ஜப்பான்: இரு அணுகுண்டுகளின் பேரழிவில் இருந்து மீண்டுவர அனிமேக்கள் உதவியது எப்படி?

ஜப்பான் மக்களிடம் அணுகுண்டு ஏற்படுத்திய வலியைக் குறைக்க உதவிய அனிமே, மாங்கா

பட மூலாதாரம், Getty Images/Tezuka Productions Co., Ltd.

    • எழுதியவர், க.சுபகுணம்
    • பதவி, பிபிசி தமிழ்

"பள்ளி முடிந்து மாலை வீடு வந்தவுடன், கை, கால் கழுவிவிட்டு டிவியின் முன்பாக கார்ட்டூன் நெட்வொர்க் சேனலை போட்டுக்கொண்டு இமை மூடாமல் டிராகன் பால் ஸி, போகிமான் ஆகிய தொடர்களை கார்ட்டூன் நெட்வொர்க்கில் பார்க்காமல் நாள் ஓடாது.

ஒருநாள், ஒரு எபிசோட் பார்க்காதபோது, பலநாள் காத்திருந்த முக்கியக் காட்சிகள் அன்றெனப் பார்த்து ஒளிபரப்பாகிவிடவே, அவற்றை அடுத்த நாள் பள்ளியில் வகுப்புத் தோழர்கள் விவரித்துப் பெருமிதம் கொள்ளும்போது மனதுக்குள்ளேயே பொருமிக்கொள்வோம்."

இந்த அனுபவத்தைப் பகிராத 90ஸ் கிட்ஸ்களை அரிதாகவே காண முடியும் என்னும் அளவுக்கு இருபது ஆண்டுகளுக்கு முந்தைய குழந்தைகளின் வாழ்வில் தவிர்க்க முடியாத அங்கமாகி, இந்தியாவில் பிரபலமடையத் தொடங்கின அனிமேக்கள்.

அப்படிப்பட்ட அனிமேக்களும் அவற்றின் உருவாக்கத்தில் கணிசமான பங்கு வகிக்கும் ஜப்பானிய காமிக்ஸ் வடிவமான மாங்காக்களும் இரண்டாம் உலகப்போரின் முடிவில் அமெரிக்கா வீசிய இரண்டு அணுகுண்டுகள் குறித்த ஜப்பான் மக்களின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ஓர் ஊடகமாகவே செயல்பட்டதாகவும் அதன் வரலாறு கூறுகிறது.

ஜப்பான் மட்டுமின்றி இன்று உலகம் முழுக்கவே பலரின் வாழ்வில் ஓர் அங்கமாகிவிட்ட அனிமேக்களும் மாங்காக்களும் அணுகுண்டுக்குப் பிந்தைய ஜப்பானில் வகித்த பங்கு என்ன? இங்கு விரிவாகப் பார்ப்போம்.

அணுகுண்டுகள் ஜப்பானியர்கள் மீது ஏற்படுத்திய தாக்கம்

ஜப்பான் மக்களிடம் அணுகுண்டு ஏற்படுத்திய வலிக்கு மருந்தான அனிமே, மாங்கா – எப்படி?

பட மூலாதாரம், Getty Images

அணுகுண்டு தாக்குதலை நடத்துவதற்கு முன்பே ஜப்பான் தோற்றுவிட்டது, ஆனால் சண்டையைத் தொடர்ந்துகொண்டிருந்தது. அதுவரைக்கும் பசிபிக் பெருங்கடலில் முழு ஆதிக்கம் செலுத்தி வந்த நாடு, அமெரிக்காவிடம் வீழ்ந்தது. ஆனால், அதிகாரபூர்வமாக சரணடையவில்லை.

அமெரிக்கா நிபந்தனையற்ற சரணடைதலை ஜப்பானிடம் கோரியபோது, தங்கள் பேரரசருக்கு ஏதும் நேர்ந்துவிடக்கூடாது என்பது உட்பட சில நிபந்தனைகளுடன் மட்டுமே சரணடைய முடியும் என்று ஜப்பான் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்தச் சூழ்நிலையில், ஜப்பானை அணுகுண்டு குறித்து அமெரிக்கா எச்சரித்தபோதும் அது கற்பனையில் மட்டுமே சாத்தியம் என்று ஜப்பான் ராணுவம் நினைத்தது.

இவற்றைத் தொடர்ந்தே ஹிரோஷிமா, நாகசாகி மீது அணுகுண்டுப் பேரழிவு நடத்தப்பட்டது என்பது வரலாறு. இந்த நிலையில், இப்படிக் கற்பனை செய்து பாருங்கள். நாம் வாழும் ஊருக்கு அருகிலேயே இருக்கும் - அதாவது சுமார் 100கி.மீட்டருக்கு உள்ளாக இருக்கும் ஓர் ஊரில் அணுகுண்டு தாக்குதல் நடத்தப்படுகிறது. அதனால் வானுயர் எழும் காளான் புகைத் திரளைக் காணும்போது நாம் எப்படி உணர்வோம்!

அத்தகைய பேரழிவைக் கண்முன் காணும்போது ஏற்படும் கலக்கம், அச்சுறுதல், நடுக்கம், வேதனை, வெறுப்பு அத்தனையும் ஹிரோஷிமா, நாகசாகி அணுகுண்டு வெடிப்பைக் கண்ட மக்களை ஆட்கொண்டிருந்தது.

ஜப்பான் மக்களிடம் அணுகுண்டு ஏற்படுத்திய வலிக்கு மருந்தான அனிமே, மாங்கா – எப்படி?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆகஸ்ட் 9, 1945 அன்று அமெந்ரிக்கா நாகசாகி மீது அணுகுண்டை வீசிய பிறகான நிலை

ஜப்பானிய மாங்கா கலைஞரான கட்சுஹிரோ ஒட்டோமோ எழுத்தில் உருவான அகிரா என்ற அனிமேவின் இறுதிக்காட்சிகளில் எழும் பிரமாண்ட புகைத்திரளால், நியோ-டோக்கியோ என்ற நகரமே வெறும் எலும்புக்கூடாய்க் காட்சியளிப்பதைப் பார்த்தால், உங்களுக்கு ஓரளவுக்கு அந்த உணர்வின் தாக்கம் கிடைக்கும்.

ஒரு வெடிகுண்டு! ஒரேயொரு முறை வெடித்து, மொத்த நகரத்தையும் விழுங்கிச் செரித்து, அதன் எலும்புக்கூட்டை மட்டும் துப்பும்போது, அதன் விளைவுகளால் பாதிக்கப்பட்ட மக்கள், அனாதையான குழந்தைகள், இந்தக் கொடூரங்களைக் கண்ணால் பார்த்தவர்கள் என அனைவரையும் ஒவ்வொரு வகையில் பாதித்தது.

“இவையனைத்துமே ஜப்பானியர்களுக்கு பேரதிர்ச்சிகரமான அனுபவங்கள். பல ஆண்டுகளாக, பேரழிவு அவர்களின் மனக்கண்ணில் இருந்து நீங்காமல் இருந்ததில் ஆச்சரியமில்லை. இத்தகைய கொடுமையான நிலையில் இருந்து தாங்கள் மீண்டுவர, இலக்கியம், இசை, கலை ஆகியவற்றில் அந்தத் தாக்கத்தின் உருவகத்தைக் கொண்டு வருவதை, குணப்படுத்தும் செயல்முறையின் ஒரு பகுதியாகச் செய்ததாக” தி கான்வர்சேஷன் இதழில் வெளியான அனிமே குறித்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அகிரா அத்தகைய உருவகங்களுக்கான ஓர் உதாரணம் மட்டுமே. இப்படியாகப் பல மாங்காக்கள் மற்றும் அனிமேக்களில் அணுகுண்டு வெடிப்பின் உருவகங்களையும் குறியீட்டையும் காண முடியும்.

இன்று வரை பல அனிமேக்களில் அந்த பிரமாண்ட புகைத்திரளின் உருவகம் வெவ்வேறு வடிவங்களில் இடம்பெறவே செய்கின்றன.

எடுத்துக்காட்டாக, இன்று மிகப் பிரபலமாக இருக்கும் நருட்டோ அனிமேவில் வரும் பெயின் (Pain) என்ற கதாபாத்திரம், கொனோஹா கிராமத்தின் மேலே வானில் நின்றுகொண்டு தனது 'ஷின்ரா டென்சேய்' என்ற சக்தியைப் பயன்படுத்துவார். அது அந்தக் கிராமம் முழுவதையும் மிகப் பிரகாசமான ஒளியால் மூடிப் பிறகு பெருவெடிப்பை ஏற்படுத்தும்.

அணுகுண்டை நேரில் பார்த்தவர்களின் சாட்சியமும் இதை ஒத்தே இருக்கின்றன. இதேபோல் ஒன் பீஸ் தொடரிலும் வேகாபங்க் என்ற விஞ்ஞானி உருவாக்கிய மதர் ஃப்ளேம் என்ற ஆயுதமாகவும் பயன்படுத்தவல்ல ஆற்றலும் அணு ஆற்றலையே மையாமக் கொண்டுள்ளது.

அனிமே, மாங்கா என்றால் என்ன?

ஜப்பான் மக்களிடம் அணுகுண்டு ஏற்படுத்திய வலிக்கு மருந்தான அனிமே, மாங்கா – எப்படி?

பட மூலாதாரம், Getty Images

அனிமேக்களின் வரலாறு 1907ஆம் ஆண்டில் இருந்தே தொடங்குகிறது.

இருப்பினும், அவற்றுக்கு அனிமே என்ற குறிப்பிட்ட சுருக்கம் பயன்படுத்தப்பட்டது 1960களில் இருந்துதான் என்கிறார் ஜோனாதன் க்ளிமென்ட்ஸ். முதன்முதலாக 1962ஆம் ஆண்டில் எய்கா ஹ்யோரான் என்ற திரைப்படங்களை விமர்சிக்கும் இதழில் இவை குறித்து கட்டுரை எழுதிய மோரி டகுயாதான் அனிமே என்ற அனிமேஷனுக்கான சுருக்கத்தை முதன்முதலில் பயன்படுத்தியதாகவும் 2013 வெளியான தனது நூலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், அனிமே என்பது ஏதோ உருவாக்கப்பட்ட பதம் அல்ல, அது அனிமேஷன் என்ற ஆங்கில சொல்லின் சுருக்கப்பட்ட வடிவமே என்கிறார் அனிமே சார்ந்த வணிகப்பொருட்களுக்கான அனிசிங்க் என்ற நிறுவனத்தின் இணை-நிறுவனரும் அனிமேக்கள் மீது அதீத ஆர்வம் கொண்டவருமான நிகில் ரவிக்குமார்.

அதே கூற்றை அமெரிக்காவின் டஃப்ட்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜப்பானிய படிப்புகள் துறையின் பேராசிரியர் சூசன் ஜே.நேப்பியர் தனது ‘அனிமே ஃப்ரம் அகிரா டூ பிரின்சஸ் மோனோனோகே’ என்ற நூலிலும் குறிப்பிட்டுள்ளார்.

ஜப்பான் மக்களிடம் அணுகுண்டு ஏற்படுத்திய வலிக்கு மருந்தான அனிமே, மாங்கா – எப்படி?

பட மூலாதாரம், Getty Images

அவர் தனது நூலில் இப்படிக் குறிப்பிடுகிறார்: “அனிமேஷன் என்ற ஆங்கில வார்த்தையின் சுருக்கமான அனிமே, இப்போது அமெரிக்க சொல்லகராதியில் ஒரு தனி இடத்தைப் பிடித்துவிட்டது. அதாவது, நியூயார்க் டைம்ஸ் நாளிதழின் குறுக்கெழுத்துப் புதிர்களில் இடம்பெறும் அளவுக்கு அதன் பயன்பாடு பெருகியுள்ளது.”

அடிப்படையில், ஜப்பானியர்களை பொறுத்தவரை மேற்கத்திய படைப்பாக இருந்தாலும் சரி, ஜப்பானிய படைப்பாக இருந்தாலும் சரி அனைத்துமே அனிமேதான். ஆனால், ஜப்பானிய அனிமேக்களின் கதைக்களம், சண்டை, அதிரடி, காமெடி போன்றவற்றுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்காமல் கதைக்களத்தில் இடம்பெறும் ஒரு குறிப்பிட்ட தருணத்தின் சூழலை உணர்வுபூர்வமாகக் கடத்துவதில் கவனம் செலுத்துகிறது.

இதை மாங்காக்கள் மிக ஆழமாகச் செய்வதாகக் கூறுகிறார் நிகில்.

மாங்கா என்பது மேற்கத்திய, இந்திய காமிக்ஸ் புத்தகங்களைப் போன்றது. அதுவும் காமிக்ஸ் புத்தகம்தான். ஆனால், கதை மீதான மாங்காவின் அணுகுமுறை காமிக்ஸில் இருந்து அதைத் தனித்துவமாக்குகிறது.

நிகிலின் கூற்றின்படி, காமிக்ஸ்களை பொறுத்தவரை அதிரடியில் அதிக கவனம் செலுத்தும். ஆனால் மாங்காக்கள் “ஒவ்வொரு தருணத்தின்மீதும் அதிக கவனம் செலுத்தும். ஒரு திறந்திருக்கும் கதவு, சூரிய உதயம், ஒருவரின் கண்ணீர், பசி, மகிழ்ச்சி என அனைத்தையும் மாங்காக்களில் வரும் ஓவியங்கள் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்குத் துல்லியமாகக் கடத்தும். அதுதான் அவற்றின் தனித்துவம்.”

காட்ஸில்லா – உயிருள்ள அணுகுண்டு உருவாக்கப்பட்டதன் பிண்ணனி

ஜப்பான் மக்களிடம் அணுகுண்டு ஏற்படுத்திய வலிக்கு மருந்தான அனிமே, மாங்கா – எப்படி?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இஷிரோ ஹோண்டாவின் இயக்கத்தில் 1954ஆம் ஆண்டு வெளியான கோஜிரா படத்தில் வரும் காட்சி

ஜப்பான் இரு அணுகுண்டுகளால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவிடம் சரணடைந்த பிறகு, அந்நாடு மீண்டும் தன்னை கட்டமைத்துக்கொள்ள அமெரிக்கா உதவியது. அதைத் தொடர்ந்து பசிபிக் பெருங்கடலில் அமெரிக்கா தனது அணுகுண்டுகளை சோதிக்கத் தொடங்கியது.

இப்படியாக மார்ச் 1, 1954 அன்று மார்ஷல் தீவுகளில் உள்ள பிகினி அடோல் என்ற சிறிய தீவில் ஓர் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டது. அப்போது, அந்தப் பகுதியில் கடந்து சென்ற ஒரு மீன்பிடிப் படகு அந்த அணுகுண்டு வெடிப்பில் வெளியான கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டது. அந்த அணுகுண்டு ஹிரோஷிமாவில் வெடிக்கப்பட்டதைவிட 1,000 மடங்கு சக்தி வாய்ந்தது.

இதன் பாதிப்புகளால், அந்த மீன்பிடிப் படகில் இருந்த ஐகிச்சி குபோயாமா உயிரிழந்தார். இது ஜப்பான் மக்களிடையே அணுகுண்டு சோதனைக்கு எதிராகக் கொந்தளிக்க வைத்தது. ஐகிச்சி குபோயாமாவின் கடைசி விருப்பமாக இருந்தது ஒன்று மட்டுமே, “அணுகுண்டுக்குப் பலியான கடைசி உயிர் தனதாக இருக்க வேண்டும்.”

இதைத் தொடர்ந்துதான் ஜப்பானில் அணுகுண்டுக்கு எதிரான இயக்கமே உருவானது.

ஜப்பான் மக்களிடம் அணுகுண்டு ஏற்படுத்திய வலிக்கு மருந்தான அனிமே, மாங்கா – எப்படி?

பட மூலாதாரம், Getty Images

இப்படியாக ஜப்பான் மக்கள், ஹிரோஷிமா, நாகசாகியை தொடர்ந்தும் அணுகுண்டுகளின் பாதிப்புகளை எதிர்கொண்டனர். அதன் விளைவாக உருவானதே ஜப்பானிய மொழியில் கோஜிரா என்றழைக்கப்படும் காட்ஸில்லா.

காட்ஸில்லா என்பது அணுகுண்டின் பண்புகளை உருவகப்படுத்திய ஓர் உயிருள்ள கதாபாத்திரம்தான் என்கிறார் அனிசிங்க் நிறுவனத்தின் இணை-நிறுவனர் நிகில்.

காட்ஸில்லா கதையில் அதன் அறிமுகமே கடலில் ஒரு மீன்பிடிப் படகைத் தாக்குவதில் இருந்துதான் தொடங்கும். ஐகிச்சி குபோயாமா இருந்த மீன்பிடிப்படகு அணுகுண்டு வெடிப்பில் சிக்கியதைக் குறிக்கும் குறியீடுதான் அந்தக் காட்சி. கலை எப்படி ஜப்பானிய மக்கள் தங்கள் வலிகளைக் கடத்தப் பயன்படுத்தப்பட்டது என்பதற்கான சான்றுதான் காட்ஸில்லா.

இப்படியாக, பேர்ஃபூட் ஜென், பிரின்சஸ் மோனோனொகே, கிரேவ் ஆஃப் ஃபயர்ஃப்ளைஸ் போன்ற கதைகளின் மூலம், இரண்டாம் உலகப் போரின் தாக்கத்தை உருவகப்படுத்தி, ஜப்பான் மக்களின் உணர்ச்சியைக் கடத்துவதற்கான ஓர் ஊடகமாக அனிமேக்கள் பயன்படுத்தப்பட்டதை அறிய முடிகிறது.

அனிமே மற்றும் மாங்காக்களில் அணுகுண்டின் தாக்கம்

ஜப்பான் மக்களிடம் அணுகுண்டு ஏற்படுத்திய வலிக்கு மருந்தான அனிமே, மாங்கா – எப்படி?

பட மூலாதாரம், Getty Images

“அனிமே உட்பட ஜப்பான் இலக்கியங்கள் போரின் ஆயுதங்களைப் பற்றிப் பேசியதைவிட, அந்த ஆயுதங்கள் ஏற்படுத்தும் விளைவுகளையே பேசின. அவ்வளவு கொடூரமான ஆயுதங்களை நாம் பயன்படுத்த வேண்டுமா என்ற கேள்வியை முன்வைத்தன” என்கிறார் நிகில்.

“எவ்வளவு பெரிய போர்வீரனாக இருந்தாலும், முழுவதும் எரிந்து கருகிப்போன ஒரு குழந்தையின் சட்டையையும் கடைசியில் மிச்சமிருந்த அந்தக் குழந்தையின் ஒற்றைச் செருப்பையும் காட்டினால், போர் குறித்த அவனது வெறி சலனப்படும்.”

அதைத்தான் மாங்காக்களும் அனிமேக்களும் உருவகப்படுத்த முயன்றன என்று கூறும் நிகில், ‘இன் திஸ் கார்னர் ஆஃப் தி வேர்ல்ட்’ என்ற அனிமே திரைப்படத்தைக் குறிப்பிடுகிறார். இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் அனிமே துறை மிகவும் இளம் கட்டத்தில் இருந்தது. ஆகவே, அனிமேவை ஒரு முக்கிய ஊடகமாக வைத்து அணுகுண்டின் தாக்கத்தில் இருந்து ஜப்பான் மக்கள் விடுபட்டனர், அல்லது அதையே முற்றிலும் வடிகாலாகப் பயன்படுத்தினர் என்று கூற இயலாது என்பது நிகிலின் கூற்று.

ஆனால், ‘இன் திஸ் கார்னர் ஆஃப் தி வேர்ல்ட்’ போன்ற அனிமே திரைப்படங்கள் ஜீரணிக்கவே முடியாத அணுகுண்டின் விளைவுகளைக் கையாள்வதற்கான ஒரு வடிகாலாக அமைந்தது என்பதையும் மறுக்க முடியாது. மேலும், இந்தக் குறிப்பிட்ட படத்தை ஜப்பான் அரசாங்கமே காட்சிப்படுத்தி, மக்களிடையே விளம்பரப்படுத்தும் அளவுக்கு, அது இரண்டாம் உலகப்போரின் விளைவுகளைப் பற்றியும் மீண்டு வருதல் குறித்தும் பேசியது என்பது குறிப்பிடத்தக்கது.

அனிமேக்களில் அணுகுண்டு தாக்கத்தை தொடக்கி வைத்த முன்னோடிகள்

ஜப்பான் மக்களிடம் அணுகுண்டு ஏற்படுத்திய வலிக்கு மருந்தான அனிமே, மாங்கா – எப்படி?

பட மூலாதாரம், Tezuka Productions Co., Ltd.

நவீன அனிமேக்களின் தந்தையாகக் கருதப்படும் ஒசாமு டெசுகா மற்றும் மியாசாகி ஹயாவோ ஆகியோர்தான் அணுகுண்டின் தாக்கத்தைத் தங்கள் அனிமேக்களில் வெளிப்படுத்தத் தொடங்கினார்கள்.

ஒசாமு டெசுகாவின் மாங்கா படைப்புகளில் விவரிக்கப்பட்ட அணுகுண்டு வெடிப்பின் காட்சி, அதைப் பார்ப்பவர்களுக்கு அங்கு உண்மையில் என்ன நடந்தது என்பதைக் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தும் அளவுக்கு மனதில் அழுத்தமாகப் பதிந்தன.

அவரது படைப்புகள் தாங்கவொண்ணா துக்கத்தைக் கையாள்வது, இயற்கையின் அத்தனை அழகையும் அதை அடக்கி ஆள வேண்டுமென்ற மனிதனின் ஆசையால் அழித்துவிட முடியும் என்பன போன்றவற்றைப் பேசின.

ஜப்பான் மக்களிடம் அணுகுண்டு ஏற்படுத்திய வலிக்கு மருந்தான அனிமே, மாங்கா – எப்படி?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஒசாமு டெசுகாவின் ஆஸ்ட்ரோபாய்

அவரது பெரும்பாலான படைப்புகள், அனாதையாக்கப்பட்ட ஓர் இளம் கதாபாத்திரம் தன்னந்தனியாக உயிர் பிழைக்கப் போராடுவதைச் சுற்றியிருக்கும். அவரது ஆஸ்ட்ரோபாய் என்ற மாங்காவில், தனது மகனின் இழப்பை ஈடுகட்ட ஒரு விஞ்ஞானி ஆண்ட்ராய்டு சிறுவனை உருவாக்குகிறார்.

பின்னர், அதனால் மகனின் இழப்பை ஈடுகட்ட முடியாது என்றுணர்ந்து கைவிடுகிறார். அநாதையாக்கப்படும் அந்த ஆஸ்ட்ரோபாய் பிறகு போராடி ஒரு சூப்பர் ஹீரோ ஆகிறார்.

அவரைப் போலவே, அணுகுண்டு வெடிப்பை நேரில் கண்டு உயிர் பிழைத்த கெய்ஜி நகாஸாவா உருவாக்கிய பேர்ஃபூட் ஜென் அணுகுண்டால் அழிக்கப்பட்ட ஒரு குடும்பத்தைச் சேர்ந்த சிறுவனின் கதையைப் பேசியது.

“நகாஸாவா தனது தங்கை பிறந்து சில வாரங்களிலேயே கதிர்வீச்சு பாதிப்பால் உயிரிழந்தைக் கண்முன் கண்டவர். அவரது தாயும் அதே பிரச்னையால் காலப்போக்கில் மரணித்தார்,” என்று தி கான்வர்சேஷன் இதழ் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது. பேர்ஃபூட் ஜென்னின் கதையும் அத்தகைய ஒன்றுதான்.

மரணம், மறுபிறவி, வாழ்வின் ஒளி

ஜப்பான் மக்களிடம் அணுகுண்டு ஏற்படுத்திய வலிக்கு மருந்தான அனிமே, மாங்கா – எப்படி?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கெய்ஜி நகாஸாவா

இந்த முன்னோடிகளின் படைப்புகள் அதிகம் பேசியது ஒரு பேரழிவின் விளைவுகள், மரணங்கள், இழப்புகள் மற்றும் அதன் பிறகும் நீடிக்கும் இந்த வாழ்வில் எதிர்காலம் குறித்த நம்பிக்கையின் அந்தச் சிறிய ஒளி.

அனைத்தையும் இழந்த பிறகும், ஒருவன் மீண்டும் எழுந்து நிற்க வேண்டும், வாழ்வைப் புதிதாகத் தொடங்க வேண்டும் என்பதை இவர்களது கதைகள் வலியுறுத்தின.

ஜப்பான் மக்களிடம் அணுகுண்டு ஏற்படுத்திய வலிக்கு மருந்தான அனிமே, மாங்கா – எப்படி?

பட மூலாதாரம், Getty Images

டெசுகாவின் ஜப்பான் ஒரு ஃபீனிக்ஸ் பறவையைப் போன்றது. முற்றிலும் அழிந்த பிறகும் அதன் அத்தியாயம் முடிந்துவிடாமல், மீண்டும் உயிர்த்தெழுந்து சிறகடித்துப் பறந்து வரும். அவை அனைத்துமே அப்போதைய ஜப்பான் மக்களின் போருக்குப் பிறகு, அதனால் விளைந்த ஒரு பேரழிவுக்குப் பிறகான மீட்சியை, எழுச்சியை உருவகப்படுத்தின.

போருக்கு முன்பு மேற்கத்திய வடிவங்களைப் பின்பற்றி உருவாக்கப்பட்ட அனிமே கதைகளில் இருந்து முற்றிலும் வேறுபட்ட ஒரு புதிய சகாப்தம் அனிமே மற்றும் மாங்காக்களில் தொடங்கியது.

ஒசாமு டெசுகா, மியாசாகி ஹயாவோ, கட்சுஹிரோ ஒட்டோமோ, கெய்ஜி நகாஸாவாவை தொடர்ந்து அடுத்து வந்த மாங்கா, அனிமே கலைஞர்களும் அவர்களைப் பின்பற்றி மரணம், மறுபிறவி, வாழ்வின் ஒளி அதாவது, வாழ்க்கை மீதான நம்பிக்கையை மையமாக வைத்துப் படைப்புகளை உருவாக்கினார்கள்.

அதன்மூலம், ஜப்பான் மக்கள் எப்படி அது சந்தித்த வரலாற்றின் மிகப்பெரும் அழிவில் இருந்து, அது தந்த வலியில் இருந்து தன்னைக் குணப்படுத்திக் கொண்டனர் என்பதையும் அறிய முடிகிறது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)