'அந்த பயங்கரத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை' - பிபிசி காஸா செய்தியாளரின் நேரடி அனுபவம்

பிபிசி செய்தியாளரின் அனுபவங்கள்
படக்குறிப்பு, அட்னான், பல வாரங்கள் தனது குடும்பத்தை பிரிந்து வாழ்ந்தார்.
    • எழுதியவர், அட்னான் அல்-புர்ஷ்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

எச்சரிக்கை - இந்த அறிக்கையில் உள்ள புகைப்படங்களும் விளக்கங்களும் சில வாசகர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்.

ஏறக்குறைய மூன்று மாதங்களாக, அட்னான் அல்-புர்ஷ் காஸாவிலிருந்து போரைப் பற்றிய செய்திகளை அளித்துக் கொண்டிருந்தார். கூடாரத்தில் வாழ்ந்து, ஒரு நாளைக்கு ஒருவேளை மட்டுமே சாப்பிட்டு, தனது மனைவியையும் ஐந்து குழந்தைகளையும் பாதுகாப்பாக வைத்திருக்கவும் அவர் போராடியிருக்கிறார்.

பிபிசி அரபு நிருபர்கள், போரைப் பற்றிய செய்திகளைச் சேகரிக்கும் போது தாங்கள் எதிர்கொண்ட திகிலூட்டும் தருணங்களைப் பகிர்ந்துள்ளனர்.

காஸாவில் ஒரு செய்தியாளராக வேலை பார்த்த போது தான் எதிர்கொண்டதை பிபிசியிடம் பகிர்ந்துகொள்கிறார் அட்னான் அல்-புர்ஷ்.

'குடும்பத்துடன் தெருவில் உறங்கினோம்'

பிபிசி செய்தியாளரின் அனுபவங்கள்
படக்குறிப்பு, அட்னான் மற்றும் அவரது குடும்பத்தினர் வாடகைக்கு எடுக்க முடிவு செய்திருந்த குடியிருப்பில் வெடிகுண்டு வீசப்படும் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டதால், தெருவில் உறங்கினர்

குடும்பத்துடன் அனைவரும் சாலையில் தூங்கிய தருணம் தான், கடந்த ஆறு மாதங்களில் மிகவும் மோசமான தருணங்களில் ஒன்று. தெற்கு காஸாவில் உள்ள கான் யூனிஸ் தெருவில் கடும் குளிரில் என் மனைவி மற்றும் குழந்தைகளின் முகத்தைப் பார்த்துக்கொண்டு நிராதரவாக நின்றேன்.

எனது 19 வயது இரட்டைப் பிள்ளைகளான ஜக்கியா மற்றும் படூல் அவர்களின் 14 வயது சகோதரி யும்னாவுடன் நடைபாதையில் தூங்கினர்.

எனது எட்டு வயது மகன் முகமது மற்றும் ஐந்து வயது இளைய மகள் ரஸான் அவர்களின் தாய் ஜைனப் உடன் உறங்கினர்.

பாலத்தீன ரெட் கிரசண்ட் சொசைட்டியின் (செஞ்சிலுவைச் சங்கம்) தலைமையகத்திற்கு வெளியே நாங்கள் ஓய்வெடுக்க முயன்ற போது, ​​இரவு முழுவதும் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது. ட்ரோன்கள் மேலே பறந்து கொண்டிருந்தன.

நாங்கள் ஒரு அடுக்குமாடி குடியிருப்பை வாடகைக்கு எடுக்க ஏற்பாடு செய்திருந்தோம், ஆனால் கட்டிடத்தின் மீது குண்டு வீசப் போவதாக இஸ்ரேலிய ராணுவம் எச்சரித்ததாக வீட்டு உரிமையாளர் அன்றே எங்களிடம் கூறினார்.

நான் அப்போதும் வேலை செய்து கொண்டிருந்தேன், ஆனால் எனது குடும்பத்தினர் தங்கள் உடைமைகளுடன் அங்கிருந்து வெளியேறினர்.

பிபிசி செய்தியாளரின் அனுபவங்கள்
படக்குறிப்பு, பிபிசி குழுவானது கான் யூனிஸில் உள்ள நாசர் மருத்துவமனை அருகே கூடாரத்தில் இருந்து வேலை செய்தது.

'குடும்பத்தைக் காப்பாற்ற முடியாத குற்றவுணர்ச்சி'

நாங்கள் அனைவரும் செஞ்சிலுவை தலைமையகத்தில் சந்தித்தோம், அங்கு ஏற்கனவே இடம்பெயர்ந்த மக்கள் பெருமளவில் திரண்டிருந்தனர்.

நானும் என் சகோதரனும் இரவு முழுவதும் அட்டைப் பெட்டிகளில் அமர்ந்து என்ன செய்வது என்று விவாதித்தோம். வடக்கு காஸாவில் இருந்த அனைவரையும் தெற்கு நோக்கிச் செல்லுமாறு இஸ்ரேலிய ராணுவம் கேட்டுக் கொண்டதால், அக்டோபர் 13 அன்று எனது குடும்பம் ஜபாலியா நகரத்தை விட்டு வெளியேறியது.

எங்களது வீடு மற்றும் பெரும்பாலான பொருட்களை அங்கேயே விட்டுவிட்டு வெளியேறினோம். ஆனால் இப்போது எந்த இடத்திற்கு இஸ்ரேலிய ராணுவம் செல்லச் சொன்னதோ, அதே இடத்தில் குண்டுவெடிப்பில் இருந்து நூலிழையில் தப்பித்தோம்.

இந்த நேரத்தில் எதையும் தெளிவாகச் சிந்திப்பது மிகவும் கடினம். நான் கோபமாகவும் அவமானமாகவும் உணர்ந்தேன். எனது குடும்பத்தை ஏன் என்னால் பாதுகாக்க முடியவில்லை? என்ற குற்றவுணர்ச்சி ஏற்பட்டது.

ஒருவழியாக கான் யூனிஸில் உள்ள நாசர் மருத்துவமனையில் ஒரு கூடாரத்தில் பிபிசி குழுவுடன் நான் தங்கியிருந்த போது, ​​எனது குடும்பம் மத்திய காஸாவில் உள்ள நுசைரத்தின் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் குடியேறினார்கள். சில நாட்களுக்கு ஒருமுறை என் குடும்பத்தைச் சந்திக்கச் செல்வேன்.

இணையம் மற்றும் தொலைபேசி சிக்னல்கள் பலமுறை துண்டிக்கப்பட்டதால் அவர்களோடு தொடர்புகொள்வது மிகவும் கடினமாக இருந்தது. ஒருமுறை நான்கைந்து நாட்களுக்கு என் குடும்பத்துடன் பேச முடியாத நிலை இருந்தது.

பிபிசி செய்தியாளரின் அனுபவங்கள்
படக்குறிப்பு, அட்னான், தனது நண்பரின் குடும்ப உறுப்பினர்கள் கொல்லப்பட்ட நாளில் நேரலையில் அழுதார்.

‘நேரடி ஒளிபரப்பின் போது அழுதேன்’

கான் யூனிஸின் பிபிசி குழுவில் நாங்கள் ஏழு பேர் இருந்தோம். ஒரு நாளைக்கு ஒருவேளை உணவு தான் கிடைத்து வந்தது. சில நேரங்களில் உணவு இருந்தாலும், கழிப்பறை இல்லாததால் மீதம் இருவேளை சாப்பிட மாட்டோம்.

இதற்கிடையில், எனது நண்பரும் அல் ஜசீரா பணியகத்தின் தலைவருமான வயேல் டாடோ இந்தப் போருக்காக ஒரு பெரிய விலையைக் கொடுத்தார்.

அவரது குடும்பத்தினர் வசித்து வந்த வீட்டை குறிவைத்து இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் அவரது மனைவி, சிறு மகன், ஏழு வயது மகள் மற்றும் ஒரு வயது பேரன் ஆகியோர் உயிரிழந்தனர்.

பொதுமக்களின் உயிரிழப்பைக் குறைக்க ‘முடிந்தவரை எச்சரிக்கையாக’ இருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் கூறுகிறது. இந்தத் தாக்குதலில் , 'ஹமாஸ் தீவிரவாதிகளின் முகாம்கள் மட்டுமே குறிவைக்கப்பட்டதாக' இஸ்ரேல் கூறியது.

20 வருடங்களாக எனக்கு நன்கு பரிச்சயமான எனது நண்பர் அழும் காட்சிகளைப் பார்த்தேன். அவர் மத்திய காஸாவில் தனது குழந்தைகளின் மூடிய உடல்களைத் தழுவியவாறு கண்ணீருடன் இருந்தார். அந்த நேரத்தில் நான் அவருடன் இருக்க விரும்பினேன்.

எனது நண்பர்கள், உறவினர்கள் மற்றும் அண்டை வீட்டாரின் மரணச் செய்திகள் எனக்கு தொடர்ந்து வந்து கொண்டிருந்த போது இந்தச் செய்தியும் வந்தது.

அன்று நான் நேரலையில் பேசிக் கொண்டிருக்கும்போதே அழுதேன். நான் இரவில் அடிக்கடி கண்விழிப்பேன், என் கன்னங்கள் கண்ணீரால் நனைந்திருக்கும். நண்பர் வயேல் அழுத காட்சிகள் என் மனதை விட்டு நீங்கவில்லை.

கடந்த 15 ஆண்டுகளில் காஸாவில் நடந்த பல மோதல்களை நான் செய்திகளாக விவரித்துள்ளேன் ஆனால் இந்தப் போர் வித்தியாசமானது. முன்னெப்போதும் இல்லாத அளவு தாக்குதல்கள் நடத்தப்பட்டதால், ஏராளமான மக்கள் இழப்புகளைச் சந்தித்துள்ளனர்.

பிபிசி செய்தியாளரின் அனுபவங்கள்
படக்குறிப்பு, இஸ்ரேல் எச்சரித்ததையடுத்து, ஆயிரக்கணக்கான மக்கள் வடக்கு காஸாவிலிருந்து வெளியேற வேண்டியிருந்தது.

ரேஷன் கடைகள் மீது தாக்குதல்

அக்டோபர் 7-ஆம் தேதி காலை 6.15 மணிக்கு எழுந்தேன், என் குழந்தைகள் அலறிக் கொண்டிருந்தார்கள். நான் மேல்தளத்திற்கு சென்று பார்த்தேன், இஸ்ரேலில் இருந்து காஸா மீது ராக்கெட்டுகள் ஏவப்படுவதைக் கண்டேன்.

ஹமாஸ் இஸ்ரேலுக்குள் நுழைந்ததாகவும், இந்த தாக்குதலில் 1,200 பேர் உயிரிழந்ததாகவும் தெரிய வந்தது. 250 இஸ்ரேலியர்கள் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டுள்ளனர், எனவே இஸ்ரேலின் பதிலடி நாங்கள் இதுவரை பார்த்திராத ஒன்றாக இருக்கும் என்பது எங்களுக்குத் தெரியும்.

ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, காஸாவில் இதுவரை 34,000 பேர் இறந்துள்ளனர், ஆனால் போர் தொடர்கிறது. இன்னும் மக்களின் உயிருக்கு ஆபத்து உள்ளது.

போர் ஆரம்பித்து இரண்டு நாட்களாகியிருந்ததால், ஜபாலியாவில் உள்ள ஒரு சந்தைக்குப் பொருட்கள் வாங்கச் சென்றேன். என்னைப் போலவே பொருட்களை வாங்க ஏராளமானோர் அங்கு கூடியிருந்தனர்.

நான் அந்த பகுதியை விட்டு வெளியேறிய பத்து நிமிடங்களில் அந்த பகுதியில் பலத்த குண்டுவெடிப்பு ஏற்பட்டது. அங்கிருந்த பெரிய ரேஷன் கடைகளும் இடிந்து நாசமாயின.

இந்த குண்டுவெடிப்பில் 69 பேர் கொல்லப்பட்டதாகவும், இந்த தாக்குதல் போர்க்குற்றமாக விசாரிக்கப்பட வேண்டும் என்றும் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக பிபிசியின் கேள்விகளுக்கு இஸ்ரேல் ராணுவம் இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை.

'எனது வீடு முற்றிலும் சேதமடைந்தது'

பிபிசி செய்தியாளரின் அனுபவங்கள்
படக்குறிப்பு, கான் யூனிஸில் இருந்த பிபிசி குழு உறுப்பினர்கள் இந்த நிலையில் தான் வாழ வேண்டியிருந்தது.

போர் முழுவதும், ஹமாஸ் தளங்களை மட்டுமே குறிவைப்பதாகவும், மேலும் ஹமாஸ் தளங்கள் பொதுமக்கள் வசிக்கும் இடத்தில் உள்ளன என்றும் இஸ்ரேல் கூறுகிறது. ‘ராணுவ இலக்குகள் மீதான தாக்குதல்கள் சர்வதேச சட்டத்தின் தொடர்புடைய விதிகளின்படியே உள்ளன,’ என்றும் அது கூறியுள்ளது.

போருக்கு முன்பு, ஜபாலியா ஒரு அழகான, அமைதியான நகரமாக இருந்தது. நான் அங்குதான் பிறந்தேன், என் குடும்பத்துடன் எளிமையான, திருப்தியான வாழ்க்கையை வாழ்ந்தேன். எதிர்காலத்திற்கான திட்டங்கள் இருந்தன.

இந்த நகரத்தின் கிழக்கே எனக்கு பண்ணைகள் இருந்தன, அங்கு நான் ஆலிவ், எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு மரங்களை என் கைகளால் நட்டேன். அது மிகவும் அமைதியான இடம், மாலையில் வேலை முடிந்ததும் அங்கு அமர்ந்து தேநீர் அருந்துவது எனக்கு மிகவும் பிடிக்கும்.

கான் யூனிஸ் செல்ல வடக்கு காஸாவை விட்டு வெளியேற முடிவு செய்த நாள், நான் காஸா நகரில் இருந்த எனது வீட்டையும் பிபிசி அலுவலகத்தையும் விட்டு வெளியேறினேன், அது என் வாழ்க்கையில் மிக முக்கியமான தருணமாக இருக்கும் என்று எனக்குத் தெரியும்.

ஒரு காரில் 10-க்கும் மேற்பட்ட நபர்களுடன், நானும் எனது குடும்பத்தினரும், சாமான்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்டோம். ஆயிரக்கணக்கானவர்கள் தெற்கு நோக்கிய ஒரு சாலையில் நடந்தும், சில வாகனங்களிலும் சென்றுக் கொண்டிருந்தார்கள்.

நாங்கள் தெற்கு காஸாவுக்குச் சென்று கொண்டிருந்தபோது, ​​சாலையின் இருபுறமும் குண்டுவெடிப்புகள் நடந்தன. பயணத்தை நிறுத்த வேண்டியதாயிற்று. வழியில், என் குழந்தைகள் என்னிடம் கேட்டார்கள், "நாம் எங்கே போகிறோம்? நாளைக்கு மீண்டும் வருவோமா?”

நான் வீட்டை விட்டு வெளியேறும்போது எனது புகைப்பட ஆல்பத்தை என்னுடன் எடுத்துச் செல்ல விரும்பினேன். அதில் எனது குழந்தைப் பருவம், பெற்றோர், மனைவி மற்றும் எனது நிச்சயதார்த்தப் புகைப்படமும் இருந்தது. என் தந்தைக்கு சொந்தமான புத்தகங்களை என்னுடன் கொண்டு வந்திருக்கலாம்.

எனது தந்தை அரபு மொழி ஆசிரியர். அவர் மறைவுக்குப் பிறகும் அவருடைய புத்தகங்களை நான் வைத்திருந்தேன். பின்னர் எனது வீடு முற்றாக இடிந்து கிடப்பதை எனது பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் மூலம் அறிந்து கொண்டேன். எனது வயல்கள், பண்ணைகள் எரிக்கப்பட்டன.

காஸாவில் இருந்து இஸ்ரேலுக்கு கொண்டுசெல்லப்பட்ட உடல்கள்

பிபிசி செய்தியாளரின் அனுபவங்கள்
படக்குறிப்பு, அல் ஜசீரா பணியகத்தின் தலைவர் வயேல் டாடோ இரண்டு தனித்தனி வான்வழித் தாக்குதல்களில் தனது குடும்ப உறுப்பினர்களை இழந்தார்.

அந்த பயங்கரமான பயணத்திற்கு பிறகு தான், ஓர் இரவு ரெட் கிரசண்ட் தலைமையகத்திற்கு வெளியே தெருவில் உறங்கினோம். பின்னர் நான் கான் யூனிஸில் பல வாரங்கள் தொடர்ந்து வேலை செய்தேன். என் குடும்பம் அப்போது நுசைரத்தில் இருந்தது. அவர்களைப் பிரிந்து இருந்தது எனக்கு உளவியல் ரீதியாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

பல நாட்கள் பல உணர்வுகளுடன் போராடினேன். பின்னர் இஸ்ரேலிய படைகள் முன்னேறி வருவதாகவும், தெற்கை மத்திய மற்றும் வடக்கு காஸாவிலிருந்து பிரிப்பதே அதன் நோக்கமாக இருப்பதாகவும் செய்திகள் வந்தன.

நானோ என் குடும்பமோ கொல்லப்படுவோம், இனி ஒருவரையொருவர் பார்க்க மாட்டோம் என்று பயந்தேன்.

முதல் முறையாக நான் தோற்றுவிட்டதாக உணர்ந்தேன். அது எந்த நாள் என்று கூட நினைவில்லை. வேலையை நிறுத்திவிட்டு என் குடும்பத்திடம் செல்ல நினைத்தேன். இறந்தால் ஒன்றாகவே இறக்க விரும்பினேன்.

இறுதியாக டிசம்பர் 11 அன்று, நான் ஒரு சக ஊழியருடன் நுசைரத்துக்குப் புறப்பட்டேன். நான் அவ்விடத்தை அடைந்ததும், என் குழந்தைகள் என்னைக் கட்டிப்பிடித்து அழுதனர். என் மகன் ரசான் என் கழுத்தை இறுக்கமாகக் கட்டிக்கொண்டான்.

எப்படியோ குடும்பத்துடன் ரஃபாவை அடைந்தோம். பிபிசி குழுவும் ரஃபாவை அடைந்தது, நாங்கள் அங்கிருந்து பணியைத் தொடர்ந்தோம்.

டிசம்பர் பிற்பகுதியில், இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (ஐ.டி.எப்- IDF) சுமார் 80 உடல்களை காஸாவில் உள்ள அதிகாரிகளிடம் ஒப்படைத்ததாக நான் செய்தியில் தெரிவித்தேன்.

அவர்களில் யாரேனும் இஸ்ரேலிய பணயக்கைதிகளா என்பதை ஆய்வு செய்ய அந்த உடல்கள் காஸாவில் இருந்து இஸ்ரேலுக்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்டதாக ஐ.டி.எப் கூறியது.

ரஃபாவில் உள்ள ஒரு கல்லறைக்குள் ஒரு பெரிய லாரி நுழைந்தது. கொள்கலனை திறந்ததும் துர்நாற்றம் எங்கும் பரவியது.

கவசங்கள் மற்றும் முகமூடிகளை அணிந்த மக்கள் மணல் நிலத்தில் ஒரு வெகுஜன புதைகுழியைத் தோண்டி நீல பிளாஸ்டிக் கவர்களில் சுற்றப்பட்ட உடல்களின் எச்சங்களை புதைத்தனர்.

இதுபோன்ற ஒரு காட்சியை நான் இதற்கு முன்பு பார்த்ததில்லை, அது எவ்வளவு பயங்கரமானது என்பதை விவரிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை.

பிபிசி செய்தியாளரின் அனுபவங்கள்

பட மூலாதாரம், Adnan El-Bursh

படக்குறிப்பு, போருக்கு முன்னர் அட்னானும் அவரது குடும்பத்தினரும் வாழ்ந்த வீடு தற்போது முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளது

பின்னர் ஜனவரியில், பல உடல்கள் கொண்டு வரப்பட்டபோது நான் ரஃபாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் இருந்து செய்தி அளித்துக் கொண்டிருந்தேன். அதில் அல் ஜசீரா பத்திரிகையில் பணியாற்றிய பத்திரிக்கையாளர் வயேலின் மூத்த மகன் ஹம்சாவின் சடலமும் இருந்தது.

ஆனால் இதைப் பற்றி வயேலுக்கு யார் தெரிவித்திருப்பார்கள்? அவருக்கு ஏற்கனவே மோசமான ஒரு துயரச் சம்பவம் நடந்துவிட்டது, இதை அவரிடம் சொல்ல முடியாது என்று தோன்றியது. எனது சக ஊழியர்களில் ஒருவர் வயேலின் நெருங்கிய உறவினர்களை அழைத்து, இந்தச் செய்தியை அவர்களுக்குத் தெரிவித்தார்.

ஹம்சாவும் அவரது வீடியோகிராபர் முஸ்தபா துரையாவும் இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டனர். அந்தக் குறிப்பிட்ட பகுதியில் அதற்கு முன் நடந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக செய்தி அளித்துக் கொண்டிருக்கும்போதே அவரது கார் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

அவர்கள் ‘காஸாவை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்புகளின் உறுப்பினர்கள்' என்று இஸ்ரேலிய ராணுவம் குற்றம் சாட்டுகிறது. அவர்களது குடும்பமும் அல் ஜசீராவும் இந்தக் கூற்றுகளை பொய் என்று நிராகரிக்கின்றன.

அவர்கள் இரண்டு பேரும் ஐ.டி.எஃப் வீரர்களுக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் ட்ரோன்களை இயக்கியதாக ஐ.டி.எப் கூறுகிறது, ஆனால் வாஷிங்டன் போஸ்ட் விசாரணையில் ‘அவர்கள் இருவரும் அந்த நாளில் ட்ரோன் இயக்கத்தில் ஈடுபட்டதாக எந்த அறிகுறியும் இல்லை.’ என்று கூறுகிறது.

'இந்த உணவு எனக்கு விஷமாகத் தெரிகிறது'

பிபிசி செய்தியாளரின் அனுபவங்கள்
படக்குறிப்பு, அட்னான் மற்றும் பிபிசி குழு இறுதியாக பிப்ரவரியில் காஸாவை விட்டு வெளியேறியது.

ரிப்போர்ட்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ் (Reporters Without Borders) அமைப்பின் கருத்துப்படி, 100-க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள், அவர்களில் பெரும்பாலோர் பாலத்தீனர்கள், அக்டோபர் 7 முதல் காஸாவில் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆனால் ஐ.டி.எப், "எந்தவொரு பத்திரிகையாளரையும் நாங்கள் வேண்டுமென்றே குறிவைத்ததில்லை. ஊடகவியலாளர்கள் உட்பட எந்தவொரு பொதுமக்களுக்கும் குறைந்தபட்ச ஆபத்து மட்டுமே ஏற்படுவதை உறுதிசெய்ய நாங்கள் எல்லா முயற்சிகளையும் செய்கிறோம்'” என்று கூறுகிறது.

இறுதியாக பிபிசி குழுவின் குடும்பத்தினர் காஸாவை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டதாக எங்களுக்கு செய்தி வந்தது. நான்கு வாரங்களுக்குப் பிறகு, நாங்களும் எகிப்திய அதிகாரிகளின் உதவியுடன் ரஃபாவை விட்டு வெளியேற முடிந்தது.

நான் இதை எழுதும்போது, கத்தாரில் அமர்ந்திருக்கிறேன். ஆனால் ஜபாலியாவில் உள்ள மக்கள், எப்படியாவது தங்கள் விலங்குகளுக்கு தீவனம் அளிக்க புல் பறித்து அதை அரைத்துக் கொண்டிருப்பார்கள் என்று எனக்குத் தெரியும்.

அதேசமயம் இங்கே நான் ஹோட்டலில் சுத்தமான உணவுடன் அமர்ந்திருக்கிறேன். என்னால் இந்த உணவைச் சாப்பிட முடியவில்லை, இந்த உணவு முழுவதும் விஷம் நிரம்பியுள்ளது போல நான் உணர்கிறேன்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)