியதில் இருந்தே பாதுகாப்புப் படையினர் நிக்காவை கண்காணித்ததாக ஆவணத்தில் எழுதப்பட்டுள்ளது.

பதின்பருவ பெண் போராளியை பாலியல் வன்முறை செய்து கொலை செய்த இரான் பாதுகாப்புப் படையினர்: ரகசிய ஆவணத்தின் பின்னணி

அறிக்கையில் இருப்பது என்ன?

இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை (IRGC) தலைமைத் தளபதியின் கூற்றுப்படி, போராட்டத்தை பல ரகசிய பாதுகாப்புப் பிரிவுகள் கண்காணித்தன. அந்த குழுக்களுடனான விரிவான பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் இந்த ஆவணத்தில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த ரகசிய பாதுகாப்பு குழுக்களில் ஒன்றுதான் டீம் 12. நிக்காவின் வழக்கத்திற்கு மாறான நடத்தை, அவரது மொபைல் ஃபோனுக்கு திரும்பத் திரும்ப வந்த அழைப்புகள் என அவர் மீதான சந்தேகத்தை அதிகரித்துள்ளது. எனவே, 'இந்த பதின்வயது பெண் தான் போராட்டத்தைத் தலைமை தாங்குகிறார்’ என பாதுகாப்புப் படை எண்ணியது.

நிக்கா உண்மையில் ஆர்ப்பாட்டத்தின் தலைவர்களில் ஒருவரா என்பதை உறுதிப்படுத்த, பாதுகாப்புப் படைப் பிரிவை சேர்ந்த அதிகாரி ஒருவரை போராட்டக் களத்துக்குள் அனுப்பி, போராளியாக நடிக்க வைத்தனர். பின்னர், அறிக்கையின்படி, அந்த காவலர் அவரை கைது செய்ய தனது குழுவை அழைத்தார். ஆனால் நிக்கா அந்த சமயத்தில் தப்பி விட்டார்.

பாதுகாப்புப் படையினரால் தான் துரத்தப்படுவதாக நிக்கா அன்றிரவு தனது நண்பருக்கு அலைபேசியில் தெரிவித்ததாக அவரது அத்தை பிபிசி பாரசீகத்திடம் கூறியிருந்தார்.

ஒரு மணிநேர தீவிரத் தேடுதல் பணிக்கு பின்னர், நிக்காவை அவர்கள் கைது செய்ததாக அறிக்கை கூறுகிறது. அவர் அக்குழுவின் ஃப்ரீசர் பொருந்திய ஒரு வாகனத்துக்குள் அடைக்கப்பட்டார்.

வாகனத்துக்கு முன்புறம் ஓட்டுநருடன் 'டீம் 12' குழுவின் தலைவர் மோர்டேசா ஜலீல் அமர்ந்து கொண்டார். அராஷ் கல்ஹோர், சதேக் மொன்ஜாசி மற்றும் பெஹ்ரூஸ் சதேகி ஆகிய அக்குழுவின் காவலாளிகள் மூன்று பேருடன் நிக்கா வாகனத்தின் பின்பகுதியில் இருந்தார்.

'டீம் 12' குழு நிக்காவை எங்கு அழைத்துச் செல்வது என்று தெரியாமல் வாகனத்தில் பயணித்துள்ளனர். அவர்கள் அருகில் இருந்த ஒரு தற்காலிக போலீஸ் முகாமில் விட முயற்சித்தார்கள். ஆனால் அங்கு போராளிகளின் கூட்டம் அதிகமாக இருந்ததால் அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

எனவே அவர்கள் 35 நிமிட பயண தூரத்தில் உள்ள போராட்ட தடுப்பு மையத்திற்குத் கொண்டு செல்ல திட்டமிட்டனர், அந்த தடுப்பு நிலைய தளபதி ஆரம்பத்தில் நிக்காவை அனுமதிக்க ஒப்புக்கொண்டாலும் பின்னர் மறுத்துவிட்டார்.

அந்த தளபதி புலனாய்வு விசாரணையின் போது கூறிய தகவல்களாக அறிக்கையில், "நிக்கா என்ற பெண் தொடர்ந்து அரசுக்கு எதிராக கோஷமிட்டார். தடுப்பு நிலையத்தில் ஏற்கனவே பல பெண் போராளிகளை பிடித்து வைத்திருக்கிறோம். நிக்கா இங்கு அழைத்து வரப்பட்டால் போராளிகளை தூண்டி, கோஷமிட வைப்பார், எனவே வர வேண்டாம் என்று சொல்லிவிட்டோம்" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

’நிக்கா கால்சட்டைக்குள் கையை வைத்திருந்தார்’

பதின்பருவ பெண் போராளியை பாலியல் வன்முறை செய்து கொலை செய்த இரான் பாதுகாப்புப் படையினர்: ரகசிய ஆவணத்தின் பின்னணி

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை - கோப்புப்படம்

தலைவர் மோர்டேசா ஜலீல் மீண்டும் தனது IRGC தலைமையகத்தை ஆலோசனைக்காக தொடர்பு கொண்டதாக அறிக்கை கூறுகிறது.

நிக்காவை தெஹ்ரானின் மோசமான எவின் சிறைச்சாலைக்கு அனுப்புமாறு உத்தரவு கிடைத்துள்ளது. அங்கு பயணிக்கும் சமயத்தில், வழியில், வாகனத்தின் இருண்ட பின்புறப் பெட்டியிலிருந்து சத்தம் கேட்கத் தொடங்கியது என்கிறார் மோர்டேசா.

அவர் கேட்ட சத்தம் எதனால் வந்தது என்பது எங்களுக்குத் தெரியும். நிக்காவைக் காவலில் வைத்திருக்கும் நபர்களிடமிருந்து ஆவணம் செய்யப்பட்ட தகவல்கள் வாயிலாக அங்கு நடந்தது விவரிக்கப்பட்டது.

மூவரில் ஒருவரான பெஹ்ரூஸ் சதேகி விசாரணையில் கொடுத்த தகவலின்படி, “தடுப்பு மையத்தால் நிராகரிக்கப்பட்ட பின்னர் மீண்டும் வாகனத்தில் ஏற்றப்பட்டவுடன், நிக்கா திட்டவும் கத்தவும் தொடங்கினார்.

அராஷ் கல்ஹோர் தன் காலுறைகளால் அவளது வாயை அடைத்தார், ஆனால் அவர் எதிர்த்துப் போராட ஆரம்பித்தார். பிறகு சதேக் [மோன்ஜாசி] அவரை வாகனத்தில் இருந்த ஃப்ரீஸர் பெட்டி மீது கிடத்தி, அவர் மீது ஏறி அமர்ந்தார். நிக்கா அமைதியானார்" என்று அவர் புலனாய்வாளர்களிடம் கூறினார்.

"என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் சில நிமிடங்களுக்குப் பிறகு அவர் மீண்டும் திட்ட ஆரம்பித்தார், அங்கு இருட்டாக இருந்ததால் என்னால் எதையும் பார்க்க முடியவில்லை, எனக்கு தாக்கிக் கொள்ளும் சத்தம் மட்டுமே கேட்க முடிந்தது." என்றார்.

அதன் பின்னர் அராஷ் கல்ஹோர் சொன்ன தகவல்கள் நம்மை அதிர்ச்சியில் உறைய வைக்கின்றன.

பதின்பருவ பெண் போராளியை பாலியல் வன்முறை செய்து கொலை செய்த இரான் பாதுகாப்புப் படையினர்: ரகசிய ஆவணத்தின் பின்னணி
படக்குறிப்பு, இது அசல் ஆவணத்தின் மறு உருவாக்கம் (ஆதாரத்தை அடையாளம் காணக்கூடிய சில தகவல்களைத் தவிர்த்து)

அராஷ் கல்ஹோர் "எனது ஃபோன் டார்ச்சை ஆன் செய்து பார்த்த போது, சதேக் மொன்ஜாசி 'நிக்கா கால்சட்டைக்குள் கையை வைத்திருந்தார்'. அதன் பிறகு நாங்கள் கட்டுப்பாட்டை இழந்தோம்” என்று விவரித்தார்.

"அதன் பின்னர் அங்கு என்ன நடக்கிறது என்பது தெரியவில்லை. ஆனால் நிக்காவை தாக்கும் சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது. நானும் கைகளால் அடிக்கவும், கால்களால் உதைக்கவும் தொடங்கினேன், நான் எங்கள் குழுவினரைத் தாக்குகிறேனா அல்லது நிக்காவை தாக்குகிறேனா என்பது உண்மையில் எனக்குத் தெரியாது.” என்றார்.

ஆனால் அராஷ் கல்ஹோரின் கூற்றுக்கு சதேக் மோன்ஜாசி முரண்பட்டார். “தொழில்முறை பொறாமையால் அவர் அப்படி சொல்கிறார். நிக்கா கால்சட்டைக்குள் நான் கை வைக்கவில்லை.” என்றார்.

ஆனால் நிக்கா மீது அமர்ந்து அவரின் பின்புறத்தை தொட்டபோது அவர் 'பாலியல் உணர்வு' அடைந்ததை மறுக்க முடியாது என்று புலனாய்வு விசாரணையில் ஒப்புக்கொண்டார்.

நிக்கா எரிச்சல் ஆகி, அவரது கைகள் பின்னால் கட்டப்பட்டிருந்த போதிலும் தன் மீது அமர்ந்திருந்த காவலாளியை நகங்களால் கீறியிருக்கிறார். தன் உடலை உலுக்கி காவலாளியை கீழே விழ செய்திருக்கிறார்.

பதின்பருவ பெண் போராளியை பாலியல் வன்முறை செய்து கொலை செய்த இரான் பாதுகாப்புப் படையினர்: ரகசிய ஆவணத்தின் பின்னணி
படக்குறிப்பு, இது அசல் ஆவணத்தின் மறு உருவாக்கம் (ஆதாரத்தை அடையாளம் காணக்கூடிய சில தகவல்களைத் தவிர்த்து)

நிக்காவுக்கு நடந்தது என்ன?

"நிக்கா என் முகத்தின் மீது எட்டி உதைத்தார், அதனால் நான் என்னை தற்காத்துக் கொள்ள வேண்டியிருந்தது." என்று சதேக் மோன்ஜாசி கூறியுள்ளார்.

வாகனத்தின் கேபினில் இருந்து, மோர்டேசா ஜலீல் டிரைவரிடம் வண்டியை நிறுத்தச் சொன்னார். வாகனத்தை நிறுத்தி பின்பக்கக் கதவை திறந்து பார்த்த போது, நிக்காவின் உயிரற்ற உடல் கிடந்தது. அவரின் முகம் மற்றும் தலையில் இருந்து ரத்தத்தை சுத்தம் செய்ததாக மோர்டேசா கூறினார். நிக்காவின் உடல் முழுவதும் பலத்த காயங்கள் காணப்பட்டன என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

நிக்காவின் தாய் தனது மகளை சவக்கிடங்கில் பார்த்தபோது உடல் முழுவதும் காயங்கள் இருந்ததாக சொன்னதும் மோர்டேசா சொன்னதும் ஒத்துப் போகிறது. மேலும் நிக்காவின் இறப்புச் சான்றிதழ் அக்டோபர் 2022 இல் பிபிசி பெர்சியனால் பெறப்பட்டது. அதில் "கடினமான பொருளால் தாக்கப்பட்ட பல காயங்கள்" அவர் உடலில் இருந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.

'டீம் 12' தலைவர் மோர்டேசா ஜலீல், ”வாகனத்தின் பின்புறத்தில் நிக்காவுக்கு என்ன நடந்தது என்பதைக் குறித்து விசாரணை நடத்த முயற்சிக்கவில்லை” என்பதை ஒப்புக்கொண்டார்.

"நான் நிக்காவின் உடலை எப்படி அப்புறப்படுத்துவது என்று மட்டுமே யோசித்துக் கொண்டிருந்தேன், யாரிடமும் எந்த கேள்வியும் கேட்கவில்லை. நான் கேட்டது ஒரே கேள்வி தான். 'அவள் மூச்சுவிடுகிறாளா?’ என்றேன், அதற்கு 'இல்லை, அவள் இறந்துவிட்டாள்' என்று பெஹ்ரூஸ் சதேகி பதிலளித்தார் என்று நினைக்கிறேன்." என மோர்டேசா ஜலீல் கூறியுள்ளார்.

கொலை செய்யப்பட்ட சடலத்துடன், ஜலீல் மூன்றாவது முறையாக IRGC-இன் தலைமையகத்தை அழைத்தார். இம்முறை, 'நயீம் 16' என்ற குறியீட்டுப் பெயருடன் கூடிய மூத்த அதிகாரியிடம் பேசினார்.

நயீம் 16 விசாரணையில், "எங்கள் நிலையங்களில் ஏற்கனவே இறப்புகள் ஏற்பட்டிருந்தன, மேலும் அந்த இறப்பு எண்ணிக்கை 20ஆக உயருவதை நான் விரும்பவில்லை. எனவே இங்கு நிக்காவின் சடலத்தைக் கொண்டு வர நான் ஒப்புக் கொள்ளவில்லை” என்றார்.

அவர் ஜலீலிடம் "அந்த சடலத்தை தெருவில் தூக்கி எறிந்து விடுங்கள்" என்று கூறியிருக்கிறார். தெஹ்ரானின் யாதேகர்-இ-எமாம் நெடுஞ்சாலையின் கீழ் ஒரு அமைதியான தெருவில் நிக்காவின் உடலை விட்டுச் சென்றதாக ஜலீல் குறிப்பிட்டிருக்கிறார்.

"வாகனத்தின் பின்புறத்தில் நிக்காவுக்கு பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்யப்பட்டதால் அடிதடி சூழல் ஏற்பட்டது. டீம் 12 குழுவின் தாக்குதல்கள் நிக்காவின் மரணத்திற்கு காரணமாக அமைந்தது” என்று இந்த விசாரணை முடிவில் கூறப்பட்டுள்ளது.

"மூன்று தடிகள் மற்றும் மூன்று டேசர்கள் பயன்படுத்தப்பட்டன. அதில் எந்த ஆயுதத்தின் அடி அவளை மரணிக்க வைத்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை," என்று அந்த அறிக்கை கூறுகிறது.

நிக்காவிற்கு என்ன நடந்தது என்ற அரசாங்கத்தின் கூற்றுடன் இந்த அறிக்கை முரண்படுகிறது. அவரின் இறுதிச் சடங்கிற்கு ஒரு மாதத்திற்குப் பிறகு, அரசு தொலைக்காட்சி அதிகாரப்பூர்வ விசாரணையின் முடிவுகளை ஒளிபரப்பியது. நிக்கா ஒரு கட்டிடத்தில் இருந்து குதித்து இறந்ததாக செய்தி வெளியிட்டது.

நிக்கா ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நுழைவதை போன்ற சிசிடிவி காட்சி அடங்கிய காணொளி செய்தியில் காட்டப்பட்டது, ஆனால் நிக்காவின் தாயார் பிபிசி பெர்ஷியனுக்கு ஒரு தொலைபேசி பேட்டியில் "அந்த நபர் நிக்கா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை" என்று கூறினார்.

பிபிசி ஆவணப்படத்தில் போராளிகளின் மரணங்கள் குறித்து அதிகாரிகள் கூற்றுகளை பற்றி விவாதிக்கையில் நஸ்ரின் ஷகராமி "அவர்கள் பொய் சொல்கிறார்கள் என்பதை நாங்கள் அனைவரும் அறிவோம்," என்று கூறினார்.

சகோதரி கைது

ஹெஸ்பொல்லா அமைப்பு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஹெஸ்பொல்லா அமைப்பு: கோப்புப்படம்

பிபிசி ஐ (BBC Eye), இந்த விசாரணை அறிக்கையின் உண்மைத்தன்மையை தீவிரமாக ஆய்வு செய்தது. சில சமயங்களில், அதிகாரப்பூர்வ இரானிய ஆவணங்கள் மற்றும் இணையத்தில் புழக்கத்தில் உள்ள பிற ஆவணங்கள் கூட போலியானவை என்று கண்டறியப்படுகிறது.

எவ்வாறாயினும், இந்த போலி ஆவணங்களில் பெரும்பாலானவை எளிதில் பொய்யானது என கண்டுபிடிக்கப்படுகின்றன. ஏனெனில் அந்த அறிக்கைகள் அதிகாரப்பூர்வ வடிவமைப்பில் இருந்து வேறுபடுகின்றன. பிழையான தலைப்பு அல்லது குறிப்பிடத்தக்க இலக்கண அல்லது எழுத்துப் பிழைகளை கொண்டிருக்கின்றன.

எங்கள் விசாரணையை மையப்படுத்திய ஆவணத்திலும் இதுபோன்ற சில முரண்பாடுகள் இருந்தன. உதாரணமாக, அறிக்கையில் மேற்கோள் காட்டப்பட்ட 'நஜா' போலீஸ் படை அந்த காலகட்டத்தில் 'ஃபராஜா' என்று அழைக்கப்பட்டது.

எனவே, ஆவணத்தின் உண்மைத்தன்மையை மேலும் சோதிக்க, நூற்றுக்கணக்கான முறையான ஆவணங்களை கையாண்ட அனுபவம் மிக்க முன்னாள் இரானிய உளவுத்துறை அதிகாரியிடம் கொடுத்தோம்.

அவர் IRGC நிலையத்திற்கு அழைப்பு விடுத்தார். இரானில் உள்ள மூத்த உளவுத்துறை அதிகாரிகளுக்கு ஒவ்வொரு நாளும் வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ குறியீட்டைப் பயன்படுத்தி இந்த அறிக்கை உண்மையில் இருந்ததாகக் கூறப்படும் ஒரு வழக்கை பற்றியதா என்பதை சரிபார்க்க சொன்னார்.

அந்த ரகசிய அறிக்கை, 2022ஆம் ஆண்டு அரசாங்க எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீதான 322 பக்க வழக்கு கோப்பின் ஒரு பகுதி என்று அறிக்கையின் எண் காட்டியதாகவும் அவர் உறுதிப்படுத்தினார்.

அதன்படி, 100% உறுதியாக இருக்க முடியாது என்றாலும், இது உண்மையானது என்ற நம்பிக்கையை எங்களுக்கு அளித்தது.

IRGC-ஐ அவர் தனிப்பட்ட முறையில் அணுகியது மற்றொரு மர்மத்தை விலக்கவும் எங்களுக்கு உதவியது. நிக்காவின் உடலைத் தூக்கி எறியுமாறு குழுவிடம் கூறிய அந்த 'நயீம் 16' இன் அடையாளம் தெரியவந்தது.

அந்த முன்னாள் உளவுத்துறை அதிகாரி மற்றொரு அழைப்பு மேற்கொண்டு நயீம் 16 யாரின் குறியீடு என்பதைக் கேட்டறிந்தார். இந்த முறை இரானின் இராணுவ அமைப்பில் உள்ள ஒருவருக்கு அழைப்பு விடுத்து. நயீம் 16ஐ IRGC-யில் பணிபுரியும் கேப்டன் முகமது ஜமானிக்கான அழைப்பு அடையாளம் என்ற தகவலை எங்களுக்கு சொன்னார்.

நிக்காவின் மரணம் தொடர்பான ஐந்து மணி நேர விசாரணையில் கலந்து கொண்டவர்களில் ஒருவராக அந்தப் பெயர் பட்டியலிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை குறிப்பிட்டு, நாங்கள் IRGC மற்றும் இரான் அரசாங்கத்திடம் குற்றச்சாட்டுகளை முன்வைத்தோம். அவர்கள் பதிலளிக்கவில்லை.

எங்களுக்குத் தெரிந்தவரை, நிக்காவின் மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படவில்லை, அது ஏன் என்று அந்த ரகசிய ஆவணத்தை பார்த்தாலே யூகிக்க முடியும். விசாரணைக்கு வந்த டீம் 12 குழு உட்பட அனைவரின் பெயர்களும் அறிக்கையில் பட்டியலிடப்பட்டுள்ளன. அவர்களின் பெயருக்கு அருகே, வலதுபுறம் அவர்கள் சேர்ந்த குழு, 'ஹெஸ்பொலா' என குறிப்பிடப்பட்டுள்ளது.

இது இரானிய துணை இராணுவக் குழுவான ஹெஸ்பொலாவைக் குறிக்கிறது. இது அதேபெயரில் உள்ள லெபனான் குழுவுடன் தொடர்பில்லாதது. அதன் உறுப்பினர்கள் IRGC-ஆல் பயன்படுத்தப்படுகிறார்கள், ஆனால் சில சமயங்களில் அதன் அதிகார வரம்பிற்கு வெளியே செயல்படுகிறார்கள், இதனை அறிக்கை ஒப்புக் கொள்வது போல் தெரிகிறது.

"மேற்கண்ட நபர்கள் ஹெஸ்பொலாவின் படைகளைச் சேர்ந்தவர்கள் என்பதால், தேவையான பொறுப்புகள் மற்றும் பாதுகாப்பு உத்தரவாதங்களை பெறுவதற்கு அப்பால் இந்த வழக்கைப் பின்தொடர்வது சாத்தியமில்லை" என்று அது கூறுகிறது. மறுபுறம், IRGC அதிகாரி நயீம் 16, எழுத்துப்பூர்வமாக கண்டிக்கப்பட்டு இருக்கிறார் என்பதையும் அறிக்கை கூறுகிறது.

551 எதிர்ப்பாளர்கள் இரானின் 'பெண், வாழ்க்கை, சுதந்திர' இயக்கத்தின் போராட்டத்தின் போது பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டனர், அவர்களில் பெரும்பாலோர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதாக ஐநாவின் உண்மை கண்டறியும் குழு தெரிவித்துள்ளது.

பாதுகாப்புப் படையினரின் கொடூரமான ஒடுக்குமுறை காரணமாக சில மாதங்களுக்குப் பிறகு போராட்டங்கள் தணிந்தன. இரானின் அறநெறிப் படையின் நடவடிக்கைகளில் ஒரு மந்த நிலை ஏற்பட்டது, ஆனால் இஸ்லாமிய ஆடைக் குறியீட்டின் மீறல்கள் மீதான புதிய ஒடுக்குமுறை கடந்த மாத தொடக்கத்தில் தொடங்கியது. இதில் கைது செய்யப்பட்டவர்களில் நிக்காவின் மூத்த சகோதரி ஐடாவும் ஒருவர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)