சுனிதா வில்லியம்ஸ்: சர்வதேச விண்வெளி மையத்திற்குச் செல்லவிருந்த தனியார் விண்கலம் நிறுத்தப்பட்டது ஏன்?

பட மூலாதாரம், Nasa/Boeing
- எழுதியவர், பல்லப் கோஷ்
- பதவி, அறிவியல் செய்தியாளர்
அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா-வைச் சேர்ந்த இரண்டு விண்வெளி வீரர்கள் ஒரு புதிய விண்கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் (ISS- ஐ.எஸ்.எஸ்) செல்லவிருந்தனர். இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த பேரி வில்மோர் ஆகியோரே அந்த இரு விண்வெளி வீரர்கள்.
போயிங் நிறுவனத்தின் 'ஸ்டார்லைனர்' விண்கலம், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து இந்திய நேரப்படி காலை 8.04 மணிக்கு புறப்பட இருந்தது.
தனது முதல் சோதனை குழுவைச் சுமந்துகொண்டு விண்ணில் பாய்வதற்கு 90 நிமிடங்களே இருந்த நிலையில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த விண்வெளிப் பயணம் நிறுத்தப்படுவதாக நாசா தெரிவித்துள்ளது.
விண்கலம் கட்டமைக்கப்படுவதில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக இந்தத் திட்டம் பல ஆண்டுகளாகத் தாமதமாகி வந்த நிலையில், இப்போது மீண்டும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டிருந்தால், ஐ.எஸ்.எஸ்-க்கு வீரர்களை அனுப்பி அங்கிருந்து அவர்களை பூமிக்குக் கொண்டுவரும் இரண்டாவது தனியார் நிறுவனமாக போயிங்க் மாறியிருக்கும். முதல் நிறுவனம், எலோன் மஸ்க்கின் 'ஸ்பேஸ் எக்ஸ்'.
நாசா இதுபோன்ற விண்கலங்களைச் சொந்தமாக வைத்து இயக்க விரும்புவதில்லை, வணிகத் துறையிலிருந்து இந்தச் சேவையை வாங்க விரும்புகிறது.
இந்த ஏவுதல் போயிங்க் நிறுவனத்திற்கு சிக்கலான தருணமாக தான் பார்க்கப்பட்டது. காரணம், சமீபத்தில் நிகழ்ந்த தொடர் விபத்துகளால் அதன் விமான வணிகம் பெரும் அழுத்தத்தில் உள்ளது. ஸ்டார்லைனரை உருவாக்குவதில் உள்ள சிக்கல்களைத் தொடர்ந்து நிறுவனத்தின் விண்வெளித் துறையும் ஆய்வுக்கு உட்பட்டுள்ளது.
"போயிங்கிற்கு இது மிகவும் முக்கியமான நாள்" என்று ஓபன் பல்கலைக்கழகத்தின் விண்வெளி விஞ்ஞானி முனைவர் சிமியோன் பார்பர் என முன்னர் தெரிவித்திருந்தார்.
"போயிங் நிறுவனம் இவ்வளவு காலமாக இந்த விண்கலத்தின் கட்டுமானத்தில் வேலை செய்து வருகிறது. சோதனை விமானங்களில் அவர்களுக்கு சில சிக்கல்கள் உள்ளன. இந்த விண்கலத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு உள்ளது," என்று அவர் கூறியிருந்தார்.

பட மூலாதாரம், Nasa/Boeing
அடுத்தடுத்த சிக்கல்கள்
ஸ்டார்லைனர் விண்கலம் 2015-ஆம் ஆண்டில் தனது முதல் ஆளில்லா சோதனைப் பயணத்தை மேற்கொள்ளவிருந்தது. ஆனால் அது 2019 வரை தாமதமானது, ஏனெனில் அதன் மென்பொருள் குறைபாடுகள் உள்ளிருந்த கடிகாரத்தைச் செயலிழக்கச் செய்தது.
அதன் விளைவாக விண்ணில் பாய்வதற்கான உந்துதல்கள் அதிகமாகச் செலுத்தப்பட்டது. அதனால் விண்கலம் விண்வெளி நிலையத்தை அடைய முடியாத அளவுக்கு எரிபொருள் செலவானது.
இரண்டாவது முயற்சி, 2021-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திட்டமிடப்பட்டது. ஆனால் அது மீண்டும் 2022-ஆம் ஆண்டு மே மாதம் வரை தாமதமானது. உந்துவிசை அமைப்பில் ஒரு சிக்கல் ஏற்பட்டதால் இது நடந்தது என்று சொல்லப்பட்டது. ஸ்டார்லைனர் இறுதியாக பூமியிலிருந்து புறப்பட தயாரான போது, அதன் முழுப் பணியையும் முடிக்க முடிந்தது. ஆனால் சில உந்துதல்களின் செயல்திறன் மற்றும் குளிரூட்டும் அமைப்பு குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன.
இந்தக் குறைபாடுகள், வயரிங் மற்றும் பாராசூட்களின் பாதுகாப்பில் இருந்த கூடுதல் சிக்கல்கள் ஆகியவை விண்வெளி வீரர்களைச் சுமந்து செல்லும் திட்டத்தை இப்போது வரை தாமதமாக்கி வந்தது.
இந்த அனைத்துச் சிக்கல்களும் சரிசெய்யப்படாமல் நாசாவும் போயிங்கும் விண்வெளி வீரர்களைச் சுமந்து செல்லும் இந்தப் பயணத்திற்கு ஒப்புதல் அளித்திருக்க மாட்டார்கள் என நம்பப்பட்டது. ஆனால் விண்கலத்தின் ஆக்சிஜன் வால்வில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மீண்டும் இந்தத் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.
குடும்பத்தார் பயப்படுகிறார்களா?
இதுகுறித்த ஒரு செய்தியாளர் சந்திப்பில், இந்தப் பின்னடைவுகள் விண்கலத்தில் செல்லவிருக்கும் வீரர்களின் நண்பர்களையும் குடும்பத்தாரையும் 'அச்சப்பட வைக்கும்' என்று கூறப்பட்டது.
அதற்கு இந்த விண்கலத்தில் பயணிக்கவிருக்கும் பாரி வில்மோர், இந்தத் தொழில்நுட்பச் சிக்கல்களை 'பின்னடைவுகள்' என்று விவரிப்பது தவறு என்று கூறியிருந்தார்.
"நாங்கள் அவற்றை முன்னேற்றப் படிகள் என்று அழைக்கிறோம். நாங்கள் ஒரு சிக்கலைக் கண்டுபிடித்து அதைச் சரிசெய்வோம். அதை நாங்கள் எங்கள் குடும்பத்தாரிடம் தெரிவித்துள்ளோம். அதனால் அவர்கள் அதைப் புரிந்துகொள்கிறார்கள்," என்று அவர் கூறினார்.
விண்கலத்தை இயக்கவிருந்த சுனிதா வில்லியம்ஸ் இதுகுறித்துக் கருத்து தெரிவிக்கையில், "நாங்கள் அனைவரும் தயாராக இருப்பதால் இங்கு வந்துள்ளோம். எங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் இதைப் பற்றி கேள்விப்பட்டிருக்கின்றனர். நாங்கள் அதைப் பற்றி பேசினோம். அவர்கள் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உணர்கின்றனர்," என்று கூறியிருந்தார்.
தொழில்நுட்ப கோளாறு இன்று காலை விண்வெளிப் பயணம் ரத்து செய்யப்பட்ட பிறகு, சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி வில்மோர் ஸ்டார்லைனர் விண்கலத்தில் இருந்து பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

பட மூலாதாரம், Boeing
புதிய நிறுவனங்களின் வளர்ச்சி
ஸ்பேஸ்-எக்ஸ் மற்றும் போயிங் இனி தங்களுக்குச் சேவை வழங்கும் என்று நாசா அறிவித்தபோது, அது இரண்டு நிறுவனங்களுக்கும் ஒரே மாதிரியான ஒப்பந்தத்தை வழங்கியது. இது அவர்களின் விண்கலங்களைச் சேவைக்குக் கொண்டு வந்து அவற்றின் ஆறு திட்டங்களுக்கு நிதி வழங்கும். ஸ்பேஸ்-எக்ஸ் ஒப்பந்தத்தின் மதிப்பு இந்திய மதிப்பில் ரூ.21,705 கோடியாக (2.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) ஆக இருந்தது. போயிங் இந்திய மதிப்பில் ரூ.35,062 கோடியைப் (4.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) பெற்றது.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் 2020-ஆம் ஆண்டு வீரர்களைத் தாங்கிய அதன் சோதனையை நடத்தியது. போயிங் நான்கு ஆண்டுகள் பின்தங்கி உள்ளது, மேலும் விஷயங்களைச் சரியாகச் செய்ய போயிங்க் நிறைய பணம் செலவழித்துள்ளது.
ஸ்பேஸ்-எக்ஸ் மற்றும் பிற ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் தொழில்நுட்ப வளர்ச்சிக்கான புதிய அணுகுமுறையைக் கொண்டிருப்பதாக முனைவர் பார்பர் கூறினார்.
"ஒருபக்கம் பாரம்பரிய விண்வெளி நிறுவனம் உள்ளது, போயிங்க். அது நீண்ட காலமாக இருந்து வருகிறது. ஒரு குறிப்பிட்ட வழியில் விஷயங்களைச் செய்கிறது. மறுபக்கம் ஒரு புதிய விண்வெளி நிறுவனம் உள்ளது, இது வேறு வழியில் விஷயங்களைச் செய்துள்ளது. கட்டமைத்தல், சோதனை செய்தல், செயலிழத்தல், கற்றல் ஆகியவை அடங்கிய அவர்களின் கட்டமைப்புச் சுழற்சி மிக வேகமாக உள்ளது," என்று அவர் பிபிசியிடம் கூறினார்.
போயிங்கின் வணிகக் குழு திட்ட மேலாளர் மார்க் நாப்பி, ஒரு செய்தியாளர் சந்திப்பில், விண்கலங்களில் தவறுகளைக் கண்டறிதல் புதிய விண்கலத்தை உருவாக்கும் செயல்முறையின் இயல்பான பகுதி என்று கூறினார்.
இங்கிலாந்தின் விண்வெளி ஏஜென்சியின் விண்வெளி ஆய்வுத் தலைவரான லிபி ஜாக்சனின் கூற்றுப்படி, போயிங்கின் விண்கலம் சேவைக்கு வருவது ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்திற்க்கு போட்டியாக இருக்கும். இந்தப் போட்டியால் செலவுகள் குறையும்.
"இது நாசாவிற்கு மட்டுமல்ல, இங்கிலாந்து விண்வெளி ஏஜென்சி போன்ற பிற விண்வெளி நிறுவனங்களுக்கும் மிகவும் முக்கியமானது. ஏனென்றால் விண்வெளி வீரர்களை ஐ.எஸ்.எஸ்-க்கு கொண்டு செல்வதற்கு வரி செலுத்துவோரின் பணத்தைச் செலவிடுகிறோம்," என்று அவர் கூறினார்.

பட மூலாதாரம், Nasa/Boeing
ஸ்டார்லைனரின் சிறப்பு என்ன?
ஸ்டார்லைனர் 5மீ உயரமும் 4.6மீ அகலமும் கொண்டது (அதாவது 16.5 அடி, 15 அடி). இது அப்பல்லோ பயணங்களில் பயன்படுத்தப்படும் விண்கலத்தை விட அகலமானது. இதில் ஏழு விண்வெளி வீரர்களுக்கு இடம் உள்ளது. இருப்பினும் இது வழக்கமாக நான்கு பேருடன் தான் பறக்கும். இது மீண்டும் பயன்படுத்தக்கூடியது. 10 முறை பறக்கும் நோக்கத்துடன் கட்டமைக்கப்பட்டுள்ளது.
ஐ.எஸ்.எஸ்-க்கான பயணத்தின் போது, விண்கலத்தின் குழுவினர் அதனுள்ளிருக்கும் அமைப்புகளை மதிப்பிடுவார்கள். மேலும் புத்தம் புதிய விண்வெளி உடைகளையும் அவர்கள் சோதனை செய்வார்கள்.
வில்மோர் மற்றும் வில்லியம்ஸ் ஆகியோர் போயிங்கின் நீல நிற உடையை அணிவார்கள், இது அமெரிக்க விண்வெளி வீரர்கள் அணிந்திருந்த முந்தைய தலைமுறை விண்வெளி உடைகளை விட 40% இலகுவானவை, நெகிழ்வானவை. உடையில் தொடுதிரை உணர்திறன் கையுறைகள் உள்ளன. எனவே விண்வெளி வீரர்கள் விண்கலத்தில் உள்ள டேப்லெட்களை இயக்கலாம்.
அடுத்த முறை வெற்றிகரமாக ஏவப்பட்டால், ஸ்டார்லைனர் பூமிக்குத் திரும்புவதற்கு முன் சுமார் 10 நாட்களுக்கு ஐ.எஸ்.எஸ் உடன் இணைக்கப்பட்டிருக்கும். இதற்கு முந்தைய அமெரிக்க விண்கலங்கள் கடலில் விழுந்தன. ஆனால் ஸ்டார்லைனர் தென்மேற்கு அமெரிக்காவில் எங்காவது நிலத்தில் தரையிறங்கும்.
1998-இல் ஐ.எஸ்.எஸ்-இன் கட்டுமானப் பணிகள் தொடங்கியதில் இருந்து, வீரர்களைச் சுமந்து சென்ற நூற்றுக்கும் மேற்பட்ட விண்கலங்கள் அங்கு சென்றிருக்கின்றன. ஆனால், அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி ஆலோசனை நிறுவனமான 'க்வில்டி'-யைச் சேர்ந்த காலேப் ஹென்றியின் கூற்றுப்படி, ஸ்டார்லைனர் ஏவுதல் விண்வெளிப் பயண வரலாற்றில் ஒரு முக்கியமான தருணத்தைக் குறிக்கிறது.
"நாங்கள் இப்போது மனித ஆய்வுகளின் புதிய சகாப்தத்தில் நுழைகிறோம்," என்று அவர் பிபிசி-யிடம் கூறியிருந்தார்.
"தனியார் துறையின் வளர்ந்து வரும் பங்கு உற்சாகமானது. இது விண்வெளிப் பயணங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. புதிய வாய்ப்புகளையும் உருவாக்குகிறது," என்றார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












